கட்டப்படாத ஜியோ கல்வி நிறுவனமும் அதன் அங்கீகாரமும்

உலகின் தலை சிறந்த 500 கல்வி நிறுவனங்களில் எத்தனை கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் இயங்குகிறது என்று தெரியுமா? மிஞ்சிப் போனால் ஒரு பத்து? உலகில் அதிக இளைஞர்களைக் கொண்ட ஒரு நாட்டில், அனைத்துவித தகுதிகளையும் கொண்டுள்ள கல்வி நிறுவனங்களை நிறுவுவதில் என்ன பிரச்சனை என்பது தொடர்ந்து பல்வேறு தளங்களில் மக்களால் கேட்கப்படும் கேள்விகள் தான்.

இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக, மத்திய அரசு ஒரு முடிவிற்கு வந்தது. உலகில் தலைசிறந்த 500 கல்வி நிறுவனங்களில் புதிதாக இந்திய  நிறுவனங்களை இணைப்பதற்கும், ஏற்கனவே இருக்கும் கல்வி நிறுவனங்களின் தரம் உயர்த்தப்படுவதற்கும் சிறப்பு அங்கீகாரம் வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறியது.

அதன்படி தனியார் மற்றும் அரசு சார் கல்வி நிறுவனங்களில் தலா பத்து நிறுவனங்கள் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை தேசிய பல்கலைக் கழக மானியக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு மத்திய அரசின் நேரடிக் கண்காணிப்பில் முழு சுதந்திரத்துடன் செயல்படும் என்று கூறியது மத்திய அரசு.

மேலும், தேர்ந்தெடுக்கப்படும் கல்வி நிறுவனங்களுக்கு மானியமாய் ரூபாய் 1000 கோடி  அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டு அவற்றின் தரம் உயர்த்தப்படும் என்று கூறியது மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி தலைமையில் ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டது. இந்தியா முழுவதும் தேடி இறுதியாக ஒரு வழியில் 8 அரசு கல்வி நிறுவனங்களையும் மூன்று தனியார் கல்வி நிறுவனங்களையும் பட்டியலிட்டது அக்குழு.

ஆனால் பாரபட்சம் காட்டக் கூடாது என்ற காரணத்தினால் அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் இரண்டிலும் தலா மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதனை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சூலை மாத ஆரம்பத்தில் அறிவித்தார்.

தேர்வு செய்யப்பட்டிருக்கும் கல்வி நிறுவனங்களின் விபரங்கள்

அரசு தரப்பில் இந்திய அறிவியல் மையம் – பெங்களூரு (IISc),  ஐஐடி மும்பை, ஐஐடி – டெல்லி ஆகிய நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. தனியார் நிறுவனங்ககளில் ஜியோ கல்வி நிறுவனம் (க்ரீன்ஃபீல்ட் எனப்படும் பேப்பரில் மட்டுமே இருக்கும் நிறுவனம்), மணிப்பால் உயர்கல்வி நிறுவனம், மற்றும் பிர்லா இன்ஸ்ட்டிடியூட் ஆப் டெக்னிக்கல் சயன்ஸ் ஆகிய நிறுவனங்களும் தேர்வு செய்யப்பட்டன.

ஜியோ – விவகாரம்

ஜியோ கல்வி நிறுவனத்திற்கு சிறப்பு அங்கீகாரம் அளிக்கப்பட்டதிற்கான காராணங்களை கேட்டு எதிர் கட்சியினர் தொடங்கி, கல்வி நிறுவனங்கள் வைத்திருப்பவர்கள் வரை இதையே கேள்வியாக கேட்டு குடைந்து விட்டனர். இக்கல்வி நிறுவனத்தை தேர்வு செய்திற்கான காரணங்களை எப்படியாக கேட்டாலும் முறையாக கோபாலசாமி மறுத்துவிட்டார். ஆனால் க்ரீன்பீல்ட்  கல்வி நிறுவனங்களும் சிறப்பு அங்கீகாரம் பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தான் ஜியோ இந்த தகுதிக்கென விண்ணப்பித்தது என்று கூறுகிறார்கள். மேலும் தேசிய பல்கலைக்கழக குழுவின் அனைத்து படிநிலைகளையும் வென்றுவிட்ட காரணத்தினால் தான் ஜியோவிற்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டது மனித வள மேம்பாட்டு அமைச்சகம். பசுமைவெளி தனியார் நிறுவனங்கள் என்ற பட்டியலின் கீழ் விண்ணப்பிக்கப்பட்டிருந்த 11 கல்வி நிறுவனங்களில் ஜியோவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Human Resource Ministry (Pic: highereducationplu)

