கெட்டவார்த்தை அல்ல காமம் !

இந்த ஆக்கம் எழுதும் முன் சில நண்பர்களிடம் கருத்து கேட்டபொழுது, டேய்! பொது தளத்தில் சிலவற்றை எழுதக்கூடாது அதில் இதுவும் ஒன்று என முகம் சுழித்தபோதுதான் கண்டிப்பாய் இந்த ஆக்கம் எழுதவேண்டும் என்று தோன்றியது.

இணையம் என்பது முன்பு இந்தியா போன்ற நாடுகளில் மேல் தட்டு வர்கம் மட்டுமே நுகர்ந்த ஒன்று. ஆனால் இன்று வீடு இல்லாதவர்களிடம் கூட கைபேசி உள்ளது. அதன் மூலம் உலகத்தின் எதைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம் என்றானபின் அந்த ஜீனி பூதம் நமக்கு தரும் விஷயங்களில் நன்மைக்கு இணையான தீமையும் உண்டு அதில் நாம் அனைவரும் யாருக்கும் தெரியாது என்று நினைத்து செய்யும் ஒன்றுதான் ஆபாச படம் ( porn films ) !. எப்படி விஸ்பர் மற்றும் ஆணுறை  பற்றிய பேச்சு இரகசியமாகவும் மறைத்து பேசக்கூடிய ஒன்றாகவும் உள்ளதோ அதைப்போன்ற ஒன்றுதான் இந்த ஆபாசப் படங்களும்.

 

படம்: christian.org

உங்களின் கைபேசியிலோ , கணினியிலோ ஆபாச படங்கள் வைத்து உள்ளீர்களா ? , பொதுக்  கணினி மையத்தில் சென்று ( browsing centre ) ஆபாச படம் பார்பவரா நீங்கள் ? அய்யயோ , நான்லாம் ரொம்ப நல்ல பையன் தெரியுமா என்று பதறி அடித்து சொல்ல தேவையில்லை . இந்தியாவில் ஆபாச படம் பார்ப்பது என்பது சட்டப்படி தனி நபர் உரிமை !. பின் எதற்கு இந்த ஆக்கம் ?. ஆபாச படம் மூலம் நாம் மட்டும் பாதிப்படையவில்லை நம் சமூகமும், சமூகத்தின் ஆணிவேரான குழந்தைகளும்தான்.

உலக அளவில் ஆபாச படங்கள் பார்க்கும் ஆரம்ப வயது என்பது மிகவும் அச்சுறுத்தும் வகையில் உள்ளது. அமெரிக்கவில் 8-10 வயது குழந்தை ஆபாச படங்கள் பார்க்க ஆரம்பிக்கிறது. அந்த நாடே அப்படித்தானே ! என்று சிரிக்க வேண்டாம் . இந்தியாவில் ஆபாச படம் பார்க்கும் குழந்தையின் ஆரம்ப வயது 13-14 என்கிறது ஒரு ஆய்வு . பதின் வயது குழந்தைகளின் உடல் ரீதியான சந்தேகங்களுக்கு பதில் தேடியே அவர்கள் இதுபோன்ற வலைத்தளத்திற்கு செல்கிறார்கள் . ஆனால் அதன்பின் யாரும் அதில் இருந்து மீண்டு வருவதில்லை என்பது மட்டுமே சோகம் !.

படம்: lifesitenews

சென்ற ஆண்டு குழந்தைகளை மையப்படுத்தி  இயங்கி வந்த 1000 க்கும் மேலான இணைய தளத்தை மட்டும் இந்திய அரசு முடக்கியது . 5-10 வயது குழந்தைகளை ஆபாச படங்களில் நடிக்க வைத்து அதை வியாபாரம் செய்வது பாவம் என்றால் அதை யாருக்கும் தெரியாது என்று பார்த்து ரசிக்கும் நம் மனநிலையை என்னவென்று சொல்வது ?.

