இந்திய சுதந்திரத்தில் முக்கிய பங்கு வகித்த “கதர் இயக்கப் போராட்டம் “

அணிகின்ற  ஆடையையே  தங்கள் அடையாளமாக, தங்கள் அரசியலாக, தங்கள் போராட்டமாக மாற்றியவர்கள் நம் வரலாறு நெடுகிலும் ஏராளமாக இருக்கின்றார்கள்.  அந்தவகையில் இந்திய சுதந்திர போராட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையாக , இந்திய பொருளாதாரத்தின் எழுச்சிகளுள்  ஒன்றாக  இருந்த  “கதர் ஆடை இயக்கப் போராட்டம் ” பற்றி சற்று பார்ப்போமாயின், சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கிய அடையாளமாக இருந்த ,  அன்னிய நாட்டின் உற்பத்தியில் வராத, கையால் நெய்து உடுத்திக் கொள்ளும் ஆடைதான் இந்த கதர். கதர் உடுத்தியவர் எல்லாம் காங்கிரஸ்காரர் என்ற பெயர் வருமளவுக்கு கதர் பிரமலமானது என்றால் மிகையில்லை. கதரை பிரபலப் படுத்தியது மட்டுமல்ல அதை நாட்டுக்கும்அறிமுகப்படுத்தியவரும்  காந்தியடிகள்தான்.

 

ஆனால்,  நாட்டிற்க்கே  கதரை அறிமுகப்படுத்திய காந்திக்கு, கதர் என்கிற ஆடையை  முதலில் அறிமுகம் செய்தவர், இந்தியாவில் கிலாபத் இயக்கத்தைத் தொடங்கிய மெளலானா முகமது அலி மற்றும் சௌகத் அலி  ஆகிய அலி  சகோதரர்களின்´ தாய்தான். சுதந்திர போராட்ட வராலாற்றில் காந்திக்கு உறுதுணையாக இருந்த அலி சகோதரர்களின்  வீட்டுக்கு ஒருமுறை காந்தி சென்றபோது , அலி சகோதர்களின் தாயார்  ஆலாஜிபானு என்கிற பலீமா, தனது கை ராட்டையில் நெய்த ஒரு ஆடையை காந்திக்கு பரிசாக வழங்கினார். அந்த ஆடையைப்பற்றி விரிவாக அந்த அம்மையாரிடம் காந்தியடிகள் வினவியபோது, பருத்தி நூலில் இருந்து கையால் நூற்று எடுத்த இவ்வாடையானது உருது மொழியில்  “ஃகதர்” எனப்படும் என்றும் ஃகதர் என்றால் கவுரவம் என்று பொருள்படும் என்றும்  அதனால் காந்தியடிகளை கவுரவப்படுத்தும்பொருட்டு   இந்த ஆடையை வழங்குவதாகவும் தெரிவித்தார்  பலீமா.

கைராட்டையில் கதர் ஆடை நெய்யும் காந்தியடிகள் – புகைப்பட விபரம் -OrissaPost.com

இந்த சம்பவத்தின் பின்னணியிலேயே, ஃகதர் என்றால் தனது கரங்களால் தானே நெய்து உடுத்தும் ஆடை என்றும் அன்னிய கலப்பில்லாத ஆடை என்றும் நாட்டின் மக்களுக்கு கவுரவத்தையும் சுய மரியாதையையும் வழங்கும் தன்மை உடையது என்ற கோட்பாடு காந்தியால் அறிமுகமானது. பின்னாளில் ஃகதருக்கு முன்னால்  இருந்த ‘ஃ’ என்ற எழுத்தின் ஓசை மறைந்து ‘கதர்’ என்ற புதிய ஓசை உடைய சொல் உருவாகி, கதர் என்ற   பெயரில் வழங்கி வருகிறது. சுதந்திர இயக்கத்தின் அடையாளமாக இந்த கதர் பின்னாளில் மாறியதற்கும் ,  கதர் அணிவது கவுரவம் மட்டுமல்ல உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சி என்பதை இடித்துரைப்பதற்கும் களமாக அமைந்ததென்னவோ தமிழகத்தின் மதுரை மாநகரம்தான் என்றால் மிகையில்லை!                       

