Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இலங்கையின் இரட்டைப் பிரஜாவுரிமை பெறுவது எப்படி ?

அண்மைக்காலத்தில் இலங்கையிலுள்ள அல்லது இலங்கையராக வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்ற பலரதும் பேசுபொருளாக மாறியிருக்கும் ஒரு விடயம்தான் இந்த “இரட்டைப் பிரஜாவுரிமை”. மிக நீண்டகாலத்துக்கு முன்பதாகவே இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் முறையானது நடைமுறையில் உள்ளபோதிலும், போருக்கு பிந்திய அபிவிருத்தி சூழல், பலரையும் இரட்டை பிரஜாவுரிமையின் கீழ் இலங்கைக்கு வரவும், அதன்மூலமான நலன்களை உச்சமாகப் பெற்றுக்கொள்ளவும் தூண்டியுள்ளது எனலாம்.

1948ம் ஆண்டின் 18ம் இலக்க குடியுரிமை சட்டத்தின் 19,20,21ம் பிரிவுகளின் கீழ் இலங்கையின் பிரஜாவுரிமையை இழந்த அல்லது இழக்கவுள்ள எவரும் இதற்காக விண்ணப்பிக்க முடியும். (antiguainvestmentcitizenship.com)

குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின் பிரகாரம், இலங்கையில் 1987ம் ஆண்டு தொடக்கம் 2011வரை சுமார் 42,979 பேர் இரட்டைப் பிரஜாவுரிமையை பெற்றுக்கொண்டுள்ளார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இரட்டைப் பிரஜாவுரிமைக்கான சட்டம் 1956ம் ஆண்டு முதலே நடைமுறையில் உள்ளபோதிலும், அதற்கான போதிய கேள்வியின்மை (Demand) காரணமாக, 1987ம் ஆண்டிலிருந்தே இது வழங்கப்படத் தொடங்கியது. அதுபோல, கடந்த 2011ம் ஆண்டு முதல் இன்றுவரை இரட்டைப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் தொகையானது, 1987-2011 வரை வழங்கப்பட்ட பிரஜாவுரிமை தொகையிலும் அதிகமானது எனக் குறிப்பிடப்படுகிறது. உதாரணத்துக்கு, கடந்த 2015ம் ஆண்டு பங்குனி மாதம் தொடக்கம் கார்த்திகை மாதம் வரையில் மட்டும் சுமார் 15,000 பேர் இரட்டைப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்துள்ளார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அப்படியாயின், இரட்டைப் பிரஜாவுரிமைக்கு ஏன் திடீரென கேள்வி நிலை அதிகரித்துள்ளது? யார் எல்லாம் இதனை பெறத்தகுதி உடையவர்களாக உள்ளார்கள்? எப்படி இதனை பெற்றுக்கொள்ள முடியும்? என அறிந்திருப்பது அவசியம் அல்லவா!

இரட்டைப் பிரஜாவுரிமை

1948ம் ஆண்டின் 18ம் இலக்க குடியுரிமை சட்டத்தின் 19,20,21ம் பிரிவுகளின் கீழ் இலங்கையின் பிரஜாவுரிமையை இழந்த அல்லது இழக்கவுள்ள எவரும் இதற்காக விண்ணப்பிக்க முடியும். இவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் மிகமுக்கியமான இரண்டு பிரிவுகளின் மூலமாக இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

  1. மீண்டும் பிரஜாவுரிமையை பெறுதல் (Resumption) – 19.2 பிரிவின் பிரகாரம், மற்றுமொரு நாட்டின் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டதன் விளைவாக, இலங்கைப் பிரஜாவுரிமையை இழந்த ஒருவர் இரட்டைப் பிரஜாவுரிமையை பெறுவதற்கு தகுதியுடைவராக உள்ளார்.
  2. தக்கவைத்துக் கொள்ளுதல் (Retention) – 19.3 பிரிவின் பிரகாரம், மற்றுமொரு நாட்டின் பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்ளும் பொருட்டு, இலங்கைப் பிரஜாவுரிமை இழக்கப்படவுள்ள ஒருவர், இரட்டைப் பிரஜாவுரிமை பெறத் தகுதியுடைவராகிறார்.

