குழந்தையா? காட்சிப்பொருளா?

ஏன்டா ! நம்ம பாப்பா டிவில எந்தப்  பாட்டு போட்டாலும் ஆடுறா , பேசாம எதாவது டான்ஸ் ஆடச் சொல்லிக்கொடுக்குற எடத்துல சேத்துவிடுவமா? அவளும் டிவி நிகழ்ச்சியில போய் ஆடுவாள! என் அக்கா கேட்ட கேள்வி இது. இந்தக் கேள்வி டிவியில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி என்று ஒளிபரப்பாகும் அத்தனை சேனல்கள் மீதும் வெறுப்பை உண்டு பண்ணியது. காரணம் அந்தக் குழந்தையின் வயது வெறும் இரண்டரை தான்! உங்கள் குழந்தை நன்றாக ‘’தவக்குமா?‘’, உடனே வாருங்கள் இந்தியாவின் சிறந்த தவக்கும் குழந்தைக்கான தேடல்! என்று தான் இன்னமும் அவர்கள் நிகழ்ச்சிக்குப் பேர்  வைக்கவில்லை. ஹலோ எங்க குழந்தைக்கு இருக்கும் திறமையை உலகத்துக்கு காட்றோம் உங்களுக்கு என்ன வந்துச்சு என்று கேட்க தோன்றுகிறதா? பிரச்சனை அதுவல்ல, அந்தக் குழந்தைகள் தாங்கள் காட்சிப்பொருளாகக்  காட்டப்படுகிறோம் என்று தெரிந்தா நிற்கிறார்கள் ?

குழந்தைகள் நடிக்கும் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்று. அதுவும் மிகப்  பிரபலமான சேனலின் நிகழ்ச்சி. அதில் ஒரு 3 வயது சிறுவன்  மாடு போன்று வேடம் போட்ட மற்றொரு  நபரைப் பார்த்து பயந்து பார்வையாளர்கள் இருக்கையில் இருக்கும் அம்மாவைப்  போய் கட்டிப் பிடித்துக் கொண்டான். நெடுநேரம் கழித்து அவர் அந்த வேடத்தைக்  களைத்த  பின்தான் மேடை ஏறுகிறான் ! அதையும் நகைச்சுவை எனச் சிரிக்கிறார்கள் மக்கள். ( வீட்டிற்கு போனதும் எப்படியும் தலைவருக்கு தனி கவனிப்பு கிடைக்கும் அது வேறு கதை) பிஞ்சுக் குழந்தைகளின் மனதை நோகடிக்கும் செயலை எப்படி பொதுவெளியில் பார்க்க அனுமதிக்கிறோம் நாம்? என் நண்பன் அடிக்கடி சொல்வான், இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் குழந்தைகளைக்  குழந்தைத் தொழிலாளர்கள் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்று. சோகம் என்னவென்றால் உண்மையும் அதுதான் .

சரி நகைச்சுவை நிகழ்ச்சியில்தான் இந்தக் கொடுமை என்றால், டான்ஸ் நிகழ்ச்சி என்று அவர்கள் செய்யும் கொடுமையெல்லாம் கருடபுராணம் லெவல்! கட்டிப்  பிடிப்பது முத்தம் கொடுப்பது இரட்டை அர்த்தபாடல்களுக்கு நடனமாடுவது என்று நம்ம ஊர் ஆடல், பாடல் நிகழ்சிகளையெல்லாம் ஓவர்டேக் செய்கிறார்கள். நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் ( குட் டச்,  பேட் டச்  ) அறியாத குழந்தைகள் இந்த நிகழ்சிகளைப் பார்க்கும்போது   தவறான நோக்குத்தொடு தம்மைத் தொடுபவர்களை எப்படித்  தவிர்ப்பார்கள் அல்லது தாங்கள் தவறான ஆட்களால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளோம் என்று எப்படித் தெரிந்துகொள்வார்கள்.

