இந்திய வரலாற்றின் இரும்புப் பெண்மணி

கடந்த செப்டெம்பர் 22 ஆம் திகதியிலிருந்து தமிழ்நாடு மட்டுமன்றி உலகத் தமிழ் நெஞ்சங்கள் அனைத்துமே தங்களது கட்சி பேதைமை கடந்து ஓர் ஆளுமையின் உடல்நலத்துக்காய் பிரார்த்தனை செய்த வரலாறு உலகுக்கு புதிது. ஆம் தமிழக முதல்வர் என்ற உயரிய அந்தஸ்தில் இருக்கும்போதே காலனும் இவர் ஆணைக்குக் கட்டுப்பட்டு அவரை இறையடி கொண்டுசேர்த்தாரோ என எண்ணும் அளவு ஓர் இரும்புப் பெண்மணியாய் வாழ்ந்த “அம்மா” இந்திய வரலாறு இனிக்காண இயலாத சகாப்தம்.

அதிகூடிய சம்பளம் பெறும் நாயகியாக தமிழ் சினிமாவை வலம்வந்த ஜெயலலிதா (vikatan.com)

பொதுவாக அரசியலில் நுழையும் பெண்கள் ஏற்கனவே அரசியலில் இருக்கும் தமது தந்தை, சகோதரன், கணவன், இப்படி யாருடைய தயவிலாவது உள்வாங்கப்பட்டதையே நாம் அதிகம் கண்டிருக்கிறோம். ஆனால் ஒரு பெண் தன் இரண்டாவது வயதிலேயே தந்தையை இழந்து, குடும்பச் சூழ்நிலை காரணமாக சினிமாவில் நுழைந்து, தனது இருபதுகளிலேயே தனக்கென உறுதுணையாய் இருந்த தாயையும் இழந்து, முன்னாள் முதலமைச்சர் திரு எம்.ஜி ராமச்சந்திரன் மூலமாக அரசியலில் கால்பதித்து, அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளராக தனது அரசியல் அதிகாரத்தின் ஆரம்பப் படியை மிதித்து, தனக்கு உறுதுணையாய் இருந்த திரு எம்.ஜி.ஆர் இன் பேரிழப்பையும் எதிர்கொண்டு, தனக்கான ஓர் குடும்பம், தனக்கான ஓர் ஆதரவு என எந்த ஆறுதலும் இன்றி, தனியொரு பெண்ணாய், வெற்றி, தோல்வி, சட்டசபை, சிறை, நீதிமன்றம், என சவால்களைத் துச்சமென துடைத்தெறிந்து முன்சென்ற வீரத்தின் அடையாளம்.

படிப்பு, எழுத்து, இசை, நாடகம், நாட்டியம் இப்படி திறமைகளின் களஞ்சியமாய் தனது இளமைக்காலத்திலிருந்தே மின்னிய இத்தாரகையின் நாட்டிய அரங்கேற்றத்தில் அதிதியாகக் கலந்துகொண்ட மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் ஜெயலலிதாவின் திறமையைக் கண்டு சினிமா நடிகையானால் சிறந்த எதிர்காலம் உண்டென்று சொல்லி வாழ்த்தினாராம்.

ஜெயலலிதாவின் இளமைக்கால கலை நிகழ்வுகள் (thenewsminute.com)

ஜெயலலிதாவின் இளமைக்கால கலை நிகழ்வுகள் (thenewsminute.com)

படிப்பில் புலியான ஜெயாவுக்குத் தனது தந்தையைப்போலே ஓர் வக்கீலாக வரவேண்டும் என்ற ஆர்வமே இருந்தது. இருந்தும் அவருக்காக எழுதப்பட்ட இரு பெரும் பதவிகளும் புகழும் விதியாக வந்து அவரை சினிமாவின் மடியில் தள்ளிவிட்டது அவரே எதிர்பாராத ஓர் திருப்பம்.

