வேலையில்லா திண்டாட்டத்தின் மீது இந்தியாவின் பார்வை

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே பல கட்டமைப்பு வளர்ச்சிகளைப் பெற்றிருந்தது தான் உண்மை. 1857 பிரிட்டிஷ் ராஜ் தொடங்கிய காலம் முதல் 1947 வரை இந்தியாவை ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்த ஆங்கிலேயர்கள், இந்தியாவில் வசித்து வந்த அவர்களது அதிகாரிகளுக்கு சகல வசதிகளையும் செய்து தரும் நோக்கத்தில் பல வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். அதனை உணர்த்தும் வகையில் அமைந்த சிறந்த திட்டங்களான  ரயில் போக்குவரத்து வசதி, இந்திய தபால் துறை, தந்தி வசதி, மருத்துவமனை வசதிகள், துறைமுகங்கள் என்று அவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட எண்ணற்ற கட்டமைப்பு வசதிகளை 1947ல் இந்தியாவை விட்டு செல்லும் போது சிதைக்காமல் அப்படியே விட்டு விட்டு சென்று விட்டனர். அதன் பின் குடியரசு இந்தியா முதலில் வளருவதற்கு சற்று தடுமாறியது என்பதே உண்மை.

Unemployment Rate (Pic: techeconomy.ng)

சுதந்திர இந்தியாவின் கல்வியறிவு

1947ல் வெறும் 12% கல்வியறிவு கொண்டிருந்த இந்திய மக்களை ஊக்குவித்து கல்வியின் முக்கியத்துவத்தை புரியவைத்து, மக்களுக்கு கல்வியை வழங்குவதே பெரிய கடமையாக இருந்தது. 2011ன் நிலைமைப்படி இந்தியாவின் கல்வியறிவு 74% ஆக வளர்ச்சிப் பெற்றதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று தமிழகத்தில் காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத்திட்டம் என்பதை மறுப்பவர் யாதும் உண்டோ. அதை மறுப்பவர்களிடன் நான் இந்திய கல்வியறிவிற்கான குறியீட்டை காண்பிக்க விழைகிறேன். இந்தியாவின் கல்வியறிவு சரியாக 1960 களில் தான் பெரும் வளர்ச்சியைப் பெற்றது என்பது அதில் தெளிவாகப் புலப்படும். அந்த தசாப்தத்தில் தான் காமராசர் அரசு, தமிழக அரசு பள்ளிகளில் இசவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதனை முறையே செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறையை ஊக்கப்படுத்தியது. அந்த திட்டம், தமிழகத்தின் பள்ளிக்கு செல்லாத பல குழந்தைகளைப் பள்ளிக்கு செல்ல வைத்தது. இதனைத் தொடர்ந்து குஜராத்தில் இதே திட்டம் அமலுக்கு வந்தது. 1991 ல் இந்தியாவின் 12 மாநிலங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

Graph (Pic:  commons.wikimedia.org)

வேலையில்லா திண்டாட்டத்தின் துவக்கம்

இதற்கு அடுத்த காலக்கட்டத்தில் தான் நமது தலைப்பைச் சார்ந்த சிக்கலே துவங்கியது. 1960களின் இடையிலிருந்து, கல்வியறிவின் குறியீடு வேகமாக வளரத்தொடங்கியது. அந்த காலகட்டத்து பள்ளி மாணவர்கள் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு படித்த படிப்பிற்கான வேலைகளில் சேர்வதன் அவசியத்தை அந்த தலைமுறை சரியாக உணர்ந்திருந்தது. ஆனால் அதற்கான வழிகாட்டுதல் கிராமங்களில் படிக்கும் மக்களுக்கு சரி வர கிட்டியதாக தெரியவில்லை. அது மட்டுமல்லாமல் தனது குடும்ப வறுமையின் காரணமாகவும் கிராமப்புற பட்டதாரிகள் படித்தும் விவசாயக் கூலியாகவே காலம் கழித்த கதைகளும் சில உண்டு. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த அரசு அதிகாரிகள் படித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் எண்ணம் இருந்தும் செயல் திட்டங்களிலும், வழிகாட்டுதலிலும் சற்று சறுக்கி பின் தட்டித் தடுமாறி ஒரு வழியாக சரியான பாதையில் இந்த பிரச்சனையை அனுகத் துவங்குவதற்குள், வேலையில்லா திண்டாட்டத்தின் காரணமாக நாட்டில் பல குழப்பங்கள் வந்தது.

