இலங்கையில் Covid-19 தொற்றுக்கான தடுப்பூசிகளை பொதுமக்கள் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகள்!

இலங்கையில்  பொதுமக்களுக்கு கோவிட்-19  தொற்றுக்கான தடுப்பூசியினை வழங்கும் பணி   ஜனவரி மாத இறுதியில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட CoviShield எனும் பெயர் கொண்ட தடுப்பூசிகள் ஜனவரி மாதம் 28ம் திகதி இலங்கை வந்தடைந்ததை தொடர்ந்து, முதற்கட்ட நடவடிக்கையாக சுகாதார ஊழியர்கள், இராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினருக்கு  வழங்கப்பட்டது. மார்ச் மாதம் 12ம் திகதி நிலவரப்படி, இது வரை 750,000 நபர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சு மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்களினால்  முன்னெடுக்கப்பட்டு வரும் இச்செயற்பாடு தற்போது மேல் மாகாணத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அண்மையில் கொழும்பு மருதானை பிரதேசத்தில்  தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை நீங்கள் காணலாம்.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சமூக இடைவெளியை பேணும்  கட்டுப்பாடுகளுக்கு அமைய  உங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் குறித்த நபர்களுக்கே உள்ளே செல்வதற்கான அனுமதி வழங்கப்படும்.

உள்ளே அனுமதிக்கப்பட்டதன் பின்னர், உங்கள் தனிப்பட்ட விவரங்களை வழங்குவதற்கான ஒரு விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்ய வேண்டும்.

தற்பொழுது நீங்கள் ஏதேனும் மருந்து வகைகளை உபயோகிப்பீர்களேயானால் அது குறித்த தகவல்களையும், ஒவ்வாமைகள் மற்றும் வேறு நோய்கள் காணப்படுமாயின் அவை குறித்த சரியான தகவல்களையும் அங்கு வழங்க வேண்டும். அத்தகைய பிரச்சினைகள் உள்ள நபர்கள்  மருத்துவர் ஒருவரிடம்  பரிந்துரைக்கு அனுப்பப்படுவார்கள், அவர்கள் தடுப்பூசி பெறுவது பாதுகாப்பானதா? என்பதை மருத்துவர்கள் தீர்மானிப்பார்கள்.

நாங்கள் பார்வையிட்ட தடுப்பூசி நிலையத்தில் இருந்த பொது சுகாதார ஆய்வாளர் கிருஷாந்த செனவிரத்ன அவர்களின் கருத்தின்படி, தடுப்பூசி பெற தகுதியுள்ள நபர்கள் குறித்த நிலையங்கள் அமைந்திருக்கும் சுகாதார பிரிவுகளுக்கண்மையில்  வசிப்பதற்கான வதிவிட  ஆதாரத்தை வழங்க வேண்டும். அதாவது தேசிய அடையாள அட்டை, கட்டண பட்டியல்கள் அல்லது கிராம சேவக அதிகாரியின் வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் கடிதம் போன்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை  சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றையேனும் சமர்ப்பிக்க முடியாதவிடத்து குறிப்பிட்ட நபர்கள் திருப்பியனுப்பப்டுவார்கள் என திரு. செனவிரத்ன தெரிவித்தார்.

மேலும் 30 முதல் 100 வயதுக்குட்பட்ட எந்தவொரு நபரும் அந்தந்த குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி நிலையங்களில்  தடுப்பூசிகளை  பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர்  தெரிவித்தார்

ஆவணப்படுத்தல் செயன்முறைகளின் பின்னர், குறித்த நபர்  ஒரு இருக்கைக்கு அனுப்பப்படுவார்,  அங்கு ஒரு மருத்துவ நிபுணர் அவருக்கான  தடுப்பூசியினை  வழங்குவார். தடுப்பூசி மருந்தின் ஒரு குப்பியில் இருந்து 10 முதல் 11 நபர்களுக்கு தடுப்பூசியை விநியோகிக்க முடியும் என்று திரு. செனவிரத்ன தெரிவித்தார்.

இறுதிக்  கட்டமாக, ஏதேனும் ஒவ்வாமை அல்லது எதிர் விளைவுகளுக்கு எதிரான முன்னெச்சரிக்கையாக, மருத்துவ அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் சுமார் 20 நிமிடங்கள் வரை  தடுப்பூசியினை பெற்ற நபர் காத்திருக்க வேண்டியிருக்கும்.

தடுப்பூசியினை பெற்ற பின்னர்,  உங்கள் முதல் டோஸ் Covid -19 தடுப்பூசியைப் பெற்றுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்த அட்டையொன்று வழங்கப்படும். அவ்வட்டையில் குறித்த நபர் இரண்டாவது டோஸை எப்போது பெற வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும்

புகைப்பட உதவி: Roar Media / நஸ்லி அஹமட்

Related Articles