Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

யார் இந்த உள்நாட்டு தொழிலாளர்கள்?

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்லும் பணிப்பெண்கள், தொழிலாளர்கள் தொடர்பில் ஆர்வமுடன் செயற்படும் எங்களில் எத்தனைபேர், தினந்தோறும் நம்மைக் கடந்துசெல்லும் உள்நாட்டு தொழிலாளர்கள் (Domestic Workers) தொடர்பில் கவனம் செலுத்தி இருக்கிறோம் ?

நம்மில் எத்தனைபேர் நம் வீடுகளில் பணிபுரிகின்ற உள்நாட்டு தொழிலாளர்களின் அடிப்படை உரிமை மற்றும் சட்டம் தொடர்பில் அறிந்து செயற்படுகிறோம்? குறைந்தது உள்நாட்டு தொழிலாளர்களுக்கான ஒன்றியம் மற்றும் சட்டதிட்டங்கள் உள்ளன என்பதையாவது அறிவோமா?

உள்நாட்டுத் தொழிலாளர்கள் யார்?

நாளந்த வீட்டு கடமைகளான சமைத்தல், துப்பரவு செய்தல், துணிதுவைத்தல், குழந்தைகளை பராமரித்தல், முதியோரைப் பராமரித்தல் போன்ற கடமைகளை பணத்திற்காக அல்லது பணம் சார்ந்த வேறு ஏதேனும் அனுகூலங்களுக்காக வாரமொன்றுக்கு குறைந்தது 3 நாட்கள் தொடர்ச்சியாக செய்கின்ற எவருமே உள்நாட்டு தொழிலாளர்கள் என வகைப்படுத்தப்படுவார்கள்

(googleusercontent.com)

(googleusercontent.com)

இலங்கையை பொறுத்தமட்டில், உள்நாட்டு தொழிலாளர்கள் Verite Research ஆய்வுகளின் அடிப்படையில் மூன்று வகையாக இனம்காணப்பட்டுள்ளார்கள்.

  1. தங்கியிருந்து பணிபுரிபவர்கள் (Residential Working Arrangements) – குறித்த தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்துபவர்களின் இடங்களில் தங்கியிருந்து அவர்களுக்கு மட்டுமே சேவையை வழங்குதல்
  2. தனிநபருக்கு பணிபுரிபவர்கள் (Single Household non-residential) – வேலைக்கு அமர்த்தும் குறித்த தொழிலாளர்களுக்கு பணிபுரிபவர்கள். ஆனால், தங்குமிட வசதிகள் எதுவும் வழங்கபடாதவர்கள்.
  3. பலருக்கு பணிபுரிபவர்கள் (Multiple Household non-residential) – ஒப்பந்த அடிப்படையில், பகுதி நேரமாக பல குடியிருப்பாளருக்கும் பணிபுரிபவர்கள். இவர்களுக்கும் தங்குமிட வசதிகள் எதுவும் வழங்கபடுவதில்லை.

உள்நாட்டு தொழிலாளர்களின் வேதனம் (Wages of Domestic Workers)

ஆய்வறிக்கைகளின் பிரகாரம், இலங்கையில் உள்நாட்டு தொழிலாளர்களே குறைந்தளவு வேதனம் பெறுகின்ற தரப்பினராக கண்டறியப்பட்டுள்ளார்கள். நாளொன்றுக்கு குறைந்தது 8 மணிநேரம் பணிபுரியும் இவர்களது குறைந்த ஒருநாள் சம்பளமாக 500/- உள்ளது. அதாவது இவர்கள் சராசரியாக, மணிநேரமொன்றுக்கு 62/- ஐ வேதனமாக பெற்றுக்கொள்கிறார்கள். இதற்கு மேலதிகமாக, குடியிருப்பாளர்கள் தொழிலாளர்களின் ஏதேனும் சொந்த செலவினங்களுக்கு வழங்கும் பணம், சுகயீனங்களுக்கு வழங்கும் செலவுகள், பண்டிகைக்கால வெகுமதிகள் என்பனவும் உள்ளன.

