அவசர தடைகளின் பட்டியலில்…

திருடன் ஒருவன் காட்டுப்பாதையில் வரும் ஊர் மக்களை கொள்ளை அடித்து வெறும் உடுத்தியிருக்கும் உடையுடன் மட்டும் அனுப்புவானாம், அவன் சாகும் தறுவாயில் தன் மகனை அழைத்து, “மகனே! நான் நிறைய கெட்டது செய்து விட்டேன் என்னை இந்த ஊர் நல்லவன் என்று சொல்வதை கேட்க வேண்டும்!” என்று கடைசி ஆசையை சொல்ல, மகன் பெரிதாக ஒன்றும் சிரமப்படவில்லை.” அந்த காட்டுப்பாதையில் வரும் மக்களை முழுவதும் கொள்ளையடித்து அம்மணமாக ஓட விட்டானாம்”! அந்த மொத்த ஊரும் இதற்கு அந்த பழைய திருடன் எவ்வளவோ நல்லவன் என்று கூற ஆரம்பித்தார்கள், இது தான் இன்று இந்தியாவில் நடக்கிறது .

சில மாதங்களுக்கு முன் எந்த முன் அறிவிப்பும் இன்றி திடீரென்று, எங்கள் கையில் இருக்கும் பணம் செல்லாது என்றீர்கள். கேட்டால் ஊழலை ஒழிக்க காஷ்மீர் இராணுவ வீரன் உவமை காட்டி தியாகம் செய் என்றீர்கள், நாங்களும் நாள் கணக்காய் வாரக் கணக்காய் வங்கி வாசலில் நின்றோம் !. ஆனால் அரசியல் மற்றும் பண பலம் உள்ளவர்கள் கோடி கோடியாய் பின் வழியாக பணத்தை மாற்றிக்கொண்டு போனார்கள். இதுவரை எவ்வளவு கறுப்புப் பணம் பிடித்து இருக்கிறீர்கள், அவர்களுக்கு என்ன தண்டனை? கேட்டால் எங்களை “ஆன்டி இந்தியன் என்கிறீர்கள் ” .

இதோ எந்த முன் அறிவிப்பும் இன்றி அடுத்த சட்டம், இந்தியாவில் மாட்டுக்கறிக்கு தடை! இது ஜனநாயக நாடு தானே? இனி அந்த வார்த்தை புத்தகத்தில் மட்டும்தான் இருக்கும் போல. 71-78% அசைவம் சாப்பிடும் ஒரு நாட்டை ஒரே இரவில் சைவமாக்க பார்க்கிறார் மோடி!  ஹலோ, நாங்க எப்ப சைவம் ஆக சொன்னோம்? மாட்டுக்கறி மட்டும்தானே தடைபோட்டோம், என்னும்  மோடி ஆதரவு குரல் கேட்கிறது. இன்று சொல்லவில்லை ஆனால் நாளை அதையும் கண்டிப்பாக சொல்வீர்கள்!.

150-200 ரூபாய் ஆட்டுகறிக்காக செலவழித்து பெறும் புரோட்டினையும், கொழுப்பையும் வெறும் 50 ரூபாய் மாட்டுக்கறியில் பெற்றுவிடலாம் (ews.bbcimg.co.uk)

ஏற்கனவே உ.பி யில் பசுக்-காவலர்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் ஒரு அமைப்பு, இறந்த மாட்டின் தோலை உரித்த தலித்துக்கள் இரண்டு பேரை அடித்தே கொன்றனர்!. இதை இந்தியா முழுமைக்குமாய் செய்யத்தான் இந்த ஏற்பாடா?, நீங்கள் மாடுகளை விவசாயத்திற்கு மட்டும் விற்பனை செய்து கொள்ளலாம்  என்று பெரிய மனது வைத்து சொல்லி இருக்குறீர்கள்! (உங்க முன்னாடி தானே மோடி சார் அம்மணமாய் நின்னான் விவசாயி) ஆனால் மாடு வாங்கி வந்தது இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்தால் ஒருவரை அடித்துக் கொன்றனர், ஒரு வேளை மோடி ஆட்சியில் இஸ்லாமியர்கள் விவசாயமும் செய்யக்கூடாதோ?.

