நாட்டின் கடன்சுமையும் வரவு-செலவுத் திட்டமும் – நிதிச்சவால்களுக்கு மத்தியில் இலங்கை 2017

இன்றைய நிலையில், இலங்கை எவ்வகையான நிதிச்சவால்களையும், சிக்கல்களையும் எதிர்கொண்டுள்ளது என்பதனை எந்தவொரு சாதாரண குடிமகனுமே அறிவான். காரணம், இன்றைய நல்லாட்சி அரசு ஒவ்வொரு படியாக முன்னேற திட்டமிடும்போது எல்லாம் ஏதோவொருவகையில் அவற்றுக்கு தடைகல்லாக வந்து நிற்பதற்கு காரணமே இத்தகைய நிதிச் சிக்கல்கள்தான்.

2017ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கபட்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டும் இருக்கிறது. 2017ம் ஆண்டு அரசியல் ரீதியாகவும், அரசினை கொண்டு நடாத்துவதிலும் மிகப்பெரிய சவால்களை இம்முறை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியதாக உள்ளது. அதிலும், தற்போதைய அரசுக்கு உள்ள நிதிச் சவால்களும், கடன் சுமைகளும் இதுவரை காலத்தில் ஆட்சியில் இருந்த எந்தவொரு அரசும் எதிர்கொள்ளாத மோசமான நிலையாகும். இந்தநிலையினை ஓரளவுக்கேனும் எதிர்கொள்ளத்தக்கவகையிலேயே வரவு-செலவுத் திட்டம் முறைமைகள் மாற்றியமைக்கபட்டு உருவாக்கபட்டுள்ளது எனச்சொல்லலாம்.

(lankaenews.com)

தற்போதைய அரசுக்கு உள்ள நிதிச் சவால்களும், கடன் சுமைகளும் இதுவரை காலத்தில் ஆட்சியில் இருந்த எந்தவொரு அரசும் எதிர்கொள்ளாத மோசமான நிலையாகும். (lankaenews.com)

இம்முறை வரவு-செலவுத்திட்டம் பெருவாரியான வரிவிதிப்பு முறைமைகளை கொண்டதாக வடிவமைக்கபட்டு இருக்கிறது. குறிப்பாக, நேரடி மற்றும் மறைமுக வரிவிதிப்புக்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை இம்முறை அரசாங்கம் அமுலாக்க எதிர்பார்க்கிறது. கடந்த காலங்களுடன் ஒப்பிடுமிடத்து இம்முறை மொத்த தேசிய உற்பத்தியில், வரி மூலமான வருமான பங்களிப்பு  அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இறுதியாக, மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மொத்த தேசிய உற்பத்தியில் வரியின் பங்களிப்பானது 10.1% சதவீதமானதாக இருந்தது. ஆனால், இம்முறை நடைமுறைக்கு வரவுள்ள வரவு-செலவுத்திட்டத்தில் அது 13.5% சதவீதமாக அதிகரிக்கபட்டுள்ளது. இது வரவு-செலவுத்திட்டத்தின் வருடாந்த பற்றாக்குறையினை 5.7% சதவீதத்திலிருந்து 4.6% சதவீதமாக குறைவடையச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையின் வழமையான கடன் சுமை

வரவு-செலவுத்திட்டத்தின் செலவினங்களில் குறிப்பிடும்படியாக, ஊதிய செலவினங்கள் 2014இல் 189 பில்லியனிலிருந்து 486 பில்லியனாக அதிகரித்து இருந்தது. இது 2017இல், 675 பில்லியனாக அதிகரித்து இருக்கிறது. அதுபோல, கடன்களுக்கான வட்டி செலவினங்கள் 2014இல் 244 பில்லியனிலிருந்து 436 பில்லியனாக அதிகரித்தது. இது 2017இல், 680 பில்லியனாக அதிகரித்து உள்ளது. அதுபோல, மூலதன முதலீடுகளும் 480 பில்லியனிலிருந்து 567 பில்லியனாக அதிகரித்துள்ளது.

