Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

சமூகத்தின் சிட்டுக்குருவிகள்

குடியான தெருப்பக்கம் இருந்த வயக்காட்டில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது, என் நண்பன் அருகில் இருந்தவரின் கொடியில் காய்ந்து கொண்டிருந்த துணியைத் தொட்டுவிட்டான். இதைக் கண்ட அந்த வீட்டுகாரம்மா எங்களை துரத்தி வந்து அடித்தும், வசைமாறிப் பொழிந்தும் பின் துவைத்த துணியை மீண்டும் துவைத்து தனது தீட்டை துடைத்துக் கொண்டார். அழுக்குக் கையால் தொட்டதால்தான் தீட்டு என அந்தப் பெண் கத்தியதாகவே நான் எண்ணிக்கொண்டிருந்தேன். அடுத்து மற்றொரு நிகழ்வாகப் பக்கத்து ஊர் நண்பன் வீட்டிற்கு முதல் முதலாய் சென்றபோது நன்றாகப் படிக்கும் என்னிடம் ஆசையாய் பேசிய அவன் அம்மா, அடுத்த முறை என்னை வாசலோடு வழியனுப்பினார். அப்போதும் அவர் ஏதோ வெளியில் செல்லப் போகிறார் என்றே நினைத்தேன்.

ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து வந்த அம்பேத்கரின் போராட்டத்தை விட, நிலவுடைமை சமூகத்தில் பிறந்து நிலமற்றவர்களுக்காகப் போராடிய பெரியாரின் போராட்டங்கள் அதிக வெற்றியையே தந்தது. படம் – aljazeera.com

பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவனாக வந்தபோதும், நடேசத் தேவர் பள்ளியில் வணிகவியல்-வரலாறு பிரிவு மட்டுமே தர முடியும் என்று சொல்லப்பட்டது. பின்னர், பட்டுக்கோட்டையில் இருந்த ஒரு பெரிய பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்தபோது, என் சாதிப் பெயரைக் கேட்ட அந்த வேதியல் வாத்தியாரையும், பள்ளி முகப்பில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் பெயரை போட்டு வரையப்பட்டிருந்த அரிவாளையும் கண்டபோதுதான் எனக்குப் புரிந்தது எங்கள் கைபட்ட துணியை அந்தப் பெண் மீண்டும் துவைத்ததற்கும், நண்பனின் அம்மா வாசலோடு வெளியே அனுப்பியதற்குமான காரணம்.

அந்தக் காரணம் என்னைச் சுட்டது, அதே நேரத்தில் முயன்றால் வென்றுவிடலாம் என்ற தப்புக் கணக்கோடு சரியாகப் படிக்க ஆரம்பித்தேன். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் எனது இடத்தைப் பிடித்தேன். முதல் வகுப்பில் சாதியைத் தேடும் அந்த கட் ஆப் சடங்கு நடந்தது. 197.5 என்று நான் சொன்னதும் சக நண்பன் என்னைப் பார்த்து “எப்படிடா எல்லாரையும் ஏமாத்திட்டு வரிங்க” எனக் கேட்டபோது, சொல்ல வாயற்றும், திக்கற்றும் நின்றேன். அதே நிலையில்தான் வெமுலாவும், முத்துகிருட்டிணனும் இறந்தபோது அவர்களின் சிரித்த புகைப்படத்தைப் பார்த்து அழுது கொண்டிருந்தேன். உண்மையில் அன்று நான் இருந்ததைப் போலவே இன்றும், சமத்துவமான சமூகத்தை படைக்கக் காதல் கொண்ட ஆயிரமாயிரம் இதயங்கள் இந்த நாடு முழுவதும் அரசியலாக்கப்படாமலேயே இருக்கின்றது.

சோகங்கள் எல்லோருக்கம் உண்டு அதற்குத் தீர்வு தான் என்ன?

“கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய்” என்னும் அம்பேத்கரின் வாசகத்தை தவிர வேறென்ன இருக்க முடியும்? ஆம் இதை நடைமுறைக்குக் கொண்டு வரும் முயற்சியாகத் தமிழ் இளைஞர் மற்றும் மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஜூலை 8, 9 ஆகிய இரண்டு நாட்களும் 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்ட கூட்டம் ஏலகிரியில் நடைபெற்றது. இதில் அது வரை முகப்புத்தகத்தில் புகைப்படங்களாகவோ, மீம்ஸ்களாகவோ அல்லது ஸ்டேடஸ்களாகவோ தெரிந்த பலரை நேரில் பார்த்துக் கொண்டபோது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இளைஞர்கள் ஒன்று கூடினால் கொண்டாட்டத்திற்கு அளவு கிடையாது, அப்படித்தான் இந்தக் கூட்டமும் கிரிக்கெட் விளையாட்டிற்கும், தாமிகளுக்கும் இடையே நடைபெற்ற அரசியல் பேச்சோடு ஆரம்பித்து, சித்தாந்த விவாதத்தோடு தொடர்ந்தது. புரட்சிகர சித்தாந்தத்தை மக்களிடம் கொண்டு செல்லாமல் இங்கு புரட்சிகள் சாத்தியமில்லை என்று மானுடத்தின் வக்கீல் மார்க்ஸ் சொன்னது போல் விவாதங்கள் வீரியமிக்கதாக இருந்தன, அதே நேரத்தில் தோழமை சிறிதும் குறையாமலேயே இருந்தது.

இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களை விட ஒடுக்கும் மக்களே சமூக பொருளாதாரத்தைச் சரியாக புரிந்துவைத்துள்ளனர் படம் – fthmb.tqn.com

மனிதத் தோற்றம், முடநம்பிக்கை, சமூக நீதி என்ற தலைப்பில் மருத்துவர் தோழர் எழிலன் தலைமையில் கலைந்துறையாடல் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மானுடத்தின் இழிவாம் சாதியக் கசடுகளை சுத்தம் செய்யப் பகுத்தறிவு தந்தை பெரியார் முன்னிறுத்திய இட ஒதுக்கீடு என்னும் ஆயுதம் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் விரிவாகவே அலசப்பட்டது. அதுவும் இளைஞர்களின் கேள்விகளுக்கு மிக எளிமையாகப் பதிலளித்தார் மருத்துவர் எழிலன். நீட் குறித்தான எச்சரிக்கையும் அது இட ஒதுக்கீட்டையும், மாநிலத்தின் அதிகாரத்தையும் எப்படி அழிக்கின்றது என்பது குறித்தும் வாதங்களை முன்வைத்தார்.

இத்தோடு நிற்கவில்லை இங்குள்ள முற்போக்கு அமைப்புகளின் சரிவுகள் என்ன? வெற்றி என்ன ? என்பது குறித்தும் விவாதங்கள் விடிய, விடியத் தொடர்ந்தது. ஆம் அங்கு பெரியார் முதல் மார்க்ஸ் வரை அனைத்துத் தலைவர்களும் அலசி ஆராயப்பட்டனர்.

ஒன்று கூடலில் நான் விளங்கிக்கொண்ட ஒன்று…..

இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களை விட ஒடுக்கும் மக்களே சமூக பொருளாதாரத்தைச் சரியாக புரிந்துவைத்துள்ளனர். அதன் சாட்சியே உலக ஏகாதிபத்தியத்திங்கள் இங்குள்ள முதலாளிகளைத் தரகர்களாகக் கொண்டு ஆண்ட சாதி என்றும் அடிமைச் சாதி என்றும் சமூக அடிப்படைவாத முரண்பாடுகளை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சுரண்டலை சுறுசுறுப்பாக நிகழ்த்துகின்றனர்.

இங்கு சாதிகள் முதன்மை முரண்பாடுகள்தான், ஆனால் அதை ஒழிக்க ஒடுக்கப்பட்டவர்களால் மட்டுமே முடியாது என்பதுதான் இங்குள்ள நிதர்சன உண்மையாக இருக்கின்றது. இதற்கு நடைமுறை உதாரணங்கள் அண்ணல். அம்பேத்கரும், பெரியாருமே. ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து வந்த அம்பேத்கரின் போராட்டத்தை விட, நிலவுடைமை சமூகத்தில் பிறந்து நிலமற்றவர்களுக்காகப் போராடிய பெரியாரின் போராட்டங்கள் அதிக வெற்றியையே தந்தது. சீர்திருத்தத் தளத்தில் அண்ணல். அம்பேத்கரின் பங்களிப்பு இன்று இந்தியா முழுவதும் உள்ள தலித்துகளை ஒன்று திரட்டவும், சாதியக் கொடுமைகளுக்கு எதிராகப் பேசவும் வைத்தது. ஆனால் பெரியாரின் போராட்டங்கள், சாதிப் பெயர்களைக் கேட்பதே அருவருப்பானதாக மாற்றியுள்ளது. இதுவே மற்ற எல்லா மாநிலங்களை விடவும் தமிழகத்தை போர்க்குணமிக்க மாநிலமாக ஒரு படி மேலே கொண்டு சென்றது. போராட்டங்களில் பெரியாரும், அம்பேத்கரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. ஆனால் ஆதிக்க சாதியினரையும் சாதிக்கு எதிராய் பேசவைத்த பெரியாரின் வழிமுறை உலக அளவில் எந்தத் தலைவனும் பெறாத வெற்றிகரமான சீர்திருத்தப்பாதை.

உலகின் மிக மோசமான இந்தச் சாதிய அமைப்பு முறையை அழித்தால் மட்டுமே இந்தியாவை மனிதன் வாழக்கூடிய ஒரு நாடாக மாற்றமுடியும். படம் – ichef.bbci.co.uk

உலக முதலாளிகளால் சுரண்டப்பட்டுவரும் இந்தியா இன்னும் தன் எச்ச சொச்சங்களை சாதியின் பெயரால் வைத்துக் கொண்டே இருக்கின்றது. இன்றைய தலைமுறையில் கூட  ஆயிரத்திற்கு ஒருவர் என்ற கணக்கில்தான் தலித்துகள் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்பதோடு  பெரும்பான்மையானோர் கல்வி அறிவும், விழிப்புணர்வுமற்ற அடித்தட்டு மக்களாகவும், கீழ் நடுத்தட்டு மக்களாகவும்தான் இருக்கின்றனர். தங்களைப் போன்றே பொருளாதாரத்தில் இருக்கும் இவர்களைக் கீழ் சாதியாகவே ஆதிக்கச்சாதி உழைக்கும் மக்கள் பார்க்கின்றனர். உலகின் மிக மோசமான இந்தச் சாதிய அமைப்பு முறையை அழித்தால் மட்டுமே இந்தியாவை மனிதன் வாழக்கூடிய ஒரு நாடாக மாற்றமுடியும். அதைச் செய்வதற்கு ஆதிக்க சாதி உழைக்கும் மக்களின் தேவைகளும், உழைக்கும் தலித் மக்களின் தேவைகளும் மையத்துவப்படும் இடத்தைச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதே சிறந்த தீர்வாக இருக்க முடியும்.

இழப்பதற்கு கை விலங்கைத் தவிர வேறில்லை, ஆனால் பெறுவதற்கோ பொன்னுலகம் காத்துக்கொண்டிருக்கிறது என்ற மார்க்சின் வாசகங்கள் இதனை உறுதிப்படுத்துகிறன.

Related Articles