ஆசிரியர்களுக்கும் சோதனை

இந்த வேலையை விட்டுவிட்டு ஊருக்கு போயிரலாம்னு இருக்கேன். இது சென்னையில் ஒரு பிரபல தனியார் பள்ளியில் புதிதாக ஆசிரியராக சேர்ந்த தோழி ஒருவரின் குரல்.   ஏன் தோழர்? சம்பளம் ஏதும் பத்தலயா?, டீச்சர்தான் ஆவேனு அடம் புடுச்சு போனிங்க என்னாச்சு தோழர் என்று கேட்டதும் அடிஸ்னல் சீட் வாங்கி எழுதும் அளவு காரணங்களை கொட்டினார்.

(eletsonline.com)

நான் படுச்சது பி.எட். ஆனா 1ஆம் வகுப்புக்குத்தான் பாடம் எடுக்றேன், இரண்டு பாடம் எடுக்க சொல்லிருக்காங்க ஒருநாளைக்கு 1 மணி நேரம் தான் ஓய்வு ஆனால் அதுலயும் ஏதாவது வேலை கொடுத்துடுறாங்க!. பள்ளிக்கூடம் ஆரம்பிக்கிறது முன்னாடி கிளாஸ் சுவர் எல்லாம் படம் வரைய விட்டாங்க, சார்ட் வொர்க் அது இதுனு ஏதாவது கொடுத்துட்டே இருகாங்க!.ஒவ்வொரு குழந்தையும் என் குழந்தை மாதிரி பாத்துக்கணும்னு நெனச்சேன். இப்ப ஸ்கூல் போகவே எரிச்சலா இருக்கு அதான் என்றார் ..

இது அந்த ஒரு தனியார் பள்ளி ஆசிரியரின் நிலை மட்டும் இல்லை, இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான தனியார் பள்ளிகளின் நிலை இதுதான்!. சரி சம்பளமாவது வாங்கும் வேலைக்கு நிகராக தருகிறார்களா என்று பார்த்தால் அது இன்னும் மோசம். இந்தியாவில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி இங்கு ஒரு தனியார் பள்ளியில் எலிமென்ட்ரி  வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியரின் ஆரம்ப சம்பளம் இரண்டாயிரம் ரூபாய்தான் என்றால் நம்ப முடிகிறதா?. (அரசு பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் 20-40 ஆயிரம்)

இந்தியாவில் 43% ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில்தான் வேலை செய்கிறார்கள் அதாவது 4.2 மில்லியன் ஆசிரியர்கள். அதில் 3.1 மில்லியன் ஆசிரியர்கள் எலிமென்ட்ரி ஸகூல் ஆசிரியர்கள் அதாவது 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள்.

நான் அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்த நேரம், தாவரவியல் பாடம் நடத்தும் ஆசிரியருக்கு ஏதோ உடல்நிலை சரி இல்லை என்று விடுப்பு எடுத்து போனார்!. போனாவர் 6 மாதம் கழித்துத்தான் வந்தார். நாங்களாவது பராவாயில்லை, அரசு தேர்வு எழுதிய 12ஆம் வகுப்பு மாணவர்கள்தான் பாவம். நான் 12 ஆம் வகுப்பு சென்றவுடன் இயற்பியல் ஆசிரியர் மகப்பேறு விடுப்பு எடுத்து போய் விட்டார்.  இந்த முறை 4 மாதத்திற்கு பின் ஒரு ஆசிரியரை நியமித்தார்கள். (அப்ப அவங்களோட வகுப்புலாம் என்ன பண்ணிங்கனு கேக்கலாம் அதையும் கணக்கு, இல்லை ஆங்கில வாத்தியார் எடுத்துப்பாங்க தலைக்கு மேல் குருவி பறக்கும் எங்களுக்கு)

(steelcase.com)

ஒரே தேசம், ஒரு புறம் ஆசிரியர்கள் பிழிந்து எடுக்கப்படுகின்றர், இன்னொரு புறம் ஆசிரியர் இல்லாமல் வகுப்புகள் நடக்கிறன!. அதற்காக உடல் நிலையை கருத்தில் கொள்ளாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி செய்ய வேண்டும் என சொல்லவில்லை. தங்களின் விடுப்பை கருத்தில் கொண்டு தகுதி உள்ளவர்களை தற்காலிகமாக பணியில் அமர்துவது யார் கடமை? அது அரசு கடமை என்று நீங்கள் சொல்லலாம்! கொஞ்சம் தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலையை சிந்தியுங்கள், அவர்கள் கட்டாயமாக இரண்டு ஆண்டுகள் குழந்தை பெற்றுக் கொள்ள கூடாது என்ற விதிகளின்படியே வேலைக்கே சேர்க்கப்படுகிறார்கள்!.

இன்னும் சில தனியார் கல்வி நிறுவனங்கள் 17 ஆயிரம் என்று சம்பள ரிசிப்டில் கையெழுத்து வாங்கி விட்டு 7 ஆயிரம் தான் தருகிறார்கள்! இதை கவனிக்க எந்த ஆய்வுக் குழுக்களும் இங்கு நியமிக்கப்படவில்லை. இப்படி தங்கள் உழைப்பு திருடப்படுவதை தெரிந்தே உழைக்கிறார்கள் தனியார் பள்ளி ஆசிரியர்கள். இயந்திரங்களோடு 8 மணி நேரம் உழைப்பு என்பது வேறு,  அந்த இயந்திரம் எந்த எதிர்வினையும் காட்டப்போவது இல்லை. ஆனால் குழந்தைகள் அப்படி இல்லை. இவ்வளவு மன மற்றும் உடல் பிரச்சனைகளின் விளைவை ஆசிரியர்கள் குழந்தைகள் மீது காட்டினால் என்னாவது?