இலங்கையின் உள்நாட்டு தொழிலாளர் சட்டங்களுக்கு அமைவாக, வீட்டுவேலை பார்க்கும் பெண்களுக்கு குறைந்தது 8,000/- மாத சம்பளம் கிடைக்கப்பெறுவது அவசியம் என்பதும், ஏனையவர்களின் வேதனமானது அமைவிடம் மற்றும் வீட்டுவேலைக்கு அமர்த்துபவர்களின் இயலுமையை பொறுத்து வேறுபடலாம் என்கிற தெளிவற்ற தன்மையும் உள்ளது. இதனால், உள்நாட்டு தொழிலாளர்களின் அடிப்படை வேதனத்தை வரையறுப்பதில் சிக்கல்நிலை உள்ளது.

குறிப்பாக, உள்நாட்டு தொழிலாளர்களில் பெரும்பான்மையாவர்கள் பெண்களாக உள்ளமையும், அவர்களது படிப்பறிவு வீதமானது சராசரிக்கும் குறைவாக உள்ளமையும் அவர்களது வேதனங்களை தீர்மானிப்பதிலும், பேரம்பேசுவதிலும் தாக்கத்தைச் செலுத்துகிறது.

உள்நாட்டு தொழிலாளர்களாக உள்ளவர்கள் யார்?

Verite Research நிறுவனத்தின் ஆய்வறிக்கைகளின்படி, 16-35 வயதுக்குட்பட்டவர்கள் அதிகமான அளவில் உள்நாட்டு தொழிலாளர்களாக பணிபுரிகிறார்கள். ஆனாலும், இவர்களில் 59% மானவர்கள் திருமணமான பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இன அடிப்படையில், சிங்களவர்கள், இந்திய தமிழர்கள்,  இஸ்லாமியர்கள் , மற்றும் இலங்கை தமிழர்கள் என்ற வரிசைகிரமத்தில் தொழிலாளர்கள் உள்ளனர்.

(blog.brac.net)

(blog.brac.net)

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரகடனத்திற்கு அமைவாக, தொழிலாளர்களின் குறைந்த வயதெல்லை 14 ஆக வரையறுக்கப்பட்டுள்ள போதிலும், 18 வயதுக்குறைந்த எவருமே கல்வி கற்பதற்கான பூரண வாய்ப்புக்களை கொண்டுள்ளபோது, தொழில் புரிவது என்பது தண்டனைக்குரிய குற்றமாக்கபட்டுள்ளது. ஆயினும், இலங்கையில் சிறுவர்களை தொழிலுக்கு அனுப்பகின்ற நிலைமை தொடர்ந்தவண்ணமே உள்ளமை கவலைக்குரியதே!

உள்நாட்டு தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்

1. பாதுகாக்க போதுமான சட்டங்கள், ஒன்றியங்கள் இன்மை

இலங்கையை பொறுத்தவரையில் உள்நாட்டு தொழிலாளர் நலன்களை பாதுகாக்கும் சட்டங்கள் நூறு வருடங்களுக்கும் பழமையானவையாக உள்ளது. இதன்விளைவாக, தொழிலாளர் நலன்களை தற்காலத்திற்கு ஏற்ப பாதுகாக்கவும், கண்காணிக்கவும் போதிய முறைமைகள் ஏற்படுத்தப்படவில்லை. தொழிலாளர்களின் முதலாளிகள், இடைத்தரகர்கள், சிறுவயது தொழிலாளிகள் என்பவற்றை கண்காணிக்க வேறுபட்ட அமைப்புக்களும், சர்வதேச தொழிலாளர் அமைப்பும் செயற்படுகின்ற போதிலும், உள்நாட்டு தொழிலாளர்களுக்காக வினைத்திறனாக இயங்கக்கூடிய ஒன்றியமோ, சட்டங்களோ இல்லாதான் காரணமாக, தமக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளை கூட முறைப்பாடு செய்ய பெரும்பாலனவர்கள் முன்வருவதில்லை. ஆய்வறிக்கைகளின்படி, 41% வீதமான பாதிக்கபட்ட தொழிலாளர்கள் முறைப்பாடுகளை மேற்கொள்ளாமல் தொடர்ந்தும், குறித்த பணியை செய்யவே விரும்புகின்றனர் என்பது வருத்தத்திற்குரிய விடயமாகும்.