உலக அளவில் மிகவும் பிரபலமான மாடல்களின் கண் , உதடு, கேசம் என்று தேர்ந்தெடுத்து இணையத்தில் ஒரு 5 வயது சிறுமியை போலியாக உருவாக்கி அந்த சிறுமிக்கு ஒரு இணைய பக்கமும் உருவாக்கியது  சைபர் கிரைம். சொன்னால் நம்ப மாட்டீர்கள் 5௦-6௦ வயதிற்கு மேற்பட்ட பெரும் பணக்காரர்கள் அந்த போலி சிறுமியை நிர்வாணமாக பார்க்க  அவர்களின் வங்கி கணக்கின் ரகசிய எண்ணை வரிந்து கட்டிக்கொண்டு தந்திருக்கிறார்கள் ?  இப்போது அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்.

உளவியல் நிபுணர் ஒருவர் இதுபற்றி கூறும் போது , ஆபாச படம் பார்ப்பது என்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் தினமும் பார்ப்பது, வன் காமம் பார்ப்பது ( ஹார்ட் கோர் ), குழந்தைகள் காமம் பார்ப்பது போன்றவையெல்லாம் நாம் மனநிலை மாற்றத்தில் இருக்கிறோம் என்பதன் அறிகுறி !. கண்டிப்பாய் இவர்கள் மருத்துவரை அணுகுவது நலம் . காரணம் இவர்களின் ஆபாசப் பட நுகர்வு எண்பது கண்டிப்பாய் ஒரு கட்டத்தில் அந்த படங்களில் வருவதை முயற்சித்து பார்க்கத் தூண்டும் என்றார் அந்த மருத்துவர்.

படம்: indianexpress

ஆபாச பட வணிகம் என்பது இணையம் சார்ந்த வணிகத்தில் மிகவும் அதிகம் . உலக அளவில் 23,500 க்கும் மேற்பட்ட ஆபாச பட இணைய தளங்கள் தினமும் அதிக தடவை பார்க்கப்படும்  தளங்களில் முதன்மையில் உள்ளது . 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆபாச இணைய தளங்களின் மூலம் ஈட்டப்படுகிறது . “ப்லே பாய் ” இதழில் முழு நிர்வாண புகைப்படத்தில் தங்கள் படம் வர வேண்டும் என்பதே பல முன்னணி மாடல்களின் கனவாக உள்ளது என்றால் இங்கு ஆபாசம் என்பது வணிகமாகி நீண்டகாலமாகிவிட்டது என்பது தானே உண்மை . நமது இணைய தேடல்களை எல்லாம் கூகுள் சேமித்துக் கொண்டுதான் இருக்கும் என்பதை மறக்க வேண்டாம். அதற்கு உதாரணம் நீங்கள் தேடும் செய்திகள் சார்ந்த பொருட்களின் விளம்பரங்களை உங்களை நோக்கி அனுப்பும் கூகுள் அது நீங்கள் காமம் சார்ந்து தேடும் போதும் சரி !.

நண்பர் ஒருவரின் கைபேசியில் 40ரூபாயை பிடித்து விட்டார்கள் என்று வாடிக்கையாளர்கள் மையத்திற்கு போன் செய்தால் அவர் ஆபாச இணைய தளத்தில் வந்த ஒரு விளம்பரத்தை கிளிக் செய்தார் என்றார்கள். பின் தான் நண்பர் சொன்னார் என்றோ ஒருநாள் இவர் கைபேசியில் ஆபாச படம் இணையத்தில் பார்க்க அதன் பின் அது சார்ந்த விளம்பரங்களாக வர ஆரம்பித்துள்ளது. பின் அதை சரி செய்து விட்டோம் . அங்கு ஒன்றை கவனியுங்கள் நீங்கள் யாருக்கும் தெரியாது என்று நினைப்பது தொடர்ச்சியாக கண்காணிக்கபடும் ஒன்று.

படம்: CNNmoney

ஆபாச படம் சார்ந்து ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு  சட்டம் இருந்தாலும் இணையத்தை முழுமையான பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வர முடியாது . அதைத்தான் ஏன் ஆபாச புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதை தடுக்கவில்லை? என்ற நீதிமன்ற கேள்விக்கு கூகுள் அது நடைமுறை சாத்தியம் அற்றது என்று கூறியது .

