வெள்ளம், மண்சரிவின்போது செய்ய வேண்டியவையும் செய்யக்கூடாதவையும்

இப்போது இலங்கையில் நிலவும் காலநிலை காரணமாக, இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. இக்கட்டுரையை எழுதும்போது, அதிக மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு சம்பவங்களினால், மரணித்தோரின் எண்ணிக்கை 91 (மொழிபெயர்க்கும்போது 169) ஆகவும், காணாமல்போனரின் எண்ணிக்கை 110 (மொழபெயர்க்கும்போது 102) ஆகவும், இடம்பெயர்ந்தோர் 53,000 (மொழிபெயர்க்கும்போது பாதிக்கபட்டோர் மற்றும் இடம்பெயர்ந்தோர் 5 இலட்சம் பேர்) ஆகவும் உள்ளது. இந்தக் கட்டுரையை உங்களோடு பகிர்ந்துகொள்வதன் நோக்கம், வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் ஏற்படுகின்ற மரணங்கள் மற்றும் விபத்துக்களை கொஞ்சமேனும் குறைப்பதற்கு, இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு உதவும் என்பதாகும்.

26ஆம் திகதி 20:25 மணிக்கு இலங்கைக்கு மேலாக எடுக்கப்பட்ட செய்மதிப் படம் (AccuWeather)

மண்சரிவின் அறிகுறிகள்

இக்கட்டுரையை எழுதுகின்றபோது மாத்தறை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில மண்சரிவுகள் ஏற்பட்டிருந்தன. அத்தோடு, காலி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. நீங்கள் மண்சரிவு ஏற்படும் ஒரு பகுதியில் வாழ்வதாயின், அப்பகுதியில் மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்படுகின்றனவா என்ற அவதானத்துடன் இருப்பது, உங்கள் அனைவரையும் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு காரணியாக அமையும். எனவே, நீங்கள் வாழும் பிரதேசத்தில்,

 • வீட்டின் உள்ளெ அல்லது வெளியே நீரூற்றுக்கள் உருவாகியிருந்தால்
 • உயர் பகுதிகளிலிருந்து சேறு கலந்த நீர் வந்தால்
 • சுற்றுப்புற நீரில் சேறு கலந்தால்
 • கட்டிடங்களின் சுவர்களில் அல்லது தரையில் வெடிப்பு ஏற்பட்டால்
 • பாதைகள் கீழே செல்லுதல் அல்லது சில இடங்களில் பாதைகள் மேலெழுந்தால்
 • மரங்கள் அல்லது கற்கள் வீழும் சத்தம் கேட்டால்
 • மரங்கள், கற்கள் அல்லது கட்டிடங்கள் அவை இருந்த இடங்களை விட்டும் நகர்ந்திருந்தால்

அவை மண்சரிவுக்கான அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றோ அல்லது சிலதோ உங்களது சூழலில் காணப்பட்டால், உடனடியாக அருகாமையில் உள்ள பாதுகாப்பான இடத்துக்கு சென்று விடுங்கள். மண்சரிவு ஏற்படக்கூடிய தாழ்நிலங்களிலிருந்து வெளியேறி விடுங்கள்.

ஒருபோதும்,

 • மண்சரிவை பார்வையிடச் செல்லல்
 • நீரூற்று அல்லது நீர் அடித்துச் செல்வதை பார்ப்பதற்காக தரித்து நிற்றல்
 • எச்சரிக்கைக்குரிய பகுதிகள் அல்லது வீடுகளில் தங்கியிருத்தல்
 • என்பன செய்யக்கூடாதவையாகும். எப்போது எந்த நேரத்தில் விபத்து ஏற்படும் என்று கூற முடியாது.

வெள்ளத்தின்போது செய்ய வேண்டியவை

இக்கட்டுரையை எழுதும்போது களனி கங்கை, களு கங்கை, ஜின் கங்கை மற்றும் நில்வள கங்கைகளின் பள்ளத்தாக்குகளில் பெருமளவு வெள்ளம் ஏற்பட்டிருந்தது. 26 ஆம் திகதி மாலையாகும்போது, லக்சபான, கென்யொன், குகுல்கங்க மற்றும் விமலசுரேந்திர நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலைக்குச் சென்றதால், அவற்றின் வான் கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டன. எனவே, களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், நீர் தேக்கத்துக்கு அண்மையிலுள்ள பிதேசங்கள் வேகமாக நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. எனவே, நீங்களும் ஆற்றுப் பள்ளதாக்குகளில் அல்லது தாழ்நிலங்களில் வசிப்பதாயின்,