(qzprod.files.wordpress.com)

(qzprod.files.wordpress.com)

2. நியாயமான வேதனத்தையும், வேலை நேரத்தையும் வரையறுப்பதில் உள்ள சிக்கல்

கடந்தகாலங்களில் உள்நாட்டு தொழிலாளர்களுக்கான கேள்விகள் அதிகரித்துள்ளபோதிலும், அவர்களுக்கான வேதனத்தில் நியாயமான தன்மை பேணப்படவில்லை. குறிப்பாக, வெளிநாட்டிலிருந்து வருகைதருபவர்களுக்காக (மாலைதீவு உட்பட) பணிபுரியச் செல்பவர்களுக்கு நியாயமான வேதனத்தொகை கிடைக்கின்ற போதிலும், உள்நாட்டவர்களுக்கு பணிபுரிபவர்கள் அடிமாட்டு ஊதியத்திலேயே பணிபுரிய பெரும்பாலும் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதுபோன்று, சாதாரண வேலையாளர்களுக்கு மேலதிகமான நேரத்தில் பணிபுரிய உள்நாட்டு தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுவதுடன், அதற்கான தகுந்த ஊதிய அளவும் மறுக்கபடுகிறது. இலங்கையில் உள்நாட்டு தொழிலாளர்களில், உரிமையாளருடன் தங்கியிருந்து பணிபுரிபவர்கள் நாளொன்றுக்கு சராசரியாக 12-14 மணிநேரம் தொழில் புரிகின்ற நிலை உள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தீர்மானங்களுக்கு அமைய, இவை சட்டவிரோதமானவை என்கிற போதிலும் இந்த நிலைமையை கண்காணிக்க பொருத்தமான அமைப்புக்களோ, சட்டங்களோ இன்மையால் இத்தகைய நிலை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

3. உடல்ரீதியாகவும், வாய்மொழி மூலமாகவும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாதல்

Verite Research நிறுவனத்தின் ஆய்வறிக்கையின் பிரகாரம், உள்நாட்டு தொழிலாளர்களாக பணிபுரிபவர்களில் வீடுகளில் தங்கியிருந்து பணிபுரியும் தொழிலாளர்களே இத்தகைய துஷ்பிரயோகத்தால் அதிகளவில் பாதிக்கபடுகிறார்கள். குறிப்பாக, 38%மானவர்கள் இதனால் பாதிக்கபட்டுள்ளார்கள். போதிய கல்வியறிவின்மை, தொழில் பயம், முறைப்பாடுகளை தெரிவிக்க விரும்பாமை போன்ற காரணங்களால் சாதாரண தொழிலாளர்களுக்கு உரிய அடிப்படை உரிமைகளை சரிவர பெறாத நிலையிலும், குறித்த பிரச்சனைகளை வெளிக்கொண்டுவர இயலாதவர்களாகவும் உள்ளார்கள். இவர்களைத் தவிர, வீடுகளுக்குச் சென்று சேவை வழங்கும் தொழிலாளர்களில் 21% மானவர்கள் இத்தகைய துஷ்பிரயோக நிலையை எதிர்கொள்கிறார்கள்.

4. வயோதிப வயதெல்லை உள்ளவர்களுக்கு முறைமையான பராமரிப்பு இன்மை

தொடர்ச்சியாக உள்நாட்டு தொழிலாளர்களாக உள்ளவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டு எதிர்க்கலாம் தொடர்பில் உள்ள நிலையற்ற தன்மை காரணமாக தொடர்ந்தும் உள்நாட்டு தொழிலாளர்களாக மாற்றம் பெறுகிறார்கள். இவர்கள் அனைவரும் முதுமைநிலையினை அடையும்போது, அவர்களுக்கான எதிர்காலம் சூனியமாகவே உள்ளது. குறிப்பாக, தற்சமயம் இலங்கையில் 56-75 வயதுக்குட்பட்ட நிலையில் 25%மானவர்கள் தொழில் புரிகிறார்கள். இவர்களால், தொடர்ச்சியாக தொழிலாளர்களாகவே பணிபுரிவது சாத்தியமற்றது. எனவே, இவர்கள் தொடர்பில் அரசும், பொருத்தமான அமைப்புக்களும் திட்டமொன்றை வகுக்கவேண்டியது அவசியமாகிறது. இல்லாவிடின், எதிர்காலமற்ற இவர்களை நாம் வீதியோரங்களிலேயே காண நேரிடும்.