வெறும் உணர்ச்சியின் வெளிப்பாடு அல்ல இந்த ஆக்கம், ஆட்டுக்கறி உண்ண இயலாத நடுத்தர மற்றும் ஏழை மக்களின் மிக முக்கிய மாமிசம் மாட்டுக்கறியே, இதைப்பற்றி “பேலியோ டயட் ” யை பின்பற்றும் நபர்களிடம் கேட்கும் பொழுது 150-200 ரூபாய் ஆட்டுகறிக்காக செலவழித்து பெறும் புரோட்டினையும், கொழுப்பையும் வெறும் 50 ரூபாய் மாட்டுக்கறியில் பெற்றுவிடலாம்  என்கின்றனர். ஆக ஒரு தேசத்தை புரத குறைபாட்டு குழியில் தள்ள பாக்குறீர்கள் மோடி ஐயா, இது சரியா ?.

ரம்ஜான் நெருங்கும் நேரத்தில் நீங்கள் இதை செய்யும் போதே, உங்கள் ஆட்சி மக்கள் ஆட்சி அல்ல, காவி ஆட்சி என்று மிகத் தெளிவாக தெரிகிறது. அப்படி என்றாலும் கூட மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் இந்தியாதான் இரண்டாவது இடத்தில் உள்ளது!. அதாவது உலக மக்கள் தொகையில் 18% இந்தியாவின் மாடுகளை நம்பித்தான் உள்ளது. உங்களின் திட்டம் இந்திய ஏழைகளை தவிர யார் வேண்டுமானாலும் இந்தியாவின் வளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் அப்படித்தானே?.

மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் இந்தியாதான் இரண்டாவது இடத்தில் உள்ளது!. அதாவது உலக மக்கள் தொகையில் 18% இந்தியாவின் மாடுகளை நம்பித்தான் உள்ளது.(intoday.in)

இந்தியாவில் ஆண்டுக்கு தோராயமாக 4,41000 தொன் மாட்டு இறைச்சி உணவுக்காக பயன்படுகிறது.இதில் எல்லா மத மக்களும் மாட்டுக்கறி உண்கிறார்கள் என்பதே நிதர்சனம்!. இதில் பகடி என்னவென்றால் உங்கள் கட்சியில் உயர் பதவியில் இருக்கும் சிலர் எதெற்கெடுத்தாலும் மோடியை மட்டுமே குறை சொல்கிறீர்கள் என்று பேட்டி கொடுக்கிறார்கள். மோடி அலை வீசுகிறது என்ற ஒற்றை தலைமை துதி பாடித்தானே ஆட்சியை பிடித்தீர்கள் .

வெறும் இறைச்சி பிரச்சனை அல்ல இது, பல இந்திய கிராமங்களில் ஆயிரக்கணக்கில் மாடுகள் விவசாயம், போக்குவரத்து, இறைச்சிக்காக என்று வளர்கப்படுகிறது. இவற்றை எப்படி வகைப்படுத்த போகிறது அரசு? மாடுகளுக்கு ஆதார் அட்டை கொடுத்தா? (நான் பகடிக்காக எழுதினால் உண்மையாகவே மாடுகளுக்கும் ஆதார் வழங்க போகிறதாம் மத்திய அரசு) சரி பயன்படாத மாட்டை இறைச்சிக்குத்தானே விற்க முடியும்?, ஒரு விவசாய கூலி அந்த மாட்டை விற்காமல் பராமரிக்க அரசு நிதி உதவி செய்ய தயாரா?,. அப்படி இல்லை எனில் அவர்களின் சோற்றுக்கு வழி?, அதனால் இந்தியா சந்திக்கும் வேலை இழப்பை யோசனை செய்ததா அரசு?.

