கதிர்காம திருவிழாவின் போது மாத்திரம் இயற்கையாகவே தோன்றும் திருநீறு!

உலகிலேயே இயற்கையான திருநீறு உள்ள ஒரே இடம்! 

எம் நாட்டில் மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்து கோவில்களிலும் இறையருள் வேண்டி வரும் பக்தர்கள், இறைவனை பிரார்த்தித்து நெற்றியில் திருநீற்றை இட்டுக்கொள்வது வழக்கமாகவே உள்ளது. திருநீறு , விபூதி எனவும் அழைக்கப்படுகின்றது.   கதிர்காமத்தில் “கபு” (பூஜை செய்பவர்) தெய்வ ஆசீர்வாதத்தினை பெற்ற திருநீற்றை பக்தர்களின் நெற்றியில் பூசுவார். இத் திருநீறு எனப்படும் புனித பொடி போன்ற பாறைத் தூள்  இயற்கையாக கிடைக்கப்பெரும் ஒரே இடம் கதிர்காமம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியக் கோயில்களில் விபூதி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது. அங்கு காய்ந்த சாணத்தின் மீது வைக்கோல் சேர்த்து நன்றாக எரிக்கப்படுகின்றது. பின்னர் அதில் இருந்து சேகரிக்கப்படும் சாம்பலின் மூலம் திருநீறு தயார் செய்யப்படுகின்றது. குறிப்பாக வேத மந்திர உச்சாடன பூஜைகள் மூலம் அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் திருநீற்றுக்கு புனிதத் தன்மையும் கொடுக்கப்படுகின்றது. இவ்வாறு தயாரிக்கப்படும் விபூதி பொதி செய்யப்பட்டு அதிகளவில் விற்பனைக்கும் வழங்கப்படுகின்றது.

இவ்வாறான திருநீறு கதிர்காமத்தில் இயற்கையாகவே கிடைக்கப் பெறுகின்றது என்பதானது தெய்வ அருள் எனவும், இறை அற்புதம் எனவும் நம்பப்படுகின்றது.  கதிர்காமத்தில் நடைபெறும் ஒவ்வொரு பூஜை முடிவிலும் பக்தர்களுக்கு திருநீறு வழங்குவது சம்பிரதாயமாகும். அதேபோன்று அங்கு வரும் பக்தர்கள் அனைவரும் திருநீற்றை பெற்றுக் கொள்ள அதிக விருப்பத்தை பக்தியுடன் வெளிப்படுத்துகின்றனர்.

திருநீறு அகழ்வில் ஈடுபட்டிருக்கும் நபர் ஒருவர்: புகைப்பட  உதவி/Sandima Devapriya – Katharagama facebook page 

திருநீறு மலை

ஒவ்வொரு வருடமும், கதிர்காமத்தில் எசல திருவிழா நெருங்கிவரும் ஜூன்-ஜூலை மாதங்களில் இந்த விபூதியான வெள்ளைப்பொடி இயற்கையாகவே நிலத்தில் உருவாகின்றது.  இந்த இயற்கை திருநீறு உருவாகும் பகுதி ஹுனுகெடவல என அழைக்கப்படுகின்றது. இது தெட்டகமுவ கிராம சேவைக்குட்பட்ட பகுதியில் உள்ளது. முன்னைய காலத்தில் இத்திருநீறு மலையானது விபூதி மலை எனவும் அழைக்கப்பட்டுள்ளது. புராண காலத்தில் இருந்தே கதிர்காம கோவில் உட்பட பல்வேறு கோவில்களுக்கு திருநீற்றை பெற்றுக்கொள்ளக் கூடிய இந்த புனித இடமானது தெய்வத்திற்காக ஒதுக்கப்பட்ட இடமாகவே இருந்து வருகின்றது. அதனால் மனித நடமாட்டம் பெரிதாக இல்லாத வனப்பகுதியாகவும் இது காணப்படுகின்றது. 