ஜியோவின் பசுமைவெளி தனியார் நிறுவனம் பற்றிய ஒரு பார்வை

க்ரீன்ஃபீல்ட் கல்வி நிறுவனம் எனப்படுவது, இன்னும் கட்டவே ஆரம்பிக்காமல் வெறும் பெயரளவில் திட்டமாக இருக்கும் கல்வி நிறுவனம் ஆகும். இனி மேல் தான் அதன் கட்டிட பணிகள் தொடங்கும். ஜியோவின் காகித பல்கலைக்கழகம் இன்னும் கட்டவே ஆரம்பிக்கவில்லை. ஆனால் அடுத்த மூன்று ஆண்டுகளில் இக்கல்வி நிறுவனம் முழுமை பெறும் என்று ஜியோ நிர்வாகிகள் கூறியுள்ளனர். நவி மும்பையில் இருக்கும் கர்ஜத் பகுதியில் சுமார் 800 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய இருக்கிறது ஜியோ நிறுவனம். மானுடவியல், பொறியியல், மருத்துவம், விளையாட்டு, சட்டம், கலை, அறிவியல் ஆகிய துறையின் கீழ் சுமார் 50க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளை வைக்க இருக்கிறது ஜியோ நிறுவனம்.

இல்லாத இந்த கல்வி நிறுவனத்திற்கு வேந்தர் மற்றும் துணை வேந்தர்களையும் கூட நியமித்திருக்கிறது ஜியோ நிறுவனம். உலகின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து தலை சிறந்த பேராசிரியர்களை அழைத்து வந்து இவர்களுக்கு கல்வி கற்றுத் தரப்படும் என்று கூறியிருக்கிறது ஜியோ. மேலும், நிறுவன வளாகத்திற்குள்ளேயே தங்கள் ஆசிரியர்களுக்கான குடியிருப்பு பகுதிகளையும் கட்ட திட்டமிட்டிருப்பதாக கூறியிருக்கிறது இந்நிறுவனம். மொத்தமாக இந்த நிறுவனத்தின் கட்டுமான பணி மற்றும் இதர செலவுகளுக்கென ரூ. 9,500 கோடியை செலவு செய்ய இருக்கிறது அம்பானி குடும்பம். இதைப் பற்றி மத்திய அமைச்சகத்திடம் விசாரித்த போது, ஜியோவினை அதன் தொலை நோக்குபார்வை, மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்விகள், பல்கலைக்கழகம் நியமிக்கும் பேராசிரியர்கள், கட்டிடம், உள்கட்டமைப்பு ஆகியவற்றினைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு அதன் பின்பு தான் ஜியோவிற்கு சிறப்பு அந்தஸ்த்தினை அளித்தோம் என்று பிரகாஷ் ஜவடேகர் பதில் கூறினார்.

Mukesh Ambani (Pic: dnaindia)

பிர்லா இன்ஸ்ட்டிடியூட் ஆப் டெக்னிக்கல் சயன்ஸ் நீக்கம்

2015ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டங்கள் படி நிறுவன வளாகத்திற்கு வெளியே கல்வி நிறுவனங்களை செயல்படுத்தக் கூடாது. இதனை மீறி பிர்லா இன்ஸ்ட்டிடியூட் ஆப் டெக்னிக்கல் சயன்ஸ் ஹைதராபாத் மற்றும் கோவா மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இதன் செயல்பாட்டினை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியம் கேட்டுக் கொண்டது. ஆனால் இந்நிறுவனங்கள் அனைத்தும் இச்சட்டம் வருவதற்கு முன்பே 2006, 2008ல் கட்டப்பட்டவை. இதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. எனவே செயல்பாடுகளை நிறுத்த இயலாது என்று கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறது பிர்லா இன்ஸ்ட்டிடியூட் ஆப் டெக்னிக்கல் சயன்ஸ் நிர்வாகம்.

இப்புகார் மீதான வழக்குன் நிலுவையில் இருப்பதால், சிறப்பு அங்கீகாரத்தினை ரத்து செய்து அறிவித்தது மத்திய அரசு. இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, இவ்வழக்கினை முடித்துவிட்டு பிர்லா இன்ஸ்ட்டிடியூட் ஆப் டெக்னிக்கல் சயன்ஸ் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளை பூர்த்தி செய்யுமோ அப்போது மீண்டும் சிறப்பு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக பரிசிலீக்கப்படும் என்று கூறியது.

BITS Pilani (Pic: pilani)

தேசிய பல்கலைக்கழக மானியக் குழு Vs உயர்க் கல்வி ஆணையம்

தேசிய பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளை மீறிய பிர்லா இன்ஸ்ட்டிடியூட் ஆப் டெக்னிக்கல் சயன்ஸ் என்று கூறிய மத்திய அரசு தான், ஒரு மாதத்திற்கு முன்பாக உயர்க் கல்வி ஆணையம் அமைப்பது தொடர்பாக சட்ட மசோதாவினை தயார் நிலையில் வைத்திருக்கிறது. இனி வரும் நாட்களில் தேர்ந்தெடுக்கப்படும் கல்வி நிறுவனங்கள் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

Pen (Pic: ilaasthana)

குழப்பும் மத்திய அரசு குழம்பிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்

