ஹாரி பாட்டர் ஆழ்மன ஜாலம் – 4 | பெண்களை எப்படிச் சித்தரிக்கிறார் ரெளலிங்?

“ஒவ்வொரு முறையும் ஒரு பெண் தனக்காக துணிந்து நிற்கும்போதும், அவள் அனைத்துப் பெண்களுக்காகவும் நிற்கிறாள்.” – மாயா ஆஞ்சலோ

எல்லா இடங்களிலுமே பெண்கள் எப்போதுமே இரண்டாம் பட்சமாகவே பார்க்கப்பட்டு வருகின்றனர். நாம் சமத்துவம் பேசினாலும், இதுதான் நிதர்சனம். பல சூழல்களில் பின்னுக்குத் தள்ளப்படும் பெண்கள், தங்களுக்காக பேசுவதில்லை. அதை நடைமுறை என்று ஒதுக்கித் தள்ளுதலே இயல்பு. அநேகக் கதைகளிலும் இதைக் காண முடியும். பெண் கதாபாத்திரங்கள் அமைதியாக, அடக்கமாக, இளவரசனை எதிர்நோக்கும் ராஜகுமாரியாகவே இருப்பார்கள்.

ஹாரி பாட்டர் கதைகளிலும் சில இடங்களில் இதைக் காண முடியும். இரண்டாம் பாகத்தில் ஜின்னியைக் காப்பாற்ற ஹாரியே வருவான். ஹாரியின் தாய் லில்லி கதை முழுவதிலுமே அமைதியாகவே சித்தரிக்கப்படுகிறார். லூனா வித்தியாசமாக, வினோதமானவளாகச் சித்தரிக்கப்படுக்கிறாள். லில்லி, சோ, நார்சிஸ்ஸா, ஹெர்மாய்னி என அனைத்துக் கதாபாத்திரங்களுமே இப்படித்தான் தொடங்குகின்றன. ஆனால், கதையின் ஒரு புள்ளியில் அனைத்தும் மாறுகிறது.

அவள் அப்படித்தான்!

ஹாரி, ரான் இருவருக்கும் பிறகே ஹெர்மாய்னி காண்பிக்கப்படுவதாக முதலில் தோன்றியது. அவள் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்தாலும், கேலி செய்யப்பட்டாள். அழ வைக்கப்பட்டாள். அனைத்துக் கோபத்திற்கு மத்தியிலும், நண்பர்களுடனேயே பயணித்தாள். அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்தாள். ஹாரிக்கு உறுதுணையாக நின்றாள். அனைத்துத் துணைக் கதாபாத்திரங்களும் இப்படித்தானே? கதாநாயகனுக்குத் துணையாக நிற்கும் பெண் கதாபாத்திரங்களுக்கு பஞ்சமேயில்லை. ஆனால், ஹெர்மாய்னி தன் கதையை மாறி எழுத முற்பட்டாள். அது ஹாரியின் கதை மட்டுமல்ல, அனைவரின் கதை என்று புரிய வைத்தாள்.

 ஹெர்மாய்னி – screenrant.com

மூன்றாவது பாகம் முதல் ஹெர்மாய்னியின் கையைப் பிடித்துக் கொண்டுதான் கதை நகர்கிறது. அவளுக்கு ஒரு டைம் டர்னர் (Time Turner) கொடுக்கப்படுகிறது. காலத்தைத் தன்வசப்படுத்தும் சக்தியை அவள் பெறுகிறாள். ஹாரிக்கு தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்ள கற்றுக்கொடுக்கிறாள். அங்குள்ள அனைத்துப் புத்தகங்களையும் படிக்கிறாள். எதைப் பற்றிக் கேட்டாலும் பதிலுரைக்கிறாள். ஒரு பெண்ணிடம் இருக்கும் மிகப் பெரிய ஆயுதமாகக் கல்வி இருக்கிறது என்பதை நமக்குப் புரிய வைக்கிறாள். அனைவரையும் ஒன்று திரட்டுகிறாள். வோல்டிமார்ட்டின் அழிவிற்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்கிறாள். ஹவுஸ்-எல்ஃப்களின் (House-elf) வாழ்க்கை உரிமைக்காகக் குரல் கொடுக்கும் முதல் ஆளாக இருக்கிறாள். எவ்வித ஒடுக்குமுறையையும் எதிர்த்துத் துணிந்து பேசுகிறாள். ஹெர்மாய்னி இல்லாவிட்டால் ஹாரி பாட்டர் என்ற கதை வேறு திசையில் போயிருக்கும். ஓர் உற்ற தோழியாக இருக்கிறாள்.