இந்தியாவில் இதுவரை அழிந்து போன மாட்டு இனங்களை பற்றி கவலைப் படாத அரசு, ஜெர்சி பசுவின் வருகையால் நாட்டு மாடு வளர்ப்பு குறைந்து போனதைப்பற்றி கண்டுகொள்ளாத அரசு, எஞ்சி இருக்கும்  நாட்டு மாடுகளை காக்க இருக்கும் ஜல்லிக்கட்டு போன்ற விழாக்களை தடை செய்யும் போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அரசு இன்று மாடுகளை காக்க மொத்த இந்தியாவையும் சைவமாகச் சொல்கிறது!. நாங்கள் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள்தான் ஆகிறது எல்லா குற்றமும் எங்கள் மேல் சொல்வது நியாயம் அன்று, என தப்பிக்கவும் முடியாது காரணம் நீங்கள் எதிர்கட்சியாக எதையெல்லாம் குற்றம் என வரிந்து கட்டி நின்றீர்களோ அதையே தான் இன்று நீங்களும் செய்கிறீர்கள். அதற்கு ஆகச் சிறந்த உதாரணம் ஆதார் அட்டை!.

மாட்டிறைச்சித் தடைக்கான கேலிச் சித்திரம் (worldnewsbyday.com)

மாட்டுக்கறி உண்ணாமல் இருக்க முடியாதா?, இது உங்கள் புகழ் பாடும் என் நண்பனின் குரல். (அவன் யாரை மனதில் வைத்து சொல்கிறான் என்பது நன்றாக தெரிகிறது, நீங்கள் யாரை நினைத்து இதை செய்தீர்களோ அவர்களைத் தான்) முதலில் நான் என்ன உணவு உண்ண வேண்டும் என்பதை முடிவெடுக்க நீங்கள் யார்? இந்திய இறையாண்மையை குழி தோண்டி புதைக்கும் முழு முயற்சி இது!. “இங்கு இன்னமும் ஒரு பிரிவு மக்கள் மனித மலங்களை அள்ளிக்கொண்டுதான் இருக்கிறார்கள், விவசாயி தற்கொலை செய்து கொண்டு இருக்கிறான், இந்தியாவின் வேலை இல்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளது, இங்கிருந்து பல நிறுவனங்கள் காலி செய்து போய்விட்டன, சிறு தொழில்கள் செத்துக் கொண்டு இருக்கிறன இதை எல்லாம் விடவா இப்பொழுது நாங்கள் அசைவம் சாப்பிடுவது உங்களுக்கு உறுத்துகிறது?.

எல்லாவற்றிற்கும் முன் நின்று போராடிய தமிழகத்தை  “ரைடு” அனுப்பி அமைதி ஆக்கிவிட்டீர்கள். ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் ஹிட்லரும் இல்லை இது ஜெர்மனும் இல்லை!. கண்டிப்பாய் இதை படிக்கும் ஒரு மோடி விசுவாசிக்காவது இதையெல்லாம் என் தலைவரை பார்த்து கேட்க நீ யார் என்ற கேள்வி எழும் , “ஆப்கி பார் மோடி சர்கார்  (இனி மோடியின் ஆட்சி)” என்று கோஷம் இட்ட இளைஞர்களில் ஒருவன்தான் நான். டீ வித்த ஒருவன் பிரதமராக கூடாதா என்ற ஒற்றை கேள்விக்காகவே ஓட்டளித்த ஒருவன் இன்று  நீங்கள் சிறுபான்மை இன மக்களை வஞ்சிப்பதை பார்த்து கேட்கும் கேள்விகள் தான் இவையெல்லாம் !.

எதற்கும் உங்கள் மனைவிக்கு முடிந்த அளவு இன்றே முத்தம் கொடுத்துக் கொள்ளுங்கள் மக்களே,( நீங்கள் மனதில் நினைத்ததும் தான்) நாளை இரவு அதற்கும் சட்டம் வரலாம்…

“கியா யகி கரோபர் ஆப்கா மோடி சர்கார் ??” (இதுதான் உங்க மோடியின் ஆட்சியா??)

Related Articles