(un.org)

(un.org)

பிரச்சனைகளுக்கு மத்தியிலும் உள்நாட்டு தொழிலாளர்களாக இருக்க காரணம் ?

மேலே குறிப்பிட்டது உட்பட பலவேறு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நிலையிலும், நீண்டகலாமாக அல்லது பரம்பரையாகவே பலரும் குடும்ப தொழிலாளர்களாக பணிபுரிகிறார்கள். இதற்கான காரணங்களை ஆரய்ந்தபோது. பெரும்பாலானவர்கள் வரையறுக்கப்பட்ட நேரத்திலன்றி, நெகிழ்வான முறையில் வேலைகளை செய்யகூடியதாக உள்ளதாலும், கல்வித்தகமை அடிப்படையில் வேறு மாற்றுவேலைகளை தேடமுடியாத நிலையிலுமே இந்த தொழிலினை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, இந்திய தமிழர்களாக பணிபுரிபவர்கள் பெரும்பாலானவர்களுக்கு வீட்டுரிமையாளர்கள் அடிப்படை வசதிகளைக்கூட ஏற்படுத்திக்கொடுக்காத மோசமான நிலை உள்ளது. வீடுகளின் மாடிப்படியோரங்களில் உறங்க இடம் வழங்கல், ஒருநேர உணவு வழங்கல், கீழ்த்தரமாக நடாத்தல் என்கிற மோசமான அடிப்படை மீறல்கள் இடம்பெறுகின்றபோது, வருவாயை மாத்திரம் கருத்தில்கொண்டு தொடர்ந்தும் இந்த தொழிலையே செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

அண்மையகாலங்களில் பரம்பரையாக உள்நாட்டு தொழிலாளர்களாக தொழில் புரியும் நிலை குறைவடைந்து வருகிறது. குறிப்பாக, உள்நாட்டு தொழிலாளர்களில் பெரும்பாலனவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கல்விரீதியான முன்னேற்றத்தை வழங்குவதில் மும்முரம் காட்டுவதினால், இத்தகைய நிலை உருவாகியுள்ளது.

உள்நாட்டு தொழிலாளர்களுக்கான தீர்வு என்ன ?

இலங்கை போன்ற கல்விநிலை மற்றும் மனிதவள சுட்டிகள் முன்னேற்றகரமாக உள்ள நாடொன்றின், உள்நாட்டு தொழிலாளர்கள் போதியமுறையில் கண்காணிக்கபடாமை, நமது சட்டதிட்டங்களிலும், அரச இயந்திரத்திலுமுள்ள வினைத்திறனின்மையையே காட்டி நிற்கிறது. எனவே, இலங்கை அரசு நூற்றாண்டு பழமையான சட்டதிட்டங்களை மாற்றியமைப்பதுடன், பொருத்தமான அமைப்புக்களை நிறுவி, உள்நாட்டு தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க முன்வர வேண்டும்.

அதுபோல, உரிமையாளர்களுக்கும், தமது எதிர்காலத்திற்கும் பயந்துகொண்டு உள்நாட்டு தொழிலாளர்கள் குரல்கொடுக்காத நிலை மாறவேண்டும். இதற்கு, பொருத்தமான அமைப்புக்கள் அவர்களிடத்தே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

இவற்றுக்கும் மேலாக, நாடு பூராகவும் உள்ள உள்நாட்டு தொழிலாளர்கள் அனைவரையும் கண்காணிக்கக் கூடியவகையில், அவர்களை பதிவு செய்கின்ற மற்றும் உரிமையாளர்களை பதிவுசெய்கின்ற நடைமுறையும் அமுல்படுத்தவேண்டியது அவசியமாகிறது. இதன் மூலமாக, இலகுவாக, உள்நாட்டு தொழிலாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்தக் கூடியதாக இருக்கும்.

PS – அனைத்து புள்ளிவிபரங்களும் Verite Research ஆய்வறிக்கையின் புள்ளிவிபரங்களை அடிப்படையாக கொண்டு வரையப்பட்டது

Related Articles