திருநீற்றை பெற்றுக் கொள்ளுதல்

கதிர்காம எசல திருவிழா நெருங்கும் வேளையில் நிலத்தில் சிறு சிறு கற்களாக அல்லது துண்டுகளாக தோன்றும் இது மூன்று மாதங்கள் எனப்படும் குருகிய காலப்பகுதியில் மீண்டும் கல்லாக மாறி மறைந்து விடுகின்றது. திருநீறு விளையும் காலத்தில் அதனை எடுக்கவரும் கதிர்காமவாசிகள் அசைவ உணவுகளைத் தவிர்த்து மிகுந்த பக்தியுடன் இறைவனைச் சரணடைந்து அச் செயலை மேற்கொள்கின்றனர். நிலத்தில் சுமார் 3 அடிகள் ஆழத்திற்கு தோண்டப்பட்டு அக்குழியில் இருந்து திருநீற்றுக் கற்களை சேகரித்து பின்னர் அதனை சல்லடை மூலம் பொடியை வேறுபடுத்துகின்றனர். அதன்பின் அவற்றை நன்றாக காயவைத்து நன்கு பொடி செய்து மீண்டும் சல்லடையால் சிறு துகள்களை வேறுபடுத்தி கோயிலுக்கு வழங்குகின்றனர்.

கதிர்காமத்தை பொறுத்தவரையிலும் இவ்வாறு திருநீறு அறுவடை செய்வதற்காகவே பாரம்பரிய குழு ஒன்று உள்ளது. அவர்களே தொடர்ந்தும் இச்செயலை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருப்பர். இவ்வாறு பெறப்படும் விபூதி இலங்கையில் பிற பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு விற்கப்படுகின்றது. கதிர்காம தரிசனத்திற்கு வரும் இந்திய பக்தர்கள் இந்தியாவிற்கும் இதனை எடுத்துச் செல்கின்றனர். மேலும் இந்த புனித கதிர்காம திருநீறு ebayவில் 100g 15 டொலர்கள் என்ற வகையில் விற்பனைக்கும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

திருநீறு உருவான கதை

கதிர்காமத்தில் இந்த திருநீறு இயற்கையாக உருவானது தொடர்பான புராணகதைகள் உண்டு.  கந்தனுக்கும், சூரபத்மனுக்கும் இடையில் இடம்பெற்ற போரின் போது அசுரனான சூரபத்மனின் அனைத்து படைகளும் கந்தனால் தோற்கடிக்கப்பட்டது. இதன்போது சூரபத்மன் தப்பிச் சென்று மன உழைச்சலுடன் இருக்கின்றான். தன் மகனின் நிலையைக் கண்ட மாயை “ஒரே தாக்குதலில் உலகையே வெல்லக்கூடிய உன்னால், ஈஸ்வர அருள்பெற்றவரோடு போரிட்டு வெல்ல முடியாது” எனக் கூறுகின்றாள். அதனால் கந்தனுடன் செய்யும் போரை நிறுத்தும்படியும் மாயை அறிவுரை கூறுகின்றாள்.

அகழ்ந்தெடுக்கப்பட்ட திருநீறு: புகைப்பட உதவி/ Sandima Devapriya – Katharagama facebook page 

தாயின் அறிவுரையை ஏற்காத சூரபத்மன் தன் சகோதரர்களான தாரகன், சிங்கமுகன் ஆகியோருடன் மீண்டும் கந்தனுடன் போரிடச் செல்கின்றான். இதன்போது கந்தனால், சகோதரர்கள் இருவரும் கொல்லப்படவே மீண்டும் தாயிடம் செல்கிறான் சூரபத்மன். அச்சந்தர்ப்பத்தில் மாயை “இமயமலை உச்சியில் உள்ள மருத சஞ்சீவி எனப்படும் மூலிகைகள் நிறைந்த மலையை எடுத்துவருமாறு” கூறுகின்றாள்.

