அமெரிக்காவின் மீட்பர் டொனால்ட் ட்ரம்ப்

படம் - teespring-storecontent.s3.amazonaws.com

படம் – teespring-storecontent.s3.amazonaws.com

நவம்பர் 8ம் திகதி அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்பு தொடங்கி, முடிவுகள் வெளியாகும்வரை ஒட்டுமொத்த உலகமே அமெரிக்காவின் முதலாவது பெண் ஜனாதிபதியை வரவேற்கவே தயாராகவிருந்தது. ஆனால், வெளியான முடிவுகள் ஆரம்பம் முதல், அத்தனை கொண்டாட்டங்களையும், தலைப்பு செய்திகளையும் மாற்றி எழுதவேண்டிய தேவையை உருவாக்கியிருந்தது. அமெரிக்க தேர்தல் தொகுதி முறைமை (Electoral Vote System) மீண்டும் ஒருமுறை உலக கணிப்பைப் பொய்யாக்கி, டொனால்ட் ட்ரம்ப்புக்கு அமெரிக்காவின் 45வது ஜனாதிபதி அந்தஸ்தை வழங்கியிருந்தது.

டொனால்ட் ட்ரம்ப் இனது தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் ஊடக தகவல்முறைமைகள் என்பன ட்ரம்பை உலகமக்களிடம் ஓர் வில்லனாகவே புடம்போட்டு காட்டிகொண்டு இருந்தன. ஆனால், அமெரிக்கர்களுக்கோ அவை வேறு வடிவம் தந்திருந்தன. அதுவே, ஒட்டுமொத்த உலகத்தின் எதிர்பார்ப்புக்கும், அமெரிக்கர்களின் எதிர்பார்ப்புக்கும் இடையே இருக்கும் இடைவெளியை வெளிப்படுத்தும் தேர்தல் முடிவாக வெளியாகியிருந்தது.

டொனால்ட் ட்ரம்ப் என்பவர் யார் ?

படம் - img.washingtonpost.com

படம் – img.washingtonpost.com

டொனால்ட் ட்ரம்ப் உலக மக்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கும்வகையில் தனியாக வளர்ந்த வணிக விற்பன்னரில்லை. மாறாக, அவரது பரம்பரையினால் அவருக்கு ஏற்படுத்திக்கொடுக்கபட்ட வணிகத்தளத்தையும் தனது சொந்த உழைப்பையும் பயன்படுத்தி அடுத்தகட்டத்திற்கு நகர்ந்தவர். ட்ரம்ப் தலைமுறையின் வணிக அடையாளங்களாக அமெரிக்காவின் வணிகநகரில் உயர்ந்து நிற்கும் ட்ரம்ப் கோபுரம் மற்றும் அட்லாண்டா நகரில் அமைந்த ட்ரம்ப் தாஜ்மகால் என்பவற்றை குறிப்பிடலாம். டொனால்ட் ட்ரம்ப் தனியாக தன்னை மிகச்சிறந்த வணிகராக அமெரிக்கா எங்கும் நிலைநிறுத்தி இருந்தார். குறிப்பாக, அமெரிக்காவில் உள்ள சகல வணிகத்துறைகளிலும் டொனால்ட் ட்ரம்ப் குழுமம் நேரடி முதலீடுகளை செய்திருந்தது. இதன் மூலமாக, டொனால்ட் ட்ரம்ப் என்கிற தனிநபர் அமெரிக்காவின் அனைவரது கவனத்திலும் தொடர்ந்து இருந்தே வந்திருக்கிறார்.

இன்றைய நாளில் அமெரிக்காவின் எந்தவிதமான தேர்தல்முறைமையிலும் போட்டியிடாது அல்லது எந்தவகையான அரசியல்சார் பதவிகளை தேர்தல்முறையில் போட்டியிட்டு வெற்றிபெறாது அமெரிக்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் வர்ணிக்கபடுகிறார். ஆனால், ட்ரம்பின் அமெரிக்க ஜனாதிபதி அரசியலுக்கான அடித்தளம் சுமார் 26 வருடங்களுக்கு முன்பே போடப்பட்டிருந்தது என்பதனை பலரும் அறிந்திருக்கமாட்டார்கள். 1988ம் ஆண்டு 41வது ஜனாதிபதி தேர்தலுக்கு ஜோர்ஜ் H.W புஷ் அவர்கள் தயாரகிகொண்டிருந்தபோது, அவருடன் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட பெயர் பரிந்துரைக்கபட்டவர்களில் ட்ரம்ப்பும் ஒருவர் ஆவார். ஆனால், முதல்கட்ட பேச்சுவாரத்தையிலேயே ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் அவரை அந்த போட்டியிலிருந்து விலகச் செய்திருந்தது. அதற்க்குப் பின்னதாகவும், 2004 மற்றும் 2012ம் ஆண்டுகளில் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தாலும், முழுமையான ஜனாதிபதித் தேர்தல் போட்டியாளராக 2016ம் ஆண்டிலேயே தன்னை வெளிப்படுத்தி கொண்டார்.

