Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website. The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

நான்கு சுவருக்குள் கணினி, விளையாட்டோ எட்டாக்கனி

தெருவிலே கிழிந்த டவுசரோடு விளையாடிக்கொண்டிருப்பேன். அந்த டவுசரும் கூட எங்கோ சறுக்கிலே, சென்று மீண்டும், மீண்டும் சறுக்கி விளையாடி கழிந்தது தான். ஒவ்வொரு முறையும் இப்போது சறுக்குவது தான் கடைசி என நினைத்து, நினைத்தே நீண்ட நேரங்களை காவு வாங்கியிருக்கும். என்னோடு உடன் பிறந்த நான்கு சகோதர்களும் கூட அப்படித்தான். எங்கள் ஐந்து பேரையும் சேர்த்து வீட்டில் பார்ப்பதே, இரவு நேரத்தில் மட்டும் தான்!

அந்த அளவுக்கு இருக்கும் அன்றைய கால விளையாட்டு. உடன் விளையாட வருபவர்களில் வசதியான வீட்டுப் பிள்ளைகள், மத்திய ரக குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள், வறிய நிலையில் உள்ள குடும்ப பிள்ளைகள் என அனைவருமே ஒன்று கூடியே விளையாடுவோம். அந்த அளவுக்கு சமத்துவம் உலாவிய நேரங்கள் அவை. அன்று விளையாடிக் கழிந்த ஒவ்வொரு பொழுதுகளும், அர்த்தமுள்ளவை. ஒவ்வொரு விளையாட்டிலும் பக்குவப் படுத்தும் பண்புசார் கூறுகளும் இருக்கும்.

இதோ இப்போது குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே தொலைக்காட்சிப் பெட்டிகளின் பக்கம், பெற்றோரே கவனத்தை திருப்பி விட்டு விடுகின்றனர். அதில் முக்கிய அறிவிப்புகளும், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பப்பட இருக்கும் திரைப்படங்களின் பெயரை சொல்லும் போதும், அண்மைக்கால ஜூரமான செய்தித் தொலைக்காட்சிகளின் பிரேக்கிங் நியூஸ் வரும் போதும், பின்னால் இருந்து ஒலிக்கும் பிண்ணனி இசையும், பல வர்ணங்களும் குழந்தைப் பருவத்திலேயே அவர்களை சுண்டி இழுத்து விடுகின்றது.

தொடர்ந்து நடைபழகிய நாள்களிலேயே சித்திரத் தொலைக்காட்சிகளை பழக்கி கொடுக்கின்றனர். எல்.கே.ஜி படிக்கும் நிலையை எட்டும் போதே ஸ்மார்ட் போன்களும், பெற்றோரின் மடி கணினியும் பரிச்சயம் ஆகி விடுகின்றது. ‘’என் புள்ள சூப்பரா செல்ல ஆப்ரேட் பண்ணுவான். யூ டியூப்குள்ள கூட போயிடுவான்” என பெருமைப்படும் பெற்றோர்களும் உள்ளனர். தொடர்ந்து வளரிளம் பருவத்திலும் அக்குழந்தையின் விளையாட்டு முழுக்க, முழுக்க கணினி சார்ந்தே இருக்கிறது. முன்பெல்லாம் மேல்தட்டு குடும்பத்தினரை மட்டும் தான் இது வியாபித்திருந்தது. இதோ இப்போது கிராமங்கள் வரையுள்ள பிரவுசிங் செண்டர்களில் ஒரு மணி நேரத்துக்கு கேம்ஸ் விளையாட என கட்டண  குறிப்பை பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டி வைத்துள்ளனர். பெரிய மால்களிலும் குழந்தைகள் விளையாட்டு பிரிவில் வீடீயோ கேம் விளையாட்டுக்களே பிரதானம்.

