ஹாரி பாட்டர் ஆழ்மன ஜாலம் – 1 | உள்ளத்தை உருவகப்படுத்தும் உத்தி!

நீங்கள் பாட்டர் ஹெட்ஸ் (Potterheads) எனப்படும் ஹாரி பாட்டர் கதைகளின் விசுவாசியா.. இல்லை ஹாரி பாட்டர் கதைகளை வாசிக்க விரும்பும் ஒருவரா.. இலையெனில் பொதுவான ஒரு வாசகரா..  எப்படியானவராகினும், இந்தத் தொடரை வாசிக்க ஆரம்பிக்கும் எல்லோருக்குமே பொதுவானதொரு கேள்வியை கேட்கத்தோன்றுகிறது.

ஒரு கதை எப்படிக் காலங்களைக் கடந்து பயணிக்கிறது?

கதைக்களம், சொல்வளம், கதைக்கரு, அது சஞ்சரிக்கும் பாதை அல்லது  கதை நிகழும் உலகம்.  ஒரு கதையை இப்படியான கூறுகள்தான் காலங்களைக் கடந்து பயணிக்க செய்கின்றன. நிஜ வாழ்விற்கும், நாம் எதிர்பார்க்கும் வாழ்விற்கும் இடையேயான தூரம் குறையக் குறைய அக்கதை மனதிற்கு நெருக்கமாகிறது. ஹாரி பாட்டர் இவ்விரண்டு வாழ்க்கைக்கும் இடையே உள்ள பாலமாகத் திகழ்கிறது.

ஓர் எழுத்தாளர் தனது பாத்திரப்படைப்பில் எப்படி விளையாடுகிறார் என்பதில்தான் அக்கதையின் மொத்த உயிரோட்டமுமே அடங்கியுள்ளது. அதுவும் ஒரு ஃபேன்டஸி கதையில், மாயாஜாலமும் நிதர்சனமும் இழையோடிப் போயிருத்தல் நலம்.

ஜே.கே. ரெளலிங் : படம் – facebook.com/harrypottermovie

ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் எதைச் சுட்டுகிறது என்பது நமக்குப் புரிந்துவிட்டால், அந்த எழுத்தாளர் வெற்றியடைகிறார். ஹாரி பாட்டர் கதையை உருவாக்கியவர் பல பிரிவுகளில் பல்வேறு உள்ளீடுகளை தன் கதையில் கொண்டிருந்தாலும், இக்கதையில் வரும் பாத்திரப்படைப்பின் மூலமாக மட்டுமே “பல விடயங்களைச்” சொல்லியிருக்கிறார். நாம் தினசரிக் கடக்கும் ஒரு விடயத்தின் / செயலின் / நபரின் / உணர்வின் உருவகமாகவே ஜே.கே. ரெளலிங்கின் கதாபாத்திரங்கள் அமைந்துள்ளன.

இதன் பின்னாலுள்ள நோக்கம்?

கதைகள் எப்போதுமே விசித்திரமானவை. கட்டுரைகள் சொல்லும் அதே செய்தியைக் கதைகள் நம்முள் ஆழமாக விதைத்துவிடுகின்றன; அந்தக் கதாப்பாத்திரங்களுடன் ஒன்றி, அவர்களுக்கு நேரும் இன்ப – துன்பங்கள் நம்முடையதாக மாறுகின்றன; கதையினால் நாம் நெகிழ்ந்துபோன ஒரு தருணத்தில் விதைக்கப்படும் செய்தியையோ கருத்தையோ நம்மால் எளிதில் கடந்துவிட முடிவதில்லை. இதை நேர்த்தியாகக் கையாண்டவர்களில் ரெளலிங் முக்கியமானவர். எப்படி என்பதை அறிந்துகொள்ள விரும்பினால் இந்தத் தொடரின் அத்தியாயங்களை ஒவ்வொன்றாக தொடர்ந்து வாசிக்க ஆரம்பியுங்கள், அதற்கான விளக்கம் உங்களுக்குக் கிடைக்கலாம்!

ஒடுக்குமுறையும் ஆணவமும்

ஹெர்மாய்னி/harrypotter.fandom.com

ஹாரி பாட்டரில் ஆரம்பத்தில் இருந்து நம்மை ஈர்க்கும் கதாபாத்திரங்களுள் ஒன்று ஹெர்மாய்னி. ஏழாம் பாகத்தில் அவள் கையில் கத்தியால் மட்ப்ளட் (Mudblood) என்று குத்திக் கிழிக்கப்படும். இது ஏன் என்பதை பார்க்கலாம்.