ஜனாதிபதி வேட்பாளர் ட்ரம்பும், தேர்தல் அணுகுமுறையும்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளராக குடியரசு கட்சியில் தன்னை பரிந்துரைத்தது முதல், ஜனாதிபதி முதன்மை வேட்பாளராக தேர்வாகி தேர்தலில் வெற்றி பெறும்வரையும் தான் கடந்து வந்த அனைத்து பாதைகளையுமே சர்ச்சைக்குரியதாக கொண்டிருந்தவர் ட்ரம்ப்.

குடியரசு கட்சியின் சக ஜனாதிபதி வேட்பாளர்களுடன் விவாதம் செய்யும்போது, நேரடியாகவே அவர்களை தாக்கிபேசியும், நிலைகுலையத்தக்கவகையிலான கருத்துக்களைய வெளியிடும் யுக்தியையும் ட்ரம்ப் கொண்டிருந்தார். குறிப்பாக, சக போட்டியாளரும் புஷ்சின் சகோதரருமான ஜெப் புஷ் அவர்களுடான கடும்போட்டியில் நேரடியாகவே அவரை விமர்சிக்கும் போக்கினை ட்ரம்ப் கொண்டிருந்தார்.

குடியரசுக்கட்சியின் சார்பில் முதன்மை வேட்பாளராக தேர்வானபின்பு, தனது போட்டியாளரான ஹிலாரி கிளிண்டனின் சர்ச்சைக்குரிய விடயங்களை முன்னிலைப்படுத்தியும், தன்சார்பிலான சர்ச்சையான விடயங்களுக்கு கருத்து தெரிவிப்பதனை தவிர்த்தும் வந்திருந்தார். கூடவே, தன்னை ஒரு கேலிப்போக்கானவராக தேர்தல் மேடைகளில் வெளிக்காட்டி கொண்டதன் மூலம்,தனக்கு எதிரான குற்றசாட்டுக்களுக்கு பொது விவாதத்தில் பதிலளிக்காமை கூட அவரது தேர்தல் வெற்றியை பெருமளவில் பாதித்திருக்கவில்லை. இறுதிவரை, தன்னுடைய கருத்துக்களை மீண்டும் மீண்டும் உறுதியாக வெளிப்படுத்தியதுடன், ஒபாமாவினால் சீர்குலைந்த அமெரிக்க பொருளாதார வளர்ச்சி, மற்றும் பாகுபாடடைந்த அமெரிக்காவை மீட்டெடுக்கும் மீட்பராக தன்னை சித்தரித்துக் கொண்டார். அதற்கும் மேலதிகமாக, ஹிலாரி கிளிண்டனை இன்னுமொரு ஒபாமாவாக சித்தரிக்கவும் தவறவில்லை. இத்தகைய உத்திகள் அமெரிக்கர்கள் மத்தியில் வலுவாக சென்றடைந்ததுடன், ட்ரம்ப் தொடர்பிலான சாதக விம்பத்தையும் அவர்கள் மனதில் ஆழமாக பதித்திருந்தது எனலாம்.

ஜனாதிபதி ட்ரம்பின் வெற்றி தீர்மானிக்கபட்டது எப்படி ?

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பொறுத்தவரையில், ட்ரம்ப் மக்கள் தெரிவில் சுமார் மூன்று தொடக்கம் நான்கு லட்சம் வாக்குகள் குறைவாகவே பெற்றிருந்தாலும், தேர்தல் கல்லூரிமுறைமை அடிப்படையில் 538 இடங்களில் 290 இடங்களை வெற்றிகொண்டதன் மூலம் ஜனாதிப்பதிபதவியை எட்டிப்பிடித்திருந்தார்.