சரி அந்த நிகழ்ச்சியில் அவர்களுக்குக்  கேட்கப்படும் கேள்வி எப்படி இருக்கிறது என்று கவனித்து உள்ளீர்களா ?  அவை இன்னமும் ஆபாசமாகத்தான் உள்ளது.  நிகழச்சித்  தொகுப்பாளர் ஒருவர் ஒரு  குழந்தையிடம்  உங்க அப்பா உங்க அம்மாவைத்  தவிர வேறை யாரையும் லவ் பண்ணியிருக்காரா ? உங்க அம்மா உங்க அப்பாவை அடிப்பாங்களா? , அந்தப்  பெண் அழகாக இருக்கிறாரா ? என்றெல்லாம் கேட்கிறார் . அந்த குழந்தையின் வளர்ச்சிக்கு இது எத்தனை தூரம் உதவும்?  ( அந்த டிவி ஷோ வளர்ச்சிக்கு வேண்டுமானால் உதவும்) ஒரு ஹிந்தி சேனல் ஒன்றில் 9 வயது சிறுவனுக்கும் 2௦ வயது பெண்ணிற்கும் காதல் என்று ஒரு நாடகத்தை ஒளிபரப்ப அது பல்வேறு போராட்டத்திற்குபின் நிறுத்தப்பட்டது ! . இப்படி ஒரு நாடகத்தை நடத்த அவர்கள் எப்படித்  துணிந்தார்கள் ? காரணம் இங்கு நாடங்களுக்கு என்று தரச்சான்று அமைப்பு எதுவும் இல்லை, விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்தும் நாம்தான் குழந்தைகளின் நலனைக்  குழிதோண்டிப்  புதைத்துக் கொண்டிருக்கிறோம்.

என்னப்பா ! ரெம்ப பில்டப் பன்றியே !, என்ற உங்களின் மைன்ட்வாய்ஸ் கேட்கிறது . இது மிகவும் குறைந்த உதாரணங்களே . அதுவும் நாம் நேரடியாக கவனிக்கக்  கூடிய, ஆனால் கவனிக்க மறந்த நிகழ்வுகள். டிவியில் காட்டப்படும் 9௦ சதவீத பொருட்கள் குழந்தைகளை மையப்படுத்தியே வருகிறது , அது காராக  இருந்தாலும் சரி கொசுபத்திச்  சுருளாக இருந்தாலும் சரி . காரணம் குழந்தைகளைக்  காட்டி என்ன சொன்னாலும் அதை நாம் கண்களை மூடிக்கொண்டு நம்பி விடுவோம். 5 வயதுவரை தெருப்புழுதியில் விளையாடி பின் பள்ளியில் சேர்ந்து படிக்க பிள்ளைகளை அனுப்புவோம் அதுவும் கையால் தலையை சுற்றிக்  காதை தொட்டால் மட்டுமே பள்ளியில் சேர்க்கை , இல்லையேல் மீண்டும் விளையாட்டு . இன்று கர்ப்பபையில் குழந்தை இருக்கும் போதே பயிற்சிவகுப்புகள் செல்லுங்கள் அடுத்த விஸ்வநாதன் ஆனந்த் உங்கள் குழந்தைதான் என்று விளம்பரங்களை பார்க்கமுடிகிறது.

ஏன் தம்பி நீதான் நெட்டுல நிறைய எழுதுவியே  சி.பி.எஸ் .சி, இன்டெர்நேஷனல் ஸ்கூல், இதெல்லாம் வேற வேறைய எதுல சேர்த்தா இந்த நீட் பரீட்சை எல்லாம் ஈசியா புள்ளைங்க பாஸ் ஆகுங்க ? அவ்வளவு அப்பாவியாய் கேட்டார் நண்பர் ஒருவர். அவருக்கு சென்ற வாரம்தான் குழந்தை பிறந்தது என்பதுதான் நகை முரண் . இப்பொழுது குழந்தைகளை 3 வயதுக்கு மேல் வீட்டில் வைத்திருந்தால் ஏதோ கவுரவ பிரச்னைபோல் ஆகிவிட்டது . குறைந்த பட்சம் அவர்களை ப்ளே ஸ்கூலிலாவது சேர்த்துவிட வேண்டும் என்று நம் புற சமுகம் நம்மைத்  தள்ளுவது போன்ற மாயயை இந்த தனியார் நிறுவனங்கள் உருவாக்கி விட்டனர். வெறும் கல்வியோடு முடியவில்லை குழந்தைகளைக்  காட்டி பணம் பிடுங்கும் வேலை , குழந்தைகள் பயன்படுத்தும் உடை, அவர்களின் உணவு, புதிதாக நாட்டுமாட்டுப்  பாலில் தயாரித்த பிஸ்கட்  என்றெல்லாம் வருகிறது ( ஜல்லிக்கட்டில் நாட்டுமாட்டு பாலை பற்றி ஏற்பட்ட விழிப்புணர்வைக் காசாக மாற்றும் உத்தி . நல்லாவருவிங்கடா!)