அரசு பள்ளிகளின் மீது நம்பிக்கையை இழந்து பெருவாரியான மக்கள் தனியார் பள்ளிகளை நோக்கி நகரத்தொடங்கிவிட்டனர். (அரசு பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களின் பிள்ளைகள் உட்பட) இரண்டு நாட்களுக்கு முன் பீகாரில் சீருடைக்கான பணம் செலுத்தவில்லை என்று உடைகளை களைந்து மாணவிகளை வீட்டிற்கு அடித்து ஓட விட்டிருக்கிறார் ஒரு தனியார் பள்ளி “ஆசிரியை”. ஒரு பெண்ணே, பெண் குழந்தைகளை நடத்திய விதம் எவ்வளவு கீழ்த்தரமானது. ஆனால் இதை மேலோட்டமாக பார்த்தால் அது அந்த தனி ஒரு  ஆசிரியையின் தவறு என்பது போல தோன்றும். ஆனால் அந்த நிர்வாகம் கட்டணம் வசூலிக்க அந்த ஆசிரியருக்கு கொடுத்த நெருக்கடியாகவும் இது இருக்கலாம் இல்லையா?.

பல தனியார் பள்ளிகளில் மாலை வேளைகளில் குழத்தைகளை ஏரியா வாரியாக ஸ்கூல் வேனில் அனுப்பிவைத்த  பின்னர்தான் ஆசிரியர்கள் வீட்டுக்குச் செல்ல முடியும்!. இது என்ன அவ்ளோ கஷ்டமான பணியா?, கட்டாயம் இல்லைதான் ஆனால் இது அவர்களின் தகுதி சார்ந்த பணியா? அவர்கள் இதை விரும்பி செய்கிறார்களா?அதுவும் இல்லைதானே!.

(allconsuming.net)

சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ஆசிரியர் பணி சார்ந்த படிப்புகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு! காரணம் பணம் கொடுத்தால் அரசு வேலை கிடைக்கும் என்பது அனைவரதும் கணிப்பு. பள்ளி முதல் பல்கலைக்கழக துணைவேந்தர் வரை எல்லாவற்றிற்கும் தனி ரேட்!. சரி தனியார் பள்ளியில் ஆசிரியர் ஆகலாம் என்றால் அங்கு கொடுக்கப்படும் ஸ்பெஷல் கிளாசும்  வீக் டெஸ்ட்டும் மாணவர்ளுக்கு மட்டும் இல்லை ஆசிரியர்களுக்கும்தான்!.

விடுமுறை நாட்களில் கட்டாயமாக பள்ளி வைக்கக்கூடாது என்கிறது அரசு. 100% தேர்ச்சிக்காக 24 மணி நேரமும் பள்ளிகளை நடத்த தயாராக உள்ளன தனியார் பள்ளிகள். விடுமுறை நாட்களில் விருப்பமே இல்லாமல் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மன நிலை எப்படி இருக்கும்? ஆசிரியர்கள் தங்கள் கோபத்தை மாணவர்கள் மீதும் மாணவர்கள் தங்கள் கோபத்தை தங்கள் மீதுமே காட்டிக்கொள்வார்கள் (சிடு சிடுவென இருத்தல், தீய பழக்கத்திற்கு ஆட்படுதல் போன்றவை). ஆனால் பெற்றோர்களுக்கு குழந்தைகள் அதிக மதிப்பெண் எடுத்தால் சரி!.

எல்லாருக்கும் ஒரு சில ஆசிரியர்களை பிடிக்கும் அவர்களை, அண்ணனாக, அப்பாவாக, அம்மாவாக நண்பனாக பார்த்திருப்பார்கள். அந்த ஆசிரியர்தான் நம் திறமை என்னவென்று நமக்கே புரியவைத்திருப்பார். பேச்சுப் போட்டிக்கு வெளியூர்களுக்கு செல்லும்போது எனக்கு வயிறு நிறைய சாப்பாடு போட்டு பட்டினியாய் என் தமிழ் அய்யா என்னோடு வந்தது இன்னொரு நாள் என் நண்பன் சொல்லித்தான் எனக்கு தெரிய வந்தது. இப்படி தன்னை வருத்தி மற்றொரு நபரை உயர்த்தும் உள்ளம் பெற்றோர்களுக்கு அடுத்து நல்ல ஆசிரியருக்கு மட்டுமே வரும்!.

எனவே அரசு இதில் ஏதாவது செய்ய வேண்டும். ஏன் என்றால் சிறந்த ஆசிரியர்கள் இல்லையென்றால் நாளைய சமூகம் அறிவுக்குருடர்களாகத்தான் இருப்பார்கள். நாம் இப்பொழுது காக்கப் போவது ஆசிரியர்களை அல்ல நம் குழந்தைகளின் எதிர்காலத்தை !..

Related Articles