Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

விண்ணைத்தாண்டும் தங்கத்தின் விலை!

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை மூன்றும்தான் பெரும்பாலான போர்களுக்கு காரணமாக இருந்திருக்கின்றன வரலாற்றில்! அலாவுதீன்  கில்ஜியிலிருந்து, நேற்று அக்கரைப்பற்றில் பிடிபட்ட  “அட்டியல்” திருடன்வரை அனைவருக்கும்  ஒரே நோக்கம்தான் கொள்ளை அதிலும் தங்கத்தை! இன்று உலகெங்கிலும் அன்றாடம் நடைபெறும் பெரும்பாலான திருட்டு, கொள்ளை,  கொலை, கடத்தல் சம்பவங்களின் பின்னணியில் இருப்பது “தங்கம்”  வருடாவருடம் மக்கள் தொகையைப்போலவே தங்கத்தின் தேவையும், அதன்மீதான மோகமும், அதன்  விலையும்அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. அப்படி என்னதான் இருக்கிறது இந்த  மஞ்சள்  நிற உலோகத்தில் இத்தனைதூரம் மோகிக்க? இந்த பூமியில் உள்ள எத்தனையோ கனிமங்களுள் தங்கமும் ஓன்று. ஆனால், மற்ற எந்தவொன்றுக்கும் இல்லாத மதிப்பும் பெறுமதியும் அரிதாகக் கிடைக்கக்கூடிய துருப்பிடிக்காத  தங்கத்துக்கு மட்டுமே உண்டு.

தங்கம் ஓர் சர்வதேசப் பொருள். அது செல்லுபடியாகாத தேசமே இல்லை. எல்லா நாடுகளிலும் வாங்குவார்கள், விற்பார்கள்,  மக்கள் மட்டுமல்ல அனைத்து அரசாங்கங்களுமே “டன்” கணக்கில் டிரில்லியன் பெறுமதியான தங்கத்தினை வாங்கி ஆண்டுக்கணக்கில் தம் கஜானாவில் பூட்டிவைத்திருப்பார்கள். மக்கள் தங்கம் வாங்குவது சரி, அரசாங்கங்கள் ஏன் வாங்குகின்றன, என எண்ணத் தோன்றுகிறதா? தங்கத்தில் முதலீடு என்பது அதன் விலையேற்றத்திற்க்காக செய்யப்படுவதைவிட, அதன் பாதுகாப்புத் தன்மைக்காகவே செய்யப்படுகிறது. எப்போதெல்லாம் யுத்தங்கள் நிகழ்கின்றனவோ, அப்போதெல்லாம் தங்கத்தினுள் நுழையும் பணம் அதிகரிக்குமாம். அதனால் அதன் விலையும் அதிகரிக்குமாம். ஏனெனில், எல்லா காலங்களிலும், எல்லாப் பிரச்சினைகளின்போதும் எல்லா தேசங்களிலும் தங்கம்தான் பாதுகாப்பு! யுத்தத்துடன் மட்டுமல்லாது எல்லா நிச்சயமற்ற தன்மைகளுடனும் தங்கத்துக்கு தொடர்புண்டு. உலகில்  அசாதாரணமான குழப்ப சூழ்நிலைகள் நிலவும்போதெல்லாம் (உதாரணதிற்கு – இயற்கைப்  பேரழிவுகள் , தீவிரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் ) தங்கத்தின் தேவை அதிகரிக்கும். ஏனெனில், பாதுகாப்புத் தேடி ஓடும் பணம் தங்கத்தில்தான் சரணடையுமாம்! அதுமட்டுமன்றி தங்கம் மட்டுமே பணவடிவில் எல்லா சரக்குகளின்மீதும் ஆதிக்கம் செலுத்த இயலும் என்பதால், அதன்பின்னால் உலகமே ஓடும் நிலை தவிர்க்கவியலாது!

 புகைப்படவிபரம்: HerZendagi.in

 “இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு , சிறு துளி பெரு வெள்ளம் ” போன்ற சிறு சிறு சேமிப்பு பற்றிய சிந்தனைகளெல்லாம் பொருளாதார சீர்திருத்தங்களினாலும், பண வீக்கத்தினாலும், தற்போது பெரிதாகி, நேற்றைய சேமிப்பு – இன்றைய முதலீடு – நாளைய வருமானம் என உருமாறிவிட்டது எனலாம்! முதலீடுகளுக்கு ஆதாரமே சேமிப்புதான். அவ்வடிப்படையில் இன்று ஏராளமான முதலீட்டுக்கான வாய்ப்புக்கள் நம்மிடையே பெருகிவிட்டன. இதில் லாபகரமான முதலீட்டைக் காட்டிலும் பாதுகாப்புடன்கூடிய அதேசமயம் லாபமும் தரக்கூடிய முதலீடு அவசியம் . பாடுபட்ட சேர்த்த பணத்தினை அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு, பாதுகாப்பற்ற இடத்தில முதலீடு செய்துவிட்டு, பின்னர் முதலுக்கே மோசம் எனப் புலம்புவதில் பிரயோசனமில்லை அல்லவா? தங்கத்தின் இருப்பு என்பது வரம்புக்கு உற்பட்டது. ஆனால் அதன் தேவை ஆபரணங்கள் செய்ய, செல்போன் போன்ற இலத்திரனியல் உபகரணங்கள், தங்கபஸ்பம் போன்ற லேகியம் தயாரிக்க, மருந்துப் பொருட்கள் தயாரிக்க  எனப்பயன்படுவதுடன், நம்முடைய (இந்தியக் ) கோவில் கலசங்கள் முதல் சேலை ஜரிகை வரை தங்கம் பளிச்சிடுகிறது! ஆக,  தங்கத்தின் தேவை அதிகரித்துக்கொண்டேதான்  செல்கிறது.