இரட்டைப் பிரஜாவுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய தகுதியான பிரிவுகள்

  • விண்ணப்பதாரர் 55 வயதினை கடந்தவராக உள்ள பிரிவு.
  • விண்ணப்பதாரர் கல்வி மற்றும் தொழில்முறை தகுதிக்கான பட்டப் படிப்பினை முடித்த பிரிவு
  • விண்ணப்பதாரர் இலங்கையில் குறைந்தது 2.5 மில்லியன் பெறுமதியான அசையாத சொத்துக்களை கொண்டிருக்கும் பிரிவு.
  • விண்ணப்பதாரர் இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் வர்த்தக வங்கியில் 3 வருடங்களுக்கு குறையாமல் குறைந்தது 2.5 மில்லியன் பெறுமதியான நிலையான வைப்பைக் கொண்டிருக்கும் பிரிவு.
  • விண்ணப்பதாரர் இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் வர்த்தக வங்கியில் 3 வருடங்களுக்கு குறையாமல் குறைந்தது 25,000 USD பெறுமதியான நிலையான வைப்பை NRFC , RFC , SFIDA கணக்குகளில் கொண்டுள்ள பிரிவு.
  • விண்ணப்பதாரர் இலங்கையின் திறைசேரி முறிகள் அல்லது பாதுகாப்பு முதலீட்டு கணக்கு (Security Investment Account) களில் குறைந்தது 25,000 USD பெறுமதியான முதலீட்டை ஆகக்குறைந்தது 3 வருடங்களுக்கு கொண்டுள்ள பிரிவு.
  • திருமணத்தின் மூலமாக அல்லது 22 வயதுக்கு குறைவான பிள்ளையொன்று இலங்கைக்கான பிறப்பு சான்றிதழை கொண்டிருக்கும்போது.

இரட்டைப் பிரஜாவுரிமையைப் பெற தேவையான ஆவணங்கள்

  • விண்ணப்பதாரியின் பிறப்புச் சான்றிதழ் – பெற்றோர் இலங்கையாராக வெளிநாடுகளுக்கு சென்றபோது, பிள்ளைகள் குறித்த நாட்டில் பிறந்திருந்தால் அந்த நாட்டில் உள்ள இலங்கை தூதரகம் மூலமாக பிறப்பு பதிவு செய்யப்பட்டிருப்பின் அது தொடர்பிலான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்பட்டிருக்காதுவிடின், அதுதொடர்பில் பொருத்தமான தூதரகங்கள் ஊடாக பதிவுக்கான ஏற்பாட்டை செய்துகொள்ள வேண்டும்.
  • விண்ணப்பதாரி திருமணமானவர் ஆயின், திருமணப் பதிவுச் சான்றிதழ்.
  • விண்ணப்பதாரி மீண்டும் பிரஜாவுரிமையை பெறுதல் (Resumption) பிரிவின் மூலமாக விண்ணப்பிக்க தகுதியை கொண்டுள்ள போது,
    • சான்றுபடுத்தப்பட்ட வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழ் அல்லது குடியுரிமை பத்திரம். (Foreign Citizenship Certificate).
    • சான்றுப்படுத்தப்பட்ட சுயவிபரக்கோவை மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டின் முக்கிய பகுதிகள்.
    • குறித்த நாட்டின் பொலிஸ் அனுமதி அறிக்கை (Police clearance report). குறித்த அறிக்கையானது, விண்ணப்பிப்பு திகதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு குறைவான காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்கவேண்டும்.
    • இலங்கை கடவுச்சீட்டை தற்போதும் கொண்டிருந்தால், அதன் முக்கிய பகுதிகள்.
  • விண்ணப்பதாரி தக்கவைத்துக் கொள்ளுதல் (Retention) பிரிவின் மூலமாக விண்ணப்பிக்க தகுதியை கொண்டுள்ள போது,
    • சான்றுப்படுத்தப்பட்ட சுயவிபரக்கோவை மற்றும் இலங்கை கடவுச்சீட்டின் முக்கிய பகுதிகள்.
    • சான்றுப்படுத்தப்பட்ட நிரந்தர குடியுரிமை விசா தொடர்பிலான ஆவணம்.
    • குறித்த நாட்டின் பொலிஸ் அனுமதி அறிக்கை (Police clearance report). குறித்த அறிக்கையானது, விண்ணப்பிப்பு திகதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு குறைவான காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்கவேண்டும்.
  • விண்ணப்பதாரி இரட்டைப் பிரஜாவுரிமை பெறுவதற்கு தக்கவைத்துக் கொள்ளுதல் (Retention) , மீண்டும் பிரஜாவுரிமையை பெறுதல் ஆகியவற்றில் எது உகந்தது என தெரிவு செய்ததன் பின்பு, விண்ணப்பிக்க வேண்டிய தகுதியான பிரிவில் ஏதேனும் ஒன்றின் கீழ் விண்ணப்பிக்க முடியும். இதன்போது, குறித்த பிரிவுகளில் தங்களை நிருபிக்கக்கூடிய சான்றுப்படுத்தப்பட்ட ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை எங்கே ? எப்படி சமர்பிக்க வேண்டும் ?

