புகைப்பழக்கத்திற்கு இதுதான் தீர்வு

 

இலங்கை சமூகத்தில் ஆண்களே புகைப்பழக்கத்துக்கு அதிகம் அடிமையாகியுள்ளனர். ஆனால் ஏனைய நாடுகளில் ஆண்களைப் போன்றே பெண்களும் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். புகைப்பதன் மூலம் புகைப்பவருக்கும் சமூகத்துக்கும் பெரும் கெடுதி ஏற்படுகின்றது. ஏனெனில், புகைப்பவர் ஒருவராக இருப்பினும், அதனைச் சூழ உள்ளோரின் உடலுக்குள்ளும், சிகரெட்டில் அடங்கியுள்ள பாதகமான இரசாயனப் பதார்த்தங்கள் நுழைகின்றன.

சிலரது வாழ்வில் புகைபிடித்தல் என்பது ஒரு முக்கிய விடயமாக மாறிப்போயுள்ளது. உண்ண உணவு இல்லையாயினும் புகைபிடிப்பது அவர்களுக்கு ஒரு கட்டாயமான விடயமாகவே உள்ளது. இப்படியான நிலைக்கு தள்ளப்படும் அளவுக்கு சிலர் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். சிலர் நாளொன்றுக்கு 100 சிகரெட் புகைக்கிறார்கள் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? புகைப்பழகத்திற்கு அடிமையானோரை அதிலிருந்து எவ்வாறு விடுவிக்கலாம் என்பது குறித்தே, இக்கட்டுரை மூலம் உங்களை நாம் அறிவூட்டவுள்ளோம்.

புகைபிடிப்பதன் கெடுதியான விளைவுகள்

புற்றுநோயை உண்டாக்கும் 40இற்கும் அதிகமான பாதகமான இரசாயனங்கள் சிகரெட்டில் உள்ளன (pixabay.com)

புகைபிடிப்பவர்களை இரு வகைப்படுத்தலாம். முதலாவது வகையினர், நேரடியாகவே புகைபிடிப்போர். இரண்டாவது வகையினர், மறைமுகமாக புகைபிடிப்போர். அதாவது, புகைபிடிப்போருக்கு அருகிலிருப்பதனால் புற்றுநோயை உருவாக்கக்கூடிய காரணிகளை உடலினுள்ள நுழைவித்துக் கொள்வோர்.

நேரடியாக புகைபிடிப்போரை விடவும், மறைமுகமாக புகைபிடிப்போரின் உடலினுள் புற்றுநோயை உருவாக்கும் காரணிகள் உள்நுழைவதற்கான வாய்ப்பு 50 மடங்கு அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

சிகரெட்டில் 40 க்கும் அதிகமான புற்றுநோயை உருவாக்கும் காரணிகள் அடங்கியிருப்பதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. டார் (Tar) என்று வழங்கப்படுகின்ற இரசாயன திரவியமே சிகரெட்டில் உள்ள மிகவும் அபாயகரமான இரசாயன திரவியமாகும். நீண்டகாலமாக புகைபிடிப்பதன் மூலம் கெடுதியான விளைவுகள் பல ஏற்பட முடியும். குறிப்பாக, புகைபிடிப்போர் பலருக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அதேபோல், புகைபிடிப்போருக்கு தொண்டையை அண்டிய பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய், உணவுக்குழாய், கணையம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் கர்ப்பப்பை வாய் போன்றவற்றிலும் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. புகைபிடித்தலுக்கு மேலதிகமாக மது அருந்துவோருக்கும் இப்புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

புகைபிடித்தலை விடுவதற்கான வழிகள்

புகைப் பழக்கத்துக்கு ஒருவர் அடிமையாகியிருந்தால், அதனை இலகுவாக விட்டுவிட முடியாது. ஆனால், முயற்சி செய்தால் அப்பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடலாம். இது நீண்ட காலமாக நடைபெறும் எதிர் செயற்பாடுகளுக்கு மத்தியிலான ஒரு முறையாகும். இந்த முறைகளில் சிலது, உளவியல் ரீதியான அல்லது உடலியல் ரீதியான எதிர் செயற்பாடுகளாகவும் இருக்கலாம். ஒருவர் புகைப்பழக்கத்தை விட்டதன் பின்னர், உருவாகின்ற உடலியல் கஷ்டங்களின் கடினத்தன்மை, அவர் புகைப்பழக்கத்துக்கு எந்தளவு அடிமையாகியிருந்தார் என்பதைப் பொறுத்தே அமைகின்றது.