படம்: pixabay

பல உலக நாடுகளில் குழந்தைகள் விளையாடும் விளையாட்டுப்  பொருட்களுக்கு உச்சகட்ட தரசோதனை இருக்கிறது. இங்கு நீங்கள் எந்த நாட்டில் தடை செய்யப்பட்ட பொருளை வேண்டுமானாலும் விற்கலாம்.யாரும் கேள்வி கேட்க முடியாது.( தமிழ்நாட்டில் வர வேண்டிய ஒரு பெரிய நிறுவனத்தின் தொழிற்சாலை நம் அமைச்சர்கள் லஞ்சம் கேட்க அதும் உச்சகட்டமாக அவர்கள் ஆந்திரா பக்கம் ஓடியே விட்டார்கள் ) இப்படிப்பட்ட சூழலில் குழந்தைகளுக்குத் தரமானதைத்  தருவது எப்படி? , எனக்கு விவரம் தெரிஞ்சவரை குழந்தையென்றால் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பொருட்களைத்தான் அனைத்து மருத்துவர்களும் பரிந்துரைப்பார்கள்.  அதில்தான் நமது  வீடுகளிலும்,  சோப்பு, எண்ணெய் என்று எல்லாம் வாங்கினோம். ஆனால்அதைப்  பயன்படுத்தியதால் தனக்குப்  புற்றுநோய் வந்ததாக வழக்கு தொடர்ந்து,  அதில் வெற்றிபெற்று அந்த நிறுவனத்தை அபராதம் கட்ட வைத்துள்ளார் வெளிநாட்டில் ஒருவர் . அதைப்  பற்றி இந்திய சுகாதாரத்துறை ஏன் இன்னமும் அறிக்கைகூட விடவில்லை என்பது புரியாததல்ல                       (வரவேண்டியது வந்திருக்கும் வேறென்ன) , குழந்தைக்குப்  பயன்படுத்தும் விக்ஸ் போன்றவை தடைசெய்யப்பட்ட பொருட்கள். ஆனால் அவை  தொடர்ந்து நமது கடைகளில் விற்கப்படுகிறதே எப்படி ?

படம்: dnaindia

நமது ஏழ்மை எந்தச்  சூழலிலும் குழந்தைகளைப்  பாதித்துவிடக் கூடாது என்று கவனம் செலுத்தும் நாம் அவர்களுக்கு சரியான , பாதுகாப்பான , முக்கியமாக தேவையானதை வாங்கித்தருகிறோமா ? கண்டிப்பாய் இல்லை தானே ? . கடலைமிட்டாய், தேங்காய் மிட்டாய்     எல்லாம் அவர்களிடம் இருந்து இந்த டிவி பூதம் பிடுங்கி விட்டது. பள்ளியின் அருகில் வயதான பாட்டி, தாத்தாகளின் மூலம் கிடைத்த நாவல் பழம், கொய்யா பழம் , சீத்தா பழம் என்று சத்தான உணவை எல்லாம் கார்ப்பரெட் பள்ளிகள் ஒழித்துவிட்டன. இப்பொழுது அவர்கள் சாப்பிடும் நொறுக்குத்  தீனி முழுமையாய் அவர்களை நோயாளிகளாக மாற்றும் என்பது மட்டும் உறுதி. ஆனால் காற்று அடைத்த பையில் விற்பதை வாங்கி உண்பது கவுரவம் என்ற எண்ணத்தில் அதைத்தான் நாமும் ஆதரிக்கிறோம். 2 நிமிடத்தில் தயாரிக்கும் உணவு ஆரோக்கியமானது என்பது எத்தனை பெரிய வியாபாரப்  பொய் ? .

இப்போது எந்தக்  குழந்தை விளையாட வெளியே போகிறேன் என்றாலும் சரி அல்லது சேட்டை செய்தாலும் சரி ஏதாவது அனிமேஷன் தொடர்களைக்  கைபேசியிலேயோ அல்லது டிவிலேயோ போட்டு அவர்களை அமைதியாக்கி விடுகிறோம். அனிமேஷன் என்னவெல்லாம் அவர்களுக்குத்  தருகிறது, எதையெல்லாம் அவர்களிடம் புகுத்துகிறது என்பதைத்  தொடர்ந்து பார்க்கலாம். குழந்தை வளர்ப்பு என்பது கடமை அல்ல அது அன்பின் வெளிப்பாடு. ஆனால் அது அவ்வாறா இருக்கிறது ?

Related Articles