கந்தனால் சாம்பலாக்கப்பட்ட மலை

அந்த மலையை இலங்கைக்கு கொண்டு வந்து விட்டால் காயமடைந்து, இறக்கும் தருவாயில் இருக்கும் எமது படையினர் தூக்கத்தில் இருந்து விழிப்பது போல் எழ முடியும் என சூரபத்மனின் தாய் கூறுகின்றாள். தாயின் கூற்றுபடி அந்த மலையை சூரபத்மன் கொண்டு வர அந்த மலையை கந்தன் எரித்து சாம்பலாக்கியதாகவும் அச்சாம்பலே இன்றும் திருநீறாக கிடைக்கப் பெறுகின்றது என்பதும் புராண கதை வழிவரும் நம்பிக்கையாகும். 

பக்தர்களின் காயங்களை குணப்படுத்தும்

கதிர்காம கந்தனை வழிபடும் பக்தர்கள் வழிபாட்டுச் சடங்குகளாக இல்யையேல் நம்பிக்கைகளாக, வேண்டுதல்களாக மேற்கொள்ளும் வழிபாட்டு முறைகளின் போது உடல் ரீதியில் வலிகளை, காயங்களை ஏற்படுத்தும் வகையில் சில சடங்குகளைச் செய்கின்றனர். உதாரணமாக, உடல் முழுவதும் முட்களால் ஆன கம்பிகளை குத்திக் கொண்டு தொங்குதல், அலகு குத்திக் கொள்ளுதல் போன்ற பல்வேறு வகையாக வழிபாடுகளைச் செய்கின்றனர். இதன்போது ஏற்படும் காயங்களுக்கு மருந்துகள் வழங்கப்படுவதில்லை, மாறாக காயப்பட்ட இடங்களுக்கு கதிர்காம திருநீறே மருந்தாக பூசப்படுகின்றது.

திருநீற்று இடங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன

புனித திருநீறு கிடைக்கப்பெறும் கதிர்காம கோவிலுக்கு சொந்தமான 55 ஏக்கர் நிலப்பரப்பில் சில பகுதிகளை கொழும்பு பிரபுக்கள் கையகப்படுத்தி அங்கு விடுமுறையை கழிக்கும் இல்லங்களை கட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கதிர்காம உல்லாச விடுதிகளுக்கு  அதிக வரவேற்புகள் இருப்பதால் இந்த கையகப்படுத்தல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

சுத்தம் செய்யப்படும் திருநீறு: புகைப்பட உதவி/ebay.com

இந்த கையகப்படுத்தல் நடைமுறை காரணமாக 2010ஆம் ஆண்டு இக் காணிகளை அளவீடு செய்த அப்போது கதிர்காம பிரதேச செயலாளராக இருந்த பீ.எம். அத்தபத்து மூலமாக 55 ஏக்கர் காணி அப்போது பஸ்நாயக்க நிலமேவாக இருந்த ஷசீந்திர ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டது. எனினும் இவர்களுக்கு சட்டரீதியாக வழங்கப்பட்ட நிலம் தொழிலதிபர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக திருநீற்றை அறுவடை செய்ய சிறிய பகுதி மாத்திரமே எஞ்சியுள்ளது. திருநீறு அதிகமாக கிடைக்கும் பகுதிகளுக்குள் நில அபகரிப்பாளர்களை அனுமதிப்பது இல்லை என்று பிரதேச மக்கள் கூறுகின்றனர். இந்த விடயம் தொடர்பாக கதிர்காம பிரதம கபு (குரு) சோமிபால. டீ ரத்நாயக்க கூறும்போது “இந்த புனித பகுதி மக்களின் சக்தியாலேயே காப்பாற்றப்பட்டு வருகின்றது. ஆலய காணிகளை பாதுகாக்க வேண்டிய பஸ்நாயக்க நிலபே இது குறித்து கவனக்குறைவாக இருக்கும் காரணத்தினால்தான் இந்த நில அபகரிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்கின்றார்.

 

சிங்கள மொழியில்: குசும்சிறி விஜயவர்தன

தமிழில்: ந்திரன் புவனேஷ்

கட்டுரைக்கான தகவல் உதவி:

Dinamna.lk
Mawbima.lk
Shaivam.org

Related Articles