collider.com

எந்த ஓர் ஆண்-பெண் நட்பிற்கும் வரும் அதே பிரச்சனை, ஹாரி-ஹெர்மாய்னிக்கும் ஏற்படுகிறது. இருவரும் காதலிப்பதாகப் பத்திரிகையில் பேசப்பட்டது, பலரும் நம்பினார்கள். ஆனால், ரான் அதை நம்பியதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லைதான்; தினமும் அழுதாள். ஆனால், தன் நிலையை விட்டு இறங்கி வரவில்லை. தன்னை நியாயப்படுத்திக் கொள்ள முனையவில்லை. ஆம், அவள் அப்படித்தான். தன் நட்பில் இருந்து சிறிதும் விலகவில்லை. தனக்காகவும், ஹாரிக்காகவும் அவளே முன் நின்றாள். இறுதிப் பாகத்தில், பெற்றோரைத் துறந்து வருவதற்கு, நட்பு மட்டுமே காரணமாயிருந்தது. ஹெர்மாய்னி எனும் கதாபாத்திரம் என்பது வெறும் துணைக் கதாபாத்திரம் அல்ல. ஒரு பெண்ணின் வலிமையை, திடத்தை, கல்வி அவளுக்கு எவ்வளவு தைரியத்தைக் கொடுக்கும் என்பதை, ஒடுக்குமுறையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை நமக்கு உரைக்கும் கதாபாத்திரம்.

ஓர் உறுதுணைக்காரி!

ஹெர்மாய்னி மட்டுமல்ல, ஜின்னியும் லூனாவும் இதையே செய்தனர். ஜின்னி ஆரம்பத்தில் சின்னக் குழந்தை என்று எல்லா இடத்திலும் தள்ளிவைக்கப்பட்டாள்; ஆறு அண்ணன்களின் செல்லத் தங்கையாக இருந்தாலும், அவளின் தனித்துவத்தை, வலிமையை யாரும் கண்டுகொள்ள முனையவில்லை. ஹாரியின் மீதுள்ள ஈர்ப்பால், அவனைக் கண்டு படபடக்கும் பெண்ணாகவே ஜின்னி தெரிந்தாள். ஒரு கட்டத்தில் ஜின்னியின் வலிமை வெளிப்படத் தொடங்கியது. விளையாட்டில் கெட்டிக்காரியாக இருந்தாள். தனக்காக தானே போராடக் கூடிய திடம் இருந்தது. ஆனால், நேரம் வரும் வரை அவள் அதை வெளிக்காட்டவில்லை.

 ஜின்னி – collider.com

ஹாரியைக் கண்டு பதற்றத்தில் வாய்பேச முடியாமல் நின்ற அதே பெண், கடைசிப் பாகங்களில் ஹாரிக்குத் தேவையான முழு வலிமையையும் அவனுடன் கூட இல்லாமலே, அவள் அளித்தாள். அவனுக்குத் துணையாக நின்றாள், அவன் முடிவுகளிலும், போரிலும். அவள் ஹாரியைக் காதலித்தாள். ஆனால் அக்காதல் அவனின் எந்தவொரு செயல்களிலும் குறுக்கிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். ஒரு நபரை எவ்வித மாற்றங்களும் தேவையில்லாமல் ஏற்றுக் கொள்வதுதானே காதல்? அப்படியான காதல் மூலம் பெரும் வலிமையாக ஹாரியுடன் நின்றாள்.

முப்பெரும் அன்புக்காரிகள்!

லூனா – pottermore.com

எதிர்பாராத அன்பு என்றால் என்ன என்பதைக் காண்பித்தவள் லூனா. அவளை அனைவரும் கேலி செய்தனர். ஆனாலும் அவள் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அன்பை வலிமையான ஆயுதமாக பயன்படுத்திய கதாபாத்திரம் அவளுடையது. அவளை யாரும் பெரிதாகக் கவனிக்காமல் இருந்தனர். அவள் விசித்திரமானவளாகவே தெரிந்தாள். தற்செயலாக அவள் வீட்டிற்கு செல்லும்போது, அவள் அறையின் மேலே இருக்கும் கூரையில் அனைவரின் படத்தையும் ஓவியமாக வரைந்து, இடையில் தங்க நிறத்தில் “ஃப்ரெண்ட்ஸ்” என்று எழுதி முழுவதையும் இணைத்திருந்தாள். அவளின் அன்பை வெளிக்காட்டவோ, அதற்குப் பதிலாக வேறொன்றைக் கேட்கவோ அவளுக்குத் தெரியவில்லை. அவளுக்கு அது தேவையும் இல்லை.

ஃப்ளார் – pottermore.com

ஃப்ளார் மற்றும் டாங்க்ஸ் ஏறத்தாழ ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள். ஃப்ளார் முதலில் அழகாக, அவள் தோற்றத்தைப் பிரதானப்படுத்தி சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரம். இம்சை செய்யும் கதாபாத்திரம். ஆனால், அவள் காதலன் வெளிவர முடியாத ஒரு நோயில் சிக்கிக் கொண்டபோதிலும், அவனை விட்டகலாத அந்த மனோதிடம், அன்பு – ஒரே காட்சியில் அனைத்தும் மாறிவிட்டது!

