பொறியியல் கல்லூரிகளின் பொறியில்…

நீண்ட இடைவெளிக்கு பிறகு நண்பன் ஒருவன் அலைபேசியில் தொடர்பு கொண்டான். என்ன நண்பா ஆச்சரியமா இருக்கு! என் நியாபகம்லா இருக்கா? என்றேன். பங்காளி வேலை கெடச்சிருச்சுடா அதான் உன்ட சொல்லலாம்னு கூப்டேன் என்றான்.

செம போ! 3 வருட காத்திருப்பு வீண் போல, என்ன “கம்பெனி”? என்றேன். “கவர்ன்மென்ட்” கம்பெனி பங்காளி என்றான். என்னடா! சொல்ற கவரன்மென்ட் கம்பெனியா?, ஆமாடா குரூப் எக்ஸாம் எழுதி பாஸ் ஆய்டேன்  எப்புடியும் 15 ஆயிரம் வரும், சம்பள உயர்வு குழு போட்டா 30 ஆயிரம் வரை வாங்கிரலாம் என்றான்.

டேய் நீ “ஏரோநாட்டிகல்” (aeronautical) பொறியாளன் டா! என்றேன். அதுக்கு 3 வருசம் நாய் மாதிரி எல்லா ஊர்லயும் வேலை தேடி சுத்துனேன் யாருமே குடுக்கல வெறும் 6 மாசம் படுச்சு வேலை அடுச்சுட்டேன் என்றான். சரி என்ன துறை? என்றேன்  விற்பனை வரி (Sales Tax) என்றான். எனக்கு தலையே சுற்றியது. ஊருக்கு வந்தா விருந்து (treat) வைக்க வேண்டும் என்று குல தெய்வத்திடம் சத்யம் வாங்கிவிட்டு அலைபேசியை துண்டித்தேன்.

(worthview.com)

6 மாதத்தில் குரூப் தேர்வு எழுதி வேலை வாங்கியது அவனுக்கு சாதாரணமான ஒன்றே. காரணம் 12 ஆம் வகுப்பில் பள்ளியிலேயே அவன்தான் முதல் இடம். பொறியியல் கல்லூரியிலும் தங்கப் பதக்கத்துடன் படிப்பை முடித்தவன். ஆனால் என்னுடைய கேள்வி, அரசு வேலைகளுக்கு IAS உட்பட எல்லா துறைக்கும் இளங்கலை தகுதியே போதுமானது என்று ஏன் கூறுகிறார்கள்?, அவர்கள் மக்களுடன் எளிதாக பழக கூடிய நபரகளாக இருப்பார்கள் மற்றும் பணம் கொடுத்து அதிகம் படித்துத்தான் அரசு வேலை பெற முடியும் என்ற எண்ணம் உருவாகக்கூடாது என்பதற்காக.

தமிழ் வழியில் படித்து பட்டம் பெற்ற ஒருவர் 3 ஆண்டுகள் முயற்சி செய்து பெறும் வேலையை என் நண்பன் 6 மாதத்தில் பெற்றுவிட்டான், “ஏரோநாட்டிகல் ” படிக்க இவன் வாங்கிய கடனையும் அரசு தள்ளுபடி செய்து விட்டது. அப்படி என்றால் தன்னைவிட பலவீனமான 10 பேரை என் நண்பன் எளிதாக வென்றது தவறு தானே? அவர்களின் வரிப் பணமும் இவன் கல்விக்கு உதவியிருக்கும்தானே?.

