இந்தியச் சந்தையில் சீனப் பொருட்களின் தாக்கம்

“என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?…” திருவிழாக்களிலும், கட்சிக் கூட்டங்களிலும் இன்றும் இந்தப் பாடல் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நடைமுறை எதார்த்தம் என்பது வெளியே சொன்னால் வெட்கக்கேடு பொம்மைகள், மின்னணு சாதனங்கள், வாகனங்கள், தீபாவளி பட்டாசுகள் எனத் தொடங்கி தண்ணீர் புட்டிகள் முதல் பல்துலக்கி வரை, தலை வாருகிற சீப்பு முதல் காலணி வரை அனைத்திலும் சீனப் பொருட்களின் ஆதிக்கமே மேலோங்கியிருக்கிறது.

மொத்தமாகக் சீனப் பொருட்களின் விலையானது இந்திய பொருட்களைவிட 10-70% குறைவாக உள்ளது. அதற்குப் பல்வேறு சாதகமான அம்சங்கள் உள்ளது.உதாரணமாக கடந்த ஆண்டு தீபாவளி அன்று, சல்பர் கொண்ட சீனப்  பட்டாசுகள்  இந்தியச் சந்தையில் வெள்ளம்போல் குவிந்தது. இந்திய தயாரிப்பாளர்களால் பயன்படுத்தப்படும் நைட்ரேட்டைக் காட்டிலும் சல்பர் ஆபத்தானது என்றபோதும் சீனப் பட்டாசுகளின் குறைந்த விலை வாங்குவோரை அதிகம் ஈர்த்தது. இது இந்திய பீரங்கித் தொழிலின் வருவாயை உண்மையில் பாதித்தது.

ஒரு பொருளைக் குறைந்த விலையில் வாங்கலாம் என்பது நுகர்வோர்  பார்வையில் முக்கியமான அம்சமாக இருந்தாலும் பாதுகாப்பும், உள்நாட்டு உற்பத்தியின் மூலம் பெரும் வருவாயும் முக்கியம்தான். அதிலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான தடையாக அது இருந்துவிட்டால் பிறகு மறைமுகமான விலைவாசி உயர்வு என்பது கட்டுப்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படும். குறிப்பாக நமது நாட்டின் ஏற்றுமதிச் சந்தை பெரிதும் பாதிக்கப்படும். மேலும் இதனால் ஏற்பட்ட மற்றொரு அபாயம் மூலப் பொருட்களை இறக்குமதி செய்யாமலேயே உற்பத்தில் இறங்கியிருக்கும் இந்தியாவின் பல சிறு உற்பத்தியாளர்கள் சந்தையில் போட்டியிட முடியாமல் கடனாளிகளாக மாறித் தொழிலை விட்டே விலகிவிட்டனர்.

சீனப் பொருட்களால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மற்றொரு தொழில் பொம்மைத் தொழில் ஆகும். இவற்றுடன் போட்டியிட்டு தற்போது இந்திய பொம்மைத் தொழில் உயிர் பிழைக்குமா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 40% இந்திய பொம்மை நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன, 20% நிறுவனங்கள் மூடப்படும் விளிம்பில் உள்ளது. 2000 க்கும் மேற்பட்ட பொம்மை நிறுவனங்கள் கடந்த 4-5 ஆண்டுகளில் மூடப்பட்டது. உலகின் மிகப்பெரிய பொம்மைச் சந்தையை சீனா கொண்டுள்ளது என்று ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது. அதோடு உலகின் மொத்த விற்பனைப் பங்குகளில் 45% கொண்டுள்ளது. 2012-13ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, இந்தியாவின் இறக்குமதிகள் 235 பில்லியன் டாலர்களாக இருந்தன, அதில் சீனா 28 பில்லியன் டாலர் பங்களிப்புடன் இருந்தது.

இந்நிலைக்கு சீனாவின் மக்கள்தொகை, வரி விதிப்புக் கொள்கைகள், மலிவான நிலம், இலவச மின்சாரம் இயற்கை வளங்கள், குறைந்த பட்ச மூலதன முதலீடு, அரசாங்கத்தின் நட்பு கொள்கைகள் எனப் பல காரணங்கள் இருந்தாலும் இந்தியாவில் இன்றும் உற்பத்தித் திறனும், தொழில்நுட்ப ஆற்றலும் எந்த வகையிலும் குறைந்துவிடவில்லை. அதிலும் உலகம் முழுவதிலுமிருந்து மூலப்பொருட்களை வாங்கிக்கொண்டு இறுதித் தயாரிப்புகளைத் தான் விற்று வருகிறது சீனா. இறுதித் தயாரிப்புப் பொருட்களின் ஏற்றுமதியில் ஜெர்மனிக்கு அடுத்தபடியாக உலகில் சீனா இரண்டாவது இடத்தில் இருந்தாலும் உலகளாவிய வர்த்தக அமைப்பு (WTO) மூலம் அது விரைவில் முதல் இடத்திற்குச் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவோ கைபேசிகளின் உதிரி பாகங்கள், மடிக்கணினிகள் மற்றும் கணினிகளின் உதிரி பாகங்கள் போலவே இதர மின்னணு சாதனங்களின் உதிரி பாகங்கள் ஆகியவற்றைச் சீனாவிலிருந்து இறக்குமதி செய்து இறுதிப் பொருளை “MADE IN CHINA” என்றே சந்தைப்படுத்தி வருகிறது. பல இந்திய கைப்பேசி நிறுவனங்கள் குறிப்பாக சீனாவில் இருந்து பிராண்டட் அல்லாத ஸ்மார்ட்போன்களை இறக்குமதி செய்து  விற்பனை செய்கின்றன. அதில் ஒன்று இந்தியாவில் இரட்டை சிம் ஸ்மார்ட்போன்கள் விற்பதற்கு சீனாவின் வயர்லெஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இதற்குப் பெயர்தான் டிஜிட்டல் இந்தியா.