டாங்க்ஸ் – pottermore.com

டாங்க்ஸ் ஓர் அரசு அதிகாரி, துணிச்சலான பெண். உடைந்து போன ஒருவனை, தன்மீது தனக்கே அன்பில்லாத ஒருவனை காதலிப்பது அவ்வளவு சுலபமல்ல. ஆனால், டாங்க்ஸ் அதைச் செய்தாள். லூப்பினை விரும்பினாள். அவன் எதிர்ப்பையும் மீறி விரும்பினாள். அவன் பயத்தையும் மீறி அவன் குழந்தையைப் பெற்றெடுத்தாள். தன் குழந்தைக்கும், பிற குழந்தைகளுக்கும் பாதுகாப்பான இடமாகப் பூமியை மாற்ற போர்க்களத்திற்குச் சென்றாள்.

இவ்வுலகமும் மாற வாய்ப்பு!

கதையில் ஹாரி பிழைப்பதற்கும், வாழ்வதற்கும் அம்மாக்கள் மூவர் முக்கியமான காரணம். ஒருவர் ஹாரிக்காக தன்னுயிரை இழந்த லில்லி; இன்னொருவர் ஹாரி வாழ்வதற்குத் தேவையான அன்பைக் கொடுத்த ரானின் தாய் மாலி; மற்றொருவர், இறுதிக் காட்சியில் தன் மகனைக் காப்பாற்ற பொய் சொன்ன நார்சிஸ்ஸா. அவர் மட்டும் பொய் சொல்லவில்லை என்றால், ஹாரி பிழைத்திருக்க முடியாது.

லில்லி / நார்சிஸ்ஸா/மாலி  – pinterest.com

மேலும், கதை நெடுகிலுமே பெண்களே வலிமை சேர்ப்பதாகத் தோன்றும். ஹெர்மாய்னி இல்லையென்றால் ரான் மற்றும் ஹாரி ஒன்றுமேயில்லை; ஜின்னியின் இருப்பே ஹாரியை நகர்த்துகிறது; லில்லியின் நினைவு மட்டுமே செவ்ரஸை வாழச் செய்கிறது; ஆசிரியர் மெக்கோனக்கல் இறுதி ஆண்டில் மாணவர்களுக்கு இருக்கும் பெரும் நம்பிக்கையாகத் திகழ்கிறார்; அங்குள்ள அனைவருக்கும் நேரம் காலம் பார்க்காமல் உதவி செய்கிறார், மேடம் பாம்ஃப்ரே.

மேடம் பாம்ஃப்ரே / மெக்கோனக்கல் -pinterest.com 

ஹாரி பாட்டரில் பெண் கதாபாத்திரங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே போகலாம். தைரியமே உருவான ஆசிரியர் மெகோனக்கல்; அன்பும் வலிமையும் ஒருசேர அமைந்த தாய் மாலி; தன் மகனின் உயிருக்காக எதையும் பணயம் வைக்கும் நார்ஸிஸ்ஸா; தன் காதலனை போரில் பலிகொடுத்துவிட்டு, தானும் போருக்குச் செல்லத் தயாராகும் சோ என ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவம் மிக்கவை.

பாத்திரப் படைப்பை விடுத்து, ரெளலிங் உருவாக்கிய அவ்வுலகம், நாம் எதிர்பார்க்கும் ஐடியல் உலகத்திற்கு நெருக்கமானதாக இருக்கிறது. வேலைவாய்ப்பிலோ, விளையாட்டிலோ, பொது இடங்களிலோ ஆண் – பெண் பேதமில்லா உலகம். திறமை மட்டுமே அடிப்படையான தேவையாக இருக்கிறது. நம் நிஜ உலகிற்கும், அவ்வுலகிற்கும் நூலிழை வித்தியாசம்தான் இருக்கிறது. நாம் வாழ்ந்துகொண்டு இருக்கும் உலகமும் விரைவில் அப்படி மாறக்கூடும்.

elitedaily.com

மாயாஜாலத்தை அடிப்படையாக வைத்து இயற்றப்பட்டாலும், ஹாரி பாட்டர் அதை மட்டும்தான் பேசுகிறதா? ஹாரி பாட்டரின் கருத்தோட்டம் மாயாஜாலத்தையும் தாண்டி, தர்மம் – அதர்மம் என்பதையும் தாண்டி, நன்மை – தீமைக்கிடையான சண்டை என்பதையும் தாண்டி சில முக்கியமான விஷயங்களைப் பேசுகிறது.

(ஜாலம் நீளும்…)

முந்தைய அத்தியாயங்கள்:

> ஹாரி பாட்டர் ஆழ்மன ஜாலம் – 3 | அப்பாக்களின் ஆதிக்கமும் தாக்கமும்!
> ஹாரி பாட்டர் ஆழ்மன ஜாலம் – 2 | குழந்தைப் பருவமும் குணாதிசயங்களும்!
> ஹாரி பாட்டர் ஆழ்மன ஜாலம் – 1 | உள்ளத்தை உருவகப்படுத்தும் உத்தி!
> ஹாரி பாட்டர் ஆழ்மன ஜாலம்- குறுந்தொடர் – அறிமுகம்

கட்டுரை முகப்பு பட உதவி: screenrant.com/
 

Roar தமிழ் உடன் உங்கள் பயணம் இனிதாக அமையட்டும்:
Mobile App : Android | iOS
Social Media : Facebook | Instagram | YouTube | Twitter 

Related Articles