நூற்று நாற்பதுக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழித் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து, தமிழ் சினிமாவின் அதிக சம்பளம் பெறும் நாயகியாக பத்து ஆண்டுகளுக்கும் மேல் முன்னணி கதாநாயகி என்ற அந்தஸ்தோடு தமிழ்நாட்டையே தனது திறமையால் கட்டிப்போட்டு வைத்திருந்தார் என்றால் மிகையல்ல. அத்தோடு முன்னாள் முதல்வர் திரு எம்.ஜி ராமச்சந்திரனோடு சுமார் 28 வெற்றித் திரைப்படங்களை கொடுத்து மக்கள் மனங்களில் சிம்மாசனம்போட்டு அமர்ந்துகொண்டார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் முன்னிலையில் பாடலொன்றைப் பதிவுசெய்யும் ஜெயலலிதா (vikatan.com)

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் முன்னிலையில் பாடலொன்றைப் பதிவுசெய்யும் ஜெயலலிதா (vikatan.com)

1972ஆம் ஆண்டு முதன்முறையாக வழங்கப்பட்ட சிறந்த கதாநாயகிக்கான பிலிம்பேர் விருதை (தமிழ்) வென்றார். அடிமைப்பெண், சூரியகாந்தி, பட்டிக்காடா பட்டணமா, ஆயிரத்தில் ஒருவன், காவல்காரன், குமரிக்கோட்டம், அவன்தான் மனிதன், தெய்வமகன், தேடிவந்த மாப்பிள்ளை, தாய்க்குத் தலைமகன், பட்டிக்காட்டுப் பொன்னையா, வெண்ணிற ஆடை, கெளரி கல்யாணம், ரகசிய போலீஸ் 115, ஒரு தாய் மக்கள், ராமன் தேடிய சீதை, ஒளிவிளக்கு, மேஜர் சந்திரகாந்த் என இவரது வெற்றிப்படங்கள் நீண்டுகொண்டே செல்லும்.

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் திரு எம் ஜி ராமச்சந்திரனுடன் ஜெயலலிதா (dbsjeyaraj.com)

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் திரு எம் ஜி ராமச்சந்திரனுடன் ஜெயலலிதா (dbsjeyaraj.com)

“சினிமாவில் எனது தாயின் கட்டாயத்தில் காலடி எடுத்துவைத்தேன். அரசியலில் திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் ஆலோசனையில் நுழைந்தேன். பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா என்பதைத் தாண்டி, ஒரு வேலையை எடுத்துக்கொண்டால் அதற்கு நூறு வீதம் எனது பங்களிப்பைச் செய்வது எனது பண்பு. அப்படித்தான் சினிமா, அரசியல் என்று இரண்டிலும் என்னால் சாதிக்க முடிந்தது” என ஓர் நேர்காணலில் கூறியிருந்தார்.

பெண்ணுக்கே உரிய மென்மையோடும், ஓர் கதாநாயகிக்கே உரிய அழகோடும், பெண்மையின் அம்சமாய் இருந்தவர், தனது வாழ்வு தனக்காய் பின்னிவைத்திருந்த சவால்களின் முடிச்சுக்களை ஒவ்வொன்றாய் அவிழ்த்து முன்னேறிய பாணியில் ஓர் அரசியல்வாதிக்கு, அதிலும் ஆணாதிக்க அரசியலில் தனது இருப்பை நிலைநிறுத்தவேண்டிய ஓர் பெண் அரசியல்வாதிக்கு தேவையான அனைத்து ஆளுமைப் பண்புகளையும் மிக லாவகமாக உள்வாங்கிக்கொண்டார். கூறுவதுபோல் அப்பாதை அவ்வளவு சுலபமானதல்ல.

படம் - (filmibeat.com)

படம் – (filmibeat.com)

இந்திய மண் பெண்களைக் கண்களாக மதித்த இதிகாசங்களதும் புராணங்களதும் தொட்டில். உலக வரலாற்றில் பெண்களை தெய்வங்களாக சித்தரித்த பூமி. இருந்தும் அங்கு பெண்களது வாழ்வு எத்துணை இடர்பாடுகள் நிறைந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் அரசியல் என்று வந்துவிட்டால் அங்கு ஆணாதிக்கம் எவ்வளவு தூரம் தனது வலிமையை பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடும் என்பதற்கும் இவரே முன்மாதிரி.