மாயாஜால உலகத்தில் மூன்று பிரிவுகளிலுள்ள மக்கள் இயங்குகின்றனர். 

1. ப்யூர்ப்ளட் (Pureblood) – மந்திரசக்தி கொண்ட பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகள்.

2. ஹாஃப்-ப்ளட் (Half-blood) – பெற்றோரில் ஒருவர் மந்திரசக்தி கொண்டவர்.

3. மட்ப்ளட் (Mudblood) சாதாரண பெற்றோருக்குப் பிறந்து மந்திரசக்தியைப் பெற்றவர்கள்.

இவற்றில் முதல் வகையைச் சார்ந்தவர்கள், மற்ற இருவரையும் கீழாகவே கருதுகின்றனர். ஒடுக்குகின்றனர். மேலே சொன்ன இந்த ஒரு காட்சியில் மட்டுமல்ல; கதை நெடுகிலும், வெவ்வேறு சூழல்களில் இந்த ஆதிக்கம் செலுத்தப்படும். இந்த ஒடுக்குமுறை என்பது நிதர்சனத்தில் இருந்து எடுக்கப்பட்டது. ஹாரிபொட்டர் கதைகளை வாசிக்கும் ஒருவருக்கு; ஒடுக்குமுறை, சாதி, ஏற்றத்தாழ்வு என்பதை எப்படி குழந்தைகளிடம் எடுத்துச் செல்வது என்ற படிப்பினையை பெற்றுத் தருவதால் கூட, இது நிச்சயமாக வாசிக்க/பார்க்க வேண்டிய படைப்பாகிப்போகிறது.

பிறப்பினால் ஏற்படும் ஆணவம் ஒருபுறம் என்றால், அதிகாரத் திமிரும் வெளிப்படுத்தப்படுவதை நிஜவாழ்வில் நீங்கள் பார்த்திருக்க வாய்ப்புண்டு. இதற்கு மிகச் சிறப்பான உதாரணத்தை மூன்றாவது பாகத்தில் காணலாம். ஹிப்போக்ரிஃப் (Hippogriff) என்ற உயிரினம் அறிமுகம் செய்யப்படுகிறது.

pottermore.com

உடம்பில் முன்பகுதி கழுகுடையதும், பின்பகுதி குதிரையுடையதுமான உயிரினம். மிக அழகாகப் பறக்கும். ஹிப்போக்ரிஃப் மிகவும் கர்வம் கொண்ட உயிரினம். தன்னை மதிப்பவர்களை மட்டுமே மதிக்கும். தன்னைப் பார்த்துப் பயம் கொள்பவர்களையோ அல்லது தன்னை இழிவாகப் பேசுபவர்களையோ கண்டு சினம் கொள்ளும். ஆனால், மரியாதையுடன் நடந்து கொள்பவர்களுக்கு அன்பை அளவில்லாமல் கொடுக்கக் கூடியது. தன் தந்தை அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருக்கிறார்; அவர் நினைத்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்ய முடியும் என்ற எண்ணத்துடன் இருக்கும் ஒரு மாணவன், தன்னை இழிவாகப் பேசுகையில்  ஹிப்போக்ரிஃப் உதைத்துவிடுகிறது. கையில் சின்ன காயம். இங்கு யார் மீது தவறு என்பதைக் கூட ஆராயாமல், தன் அதிகாரத்தை மட்டுமே பயன்படுத்தி, அந்த உயிரைக் கொல்ல ஆணை பிறப்பிக்க வைக்கிறார் அவனின் தந்தை. அதிகாரப் பசிக்கும், ஆணவத்திற்கும் பலியாகும் எண்ணற்றோருக்கான ஒரு சமர்ப்பணமாகவே இந்தக் தாபாத்திரத்தைக் காண முடிகிறது.

நிழலும் நிஜமும்

கதை முழுவதிலுமே இந்த அதிகாரக் கூறை மீண்டும் மீண்டும் முன்னிறுத்துகிறார் ரௌலிங் . எப்போதுமே அரசாங்கம் சரியாக இருப்பதில்லை என்பதை உணர்த்துகிறார். அரசாங்கத்துள் நச்சுத்தன்மைப் புரையோடியிருப்பதையும், மக்கள் வெகுநாட்கள் அறியாமையில் இருப்பதையும் காட்டுகிறார். அரசியல் எப்படி குழந்தைகளிடம் நேரடியாக அல்லது மறைமுகமாக தனது தாக்கத்தைச் செலுத்துகிறது என்பதை நுணுக்கமாகச் சொல்லியிருக்கிறார்.