ஒருநாளைக்கு நூறு சிகரெட் பிடிப்பவர்களும் உள்ளனர் (truecounsellor.com.au)

புகைப்பழக்கத்தை விடுவதற்கான வழிமுறையை, சுருக்கமான 8 கட்டங்களாக விளக்கலாம்.

விட்டுவிடுங்கள்

புகைப்பழக்கத்தை விட வேண்டுமாயின். குறிப்பிட்டதொரு காலத்துக்கு, புகைத்தலை தூண்டுகின்ற நிகழ்வுகளுக்குச் செல்வதைத் தவிர்ந்துகொள்ள வேண்டும். எல்லா பிரதான உணவு வேளைகளுக்கும் பின்னர் புகைப்பதற்கு சிலர் பழகியிருக்கின்றனர்.

இவ்வாறானவர்கள், இப்பழக்கத்தை விட வேண்டுமாயின், உணவு உட்கொண்டு முடிந்ததும், உணவு மேசையிலிருந்து எழுந்து, அவ்விடத்தை விட்டு விலகுவதே பொருத்தமானதாகும்.

புறக்கணியுங்கள்

எப்போதும், புகைபிடிப்பவர்களுக்கு அண்மையில் இருப்பதை தவிர்ந்துகொண்டு, அவர்களை புறக்கணிக்க முயலுங்கள். ஏனெனில் புகைபிடிப்போருக்கு அருகாமையில் இருப்பதனாலும், மீண்டும் புகைபிடிப்பதற்கான தூண்டுதல் கிடைக்கும். திடீரென புகைபிடிப்பதற்கு ஏற்படும் ஆசையை இல்லாமலாக்குவது, பெருமளவு கடினமான ஒரு விடயமாகும். ஆனாலும், தொடர்ந்தும் முயற்சிக்க வேண்டும். உங்களது முயற்சியை ஒருபோதும் நிறுத்தி விட வேண்டாம்.

வேறு திசையில் கவனத்தை திருப்புங்கள்

இனி புகைபிடிப்பதில்லை என்று எவ்வளவு உறுதிகொண்டிருந்தபோதும், அடிக்கடி உங்களது உள்ளம், புகைபிடிக்கும்படி தூண்டலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் எண்ணத்தை வேறுதிசையில் திருப்புங்கள். உதாரணமாக, நீங்கள் வாகனம் செலுத்திக்கொண்டிருக்கும்போது, அவ்வாறான சிந்தனை ஏற்பட்டால் உடனடியாக உங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். அதற்காக நீங்கள் வாகனத்தை செலுத்தும்போது, பாடல்களைக் கேட்கலாம்.

பிற்போடுங்கள்

உடனடியாக புகைபிடிக்க வேண்டுமென்ற எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டால், அதனை ஐந்து நிமிடங்கள் பிற்போடுங்கள். மீண்டும் புகைபிடிக்க வெண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால், அதனை பத்து நிமிடங்கள் பிற்போடுங்கள். இவ்வாறு உங்களது மனதை அமைதிப்படுத்தி, உணர்வுகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். இது தியானம் போன்ற ஒரு விடயம் தான். இவ்வாறு அந்த உணர்வுகளை கொஞ்சம் கொஞ்சம் பிற்போட, எண்ணங்களைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். ஆரம்பத்தில், கொஞ்சம் கடினமாக இருக்கின்றபோதும், சிறிது காலம் வழக்கப்படுத்திக்கொள்கின்றபோது, அதனைச் செய்ய முடியும் என்று உங்களுக்குப் புரியும்.

பின்னர், புகைபிடிப்பதா? இல்லையா? என்று உள்ளத்தால் அன்றி, மூளையால் சிந்தித்துப் பாருங்கள். புகைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை அல்லவா?

மனதால் கற்பனை செய்யுங்கள்

எண்ணங்களைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். ஆரம்பத்தில், கொஞ்சம் கடினமாக இருக்கின்றபோதும், சிறிது காலம் வழக்கப்படுத்திக்கொள்கின்றபோது, அதனைச் செய்ய முடியும் என்று உங்களுக்குப் புரியும். (medicaldaily.com)

புகைபிடிப்பதால் பழுதடைந்த நுரையீரல்கள், வாய்ப் பகுதிகளின் படங்களை, நீங்கள் அடிக்கடி மனதால் கற்பனை செய்துகொள்ளுங்கள். அது உங்களை புகைபிடித்தலிலிருந்து தடுப்பதற்கு உதவும். அதற்காக இந்தக் கட்டுரையில் உள்ளடக்கப்பட்டுள்ள படங்களைக்கூட உங்களால் பயன்படுத்திக்கொள்ள முடியும். புகைபிடிக்காமல் இருப்பதன் மூலம் கிடைக்கின்ற சுகாதாரமான மற்றும் செயலூக்கம் மிக்க வாழ்வு குறித்து அடிக்கடி எண்ணிக்கொள்ளுங்கள். “ஆம், எனக்கு புகைபிடிக்காமல் இருக்க முடியும்.” என்று எப்போதும் நேர்மறையாக சிந்தியுங்கள்.