இம்முறை ட்ரம்பின் தேர்தல் வெற்றியை தேர்தலில் வாக்களித்தவர்கள் எவ்வாறு தீர்மானித்தார்களோ, அதேபோல வாக்களிக்காதவர்களும் தீர்மானித்து இருக்கிறார்கள். குறிப்பாக, அமெரிக்காவின் தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்ற ஒட்டுமொத்த வேட்பாளர்களில் 42.4%மானோர் தேர்தலில் வாக்களிக்கவில்லை. அதிலும், 2012ம் ஆண்டில் ஒபாமாவுக்கு வாக்களித்தவர்களில் 6.8 மில்லியன் மக்களும், ரோமேனிக்கு வாக்களித்தவர்களில் 1.9 மில்லியன் மக்களும் வாக்களிக்கவில்லை. இவர்கள் அனைவரும் அவரவர் கட்சி வாக்காளர்களுக்கே வாக்களித்து இருப்பார்கள் என எடுகோள் கொண்டிருப்பின், தேர்தல் முடிவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்ககூடும்.

இதேபோன்று, ஜக்கிய அமெரிக்க தேர்தலில் இம்முறை வெள்ளையின அமெரிக்கர்களின் பெரும்பான்மையான ஆதரவு டொனால்ட் ட்ரம்ப்புக்கு இருந்தமை மறுக்க முடியாதவொன்று. தொடர்ச்சியாக தனது தேர்தல் பிரச்சாரங்களில் அமெரிக்காவை மீட்டெடுக்க வேண்டும் என்கிற பிரச்சாரமும், அந்நிய குடியேற்றத்தினால் அமெரிக்கர்கள் பாதிப்படைகிறார்கள் என்கிற அவரது வாதமும் மிகசிறப்பாக வெற்றியளித்தமைக்கு இதுவோர் உதாரணமாகும்.

இவற்றுக்கு எல்லாம் மேலதிகமாக, டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க சித்தாந்தத்தில் ஊறிப்போன வயதானவர்களின் வாக்குகளை தனது தேர்தல் பிரசாரங்கள் மூலம் பெறத்தவறவில்லை. சர்ச்சைகளுக்கு மேலாக, தங்களுடைய பொருளாதாரத்தையும் தங்களுடைய அமெரிக்காவை மாற்றாருக்கு ஒபாமா தாரைவார்க்கிறார் என்கிற எண்ணத்துடன் அவர்கள் உள்ளபோது, அவர்களின் ஒரே தெரிவாக ட்ரம்ப் மாத்திரமே தேர்தலில் இருந்திருக்கிறார்.

ஜக்கிய அமெரிக்கமக்களின் ஆணாதிக்க நிலைக்கும், பெண்கள் ஜனாதிபதியாக வருகின்றபோது தனது நாட்டுக்காக உறுதியாக முடிவுகளை எடுக்கமுடியாது என்கிற மூட எண்ணங்களுக்கும் இந்த தேர்தல் மற்றுமொரு உதாரணமாகும். காரணம், இம்முறை தேர்தலில் 53%வீத ஆண்களின் தெரிவாக பாலின சர்ச்சைகளை தன்னகத்தே கொண்ட ட்ரம்ப்தான் அவர்கள் தெரிவாக இருந்திருக்கிறார்.

வழமையான தேர்தல்கள் போன்று, இம்முறை தேர்தலிலும் மாநிலங்கள் ரீதியாக மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. ஒபாமா தேர்தலில் போட்டியிட்டபோது, மரபுரீதியான குடியரசு கட்சிசார்பான மாநிலங்கள் கூட ஒபாமாவை ஆதரித்திருந்தது. ஆனால், இம்முறை தேர்தலில் ஹிலாரி ஹிளிண்டனினால் அந்த மேஜிக்கை தொடர்ந்தும் நிகழ்த்த முடியவில்லை. குறிப்பாக, 6 மாநிலங்களில் ஏற்ப்பட்ட மாற்றங்கள் இதற்க்கு காரணமாக அமைந்தது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் , எதிர்கால அரசியலும்