அரசாங்கத்தில் ஏற்படும் பாதிப்பின் விளைவாக குழந்தைகள் கற்கும் பாடங்கள் மாற்றப்படுகின்றன. அரசாங்கத்திற்குச் சாதகமாகவே குழந்தைகளுக்கு அனைத்தும் கற்பிக்கப்படுகின்றன. அதை எதிர்த்துப் பேசும் மாணவர்களின் வலிமையையும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனையையும் சரிசமமாகப் பேசுகிறார். குறிப்பிட்ட கால வரையறைக்கு மட்டுமே பயன்படும் கருத்துகளாக அல்லாமல், எக்காலத்திலும் பேசப்படலாம் என்ற கருத்தை, மாயாஜாலம் என்ற போர்வைக்குள் வைத்து நம்மிடம் கொண்டு வருகிறார். இதில் குறிப்பிடத்தக்க விடயம், பெரும்பாலான அவரது உருவகங்களை நாம் நிஜ வாழ்க்கையில் பொருத்திப் பார்க்க முடியும் என்பதே. பின்வரும் உருவகங்களை அதன் கதாபாத்திர படைப்போடு நோக்குங்கள்:

கில்டெராய் லோக்ஹார்ட்: படம் – harrypotter.fandom.com

கில்டெராய் லோக்ஹார்ட் (Gilderoy Lockhart) என்று முதல் பாகத்தில் வரும் கதாபாத்திரத்தை நாம் தினமும் கூட சந்திக்க நேரிடலாம். பிறரின் சாதனைகளை, செயல்களைத் தம்முடையதாகப் பறைசாற்றும் ஒரு கதாபாத்திரம். ஒன்றுமே தெரியாத, ஆனால் அனைத்தும் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளும்; புகழுக்கு அடிமையாகிக் கிடக்கும்; சிரித்துச் சிரித்தே வஞ்சகம் செய்யும் கதாபாத்திரம். இவ்வனைத்தும் தெரிந்தாலும், பேச முடியாத சூழலில் இருப்பவர்களின் எதிர்வினை எப்படி இருக்கும்?

ரீமஸ் லூப்பின் : படம் – harrypotter.fandom.com

உருவகங்களைக் கையாள்வதிலும் ஒரு நேர்த்தி வேண்டும். அது உருவகமாக வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கும்போதுதான், அவ்வுருவகம் வெற்றி பெறுகிறது. அப்படி வெற்றிபெற்ற ஓர் உருவகம்தான் ரீமஸ் லூப்பின் (Remus Lupin). இந்தக் கதாபாத்திரம் ஓர் உருவகம் என்றே வெகுநாட்களுக்கு எனக்குத் தெரிந்திருக்கவில்லை. என்னுடைய நண்பர் சொல்லித்தான் தெரிந்தது, நம் சமுதாயத்தில் சில நோய்களைப் பற்றிய புரிதல் இல்லாமல் ஒதுக்கி வைக்கப்படுகிறவர்களின் உருவகம் தான் அது என்று.

வேர்வுல்ஃப் (Werewolf) எனப்படும் ஒரு மாயாஜால உயிரினம். மாதம் முழுவதும் மனிதராக இருந்து, பௌர்ணமி நேரத்தில் ஓநாயாக மாறும் தன்மை கொண்டது. இந்த உயிரினத்தால் கடிபட்டவர்கள் இப்படி மாறுகிறார்கள். தொற்றுநோய் மாதிரி. சிலர் வேண்டுமென்றே இந்தத் தொற்றைப் பரப்புகிறார்கள். சிலர் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் செய்கிறார்கள். ஆனால், இவர்களும் மனிதர்கள்தான். இவர்களுக்கும் உணர்வுகள் உள்ளன. குறிப்பிட்ட சில நாட்களில் இவர்களுக்கு மருந்தும் அக்கறையும் அன்பும் தேவைப்படுகிறது. அப்படிக் கிடைக்காதவர்களே எதிர்மறையாக மாறுகிறார்கள். இவர்களைத் தொட்டால், பார்த்தால், அருகில் இருந்தால் நோய் வரும் என்ற கருத்துப் புரயோடிப் போயிருக்கும் அந்த உலகத்தில் வேர்வுல்ஃப்களாக இருக்கும் அனைவரும் சமூகத்தின் கடைக்கோடி மாந்தர்களாகவே இருக்கின்றனர்.