சில காலம் கடந்து, நிலைமையை புரிந்துக்கொண்டும், நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான சேவையை கருத்தில் கொண்டும் அரசு பல தனியார் நிறுவனங்களை நிறுவ அனுமதி அளித்தது. மேலும் இளைஞர்களுக்கான சரியான வழிகாட்டுதலை வழங்குவதில் ஆசிரியர்களும் அக்கரை காட்டினர். அதன் விளைவாக சில பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப்பெற்றதாக தெரிந்தாலும் பலர் தான் படித்த படிப்பின் பட்டத்தையும் மதிப்பெண் சான்றிதழையும் தூக்கிக்கொண்டு பல நிறுவனங்கள் ஏறி இறங்கி அவர்களுக்கு வயதானதே மிச்சம். இதற்கு காரணம் தனியார் நிறுவனங்களிலும் போதுமான பணியிடங்கள் இல்லை என்பது தான். இதைப் போன்ற நிலைகளும் பல வறுமையில் இருக்கும் குடும்பங்கள் தனது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கூலி வேலைக்கு அனுப்பும் எண்ணத்தை வளர்த்தது. இது தொழிற்சாலைகளுக்கு சாதகமாக இருந்தாலும் குழந்தை தொழிலாளர் முறை வலுபெற்று இந்தியாவை பெரிதும் அச்சுறுத்தியது. இது இந்திய படித்த பட்டதாரிகளின் மத்தியில் இந்திய அரசின் மீது ஒரு தீராத அதிருப்தியை ஏற்படுத்தியது. அதே காலத்தில் அரசும் வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க செய்வதேதும் தெரியாமல் முழி பிதுங்கி அமர்ந்திருந்தது.

Unemployment After Years (Pic: kcarplaw.com)

முறை தவறிய அனுகுமுறைகள்

வேலையில்லா திண்டாட்டத்தின் விளைவாக ஒரு சில விஷமிகள் சிபாரிசு கடிதங்களையும் தனது சான்றிதழ்களோடு கொண்டு செல்லத் தொடங்கினர். அன்று சிபாரிசு கடிதம் கொண்டு செல்பவரின் அறிவையும் திறமையையும் பெரிதாக சோதிக்காமல் சில தனியார் நிறுவனங்களும் பணியில் அமர்த்தியது. அது மட்டுமல்லாது அதிகாரத்தில் இருப்பவர்கள் தனது குலத்தைச் சேர்ந்தவனுக்கு சார்பாக முடிவெடுக்கும் போக்கும் இளஞர்கள் மத்தியில் பல சலசலப்புகளை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். இத்தகைய செயல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் விளைவாக பல திறமையான இளைஞர்கள் தனது தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கப்பெறாமல் மனம் உடைந்து தற்கொலை முயற்சிக்கெல்லாம் சென்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Quarrel (Pic: darkroom.baltimoresun.com)

மக்கள் தொகையும் புதிய வாய்ப்புகளும்

நமது இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் ஒரு பெரும் சவாலாக இருந்ததற்கு இன்னொரு முக்கிய காரணம் நமது இந்திய நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கையும் தான். 1960 களில் உலகின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 14% ஐ கொண்ட நாடாக இருந்தது. தற்போதைய மக்கள்தொகை வளர்ச்சியின் விகிதம் குறைவாக இருந்தாலும் உலகின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 17% மக்கள்தொகையைக் கொண்ட நாடாக இருக்கிறது. இந்த கணக்ககுகள் இப்படி இருக்க வேலையில்லா திண்டாட்டம் இப்போதும் இருக்கிறது என்பது தான் உண்மை. வேலைவாய்ப்பு மையம் என்று ஒன்று இருப்பதாக நாம் படித்திருக்கிறோம். அதில் பட்டதாரிகள், தனது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். அப்படி ஒன்று இப்போது நமது நாட்டில் செயல்படுவதாகவே தெரியவில்லை.

இன்றும் எத்தனையோ பொறியியல் மாணவர்கள் படித்த படிப்பிற்கான வேலை கிடைக்காமல் கால் செண்டர்களில் வேலை செய்கின்றனர் என்பது நாம் அறிந்ததே. இந்தியாவில் கால் செண்டர்கள் அறிமுகமான காலத்தில் அது இந்த வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்கும் பொருட்டு ஒருமுக்கிய கருவியாக இருக்கப் போகின்றது என்பதை, அதனை இந்தியாவுக்கு அறிமுகம் செய்த பிரமோத் பாசினுக்கே தெரிந்திருக்காது. வெறும் 18 ஊழியர்களை வைத்து முதல் கால் செண்டரை 1998ல் தொடங்கினார் அவர். அந்த கால் செண்டருக்கான நேர்காணலில் நமது மொழித் திறனை மட்டுமே சோதிக்கின்றனர். இன்று வேலை கிடைக்காமல் அவதிப்படும் பலர் தற்காலிகமாக கால் செண்டர்களில் சேர்ந்து தான் சில காலம் கடக்கின்றனர்.மக்களுக்கான தரமான சேவையையும் கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கால் செண்டர்களிலும் ஒரு சில நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை வாய்ப்பை வழங்கினர். இந்த முறை 21 ஆம்  நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் அறிமுகமானது 10 ஆவது படித்தவருக்கும் அங்கு வேலை கிட்டியது அன்று.