இணையத்தில் நான் வாசித்த புள்ளிவிபரத்தின்படி உலக அளவில் தங்க உற்பத்தி ஆண்டொன்றுக்கு 2 ,450 டன். ஆனால், அதன் தேவை 3 ,550 டன். பற்றாக்குறை 1100  டன், இந்தப் பற்றாக்குறை இனிவரும் ஆண்டுகளில் அதிகரித்தபடியேதான் இருக்கும்,அதுமட்டுமன்றி தங்கத்தை தேடி பூமியின் அடி ஆழத்துக்கு செல்லச் செல்ல அதற்கான  செலவுகளும் அதிகரிக்கும். எனவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏறி இறங்கினாலும் நீண்ட கால அடிப்படையில் ஏறுமுகமாகவே இருக்கும் என்பது துறைசார் நிபுணர்களின் கருத்து. கடந்த 50  வருடங்களுக்கும் மேலாக ஏறுமுகத்திலேயே இருக்கும் விலைதான், தங்கத்தை உலக மக்களின் நம்பிக்கைக்குறிய முதலீட்டுத் தேர்வாக வைத்திருக்கிறதெனலாம் .பாதுகாப்பு , உத்தரவாதம் , நம்பகத்தன்மை போன்ற அம்சங்களால் மக்கள் இதைத் தேர்வு செய்கின்றனர் என்றால் மிகையில்லை . எனவே ஒரு முதலீடு என்ற கோணத்தில் தங்கத்தை வாங்குவது லாபகரமானது எனலாம் . உடனடியாக பணமாக மாறக்கூடிய அதன் தன்மையினால் தங்கத்தை “liquid Assets ” என்கிறார்கள்.

புகைப்படவிபரம்:  www.freepik.com

முதலீடு பற்றிய விழிப்புணர்வு அதிகரித்தபின், தங்கத்தினை நாணயமாகவோ, பிஸ்கட்டாகவோ வாங்கிக்கொள்ளும் மாற்றம்  ஏற்டப்பட்டுள்ளது தற்போது. இதன்போது நகைகளை விற்கும்போது    செய்கூலி , சேதாரம் என எந்தவித இழப்புமிருக்காது . தங்கத்துக்கு எந்தவகையில் போட்டி என்று பார்த்தல், அமெரிக்காவின் டொலர்தான்! எல்லா அரசாங்கங்களினாலும் அமெரிக்க டொலர்கள் களஞ்சியப்படுத்தப்படுகின்றன. டொலருக்கு அடுத்தபடியாக தங்கத்தையே அரசாங்கங்கள் அதிகளவில் களஞ்சியப்படுத்துகின்றன. இவ்விரண்டுக்குமிடையே தனியுறவே உண்டெனலாம். டொலர் விலை இறங்கினால் தங்கம் விலை உயரும். டொலர் விலை உயர்ந்தால் தங்கத்தின் விலை இறங்கும். டொலர் தவிர மற்றுமோர் சர்வதேச பயன்பாட்டுப் பொருளுடன் தங்கத்திற்கு உறவுண்டு. அதுதான் கச்சா எண்ணெய்! ஆனால் கச்சா எண்ணெய்க்கும் தங்கத்துக்குமான உறவு நேர்கோடிலானது . அதாவது இரண்டுமே விலையேறினால் ஒன்றாக விலையேறும், வீழ்ச்சியடைந்தால் ஒன்றாகவே வீழ்ச்சியடையும் .

முதலீடு அடிப்படையில் தங்கத்தை வாங்குபவர்கள் 24  கரட் சுத்தமான தங்கத்தினை பிஸ்கட்டாகவே வாங்குவர். இந்த சுத்தமான தங்கத்தில் நகைகளை செய்ய முடியாது என்பதால், அதில் செம்பு மற்றும் வெள்ளி கலந்து 22 கரட் , 18, 10, 08 , 09  கரட் என தங்கத்தின் தரம் பிரிக்கப்படுகிறது . இதில் தரமான நகைகளை செய்வதற்கு பயன்படுவது 22 கரட் தங்கமே. தங்க உற்பத்தியில் முன்னணியில் இருப்பது தென் ஆப்ரிக்கா, கனடா போன்ற நாடுகள்தானாம். உலகில் தென் ஆப்ரிக்காவில்தான் 50% அதிகமான தங்கச் சுரங்கங்கள் உள்ளனவாம். உலகளவில் தங்கத்தினை வெட்டியெடுக்கும் பணி 60% மேலாக  தனியார் நிறுவனங்களின் கைவசம்  உள்ளதாம் . “world gold council ” என்கிற உலகளாவிய அமைப்பே தங்கத்திற்கான அன்றாட விலையினை நிர்ணயம் செய்கின்றது . 1987  இல்  தொடங்கப்பட்ட இவ்வமைப்பில் மொத்தமாக 23 நாடுகளின் நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles