காவல் தெய்வத்திற்கு வந்த சோதனை

சம்பளம் போதுமானதா இல்லை, இதுதான் வேலைநேரம்னு ஒரு வரைமுறை இல்லை, எங்களைப் பத்தி மக்களும் பெருசா அக்கறை படுவதில்லை நாங்கலாம் ஒரு ஒருவாரம் ஸ்டரைக் பண்ணோம்னு வையு அப்பதாண்டா எங்க அருமை உங்களுக்குலாம் புரியும்! இது என் நெருங்கிய நண்பன் என்னிடம் புலம்பியது. மற்றத்துறை என்றால் கூட பரவாயில்லை, என் நண்பன் இருப்பது தமிழ்நாடு காவல்துறையில்..

சில மாதங்களுக்கு முன்னாடி சென்னையில் சில இடங்களில் தமிழ்நாடு காவல்துறை வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக போஸ்டர்களும், வாட்ஸ்அப் செய்திகளும் பரவலாக பரப்பப்பட்டன அதில் அவர்களின் குறைகளாக சொல்லப்படுவது, மேலே என் நண்பன் குறிப்பிட்ட அதே விஷயங்கள்தான். அது சரி, உண்மையில் தமிழ்நாட்டு போலிசின் நிலைதான் என்ன? தமிழ்நாட்டின் மக்கள் தொகை கிட்டத்தட்ட எட்டு கோடி, ஆனால் தமிழ்நாட்டு மொத்த போலீஸ்காரர்களின் எண்ணிக்கை 120000 மட்டுமே! (பெண் போலீஸ்களும் சேர்த்துதான் மக்களே) முதல் பாய்ன்ட்லேயே அவர்களின் பிரச்சனை எங்கிருந்து ஆரம்பிக்கிறதுக்கு என்று நமக்கு புரியவரும் .

அடிப்படை வசதிகூட இல்லாத ஒரு இடத்தில் பெண் காவலர்களின் நிலையை சற்று சிந்தித்து பாருங்கள் கழிப்பிடம் கூட இல்லாத எத்தனை இடத்தில் அவர்கள் பணி செய்திருப்பார்கள். படம் – hazimiai.files.wordpress.com

அது மட்டும் இல்லாமல் இதுதான் வேலைநேரம் என்பது பெரும்பாலான காவலர்களுக்கு கிடையாது, நான்கு மணிநேர வேலை நான்கு மணிநேர ஓய்வு போன்ற வினோதமான பணிநேரங்களும் ஒதுக்கப்படுகின்றன. இது தவிர்த்து திருவிழா, பொதுக்கூட்டம், போராட்டம், மறியல்கள் என்று வரையறை இல்லாத சூழலும் உருவாகிறது. எந்த துறையிலாவது வெளியூர் சென்று பணிபார்க்க நேர்ந்தால் அவர்களுக்கான உணவு தங்குமிடம் அந்த துறையோ, நிறுவனமோ செய்துகொடுப்பதுதானே இயல்பு, ஆனால் 90% அது காவலர்களுக்கு கிடைப்பதில்லை. கொஞ்சம் நல்ல மேலதிகாரி என்றால் அவர்களுக்கான உணவாவது கிடைக்கலாம்! ஆனால் கழிப்பிடம் என்பது கேள்விக்குறியே!

எப்பொழுது வருவார் என்று தெரியாத ஒரு கட்சி தலைவருக்காக தன் இயற்கை உபாதைகளை அடக்கி நிற்பது என்பது எத்தனை துன்பம் நிறைந்த செயல். இப்போது தமிழகம் எங்கும் போராட்டங்கள் நிறைந்து காணப்படுகிறது அடிப்படை வசதிகூட இல்லாத ஒரு இடத்தில் பெண் காவலர்களின் நிலையை சற்று சிந்தித்து பாருங்கள் கழிப்பிடம் கூட இல்லாத எத்தனை இடத்தில் அவர்கள் பணி செய்திருப்பார்கள். பெரும்பான்மை நேரங்களில் பிளாட்பாரமில் கூட படுத்து உறங்கும் காட்சியெல்லாம் கூட காண முடிகிறது.

ராமேஸ்வரம் சென்றபோது நண்பனின் அண்ணன் அங்கு போலிசாக இருப்பதாக சொல்ல, அவரை காணச் சென்றோம். அங்கு பம்பன் பாலத்தின் அருகில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஒரு குடிசை, (குடிசை என்றும் சொல்ல முடியாது சுத்தி தட்டிகளால் அடைக்கப்பட்ட இடம் கண்டிப்பாய் மழைபெய்தால் ஒழுகும்)  நான்கு பேர்கூட தங்கமுடியாத அந்த இடத்தில் 9 பேர் இருந்தார்கள். நாங்கள் கேட்டதற்கு புடுச்சு வந்த வேலை அத எப்டி விட்டு போறது என்று வலி நிறைந்த புன்னகையுடன் சொன்னார்கள் .

முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் இறுதிக் கிரியைகளின்போது பணியிலீடுபடும் காவல் துறையினர். படம் – firstpost.com

சரி இந்த முறை கண்டிப்பாய் முதலவர் காவல்துறையின் ஊதிய உயர்வுபற்றி பேசுவார் என்று எதிபார்த்த நேரத்தில், தமிழக எம்.எல்.ஏ களின் மாதசம்பளத்தை 50 ஆயிரத்தில் இருந்து ஒரு இலட்ச ரூபாயாக அதிகரித்து உள்ளது தமிழகஅரசு. அனால் 2010இல் பணியில் சேர்ந்த ஒரு அடிப்படை போலீஸ் அதிகாரியின் (கான்ஸ்டபிள்) தற்போதைய சம்பளம் என்பது பிடித்தம் போக 12000 மட்டுமே!. நமது கண்களுக்கு அரசு வேலையாக மட்டும் தெரியும் ஒன்று உழைப்பை உறுஞ்சும் செயலாக தெரிவதில்லை .

எட்டு மணிநேர வேலை, வாரத்தில் ஒருநாள் கட்டாய விடுமுறை என்பதெல்லாம் போலீஸ்காரர்களின் கனவிலும் நினைக்கமுயடியாத ஒன்று. தலைதீபாவளி கொண்டாடாத எத்தனையோ புதுமாப்பிளை போலீஸ்களின் கதைகளையும் நீங்கள் கேட்க்கமுடியும். ஹலோ, போலீஸ், ஆர்மி-லாம் சேவை மனப்பான்மையோட செய்றதுங்க அதுல இப்டிலாம் குறை சொல்லலாமா என்று கேட்க தோன்றுகிறதா? அப்படி என்றால் ஊதியத்திலும் பேதம் இல்லாமல் கொடுப்பதுதானே நியாயம். காவல்துறையினரின் வேலைகளையும் அதில் உள்ள கடினங்களையும் சொன்னால் அது ஒரு ஆக்கத்தில் முடிக்கக்கூடிய ஒன்றாய் இராது.

1979 ஆம் ஆண்டு தமிழக காவல்துறை வேறு சில காரணகளுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனால், அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அதை முறையாக கையாண்டார், ஆனால் இன்றைய சூழலில் ஒருவேளை காவல்துறை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் அதன் பாதிப்பு மிகவும் பெரிய அளவில் இருக்கும். காரணம் தமிழகத்தில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை அப்படி. நீங்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் உங்களின் நிம்மதியான உறக்கத்திற்கு பின் சில காக்கி சட்டையின் உறங்காத கண்கள் உள்ளன.

மக்களுக்கான வரிப்பணத்தில் AC காரில் வந்து செல்லும் எம்.எல்.ஏகளின் சம்பளம் லட்சத்தில் இருக்கும் போது, வெயில் மழை என்று பாராமல் உழைக்கும் இவர்களின் கோரிக்கைகள் நியாயமானதே படம் – thehindu.com

டேய்! போலீஸ்தான் லஞ்சம் வாங்குறாங்க அப்பறம் எப்டி மக்கள் அவுங்களுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க?, மெரினால அடுச்சது அவுங்கதானே? ஏதோ அவுங்க தப்பே பண்ணாத மாதியே பேசுற! இந்த ஆக்கம் தொடர்பாக பேசியபோது பெரும்பாலான சாமானியனின் வார்த்தைகள் இதுவாகவே இருந்தது. பெரும்பாலான திரைப்பட காட்சிகளாலும் சில பொறுப்பற்ற அதிகாரிகளின் செயல்களாலும் மொத்தமா ஒரு துறையையே தவறாக பார்க்க தொடங்கிவிட்டோம் . “லஞ்சம் வாங்குவது எந்த அளவு குற்றமோ அதே அளவு லஞ்சம் குடுப்பதும் குற்றம்” என்றைக்காவது நமது குற்றத்தைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்த்துள்ளோமா? மெரினாவின் அத்தனைநாள் அமைதியான போராட்டத்துக்கும் அதே காவல் துறைதானே பாதுகாப்பு தந்தது! அதையும் மறந்துவிடக்கூடது. எப்போதும் அம்புகளை மட்டுமே தண்டிக்கும் குணம் கொண்ட நாம் இந்த நிகழ்விலும் அப்படியே செய்தோம். கண்டிப்பாய் உங்கள் உறவினரோ, நண்பரோ காவல்துறையில் இருப்பார்கள் சரிதானே! எனவே கண்களை மூடிக்கொண்டு அவர்கள் மீது குற்றம் சுமத்த வேண்டாம்.

மக்களுக்கான வரிப்பணத்தில் AC காரில் வந்து செல்லும் எம்.எல்.ஏகளின் சம்பளம் லட்சத்தில் இருக்கும் போது, வெயில் மழை என்று பாராமல் உழைக்கும் இவர்களின் கோரிக்கைகள் நியாயமானதே. சரியான பணிநேரமும், சரியான ஊதியமும் தரும் பட்சத்தில் கண்டிப்பாய் லஞ்சம் இல்லாத துறையாய் காவல்துறை மாறும் என்பதில் ஐயம் இல்லை.

 

Related Articles