பாலியல் தொழில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமா? சர்வதேச பாலியல் தொழிலாளர்கள் தின சிறப்புக் கட்டுரை

“பாலியல் தொழில்” என்றால் என்ன? ஒரு பெண் தன்னுடைய உடலை வாடகைக்குக் கொடுக்க, அதை விரும்பும் ஆண் அவ்வுடலை வாடகைக்கு வாங்குகிறான் என்ற உடல் சார்ந்த  வணிகமே  பாலியல் தொழில்.உடல் இச்சையினைக் கட்டுப்படுத்த இயலாதவர்கள், தமது உடல் இச்சைக்கு வடிகால் தேடுபவர்கள் அல்லது பல உடல்களை மோகிக்கும்  சபலங்களே பாலியல் தொழிலின் சந்தைத் தேவையினை உறுதிப்படுத்துகின்றன. அந்த Dimandன் அடிப்படையில் அமைந்த சந்தையில் பெண் உடலே விற்பனைப் பொருளாகிறது. ஒரு சந்தையினை உருவாக்குவதில் விற்பனையாளர்கள் இரண்டாவது இடத்தினையே பிடிக்க, முதலிடத்தில் இருப்பதென்னவோ அதன் தேவையும், வாடிக்கையாளர்களுமே! வாடிக்கையாளர்களும், தேவையும் இல்லை எனும் பட்சத்தில் தன்னிச்சையாக உருவாகும் எந்த ஒரு சந்தையும் எந்தவொன்றையும் விற்பனை செய்யமுடியாது அல்லவா? இந்த கோட்பாடு பாலியல் சார்ந்த உடல் வியாபாரத்திற்கும் பொருந்தும்.                  

உலகிலேயே மிகப் பழமையான/ தொன்மையான தொழில் இது  என்று சொல்லப்படுவதுண்டு. பொருளை வைத்து வர்த்தகம்  செய்வதற்கு முன்பே உடலை வைத்து வியாபாரம் செய்ய மனித  குலம் கற்றுக்கொண்டதாம். காலங்காலமாக உலகெங்கிலும் பாலியல் தொழில் மறைமுகமாகவும், மதத்தின் பெயராலும் (உ+ம் தேவதாசி முறைமை),  நடந்துகொண்டுதான் வருகிறது. வெட்டவெளிச்சமாக அநேகர் இதனை சொல்லிக்கொள்வதில்லை அவ்வளவுதான். இன்று உலகின் பல நாடுகளிலும் பாலியல் தொழில் எனும் கொடுமை இலாபம் கொழிக்கும் துறையாக நிலைத்துவிட்டது என்றால் அதுதான் உண்மை. பன்னாட்டு நிறுவனங்களைப்போல பன்னாட்டுப் பெண்களையும் இறக்குமதி செய்யும் சிவப்பு விளக்குப் பகுதிகள் நாட்டின் பொருளாதார மையங்களாக நிலைத்துவிட்டன. பிற தொழிலில் ஏற்ப்பட்டுள்ள மாற்றங்களைப்போல் இந்தத் தொழிலிலும்கூட காலச் சூழலுக்கு ஏற்ப எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது எனலாம். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் மட்டுமே செய்ததாகக் கருதப்பட்டுவந்த இத்தொழிலானது, இன்று “ஹைடெக்” அளவுக்கு உயர்ந்திருக்கிறது .   இதனைத் தடுப்பதற்கு எவ்வளவோ சட்டங்கள் இயற்றப்பட்டாலும் ஏதோ ஒரு வழியில்   அந்தத் தொழில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

புகைப்படவிபரம்- www.businessinsider.com

இதனால்தான்,   பாலியல் தொழிலினை சட்டரீதியாக அங்கீகரிக்கலாமா? கூடாதா? என்ற சர்ச்சை பல நாடுகளிலும் நடந்தவண்ணமே இருக்கிறது .கண்டும் காணாமல்  இருப்பதைவிட சட்டரீதியில் அங்கீகரிப்பதென்பது ஆரோக்கியமான விடயம் என்ற ரீதியில் பலரது கருத்துக்களும் உலகெங்கிலும் ஒலிக்கின்றன. சட்டத்தின்மூலம்  இந்தத் தொழிலினை அழிக்க முடியாத பட்சத்தில் சட்டபூர்வமாக அங்கீகரித்துவிட்டால், அதிலுள்ள பெண்களுக்கு மரியாதை, பாதுகாப்பு, மருத்துவ பயன்கள், கிடைக்ககூடும்.

மேலும் காவற்துறையினர் மீதான  பயம், சமூக அவமானம் போன்ற தொல்லைகளிலிருந்தும் விடுபடக்கூடும், இவர்களுக்கான உரிமை மீறல்களை தடுக்க இயலும், முறையாகப் பதிவு செய்வதன் மூலம் இத்தொழிலில் ஈடுபடுபவர்களது வயதெல்லையைக் கண்காணிக்க முடியும் என்பதால் சிறார்கள் காப்பாற்றப்படுவார்கள் என்றும், முறையான பாலியல் கல்வியினை வழங்க இயலும் என்றும், அரசின் கண்காணிப்பில் இருப்பதால் காணாமல் போகும் சிறுமிகள் மற்றும் பெண்களை கண்டறியவும் கண்காணிக்கவும் உதவுவதோடு மறைமுகமாக சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறும் விபசாரங்களைத் தடுக்க இயலும் என்றும், மொத்தத்தில் இந்த சட்ட அங்கீகாரத்தினால் நாட்டில் குற்றங்கள் குறையும் என்றும்  பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது.