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாக இலங்கையிலுள்ள குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளரிடம் ஒப்படைக்க முடியும். விண்ணப்பதாரி வெளிநாடு ஒன்றில் உள்ளபோது, குறித்த நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூலமாக, அங்குள்ள கட்டுப்பாட்டாளரின் சான்றுப்படுத்தலுடன் இலங்கை குடிவரவு-குடியகல்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்க முடியும்.

பெரும்பாலும் இரட்டைப் பிரஜாவுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட குறைந்தது 3 மாதம் கூடுதலாக ஒரு வருடம் ஆகக்கூடும். கட்டணம் செலுத்தப்பட்டபின்பு, வெளிவிவகார அமைச்சினால் நடாத்தப்படும் வைபவத்தில் உத்தியோகபூர்வமாக இந்த சான்றிதழ் வழங்கப்படும். இந்த நிகழ்வுக்கு நேரடியாக வரமுடியாதபட்சத்தில், உங்களுக்காக பங்குகொள்ள உள்ளவர்களின் விபரத்தை முன்கூட்டியே அறிவிக்க வேண்டியது அவசியமாகும்.

இரட்டைப் பிரஜாவுரிமைக்கான கட்டணங்கள்

  • பிரதான விண்ணப்பதாரர் – 300,000 /- LKR
  • பிரதான விண்ணப்பதாரரின் மனைவி – 50,000/- LKR
  • 22 வயதுக்கு குறைந்த திருமணமாகாத பிள்ளைகள் – தலா 50,000/- LKR

குறிப்பு – இலங்கையில் சொத்துக்கள் வகையிலாகவோ, NRFC,RFC,SIA கணக்குகளின் வாயிலாகவோ முதலீடுகளை அதிகளவில் செய்திருப்பின், இரட்டைப் பிரஜாவுரிமைக்கான கட்டணத்தில் விலக்குப் பெற முடியும். இதற்கு பொருத்தமான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்பதுடன், இது தொடர்பில் குடிவரவு-குடியகல்வு கட்டுப்பாட்டாளரே இறுதித் தீர்மானம் எடுப்பார் என்பதும் கவனிக்கத்தக்கது.

இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டிருப்பதன் நன்மைகள்

  • இரட்டைப் பிரஜாவுரிமை மூலமாக, வெளிநாட்டில் குறித்த நாட்டின் நலன்களையும், இலங்கையில் இந்நாட்டின் சாதாரண குடிமகனாவும் சகல நன்மைகளையும் அனுபவிக்க முடியும்.
  • இலங்கையில் வெளிநாட்டவர்கள் சொத்துக்களை கொள்வனவு செய்வதில் சட்டச்சிக்கல் உள்ள நிலையில், இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் இலகுவாக அசையும் மற்றும் அசையாத ஆதன சொத்துக்களை கொள்வனவு செய்ய முடியும். அண்மைக்காலத்தில், இலங்கையின் ஆதனத்துறையின் கேள்வி அதிகரித்து செல்ல இதுவும் ஒரு காரணமாக உள்ளது.
  • இலங்கையில் வெளிநாட்டவர்களாக வணிகத்தினை ஆரம்பிப்பதிலும் பார்க்க, இலங்கையராக ஒப்பீட்டளவில் செலவினக் குறைப்புடன் வணிகத்தினை ஆரம்பிக்க முடியும்.

மேலே குறிப்பிட்ட அனைத்துமே, அடிப்படையாக ஒருவர் இரட்டைப் பிரஜாவுரிமை பெறுவதன் மூலமாக பெற்றுக்கொள்ளக்கூடிய நன்மைகள் ஆகும். இதனைத் தவிரவும், நிதிரீதியாக, வரி ரீதியாக மேலும் பல நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

Related Articles