உலகின் ஒட்டுமொத்த கணிப்புக்களையும், அமெரிக்கர்களும்,ட்ரம்பும் இணைந்து பொய்யாக்கி இருக்கிறார்கள். இதன் அதிர்வலைகள் இன்றுவரை சமூக வலைத்தலங்களில் பிரபலித்துகொண்டுதான் இருக்கிறது. இதற்கு மிகமுக்கிய காரணம், தேர்தல் மேடைகளில் ட்ரம்ப் அளித்த இனவாதம் சார்ந்த உறுதிமொழிகளாகும். ஆனாலும், அமெரிக்க தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளராக அத்தகைய உறுதிமொழிகளை அவர் தன்சார்ந்த ஆதரவாளர்களுக்கு வழங்கியிருந்தார் என்பதனை எல்லோரும் கருத்தில் கொள்ளவேண்டும். தற்போது, அவர் சார்ந்த ஆதரவாளர்களுக்கும், அவருக்கு வாக்களிக்காதவர்களுக்கும் ஜனாதிபதியாக இருக்கிறார். குறிப்பாக, ஒட்டுமொத்த உலகுக்கு பொறுப்புகூறும் தலைமைத்துவத்தில் இருக்கிறார்.

படம் - i2.cdn.turner.com

படம் – i2.cdn.turner.com

இந்தநிலையில், நிச்சயம் தன்னுடைய கருத்துக்கள் தொடர்பில் தொடர்ந்துமே அவரினால் கடும்போக்குதன்மையை கடைப்பிடிக்க முடியாது. எனவே, ஜனாதிபதியாக பொறுப்பேற்றவுடன், இஸ்லாமியர்களை வெளியேற்றல், அமெரிக்க-மெக்சிக்கோ எல்லையில் சுவர் கட்டுதல் போன்ற முடிவுகளை தான்தோன்றித்தனமாக எடுத்துவிட முடியாது. அதேபோல, தன்னுடைய ஆதரவாளர்களுக்கு வழங்கிய சிலபல வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டிய கடமை அவருக்குண்டு. எனவே, தன்னுடைய ஆட்சிக்காலத்தை ஆரம்பிக்கப்போகும் ட்ரம்ப் பெரும்பாலும் அமெரிக்க பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாககொண்டு பல்வேறு திட்டங்களை வெளியிடக்கூடும், இத்திட்டங்களால் ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள இருந்தாலும், அவையும் மிகவிரைவாக நாம் நினைப்பதுபோல நாளையே நடக்கபோவதில்லை. உலகஅரசியலில் சீனாவுடன் போட்டிபோட்டுக் கொண்டு தனது உலகவல்லரசு நிலையினை அமெரிக்கா தக்கவைத்துகொள்ள பல சமரசங்களை பலருடன் செய்யவேண்டியிருக்கும். அதற்கு சார்ந்தால்போல், அது அவரது கொள்கையிலும் நிச்சயம் சமரசத்தை ஏற்படுத்தும்.

ஆனாலும், தற்போதைய நிலையில் அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை ட்ரம்ப் சார்ந்த ஆதரவாளர்களும், இனவாதவெறி கொண்ட அமெரிக்கர்களுமே! அவர்கள் ட்ரம்ப்பின் வெற்றியை, தங்களுடைய இனவாத செயல்பாடுகளுக்கு கிடைத்த வெற்றியாகக்கொண்டு செய்யல்படுத்தக்கூடிய வன்முறைகளுமே ஆகும். ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜக்கிய இராச்சியம் வெளியேறுகின்றது என்பதை உறுதிசெய்தபோது நிகழ்ந்த வன்முறைகளுக்கு குறைவில்லாத வன்முறைகளை ஜக்கிய அமெரிக்காவும் படிப்படியாக சந்திக்க தொடங்கியிருக்கிறது. இவற்றை, எப்படி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சரிசெய்யப்போகிறார் என்பதில்தான் அமெரிக்காவின் எதிர்காலமும், தொடர்ச்சியாக அவரது ஜனாதிபதிப் பதவிகாலமும் தங்கியிருக்கிறது.

இம்முறை தேர்தலில் அமெரிக்கர்களுக்கு தேவைப்பட்டது இன்னுமொரு ஒபாமா அல்ல. மாறாக, புதிய பேரம்பேசும்(negotiator) சக்திகொண்ட ஓர் ஆளுமையே! அதற்கு, வியாபாரரீதியில் தன்னை நிரூபித்துக் கொண்ட அவர்களின் தெரிவு உலகமே ஏற்றுகொள்ளாத அல்லது எதிர்பார்க்காத டொனால்ட் ட்ரம்ப்!

பொறுத்திருந்து பார்க்கலாம்! நாளை இன்னும் என்னவெல்லாம் நடக்கும் என!

Related Articles