 • எப்போதும் செய்திகளைக் கேட்டு, அவதானமாக இருங்கள்.
 • உங்களது முக்கியமான ஆவணங்களை (உதாரணமாக: பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு, காணி உறுதி) ஒரு பயணப் பொதியில் கட்டி, உங்கள் கைக்கெட்டும் இடத்தில் வையுங்கள்.
 • அத்தியாவசியமான மருந்துகள் (உதாரணமாக: நீங்கள் இதயநோய் அல்லது நீரழிவு நோய்களுக்கான மருந்துகளைப் பயன்படுத்துவதாயின்), சார்ஜ் செய்யப்பட்ட பட்டறியுடனான கையடக்கத் தொலைபேசி, டோர்ச் ஆகியவற்றை ஒரு பையிலிட்டு வையுங்கள். அவசரமாக வெளியேறும்போது, பாரமான பொதிகள் இடைஞ்சலாக அமையும்.
 • எச்சரிக்கை விடுக்கப்பட்டதும், உடனடியாக வீடுகளிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள்.

ஒருபோதும்,

 • பொழுதுபோக்குக்காக வெள்ளத்தில் இறங்க வேண்டாம்.
 • வாழைத்தண்டு, பெரல் ஆகியவற்றால் படகுகள் செய்து வெள்ளத்தில் ஓட்ட வேண்டாம்.
 • அடித்துச் செல்லும் நீரில் இறங்க வேண்டாம்.
 • வடிகால், ஓடைகள் இருக்கும் என்று சந்தேகிக்கப்படும் இடங்களுச் செல்ல வேண்டாம்.
 • சிறுபிள்ளைகள் வெள்ளத்தில் விளையாட அனுமதிக்க வேண்டாம்.
 • அதிகாரிகள் அனுமதிக்கும்வரை பாதுகாப்பான இடங்களை விட்டுவிட்டு வீடுகளுக்குச் செல்ல வேண்டாம்.

அனர்த்த நிவாரணம் வழங்கும்போது…

நிவாரண உதவிகள் வழங்குவதற்காக தொடர்புகொள்ள வேண்டிய அரச தொலைபேசி இலக்கங்கள்

கடந்த வருட அனர்த்தங்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடைகள், சுகாதாரப் பொருட்கள் வழங்கப்பட்டது. இத்தடவையும் இவ்வாறான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அனர்த்த நிவாரணம் வழங்கும்போது, எப்போதும்…

 1. நீங்கள் வழங்கும் நிவாரணப் பொருளை பொறுப்புவாய்ந்த ஒரு தரப்பிடம் கொடுங்கள். இப்போது பல்வேறு நிறுவனங்களும் அமைப்புக்களும் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனால், எப்போதும் அவர்களோடு தொடர்புகொள்ளுங்கள்.
 2. அனர்த்த நிவாரணங்களை வழங்குவதற்காக, அனர்த்தப் பகுதிகளுக்குச் செல்வதை தவிருங்கள். அவ்வாறு செல்லும்போது நீங்களும் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்படுகின்றது. அத்தோடு, குறித்த பிரதேசங்களில் வாகன நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளதால், பாதிக்கபட்டோருக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைளுக்கு இடைஞ்சல் ஏற்படலாம்.
 3. பேஸ்புக் ஊடாகவும் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவர்களில் நம்பகமானவர்களுக்கு மட்டும் ஒத்துழைப்பு வழங்குங்கள்.
 4. பெருமளவிலான நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் பிரதேச செயலகம், கிராம உத்தியோகத்தர், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு, குறித்த பிரதேசங்களுக்கு என்ன பொருட்கள் அதகிம் தேவைப்படுகின்ற என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
 5. அனர்த்தங்களினால் பாதிக்கப்படுவோரும் எம்மைப் போன்ற மனிதர்களே. எனவே, அவர்கள் பயன்படுத்த முடியாத பொருட்களை வழங்க வேண்டாம். பயன்படுத்திய ஆடைகளை வழங்குவதையும் தவிர்ந்துகொண்டால் நன்று.

ஒருபோதும், பொழுதுபோக்குக்காக வெள்ளத்தை பார்த்து ரசிக்கவோ, படகுகளில் செல்லவோ வேண்டாம்.  நீங்கள் ஏற்படுத்துகின்ற வாகன நெரிசல் காரணமாக, மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு இடைஞ்சல் ஏற்படலாம்.

வெள்ள நீர் வடிந்து சென்றதன் பின்னர் ஏற்படுகின்ற தொற்று நோய்களுக்கு எவ்வாறு முகம்கொடுக்க வேண்டும் என்பது குறித்த விளக்கங்களுடன் இன்னொரு கட்டுரையை உங்களுக்காக வழங்க இருக்கின்றோம்.

அமந்தா அபேசூரிய

தமிழாக்கம்: அஷ்கர் தஸ்லீம்

Related Articles