சரி ஏரோநாட்டிகலில் தங்கம் வென்ற மாணவன் இனி “விற்பனை வரி” துறையில் எப்படி உணர்வுபூர்வமாக வேலை செய்ய முடியும்? ,அரசு அலுவலகங்கள் நத்தை வேகத்தில் பயணிப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

இந்தியாவில் ஆண்டுக்கு 1.5 மில்லியன் பொறியியல் பட்டதாரிகள் வொளியேறுகின்றனர். இதில் 80% பேருக்கு வேலை கிடைப்பதில்லை என்கிறது புள்ளி விபரம், இதற்கான காரணமாக மாணவர்களின் ஆங்கில புலமையை காட்டுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல! பள்ளி கல்வியே படிக்காத ஒருவரால்கூட ஆங்கிலத்தை கற்க முடியும். அப்படி இருக்கும்போது இந்த மிகப்பெரும் வேலையின்மைக்கு காரணம்தான் என்ன?

அரசின் கவனக் குறைவு மட்டுமே காரணம் …

(morningcable.com)

எதற்கெடுத்தாலும் அரசுமேல் பழி போடுகிறார்கள் என்று கூறி கேள்வி கேட்கும் நம் வாயை அடைக்கப்பார்க்கிறார்கள். இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையை தேடினால் Google – லே மலைக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 955 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த ஆக்கம் வெளி வரும்போது அது 1000 ஆக கூடியிருக்கும். எல்லா கல்லூரியிலும் 100% வேலைவாய்ப்பு என்று விளம்பரப்படுத்துகிறார்கள். அப்பொழுது இந்த வேலை இல்லா திண்டாட்டத்திற்கு ஏன் கல்வி நிறுவனங்கள் பொறுப்பேற்க மறுக்கிறார்கள், அரசும் அவர்கள் மேல் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லையே?

திறமை குறைந்த மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற வாதத்தை கல்லூரிகள் முன் வைத்தால், குற்றவாளியை விட குற்றம் செய்ய தூண்டியவருக்குத்தானே தண்டனை அதிகம்!. அப்படி என்றால் திறமை குறைவான மாணவர்களை உருவாக்கிய கல்லூரிகளைத்தானே மூடி இருக்க வேண்டும். (எல்லா மாணவர்களுக்கும் திறமை இருக்கும். அதை வெளிக்கொண்டு வருவதுதானே கல்லூரியின் கடமை)

இதை விட கீழ்த்தரமாக சில கல்லூரிகள் மிக மோசமான நிறுவனங்களை “campus interview ” -க்கு அழைத்து மாணவர்களை கல்லூரி தரும் எந்த வேலைக்கும் செல்லக்கூடாது என்ற மன நிலைக்குத் தள்ளுகின்றன!.

(eruditelearning.com)

இந்தியாவில் வருடத்திற்கு தேவையான பொறியாளர்களின் எண்ணிக்கை 5 இலட்சம் என்று வைத்தாலும், (எல்லா துறைக்கும் சேர்த்து) அது போன்று மூன்று மடங்கு மாணவர்கள் வெளியேறுகின்றனர். இதை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் இளைஞர்களை அடி மாட்டை வாங்குவது போல் வேலைக்கு எடுக்கிறார்கள்.

இதலாம் சாத்தியம் இல்லை தகுதிக்கு ஏற்ப சம்பளம் தர வேண்டும் என்று சட்டம் உள்ளது! என்று நண்பர் ஒருவர் வாதிட்டார், 7ஆயிரம் மட்டுமே மாத சம்பளம் வாங்கும் என் நண்பனை காட்டிய பின் அமைதியாக காரணங்களை கேட்கலானார்.

நிறைய சிறு நிறுவனங்கள், வேலைக்கு எடுக்கும் போது 15 அல்லது 20 ஆயிரம் சம்பள ரசீது தருவோம் ஆனால் உங்கள் கையில் 7,000 தான் தரப்படும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே வேலைக்கு எடுக்கிறார்கள். பெரு நிறுவனங்களின் பார்வையில் ஒரு பொறியியல் படித்த மாணவன் செய்யும் வேலையை, அதே படிப்பை டிப்ளோமாவாக படித்தவனாலும் செய்ய முடியும். டிப்ளோமா   மாணவனுக்கு குறைந்த ஊதியம் கொடுத்தாலே போதுமானது என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். 6 ஆண்டு மருத்துவ படிப்பை 3 ஆண்டுகளில் முடித்தவர் அறுவை சிகிச்சை செய்தால் என்னவாகும்?.