இந்தியா இறக்குமதி செய்யும் மின்னணு பொருட்களின் மொத்த மதிப்பு 2016-17 ஆம் ஆண்டில் 7.8 பில்லியன் டாலர்களாக இருந்தது. சீனாவில் இருந்து மட்டுமே தொலைத் தொடர்பு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது 4.8 பில்லியன் டாலர்கள் ஆகும். இது மொத்த இறக்குமதியில் 29 சதவிகிதம். மற்ற குறிப்பிடத்தக்க இறக்குமதிகளில் சூரிய மற்றும் ஒளி மின்னழுத்த பேனல்களும் உள்ளன.

ஏற்றுமதியில் சீனாவின் நடவடிக்கை அன்னிய செலவாணி சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க டாலரின் மதிப்பை மேலும் அதிகரித்து, இந்திய ரூபாய் உள்ளிட்ட நாணயங்களின் மதிப்பு சரிந்தது. இந்த நடவடிக்கை ஏற்றுமதி வளர்ச்சியையும் பாதிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. யுவான் மதிப்பு குறைந்திருப்பதால் சர்வதேச சந்தையில், சீனா ஏற்றுமதி செய்யும் பொருட்களின் விலை, மற்ற நாட்டு பொருட்களை விட மலிவாகும். இதனால், பிற நாடுகளின் ஏற்றுமதி பாதிக்கப்படும். இதற்கு ஈடுகொடுக்க, சம்பந்தப்பட்ட நாடுகள் தங்கள் நாணயத்தின் மதிப்பைக் குறைக்க முற்பட்டால், அது முடிவில்லாத போட்டியை உண்டாக்கி, நாணய யுத்தத்திற்கு வித்திடலாம் என்ற அச்சம் இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, ஏற்றுமதி பாதிக்கப்படுவதோடு குறைந்த விலையிலான சீன தயாரிப்புகள் குவிந்து, உற்பத்தி துறையையும் பாதிக்கலாம் என்ற அச்சம், தொழில் துறை மத்தியில் உள்ளது.  முதலீட்டாளர்களும் டாலரை நோக்கி செல்லலாம் எனக்  கருதப்படுகிறது. ரூபாயின் வீழ்ச்சி கவலையோடு பார்க்கப்பட்டாலும் இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை அம்சங்கள் வலுவாக இருப்பதால், இது மேலும் மோசமாகாது என்று கருதப்படுகிறது. ஏற்றுமதி வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஆனால் சீனா நாணய மதிப்பை மேலும் குறைக்கும் என்றால் நிலைமை மேலும் சிக்கலாகலாம். சீன பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மோசமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.  இந்திய ரூபாயின் மதிப்பு குறைவது கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றின் செலவை அதிகரித்து, பணவீக்கத்தையும் அதிகரிக்கச் செய்யும். டாலரில் கடன் பெற்றுள்ள வர்த்தக நிறுவனங்களின் லாபத்தையும் பாதிக்கும்

சீன பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பதிலாக இந்தியா தனது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டிய நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும். இந்தியப் பொருளாதாரம் விவசாயம் சார்ந்ததாக இருக்கிறது. தொழிலாளர் எண்ணிக்கை பெரும் எண்ணிக்கையில் கிடைக்கிறது, ஆனால் பணத்தை சம்பாதிக்க வழிகள் குறைந்து வருகின்றன. இயற்கை வளங்கள் குறைந்து வருவதால் விவசாயத்தில் குறிப்பிடத்தக்க உற்பத்தியின்றி தொடர்ந்து அதிலும் பின்னடைவையே சந்தித்து வருகிறது. அதனால்தான் ஒருபுறம் சூழலியல் பாதிப்புகள் குறித்தும் பல ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே வருகின்றனர். மோசமான உள்கட்டமைப்பு இந்தியாவின் மற்றொரு பிரச்சனையாகும். இது நேரத்தையும், உற்பத்தி செலவையும் கூட்டுகிறது.

சீனப் பொருட்களிலிருந்து நம் உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க இந்திய அரசாங்கம் கட்டாயமாகச்  சில கொள்கைகளை மாற்றவும், கடமைகளைச் சேர்க்க வேண்டிய அவசியமும் உள்ளது. இது தவிர இந்தியாவின் உள் கட்டுமானம் மற்றும் தரம், செலவு ஆகியவற்றில் அந்நிய சந்தையில் போட்டியிட நமது  நாட்டின் மனித ஆற்றல், மற்றும் பிற இயற்கை வளங்களை திறம்பட பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் மனிதவள ஆற்றல் பெரிதாகக் கொண்ட வல்லரசுக் கனவு காணும் இந்தியா தற்சார்பு நிலையை தீர்க்கமாக அடைந்து தொடர்ந்து அதன் பொருளாதாரத்தை உயர்த்தி உலக வர்த்தகக் கட்டமைப்பில் உயர்ந்து நிற்க முடியும்.

Related Articles