ஜியோவிற்கு அங்கீகாரம் கொடுக்க ஆரம்பித்ததில் இருந்து, பிர்லா இன்ஸ்ட்டிடியூட் ஆப் டெக்னிக்கல் சயன்ஸ் – ஐ நீக்கியது வரை அனைத்தும் குழப்பமாகவே இருக்கிறது என்பது ஒரு புறம் இருக்க, தற்போது குழப்பத்திற்கு மறுவுருவம் கொடுத்துள்ளது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். அதாவது பட்டியலில் இருக்கும் ஆறு நிறுவனங்களுக்கும் சிறப்பு அங்கீகாரம் அளிப்பதற்கான நோக்கம் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் நோக்கக் கடிதம் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. Letter of Intent என்ப்படும் நோக்கக் கடிதம் ஒரு போதும் Institute of Eminence என்ற சிறப்பு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் என்று ஆகிவிடாது என சில தினங்களுக்கு முன்பு பிரகாஷ் ஜவடேகர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த ஆயிரம் கோடி ரூபாய் மானியம் என்பது அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே தான் தரப்படுமே தவிர எக்காரணம் கொண்டும் தனியார் நிறுவனங்களுக்கு தரக்கூடாது என குறிப்பிட்டுள்ளது மனிதவளத் துறை மேம்பாட்டு அமைச்சகம்.

இந்த நோக்கக் கடிதம் என்பது மூன்று ஆண்டுகளுக்குள் காகிதத்தில் இருக்கும் கல்வி நிறுவனத்தினை கட்டிமுடிக்க வேண்டியது ஜியோவின் கடமை. அது கட்டிமுடிக்கப்பட்ட பின்பே அதற்கு அங்கீகாரம் என்ற ஒன்று வழங்கப்படும் என்றும் அறிவித்து மக்களின் குழப்பத்திற்கு தீர்வு கொடுத்திருக்கிறது மத்திய அரசு.

ஜியோவின் இலக்கு சாத்தியமாகுமா?

தலை சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் இடம் பெறுவதற்கும், தலைசிறந்த 500 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெறும் பெறுவதற்கும் நிறைய உழைப்பும் அதற்கான பலனும் தேவைப்படும். எடுத்த எடுப்பில் அது போன்ற நிலையினை அடைவது சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டது. காரணம் என்னவென்றால் தற்போது பட்டியலில் வரும் தலை சிறந்த நிறுவனங்கள்  யாவும் பல வருடங்களுக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டிருக்கும். மேலும் ஐரோப்பிய அமெரிக்க கல்வி நிறுவனங்களுக்கு நிகராக போட்டியிட முடியும் என்றால் அதற்கான இலக்கினை 10 வருடங்களில் ஜியோவினால் அடைய முடியாது. அது ஒரு இளம் கல்வி நிறுவனம் என்ற அளவில் மட்டுமே பார்க்கப்படும். கட்டுவதற்கு 3 வருடங்கள் + செயல்பாட்டில் 7 வருடங்கள் என இருக்கும் ஒரு கல்வி நிறுவனம், பல ஆண்டுகளுகாக சிறப்பான கல்வியை அளிக்கும் நிறுவனத்துடன் போட்டியிட்டு வெல்வது கொஞ்சம் சிரமம் தான். அதனால் தான் இக்கல்வி நிறுவனத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து தருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

Operations (Pic: powr)

இந்தியாவில் கல்வியின் நிலை

இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச கல்வி பெறும் உரிமை இருக்கின்றது. தொடக்கக் கல்வியினை முடித்து இடைநிலைப் பள்ளி படிப்பையும் மேல் நிலைப்பள்ளிப் படிப்பையும் முடிப்பவர்களின் எண்ணிக்கை எப்போதும் சமமாக இருக்காது. பல்வேறு காரணங்களால் அவர்கள் பள்ளிப் படிப்பினை பாதியில் நிறுத்தும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக சூழலில் இருந்து வரும் பிள்ளைகளும் வசதி வாய்ப்புள்ளவர்களும் ஒரே கல்வியினை கற்று தேர்வது என்பது இன்றும் இந்தியாவில் சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கிறது. அதனால் தான் நீட், ஜெ.இ.இ மற்றும் எய்ம்ஸ் போன்ற நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுதல் என்பது அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் மத்தியில் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது.

Exams (Pic: dnaindia)

அனைவருக்கும் கல்வி என்பதும், அனைவருக்கும் ஒரே சீரான கல்வி என்பதும் அரசின் கையில் தான் இருக்கிறது. மத்திய அரசு தேர்வு செய்திருக்கும் இந்த கல்வி நிறுவனங்களில் ஏழை மட்டுமல்ல மத்திய தர வர்க்கத்தினரும் படிப்பதென்பது மிகவும் சவால் நிறைந்தது. உலகத்திற்கு நிகராக கல்வி நிறுவனங்களை நிறுத்துவதை விட, தரமான கல்வியினை இந்நாட்டில் இருக்கும் அனைவருக்கும் தர எது சரியான வழியோ அதை மத்திய அரசு தேர்வு செய்தால் நன்றாக இருக்கும்.

Web Title: Jio Institute Recognition

Featured Image Credit: pedersenconstruction

Related Articles