இந்தியாவில் நீங்கள் உங்கள் கைபேசி, கணினி போன்றவற்றில் ஆபாச படம் வைத்திருக்கலாம். ஆனால் அதைப் பொது இடத்தில் பார்ப்பதோ அல்லது பொதுத் தளத்தில் வெளியிடுவது குற்றமாகும் சிறைதண்டனை உறுதி. ஆனால் இங்கு அப்படியா நடக்கிறது பள்ளி கல்லூரி நண்பர்கள் “வாட்ஸ்ஆப் ” இல் ஆபாச படத்திற்கென தனி குரூப் ஆரம்பித்து பகிர்ந்து கொள்கிறார்கள். சரியான புரிதல் இல்லாத குழந்தைகள் ஆபாச படம் பார்ப்பதில் இருக்கும் உளவியல் சிக்கல் அதிகம்.

படம்: beforeitsnews

தவறான பல தீய பழக்கத்திற்கு இதனால் அடிமை ஆகிறார்கள். பாலியல் தீண்டல்களுக்கு உள்ளாகும் போது அதை வீட்டில் சொல்ல பயப்படுகிறார்கள். இதற்கான தீர்வு என்பது அவர்களிடம் இருக்கும் கைப்பேசியை பிடுங்கி எறிவதாலோ , இணையத்தை துண்டிப்பதாலோ நிகழ்ந்து விடப்போவதில்லை. குழந்தைகளுக்கு உடல் சார்ந்த புரிதலை அளிப்பது குடும்பம் மற்றும் பள்ளியின் கடமை ஆகும்.

நான் 11ஆம் வகுப்பு படித்த சமயம் , உயிரியல் பாடத்தில் மனித உடல் உறுப்பு பாடத்தில் வந்த ஆண், பெண் இனப்பெருக்க உறுப்பு பகுதியை மட்டும் எங்களுடைய ஆசிரியை நீங்களே படித்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார். நாங்கள்  பெண் உறுப்பு என்பது அதில் இருக்கும் அறிவியல் படம் போல் தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம் ! ஒன்று அதை எங்களுக்கு ஒரு ஆண் ஆசிரியர் நடத்தியிருக்க  வேண்டும் அல்லது அந்த பெண் ஆசிரியர் எங்களுக்கு புரியும்படி நடத்தியிருக்க  வேண்டும் . இது தவறாக பார்க்கப்படலாம். ஆனால் அந்த பாடத்தை டியூசனில் நடத்திய செல்வராணி மிஸ் சின்ன  முக சுழிப்பு கூட ஏற்படாதவாறு நடத்தினார்களே.  அதன் பின்தான் எனக்கு இனப்பெருக்க உறுப்பு என்பது அருவருப்போ அல்லது கொச்சை சொல்லோ அல்ல என்று புரிந்தது !.

நாம் செய்தது என்ன உலகமே கொண்டாடும் வள்ளுவனின் திருக்குறளில் வரும் காமத்துப்பாலை கூட பள்ளிகளில் இருந்து தூக்கிவிட்டோம். காதலும், காமமும் அத்தனை ஒன்றும் தீய செயல் அல்லவே  ! அது இல்லை என்றால் இன்றைய உலகம்தான் ஏது? . ஆனால் அது சரியான வயதில் சரியான புரிதலோடு குழந்தைகளைச் சென்றடைய வேண்டும் . வீட்டில் கண்டிப்பாக ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பிறர் நம்மை தொடுதலின் நோக்கம்  (good touch bad touch ) மற்றும் உடலில் ஏற்படும் வயது சார்ந்த மாற்றங்களை சொல்லிக்  கொடுக்க வேண்டும் .

படம்: macleons

ஆண் குழந்தைகளுக்கு பெண்ணின் மாதவிடாய் பற்றியும்  சொல்லித் தர வேண்டும். காரணம்  ஒரு பள்ளியில் மாணவன் பெண் உடல் என்ற ஒரு கலந்துரையாடலில் “விஸ்பர்  விளம்பரங்களில் அந்த துணியில் ஊதா கலரில் இரத்தம் இருப்பதாய் காட்டுகிறார்களே பெண்களுக்கு இரத்தம் ஊதா நிறமாகவா இருக்கும்?”  என்று கேட்டுள்ளான்  ! இதுதான் நம் தலைமுறை குழந்தைகளுக்கு  நாம் பெண்களை பற்றி அவர்களுக்கு ஏற்படுத்திய பிம்பம் !.  இதையெல்லாம் அவர்களே தெரிந்துகொள்வார்கள் என்று விட்டுவிட்டேம் என்றால் இணைய பூதம் அவர்களை விழுங்கிவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

 

Related Articles