இந்தியாவே எதிர் நோக்கும் கர்நாடகத் தேர்தலில் என்ன நடக்கப்போகிறது?

அகில இந்தியாவும் உற்றுநோக்கும் அரசியல் யுத்த களமாக மாறியிருக்கிறது கர்நாடக தேர்தல் களம்.  இரண்டு பிரதான தேசியக்கட்சிகளும் தனது படைப் பரிவாரங்களுடன் களமிறங்கியுள்ளது. கார்நாடக சட்டப்பேரவையையும் கைப்பற்ற, எடியூரப்பாவிற்கு உறுதுணையாக பிரதமர் நரேந்திரமோடி, அமித்ஷா போன்றோர் பாஜகவிற்காக களமிறங்க, சித்தராமையாவின் ஆட்சியையாவது தக்கவைப்போம் என்று சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்றோர் காங்கிரஸ் சார்பில் களமிறங்கியுள்ளனர். இந்த இரண்டு பிரதான தேசியக்கட்சிகள் மட்டுமல்லாமல், முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினரும் தீவிரப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மைசூர், மாண்டியா உள்ளிட்ட தென் பகுதி கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதாளம் செல்வாக்கு மிகுந்த கட்சியாக உள்ளது. ஆனாலும் நேரடியான மோதல் என்னவோ பாஜகவிற்கும், காங்கிரஸுக்கும் தான். சித்தராமையாவிற்கும் எடியூரப்பாவிற்கும் தான். மோடிக்கும் ராகுலுக்கும் இடையில் தான். ஆம் இந்த தேர்தல் ஆட்சியமைப்பதையும் தாண்டி இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான கௌரவப் பிரச்சனையாகவும் உருவெடுத்துள்ளது. குஜராத்தில் ஏற்பட்டது போன்ற நிலைதான் இங்கும் என்றாலும், களம் சற்று கடினமான ஒன்றாக உள்ளது.

பிரச்சாரக் களத்தில் ஆச்சர்யம்

கர்நாடகாவின் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா செல்வாக்கு மிக்க தலைவராக வளம் வருகிறார். கடந்த சில பத்தாண்டுகளில் ஐந்தாண்டுகளை முழுமையாக நிறைவு செய்த முதல்வராக உள்ளார். கர்நாடகாவின் வலிமையான தலைவராக உருவெடுத்துள்ளார். எடியூரப்பாவும் சரிநிகர் தலைவராக இருந்தாலும், ஊழல் வழக்கும், ரெட்டி சகோதரர்களின் நெருக்கமும் அவருக்கு பிரச்சனையாக உள்ளது. மேலும் சொந்த கட்சியில் உள்ள மற்ற தலைவர்களின் கோஷ்டி மோதலும் அவருக்கு பிரச்சனையாக உள்ளது. அதேநேரம், பிரதமர் மோடி ஐந்து நாட்கள் தங்கி பதினைந்து இடங்களில் பரப்புரை மேற்கொண்டது அவருக்கு கைகொடுக்கலாம். ஆனால்  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்தல் பரப்புரை கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருந்த நிலையில், கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டது காங்கிரஸிற்கு பலம் சேர்க்கும்.

Sonia In (Pic: civilserviceindia)

லிங்காயத்து

மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதேநேரம் பாஜக தனது தேசிய தலைவர்களில் பெரும்பாலோனோரை களத்தில் இறக்கியது. தென் மாநிலங்களில் ஏற்கனவே பாஜக ஆட்சி செய்த மாநிலமாகவும், ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்புள்ள ஒரே மாநிலமாகவும் உள்ள கர்நாடகாவில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதற்காகவே முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். கணிசமான வாக்கு வங்கி உள்ள லிங்காயத்து சமூகத்தின் வாக்குகளை பெறுவதற்காக எடியூரப்பா என்ற முகம் பாஜகவுக்கு தேவையாக உள்ள நிலையில், சித்தராமையா தனது ஆட்சியின் கடைசி நேரத்தில் லிங்காயத்துகளை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்த்து வெளியிட்ட அறிவிப்பு, லிங்காயத்துகளின் ஆதரவை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

Lingayat Protest (Pic: thewire)