செப்டம்பர் 22,1921 காந்தியடிகள் தமிழகத்தின் மதுரை மாநகரம் வந்திருந்தபோது உடம்பில் அரையாடை மட்டுமே அணிந்திருந்த ஏழை எளியோரைக் கண்டு மனம்வருந்தி தானும் அரையாடைக்கு மாறியநாள் ! இந்திய சுயசார்பான நெசவுத் தொழிலை அழித்துவிட்டு ஆங்கிலேய அரசாங்கம் தன்னுடைய துணிகளை இறக்குமதி செய்து அதன் மூலம் கொள்ளை லாபத்தை சம்பாதித்துக்கொண்டிருந்தது. இந்திய  ஏழைகள் வாழ்வாதாரமின்றித் தவித்துக்கொண்டிருந்தார்கள். இவற்றுக்கு  முற்றுப்புள்ளி வைத்தது காந்தியின் முடிவென்றால் மிகையில்லை .காந்தியடிகளின் முடிவு திடீரென்று ஒரு நாளில் எடுத்ததல்ல. இந்தியாவின் பல பாகங்களுக்கும் போகும்போதெல்லாம் அங்கு இருக்கும் ஏழை மக்களை சந்திக்கும்போது ஏற்பட்ட தாக்கத்தின் விளைவுதான் இது.

கதர் ஆடை- புகைப்பட விபரம்/ crafthouse.pk

 

காந்தியின் வேண்டுகோளுக்கு இணங்க, “கங்காபென் மஜூம்தார்“ என்ற பெண்மணி, விஜய்பூர் சமஸ்தானத்தில், நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் பரண் மேல் கிடந்த கைராட்டையைக் கண்டுபிடித்து காந்தியிடம் கொடுக்க, சபர்மதி ஆசிரமத்தில் காந்தியினால்  கதர் உற்பத்திக்கு  புத்துயிர் கிட்டியது. துணிகளை உற்பத்தி செய்யும் ஆலைத் தொழில்நுட்பத்துக்கு மாற்றாக எளிமையான தொழில்நுட்பத்தைக் கொண்ட கைராட்டை, கைநெசவு என்ற கதர் உற்பத்தியை ஏழை மக்களிடமே கொடுத்துக் கதரை உற்பத்தி செய்யக் கேட்டுக்கொண்டார் காந்தி.

அப்படி உற்பத்தி செய்யக்கூடிய கதர், தேவைக்குப் போதுமானதாக இருக்கவில்லை . ஏனெனில் , ஒத்துழையாமை இயக்கம் வேகமாகப் பரவப் பரவ, மக்கள் ஆர்வத்தோடும் தேசபக்தியோடும் கதர் உடுத்த ஆரம்பித்தார்கள். கதர், சுதந்திரப் போராட்டத்தின் சின்னமாக மாற ஆரம்பித்தது. மக்களின் கதர்த் தேவை பலமடங்கு அதிகரித்துத் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒரு பொருளுக்குத் தட்டுப்பாடு இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையில், தனக்கு எந்த அளவு தேவையோ அந்த அளவுக்கு மட்டும் கதரை உடுத்துவது என்று காந்தி முடிவெடுத்தார்.  அவரது அந்த முடிவே மேலாடையின்றி இறுதிவரை அவரை இருக்கச் செய்ததெனலாம்.        

 கதர் நெய்தலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர் ஒருவர்- புகைப்பட விபரம் /www.google.com

      

உடுத்த உடையின்றி இருக்கும் மக்களிடம் சென்று, இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிக் கூறும்போது, தான் மட்டும் தேவைக்கு அதிகமாக உடையை உடுத்திக்கொண்டு இருப்பது அவர்களை நம்மிடமிருந்து அந்நியப்படுத்தும் என எண்ணிய காந்தியடிகள் ,  ஏழைகளோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வதற்காக அவர்களைப் போலவே நாமும் ஏன் உடை உடுத்திக்கொண்டு எளிமையாக வாழக் கூடாது என்ற முடிவுக்கு வந்தார். ஆக, உடையைக் கூட ஆயுதமாக்கி அரசியல் களத்தில் போராட முடியும் என்று உலகுக்குக் காட்டிய முதல் மனிதர் காந்தியாகத்தான் இருக்கும்.

கதர் நெய்வதும், விற்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய செயல்களாக பிரிட்டிஷாரால் சட்டம் கொண்டுவரப்பட்டாலும், “அந்நிய பொருட்களை புறக்கணிப்போம்” என்கிற அடிப்படையில் சுதேசிகளால் இறக்குமதி செய்யப்பட்ட அத்தனை துணிகளும் தீக்கிரையாக்கப்பட்டது . இந்த “கதர் இயக்கப் போராட்டமானது”  இந்திய சுதந்திர போராட்டத்தில் மிகப்பெரிய மைல்கல் என்றால் மிகையில்லை.

 

Related Articles