 

(wazji.pl)

கோவில் திருவிழாவுக்கு அழைத்து வரப்பட்டிருந்த யானை துவங்கி, மணமக்கள் ஊர்வல வரவேற்புக்கு அழைத்து வரப்பட்டிருந்த குதிரை வரை சாலையில் வியந்து பார்த்து அதிசயத்த விசயங்களை இன்றைய குழந்தைகள் கணினியில் பார்க்கின்றனர். அத்தனையும் தெரிகிறது. எல்லா துறைகளிலும் அனுபவங்களும், நுணுக்கங்களும் கணினியின் மூலம் கற்றுள்ளனர். ஆனால் சமூகம் குறித்த புரிதல்களில் உங்கள் குழந்தைகள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை நீங்களே ஒரு முறை உங்கள் மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்கள்.

விட்டுக் கொடுப்பதில், பகிர்ந்துண்பதில் எத்தனை, எத்தனை முரண்பாடுகள்? எங்கோ ஒரு வீட்டில் கொய்யா மரத்தில் விளைந்து நிற்கும் கொய்யா பழத்தை ஏறி பறிப்பவன், முதலில் கீழே இருப்பவனுக்கு தூக்கிப் போட்டு விட்டுத் தான், அவன் கையில் உள்ள பழத்தை கடிப்பான். இப்போது அக்குழந்தைகளை காணவில்லை.

குழந்தைகள் விளையாட வேண்டும் என்று முண்டாசுக் கவிஞன் மாகாகவி பாரதியாரும் விரும்பினார். அதனால்தான் “மாலை முழுவதும் விளையாட்டு” என்கிறார். ஓடி விளையாடு பாப்பா என அறிவுறுத்துகிறார். இதோ இப்போது மாலையில், பள்ளி முடிந்து வந்ததுமே, கால், கை, முகம் கூட கழுவ நேரமின்றி மறுநாள் வீட்டுப்பாடம் எழுதும் குழந்தைகளைப் பார்க்கையிலும், வீட்டுப்பாடத்தை எழுதி முடித்தால் செல்போன் கேம்ஸ் விளையாடத் தருவேன் என சொல்லும் பெற்றோரையும் பார்க்கையில் அடுத்த தலைமுறையின் மேல் பரிதாபமே எழுகிறது.

(boredpanda.com)

முன்பு உப்பு மூட்டை விளையாட்டை விளையாடுவோம். ஒருவரது, முதுகில் இன்னொருவர் பற்றிக் கொள்வார். இதுவே எத்தனை பெரிய தத்துவம். எந்த பாரத்தையும் எதிர்கொள்கிற ஆற்றலையல்லவா தருகிறது. ஓடி விளையாடுவதும், ஒளிந்து விளையாடுவதும் உடலினை உறுதி செய்யும் விளையாட்டுக்கள் தான். பக்கத்து வீடு, எதிர் வீடு என எங்கோ ஒரு பகுதியில் வீட்டு கட்டுமானப் பணி  நடக்கும். அதன் பிரதானமான மணல்  கொண்டு வந்து குவிக்கப்பட்டிருக்கும். அப்போதெல்லாம் மாட்டு வண்டியில் தான் மணல் வரும். இப்போது தான் லாரிகள் பறக்கிறது. யூனிட்டில் விலையும் சொல்கிறார்கள். குவிந்து கிடக்கும் மணலை குவித்து குழந்தைகள் விளையாடும். கோபுரம் போல் அந்த மணலை உயரமாக குவித்து வைத்திருக்கும். மையப்பகுதியில் அதன் ஒரு புறத்தில் இருந்து ஒரு குழந்தை குழி தோண்டி செல்ல, எதிர்புறத்தில் இருந்து இன்னொரு குழந்தை குழி பறித்து வரும்.