தேர்தல் தேதி சர்ச்சை

கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்  அறிவிக்கப்பட்டதற்கு முன்னதாகவே,  பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா தேர்தல் 12-ம் தேதி என்றும்,18ம் தேதி வாக்கு எண்ணிக்கை என்றும் பதிவிட்டார். பின்னர் வாக்கு எண்ணிக்கை தேதியை திருத்தி 15-ம் தேதி என்றும் பதிவிட்டார். இந்த விவகாரம் பெரிய சர்ச்சையானது, தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன், தேர்தல் தேதிகள் எப்படி, ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு தெரியவந்தது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதையடுத்து, தேர்தல் தேதி கசிந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராவத், இது குறித்து விரைவாக விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆனால் இந்த சம்பவம் கர்நாடக தேர்தலில் அரசு இயந்திரம் பாஜகவிற்கு ஆதரவாக உள்ளதோ என்ற சந்தேகத்தை கிளப்பாமல் இல்லை.

Election Commission (Pic: ddinews)

அடுத்த பிரதமரா ?

அதேநேரம் இந்த தேர்தல் வெறும் சட்டமன்ற தேர்தலாக மட்டுமில்லாமல் 2019 ஆம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாகவே இருப்பதால், இதை மோடி, ராகுல் யுத்தமாகவே அரசியல் பார்வையாளர்கள் தீவிரமாக உற்று நோக்கிவருகின்றனர்.  அந்தவகையில், பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நடக்கும் மோதல் அப்பட்டமாக வெளிப்பட்டது. பிரச்சாரத்தின் போது  ”2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றால் கண்டிப்பாக நான் பிரதமர் ஆவேன். தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறும்பட்சத்தில் பிரதமராக பதவி ஏற்பேன்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டு இருந்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சிற்கு பெங்கார்பேட் தொகுதியில் பிரச்சாரம் செய்த மோடி பதில் அளித்தார். அதில் ”ஒருவர் இப்படி வெளிப்படையாக பிரதமர் ஆக விருப்பம் என்று தெரிவிப்பது எவ்வளவு பெரிய திமிர்தனம். கட்சியில் மூத்த உறுப்பினர்கள் இருக்கும் போது, ராகுல் பிரதமர் ஆக நினைப்பது பெரிய திமிர்த்தனம்” என்று கோபமாக குறிப்பிட்டார். மோடியின் இந்த பேச்சு காங்கிரஸ் வட்டாரத்தில் கோபத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது என்பதைத்தாண்டி ராகுலின் அந்த பேச்சு மோடிக்கு கோபத்தை ஏற்படுத்தியதும், மோடி அதற்கு பதில் சொன்னதன் மூலம் ராகுல் தான் மோடிக்கு சரிநிகர் எதிராளி என்பதும் வெளிப்பட்டது.

Rahul Gandhi (Pic: dnaindia)

எதிர்வரும் நாடாளுமன்றதேர்தல், காங்கிரஸ் பாஜக கௌரவப் பிரச்சனை உள்ளிட்டவைகளையெல்லாம் தாண்டி கர்நாடக தேர்தலில் யார் வெல்வார்கள் என்ற கேள்வியே பிரதானமாக எழும். சித்தராமையாவின் வாக்கரசியல் வியூகத்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கும் அல்லது தொங்கு சட்டமன்றம் அமையும் என்பதே, கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்தும் கருத்துருக்களாக உள்ளது. அதுமட்டுமல்ல ஒவ்வொரு கர்நாடக மாநிலத் தேர்தல் வரும்போதும் நமது தமிழர்களும் அதன் போக்கை கூர்ந்து கவனிப்பர். அது இந்த முறையும் தவறவில்லை. தண்ணீர் மட்டும் தானே காலம் காலமாக இருவருக்கு இடையிலும் தீர்க்க முடியாத பிரச்சனையாக உள்ளது. அதேபோல தான் இந்த முறையாவது ஆட்சியில் அமர்பவர்கள் காவிரிப் பிரச்சனையை நல்ல விதத்தில் தீர்த்து வைப்பார்களா? என்பது தான்.

சரி முதலில் தேர்தல் முடிவுகள். காவிரி பிரச்சனையின் முடிவுகள் அதன் பின்னே.

நம்புவோம்!

Web Title: Karnataka Election Prediction

Featured Image Credit: straitstimes

Related Articles