உள்ளத்துடன் வாதியுங்கள்

புகைபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதுமே, அவ்வாறு தூண்டப்படுவதற்கான காரணங்களைப் புரிந்துகொள்வதற்கு முயற்சி செய்யுங்கள். உள்ளத்திடம் கேள்விகளைத் தொடுங்கள். உள்ளத்துடன் வாதியுங்கள். பெரும்பாலானோர் இவ்வாறான விடயங்கள் குறித்து ஆழமாக சிந்திக்காது, சிகரெட்டின் தயவை நாடுகின்றனர். முடியுமானளவு இவ்வாறு செய்யாதிருக்க வகை பார்த்துக்கொள்ளுங்கள்.

வேறு செயற்பாடுகளில் ஈடுபடுங்கள்

ஆழமாக சுவாசிப்பதன் மூலமோ, வளர்ந்திருக்கும் தசைகளை தளர்த்தும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலமோ உள்ளத்தில் அமைதியை ஏற்படுத்தலாம். இவ்வாறான விடயங்களைச் செய்யாதோர், மெதுவாக ஓடுதல், தோட்ட செயற்பாடுகளில் ஈடுபடுதல், கோல்ஃப் விளையாட்டில் ஈடுபடல் மற்றும் கரட், சூரியகாந்தி விதை, சுவிங்கம் ஆகிய குறைந்த கலோரி ஆகாரங்களை மெல்வதையும் இன்னுமொரு மாற்றீடாக அறிமுகப்படுத்தலாம்.

சரிவின்போது, அதற்கு வெற்றிகரமாக முகம்கொடுங்கள்

கடின உழைப்பின் பிரகாரம் ஈட்டிய பணத்தை புகைத்தலில் செலவிடுவது பற்றி சிந்திக்கவேண்டும் (cilisos.my)

புகைபிடிப்பதை நிறுத்திய ஒருவர், மீண்டும் சிகரெட்டை பற்றவைத்தால், தனக்கு மீண்டும் அதை ஒருபோதும் தவிர்க்க முடியாது என்று தீர்மானிக்கிறார். ஆனால், அது ஒரு பிழையான கருத்தாகும். சிறிது சரிவு ஏற்பட்டுள்ளபோதும், அது முழுமையாக தோல்வி அடையவில்லை. உங்களால் மீண்டும் மீண்டும் முயற்சிக்க முடியும். அதற்கு தேவையான உள, உடல் சக்தியை நீங்களே அதிகரித்துக்கொள்ளுங்கள். புகைபிடிப்பதால் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை அடிக்க சிந்தியுங்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் எவ்வளவு தொகை புகைபிடித்தலுக்காக செலவாகின்றது? அதன் மூலம் உங்கள் உடற் சுகாதாரம் எவ்வளவு பாதிக்கப்படுகின்றது? நீங்கள் மீண்டும் புகைபிடிக்க நினைத்தால், உங்களது குடும்பத்தார் அல்லது நீங்கள் நேசிப்போர் குறித்து எண்ணிப் பாருங்கள். நீங்கள் செய்யும் வேலைகளால் அவர்கள் கவலைப்படுகிறார்கள் அல்லவா? எனவே, இன்றே உங்களது உள்ளத்துக்கு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, இன்று முதல் நான் புகைபிடிப்பதில்லை என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். புகைபிடித்தலை நிறுத்தி விடுங்கள். அது நீங்கள் உங்களுக்கும், முழு மொத்த சமூகத்துக்கும் செய்கின்ற ஒரு பெரும் சேவையாகும். சிறந்த நாளைக்காக, புகைபிடிக்கும் பழக்கத்தை நமது சமூகத்திலிருந்து ஒழிப்பதற்கு, நம்மால் முடியுமான அளவு பங்களிப்போம்.

தமிழாக்கம்: அஷ்கர் தஸ்லீம்

Related Articles