Call Centre (Pic: qz.com)

டாஸ்மாக்கில் பட்டதாரிகள்

தமிழ்நாட்டில் 2001 ல் கொண்டு வந்த சட்டத் திருத்தத்தின்படி ’மது’ தடை செய்யப்பட்ட பொருள் இல்லை. அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் டாஸ்மாக்கே அனைத்து மதுபானக்கடைகளையும் ஏற்று நடத்தும் என்பது தான். அப்போது எல்லா ஊர்களிலும் புதிதாகவும் பல டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டது. அதில் கடையின் ஊழியர் வேலைக்கு விண்ணப்பித்தவர்களில் பல்லாயிரக் கணக்கானோர் பொறியியல் பட்டதாரிகள். வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க இந்தியா பன்னாட்டு நிறுவனங்களோடு கைகோர்த்து இங்கு தகவல்தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கும் நோக்கம் கொண்டு பல பண முதலைகளுக்கு பொறியியல் கல்லூரி நடத்த அனுமதித்ததில் கணக்கு வழக்கு இல்லாமல் நடந்துக்கொண்ட நிர்வாக திட்டமிடலே காரணம். போதுமான காலியிடங்கள் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்தும் இங்கு பல பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் அவதிப்படுகிறார்கள் ஏன் தெரியுமா… நிறுவனங்கள் எதிர்பார்க்கின்ற திறன் அவர்களிடம் இல்லை என்கின்றது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தரப்பு. ஆமாம் அவர்கள் எதிர்பார்க்கும் திறன் தான் என்ன என்பது நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும்.

இந்த குழப்பங்களிலிருந்தெல்லாம் தப்பித்து நண்பர்கள் சிலர் ஒன்று கூடி, அவர்களே சிறிய சிறிய வாடிக்கையாளர்களிடமிருந்து சிறிய சிறிய வேலைகளை செய்து கொடுத்து வளரும் வழக்கம் தொடங்கியது. இதில் படித்த படைப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும் வரை காத்திருக்க முடியாமல், வேறு சுய தொழில் செய்தும் வாழ்கின்றனர் சிலர். படித்த பட்டதாரி, சுய தொழில் செய்யும் நிலை ஏற்படுவதும் வேலையில்லா திண்டாட்டத்தின் ஒரு பிரச்சனை தான்.

Confused (Pic: track2realty.track2media.com)

வேலை வாய்ப்பு அளிப்பதில் குழப்பம்

அவ்வப்போது மத்திய அரசு சார்ந்த துறையிலிருந்தோ மாநில அரசுத் துறையிலிருந்தோ திடீரென்று வேலை வாய்ப்பு விளம்பரங்கள் பல வந்தாலும் இக்கால இளைஞர்கள் தெளிவான நிலைப்பாட்டில் இல்லாமல் ஒரு பணியில் சேர்ந்துவிட்டு சில மாதம் கழித்து அந்த வேலையை உதறித்தள்ளிவிட்டு

வேறு வேலையில் சேரும் எண்ணம் கொண்டு வேறு வேலைகளுக்கும் விண்ணப்பிக்கின்றனர். இப்போதெல்லாம் பல கல்லூரிகளிலேயே நேர்காணல்கள் நடத்தி தனது நிறுவனத்தில் பணிக்கு அமர்த்தும் வழக்கம் இருப்பது நாம் அறிந்ததே. அதிலும் சில ஆர்வக் கோளாறுகள் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தப் பின்னும் வேறு நிறுவன நேர்கானலுக்கு விண்ணப்பித்து அதிலும் தேர்ச்சி பெற்று, தன்னோடு படிக்கும் சக மாணவனுக்கு கிடைக்க இருக்கும் வாய்ப்பைக் கெடுப்பது வருத்தம் தரும் செயலாகும். நிறுவனங்களும், தான் பணியில் அமர்த்தியவர்களையே  சம்பளம் உயர்த்தி தரும் நிலையை சந்தித்திடாமல் இருக்க சில வருடங்கள் கழித்து, தரத்தை காரணம் சொல்லி வலுக்கட்டாயமாக பணி நீக்கம் செய்கிறது. இன்றைய இளைஞர்களும் முதல் வேலை கிடைத்தவுடன் சாதித்துவிட்டது போல் இருந்து அதற்கு மேல் கற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லாமல் தேங்கிவிடுகின்றனர். அப்படி தேங்கிய ஒருத்தரின் இடத்தில் இன்னொரு புதிய பட்டதாரி வந்து அமர்கிறார். இதைப்போன்ற குழப்பங்கள் இளைஞர்களுக்கிடையே வருவதை ஒரு சரியான புரிதல் கொண்டு இளைஞர்களே தான் தீர்வு காண வேண்டும்.

Tasmac (Pic: firstpost.com)

இப்போது இருக்கும் நிலையில், தெளிவான வழிகாட்டுதலும், ஏற்படுத்தியிருக்கும் அதிக வேலை வாய்ப்பும் ஒரு சரியான தீர்வை நோக்கி செல்ல வழி வகுக்கும் என்றாலும், பிள்ளைகளின் கனவுகளைப் புரிந்து கொண்டு ஊக்கப்படுத்தும் வழக்கம் பெற்றோர்களுக்கும், குழப்பமில்லாமல் முடிவெடுக்கும் தெளிவு இளைஞர்களுக்கும் வரும்போது தான் சரியான முடிவு கிட்டும்.

Web Title: Indian Unemployment

Featured Image Credit :qz.com

Related Articles