நண்பன் ஒருவன் நேர்முகத் தேர்விற்கு, பெரிய கார் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றுக்கு சென்றுள்ளான். அங்கு நூற்றுக்கணக்கான பொறியியல் மாணவர்களும், நூற்றுக்கணக்கான டிப்ளோமா  மாணவர்களும் காத்திருந்திருக்கிறார்கள், அங்கு வந்த ஓரு அலுவலர் டிப்ளோமா படுச்சவங்க மட்டும் நில்லுங்க, பொறியியல் மாணவர்கள் எல்லாம் வெளியே போய்விடுங்க என்று சொன்னது என்ன யாரோ செருப்பால அடுச்ச மாதிரி இருந்துச்சுடா! என்று சொன்னது இன்னும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. (வேலைக்கான விளம்பரத்திலாவது தெளிவாக குறிப்பிட்டு இருக்கலாம் அல்லவா!)

சரி இவ்வளவு பிரச்சனைகள் இருப்பது தெரிந்தும் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு ஏன் மாணவர்கள் இப்படி முண்டி அடிகிறார்கள்?

(pinimg.com)

என் பக்கத்து வீட்டு பையன் 9ஆம் வகுப்பு படிக்கிறான் படிப்பில் சுட்டி, அவனிடம் விளையாட்டாய் ஏன் மாப்ள என்ன படிகலகலாம்னு இருகிங்க 12 ஆவது முடுச்சுட்டு? என்றேன். பொறியியல் தான் மாமா என்றான். ஏன்டா பொறியியல் அவ்ளோ புடிக்குமா? என்றேன், மருத்துவம் படிக்கதான் மாமா ஆசை ஆனா அதுக்கு நெறயா காசு செலவாகுமாமே?, அதான் மாமா என்று சொல்லிவிட்டு அவன் விளையாட போய் விட்டான்..

இதுதான் நாம் நம் இளைய தலைமுறைக்கு கல்வியைப்பற்றி  சொல்லிக் கொடுத்திருக்கும் பாடம். இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட தேசத்தில், ஒரு இலட்சம் பேர்களுக்கு ஒரு அரசு மருத்துவர் என்ற கணக்கில் கூட நம்மிடம் மருத்துவர்கள் இல்லை. மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவை பணம் இல்லாத குழந்தைகளுக்கு பேய் கனவாக மாற்றி விட்டோம்.

நமக்கு பல துறைகளில் மாணவர்களின் பங்கு அதிகமாக வேண்டும். ஆனால் அதிக சம்பளம் வரும்  குறிப்பிட்ட சில பொறியியல் துறையை மட்டும் மாணவர்கள் தேர்ந்தெடுப்பதின் பின்னால் பொற்றேர்களின் அறியாமை அதிகமாக உள்ளது. உங்கள் குழந்தைகள் பணம் சம்பாரிக்கும் இயந்திரம் இல்லையே?

அதலாம் தெரியாது என் மகன்/மகள் ஒரு வேலையில் சேர்ந்து கை நிறைய (பை நிறைய இதுதான் புதுசு) சம்பளம் வாங்கினால் போதும் என்று கூறும் பெற்றோர்களே! உங்களின் இந்த மன நிலையும் இந்த கல்வி முறையும் அவர்களை எந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது என்ற எனது அடுத்த ஆக்கமே உங்களுக்கான பதில்!. மனதை உறுதியாக வைத்துக் கொண்டு, அடுத்த ஆக்கத்தை படித்து விட்டு உங்கள் பிள்ளைகளின் பொறியியல் படிவத்தை பூர்த்தி செய்ய தயார் ஆகுங்கள்.

Related Articles