இவை மட்டுமன்றி, அரச அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், இத் தொழிலில் ஈடுபடுவோர் வருமான வரி செலுத்தவும், உரிமம் பெறவும் அரசுக்குப் பணம் செலுத்தவேண்டும், இது நாட்டுக்கு வருமானத்தையும் ஈட்டிக்கொடுக்கும் என்ற ரீதியிலும் பாலியல் தொழிலினை சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்று கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது. சில நாடுகள் பாலியல் தொழிலினை தனிமனித ஒழுக்கம் சார்ந்த ஒன்றாக பார்க்காது தனிமனித விருப்பம் சார்ந்த ஒன்றாகவே பார்க்கிறது, இதனாலேயே அத்தகைய நாடுகள் ஒருசில வரையறைகளுடன் அவற்றை அனுமதிக்கின்றன.

புகைப்படவிபரம் -www.stuff.co.nz

ஆனால்,இந்த சட்ட அங்கீகாரத்தினை ஒரு அரசு அவ்வளவு சீக்கிரத்தில் பெருமையோடு செய்துவிட முடியுமா? விபசாரத்தின் ஆணிவேரான வறுமையை ஒழிக்க இயலாத அரசு, பெண்கள் மற்றும் சிறுமிகளின் கடத்தல்களை தடுக்க இயலாத அரசு பல இலட்சம்  பெண்களின் வாழ்வினைப்  பலியாக்கிய தோல்வியை ஒப்புக்கொண்டு அந்த அவமானத்தின் மீது நின்றுகொண்டுதான் இந்தச் சட்ட அங்கீகாரத்தினை ஒவ்வொரு அரசும் வழங்கவேண்டும்.  பாலியல் ஒரு கலை என்றெல்லாம் நாம் பெருமைப் பட்டுக்கொள்ள முடியாது. செய்யும் தொழிலே தெய்வம் என்ற முதுமொழிக்கு ஏற்ப பாலியல் தொழிலைக் கொண்டாடவும்     முடியாது.ஏனெனில், எந்தவொன்று ஒருவர்மீது திணிக்கப்படுகிறதோ அது தொழிலாக முடியாது ஏனெனில், விருப்பத்துக்கு மாறாக இந்த வலைப்பின்னலில் இணைக்கப்படும் பெண்கள் ஏராளம்!

சரி ,விபசாரத்தினை தொழிலாக அங்கீகரித்து சட்டம் கொண்டுவரப்படுகிறது என்றே வைத்துக்கொள்வோம், ஏற்கனவே இதுபோன்ற சட்டங்கள் உள்ள நாடுகளில் விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள், விபசார தரகர்கள், உதவியாளர்கள் மட்டுமே அந்த சட்டங்களால் தண்டிக்கப்படுகின்றனர். விபசாரதினை நாடிச் செல்லும் ஆண்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை அல்லது குறைவு. இந்த நிலையில் சட்டம் பக்கச் சார்பாக செயற்படும் நிலைக்குத் தள்ளப்படுவது கண்கூடு.

சர்வதேச ரீதியில் வளர்ந்துவருகிற மிகப்பெரிய நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு தொழிலாகவே இந்த விபசாரம் மாறியிருப்பதால், வறிய நாடுகளிலிருந்து பெண்கள் கடத்தப்படுகின்றனர். மனித கடத்தல்காரர்களின் முக்கியத் தொழில்களில் விபசாரமும் ஓன்று என்கிற அடிப்படையில்  பாலியல் தொழிலுக்காக வளர்முக நாடுகளில் இருந்து வளர்ந்தநாடுகளுக்கு ஆண்டுதோறும் இரண்டு மில்லியன் பெண்கள் கடத்தப்படுவதாக UNA அறிக்கை சமர்பித்துள்ளது. இந்தக் கடத்தல் கும்பல் என்ற குறியீடு யாரோ முகம் தெரியாத அந்நியர்களை மட்டும் குறிப்பதில்லை. பெரும்பாலும் நன்கு அறிந்தவர்களாலும், உறவினர்களாலுமே, பெண்கள் அந்நியர்களுக்கு விற்கப்படுகின்றனர். எங்கோ ஒரு தொலைதூர நாட்டில் தொடங்கி, உலகம் முழுவதும் பரந்து விரிந்துகிடக்கும் குக்கிராமங்களின் குடிசைகள்வரை பாலியல் தரகர்கள் மற்றும் கடத்தல் கும்பல்காரர்கள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

புகைப்படவிபரம்  – Psychologybenefits.org

வேலை தேடியோ, காதலனை நம்பியோ குடும்பச் சூழல் பிடிக்காமலோ இன்னும்பிற காரணங்களுக்காகவோ வீட்டைவிட்டு வெளியேறும் பெண்கள் இவர்களது கையில் சிக்குவதோடு, குடும்ப வறுமையின்காரணமாக நெருக்கடி நிலையில் உள்ள பெண்கள் தொடர்ச்சியான இவர்களது மூளைச் சலவை மூலம், அவர்களது அனுமதியுடனேயே இத்தொழிலுக்கு கடத்தப்படுகின்றனர். வறுமையில் இருந்து மீளும் கனவுகளோடு செல்லும் இவர்கள் அதற்குப்பின் அதிலிருந்து மீள இயலாத அளவுக்கு விபசாரம் என்பது “ஒருவழிப் பாதை ” ஆகிவிடுகிறதுஎன்பதே உண்மை!

Related Articles