இதில் இருவரின் கரங்களும் ஒன்றோடு, ஒன்று தொட்டதும், கை குலுங்கி சிரிக்கின்ற சிரிப்பு ஒற்றுமைக்கும் எத்தனை பெரிய பாடம். தமிழக அரசின் கூட்டுறவுத் துறையின் சின்னமே இணைந்த கரங்கள் தான். குழந்தைகள் சேர்ந்து சிறு, சிறு பாத்திரங்களை வைத்து சோறாக்குவது போல் விளையாடுவதும் எத்தனை பெரிய பாடத்தை தாங்கி நிற்கிறது. சமூக ஒற்றுமையை, குடும்ப சூழலை, ஆண், பெண்  சமநிலையை என அடுக்கிக் கொண்டே போகலாம். இவையெல்லாம் பரவலாக அறியப்பட்ட விளையாட்டுக்கள். ஆனால் இவை மட்டுமல்ல இன்னும் ஆயிரக்கணக்கான குழந்தை விளையாட்டுக்கள் இன்று சுவடில்லாமல் சென்றுகொண்டிருக்கின்றன.

அண்மையில் அண்ணன் வீட்டுக்கு சென்றேன். அண்ணனின் பேரன் கணினியில் விளையாடிக் கொண்டிருந்தான். அருகிலே சென்று பார்த்தேன். ஒரு பொம்மை கையிலே துப்பாக்கியுடன் ஒவ்வொரு இடமாக தேடிச் சென்று சுட்டுக் கொண்டிருந்தது. தாத்தா…இதோ இந்த துப்பாக்கி வைச்சு சுட்றான்ல இதான் நான். பேங்க்ல கொள்ளையடிச்சுட்டு, தப்பிக்கணும். வழியிலே போலீஸ் சுட முன்னாடி, நாம அவுங்கள சுடணும் அதான் கேம்.”என்றான். எனக்கு என்னையே சுடுவது போல் இருந்தது.

(uclacommons.com)

முன்பெல்லாம் அரசு பள்ளிகள் ஆனாலும், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆனாலும் பிரமாண்டமான விளையாட்டு மைதானங்கள் இருக்கும். அதில் மாணவ., மாணவியர் விளையாடி மகிழ்வார்கள். ஆனால் இன்று பிரமாண்ட மைதானங்களின் பெரும்பகுதியை வகுப்பறை கட்டிடங்களே வியாபித்துக் கொண்டன.

பள்ளிகள்தோறும் உடற்கல்வி ஆசிரியர் இருப்பார். வாரத்தில் மூன்றோ, நான்கோ நாள்கள் உடற்கல்வி வகுப்பு வரும். ஆனால் இப்போதெல்லாம் அறிவியல் ஆசிரியர்களும், கணித ஆசிரியர்களும் அந்த வகுப்பை வாண்டட் ஆக கேட்டு வாங்கி பாடம் எடுத்து விடுகிறார்கள். அல்லது அவர்களுக்கு டெஸ்ட் கேள்வி பதில் எழுதும் நேரமாக இதை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

‘’நோ வே” இந்த பிள்ளைங்க விளையாடியே மூணு மாசம் ஆச்சு. படிக்க மன உறுதியோட சேர்ந்து, உடல் உறுதியும் தேவை” என வாதிடும் உடற்கல்வி ஆசிரியர்களும் இருப்பதாக தெரியவில்லை.

தமிழகத்தில் அரசு சார்பில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் – 36,956 மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் – 8,407, சுயநிதிப் பள்ளிகள் – 11,462 உள்பட மொத்தம் 56,828 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 1.33 கோடி மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 5.09 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில், உடற்கல்வி ஆசிரியர்களாகப் பணியாற்றுபவர்கள் சுமார் 3500 பேர் மட்டுமே. இது, மற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவு.