1989 ஆம் ஆண்டு இந்திய அரசியல் வரலாற்றிலேயே அழிக்க முடியாத கறுப்பு அத்தியாயம் எழுதப்பட்டது எனலாம். எதிர்க்கட்சித் தலைவியாக இருந்த செல்வி. ஜெயலலிதா அன்று சட்ட சபையில் கூடியிருந்த ஆண் அரசியல்வாதிகளால் அந்நாள் முதலமைச்சர் திரு.மு கருணாநிதி முன்னிலையில், (அவரது இரு மனைவிமாரும் பார்வையாளர் பகுதியில் இருந்த சமயம்) மிகவும் தவறான முறையில் தாக்கப்பட்டார். முழு உலகுமே அதிர்ந்து பார்த்த அந்த சம்பவம் ஒரு பெண்ணாக அவரை எத்துணை காயப்படுத்தியிருக்கும்? தங்களது வலிமையை பெண் என்ற இயல்பைப் பயன்படுத்தி காட்டுமிராண்டித்தனமாக அவர்களது பதவிகளின் நிலையையும் மறந்து வன்முறையாக வெளிக்காட்டினர். அன்று சட்டசபையை விட்டு தனியொரு பெண்ணாய் வெளியேறிய அவர், “இனி இச்சட்ட சபையை தமிழக முதல்வர் என்ற அந்தஸ்தோடுதான் மிதிப்பேன்” என சவால் விட்டுச் சென்றார். சொன்னதுபோலேயே 1991ஆம் ஆண்டு கருணாநிதியை வீழ்த்தி, தமிகழகத்தின் வயது குறைந்த பெண் முதல்வராக பதவியேற்று பதிலடி கொடுத்த அவரது நெஞ்சுறுதி பெண்ணினம் பார்த்துப் பெருமைப்படவேண்டிய வரலாறு.

1991ஆம் ஆண்டு தமிழக முதல்வராக முதன்முறை பதவியேற்கும் ஜெயலலிதா (hindustantimes.com)

1991ஆம் ஆண்டு தமிழக முதல்வராக முதன்முறை பதவியேற்கும் ஜெயலலிதா (hindustantimes.com)

பல்வேறு குற்றச்சாட்டுக்கள், ஊழல் விசாரணைகள், பயங்கரமான சிறைவாசம் இப்படி எத்தனையோ அசௌகரியங்களை வாழ்வில் எதிர்கொண்டாலும், தனது பாணி, தனது தைரியம், தனது கருத்தில் நிலைத்து நிற்கும் குணம், போன்ற கேடயங்களால் எதிரிகள் அவரது மன உறுதியை உலுக்க முயன்ற அத்தனை தருணங்களிலும் அவர்களது எதிர்பார்ப்பைச் சுக்கு நூறாக உடைத்து நொறுக்கிய அரசியல் சாணக்கியம் இவ்விரும்புப் பெண்மணியின் இன்னுமொரு பக்கம்.

இந்தியாவின் 70ஆவது சுதந்திரதின விழாவில் முதல்வர் ஜெயலலிதா (indianexpress.com)

இந்தியாவின் 70ஆவது சுதந்திரதின விழாவில் முதல்வர் ஜெயலலிதா (indianexpress.com)

பெண்ணாக இருந்துகொண்டு சினிமாவில் இத்தனை ஆண்டுகள் வெற்றிநடை போடுதல் அவ்வளவு இலகுவல்ல, சினிமாவோடு அரசியலிலும் தனது அதிகாரத்தை நிலைநிறுத்துவது அதனிலும் அரிது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உக்கு அடுத்தபடியாக தனது ஆட்சிக்காலம் முழுவதும் முதல்வராக இருந்த பெருமை இவருக்கே உரியது. இப்படிப்பட்ட அசைக்க முடியாத வரலாறாய் தனது வாழ்க்கைப் பக்கங்களை தானே செதுக்கி நிலைநிறுத்தி சாதனைப் பெண்ணாக விளங்கிய தமிழ்நாட்டின் ஓர் தனித்துவ அத்தியாயம் முடிகிறது.

Related Articles