நம் உணர்வுநிலைகள்

மனிதருக்கு ஏற்படும் பொதுவான ஏதெனும் நோய் குறித்த ஒரு அடிப்படை புரிதல் கூட இல்லாத ஒரு சமூகத்தில்தான் நாம் இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு நபருக்கு, அதுவும் நோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு அடிப்படையான தேவை உணவோ மருந்தோ அல்ல; அன்பும் நம்பிக்கையும்தான். அதைக் கூட வழங்க மறுக்கிறவர்கள்தானே நாம்? அதிலும் குறிப்பாக மனநிலைப் பிரச்சனைகள் பூதாகாரமாகவே பார்க்கப்பட்டு வருகின்றன. காய்ச்சல் போல மனப் பிரச்சனைகளும் ஒரு நோய் அல்லது இயலாமைதான். இது புரியாமல் போவதற்கான காரணம், நம்மால் ஒரு மனநிலையில் ஏற்படும் பிரச்சனை எப்படி இருக்கும் என்பதை உணர முடியாமல் போவதே. இது  பச்சாதாபம்  (Empathy) கிடையாது; பிறர் நிலையில் நின்று பார்த்தல்.

மனச்சோர்வை (Depression) எடுத்துக் கொள்ளலாம். மனச்சோர்வு எப்படி இருக்கும் என்ற கேள்வியை நான் பலரிடம் கேட்டிருக்கிறேன்; காலப்போக்கில் உணர்ந்தும் இருக்கிறேன். உலகிலுள்ள அனைத்து மகிழ்ச்சியும் நம்மைவிட்டு விலகிவிட்டதாக, ஒரு கருந்துளையால் ஈர்க்கப்படுவதாக, இனி ஒன்றும் இல்லை என்ற ஓர் எண்ணம் நம்மை வியாபித்திருக்கும். இதை ஒரு கதாபாத்திரமாக, அல்லது உருவகமாக மாற்ற முடியுமா? முடிந்திருக்கிறது.

டிமென்டர்ஸ்

ஆம், டிமென்டர்ஸ் (Dementors) என்ற ஒன்று வரும். அது ஒரு மாயாஜால உயிரினம். பிறரின் மகிழ்ச்சியையும், நேர்மறை (Positive) உணர்வுகளை மட்டுமே உணவாய் உறிஞ்சி வாழும் ஓர்  உயிரினம். சில சமயங்களில் அவர்களினுள்ளே இருக்கும் ஆன்மாவையும் உறிஞ்சிக்கொள்ளும். அதன் பின் அவர்களுக்கு மனச்சோர்வை உண்டாக்கும். இது நம்மில் பெரும்பாலானோர் அன்றாடம் எதிர்கொள்ளும் ஓர் உணர்வுநிலைதானே? நம்மை நாமே மனச்சோர்வில் இருந்து மீட்டிக்கொள்ள வழிகள் உண்டா? இதற்கான மாற்றாக ரௌலிங் முன்வைப்பது சாக்லேட்டும் மகிழ்ச்சியான எண்ணங்களை மீட்டிப்பார்ப்பதுமே தான். இவ்விரண்டுமே உதவலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

டிமென்டர்ஸ் : pottermore.com

நம் வாழ்வின் அனைத்து மகிழ்ச்சியான தருணங்களையும் ஒன்றுதிரட்டி மனச்சோர்வுக்கு எதிராகப் போராடலாம், வெல்லலாம் என்று இக்கதை சொல்லவருகிறது. ஆனால், மனச்சோர்வை இப்படிக் காட்ட முடியும் என்பது எனக்கு வியப்பாக இருந்தது. முதல்முறை இக்கதையை வாசிக்கும்போதே எனக்குப் புரிந்த முதன்மையான உருவகங்களில் ஒன்று இது. நம் உணர்வுநிலைகளை நமக்கு வெளியில் நாமே நின்று பார்க்கும் ஒரு தருணத்தை இக்காட்சிகள் நமக்கு அளிக்கின்றன.

மனோரீதியான பிரச்சனைகள் அவ்வளவு எளிதில் கடந்துவிடக் கூடியவை அல்ல. அதற்கு ஓர் ஆழமான வேர் இருக்கிறது. அந்த வேரை ஆராய்ந்தால் நம் குழந்தைக் காலத்திற்கு இட்டுச் செல்லும். ஹாரி பாட்டர் குழந்தை கதாபாத்திரங்களுக்கும் அப்படியான ஒரு கதை இருக்கிறது.

(ஜாலம் நீளும்…)

 

Roar தமிழ் உடன் உங்கள் பயணம் இனிதாக அமையட்டும்:
Mobile App : Android | iOS
Social Media : Facebook | Instagram | YouTube | Twitter 

Related Articles