தமிழகத்தில் உள்ள 8,200 அரசு நடுநிலைப்பள்ளிகளில் உடற்கல்வி  ஆசிரியர் மற்றும் சிறப்பாசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.  அதேபோன்று அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்  பள்ளிகளிலும் 2,200 உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக  உள்ளன. இந்த காலி பணியிடங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக  ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

(staticflickr.com)

“திறமையுள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் உடற்கல்வி மூலம் பயன்பெறும் வகையில், ஆண்டுதோறும் தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்குகிறது. இதன்மூலம், மாநில, தேசிய அளவில் பல்வேறு விளையாட்டுக்களில் மாணவர்கள் பிரகாசிக்க வழி கிடைத்தும், பயிற்சி அளிக்க போதிய உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாததால், அரசின் எதிர்பார்ப்பு முழுமை அடையாத நிலையே உள்ளது.” என்கின்றார் கூடவே நடைபயிற்சிக்கு வரும் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஒருவர். யார் கண்டது? அரசு இயந்திரத்துக்கும் மாணவர்களின் புத்தகச் சுமையும், விளையாடும் நேரமும் தெரிந்தே தான் நிரப்பப்படவில்லையோ என்னவோ? அல்லது அரசே குழந்தைகளின் விளையாட்டை விரும்பவில்லையோ என்னவோ!

இதே போல் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் உப்பு மூட்டை விளையாடாததை அறிந்துதான், புத்தகப்பை வாய்த்ததோ என்னவோ? பள்ளியில் எழுதக் கொடுக்கும் வீட்டுப் பாடங்களும் மலைக்க வைக்கிறது. பல்லாங்குழி விளையாட்டு, கணிதத் திறனை மேம்படுத்தும். காலி இடங்களில்  விளையாடி மகிழ்த கிட்டி புள் விளையாட்டுத் தான் இன்றைய கிரிக்கெட்டின் பிதாமகன். இன்று நம் குழந்தைகள் கிரிக்கெட்டைத்தான் ரசிக்கின்றன. ஆனால் இந்த பாரம்பரியம் எல்லாம்  நம்மை விட்டு அகன்று விட்டன. குழந்தைகள் சம காலத்தில் கணினியிலேயே தஞ்சம் புகுந்து விட்டனர். இதனால்  சகோதரத்துவமும், மனித நேயமும் இல்லாமல் போய் விடுகின்றது. முகநூலில் எதிர் வீட்டுக்காரருக்கு நட்பு வேண்டுகோள் கொடுத்து, அதன் மூலம் அவரிடம்  அறிமுகம் ஆகிக்  கொள்வதில் பெருமைப்பட என்ன இருக்கிறது? உண்மையிலேயே தொழில்நுட்பத்தின் பெருக்கம், அதீத பயன்பாடு என்பது மனித மனங்களையும் சேர்த்தே பண்படுத்த வேண்டும்.

கூட்டுக் குடும்ப உறவுநிலை தலைகீழாய் சிதறுண்டு போனதும் கூட இதற்கு ஒரு வகையில் காரணம். இன்று பல குழந்தைகளிடம் எல்லாம் இருக்கிறது. வீட்டில் கதைகள் சொல்ல, நல்வழிப்படுத்த தாத்தா, பாட்டிகள் இல்லை. இவை மனிதத் தன்மையையே குழந்தைகளுக்கு மாய்த்து விடும் திறம் உள்ளவை. வாழ்வியல் அறத்தில் இருந்தும் வெகு தூரத்தில் விலகி நிற்கும் ஒரு தலைமுறையை விளையாட அனுமதிக்காமல் உருவாக்கி விடக் கூடாது.

இப்போது செல்போன்களில் கூட ‘’டாக்கிங் கேம்”கள் வந்து விட்டன. அவைகள் இருக்கட்டும். உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் பேசுங்கள். விளையாட அனுமதியுங்கள். குழந்தைகளுக்கு கணினியில் எல்லாம் கிடைக்கும். பாசம், பண்பு, கலாச்சாரம் எல்லாம் குடும்பத்தில் இருந்து மட்டுமே கிடைக்கும்.

Related Articles