அதுபோல, இம்முறை செலுத்தவேண்டிய வட்டி மற்றும் முதலீட்டுச் செலவுகளும் ஏறத்தாழ 1480 பில்லியனாக உள்ளது. இது 2018ஆம் ஆண்டில், 1600 பில்லியன் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், வரிவருமானம் 2014இல் 1050 பில்லியனாக இருந்ததுடன், 2017ல் 1821 பில்லியனாக அதிகரிக்கும். இதனடிப்படையில், அரசு வரவு-செலவு திட்டத்தில் திட்டமிட்டுள்ள 80% சதவீதமான அரச வருமானமானது கடன்களையும், அதன் வட்டியையும் மீளச்செலுத்தவே போதுமானதாக இருக்குமா என்கிற கேள்விநிலையை உருவாக்குவதாக உள்ளது.

இதனைவிட மிகக் குழப்பகரமான நிலையினை மற்றுமொரு வகையில் அரசு சந்திக்க வேண்டி உள்ளது. இலங்கை அரசு நாட்டின் அபிவிருத்திக்கும், வணிக விரிவாக்கங்களுக்குமாக செலவிட்ட முதலீட்டு தொகையும், இதற்காக அரச வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களும் தற்போது கேள்விநிலையில் உள்ளன. காரணம், அம்பாந்தோட்டை துறைமுகம் போன்று இலாபகரமான வகையில் இயங்காத செயல்திட்டங்கள் கடன்களை மீளச்செலுத்த பொருத்தமற்றவகையில் உள்ளன. எனவே, இத்தகைய திட்டங்களின் சமூக பொருளாதார நன்மைகளும், இலாபகரத் தன்மையும் கேள்விக்குரியதாக உள்ளன.

கடன் சுமையை குறைக்கும் மூலோபாயங்கள்

(newsfirst.lk)

அம்பாந்தோட்டை துறைமுகம், மாத்தளை விமான நிலையம் போன்று இலாபகரமான வகையில் இயங்காத செயல்திட்டங்கள் இலங்கையின் கடன்களை மீளச்செலுத்த பொருத்தமற்றவகையில் உள்ளன. (newsfirst.lk)

கடந்த அரசின் மூலமாக அதிகரித்த கடன்தொகையும், தற்போது அரசினை கொண்டு நடாத்தவென தற்போதைய அரசினால் பெற்றுக்கொள்ளப்படுகின்ற கடனும் இலங்கையையின் சர்வதேச கடன் தரப்படுத்தலில் மிகப்பெரிய பலவீனத்தை ஏற்படுத்தக் கூடும். இதனால், சர்வதேச கடன் தரப்படுத்தலில் இலங்கையின் தரப்படுத்தல் குறைவடையும்போது, அது நேரடியாக கடன் செலவினத்தை மேலும் அதிகரிக்கும். இதனால், இலங்கை அரசு மேலும் கடனைப் பெறவேண்டிய துர்பாக்கியநிலைக்குத் தள்ளப்படும். இது, தற்போதைய நிலையை விட மோசமான சூழலுக்குள் இலங்கை அரசையும், மக்களையும் கொண்டு சேர்க்கும்.

எனவேதான், இதனைப் புரிந்துகொண்டு சர்வதேச கடன்தரப்படுத்தலில் இலங்கையின் நிலை மேலும் மோசமடைவதை தவிர்க்கவும், முதலீட்டாளர்களை இலங்கைக்கு கொண்டுவந்து சேர்ப்பதன் மூலம், இலங்கையின் கடன்சுமையை குறைக்க சர்வதேச நாணய நிதியம் சுமார் 1.1 பில்லியன் அளவான விரிவாக்கல் நிதியுதவியினை அண்மையில் இலங்கைக்கு வழங்கியிருந்தது.இவ்நிதியுதவிக்கு பதிலாக, இலங்கை அரசு எதிர்வரும் காலங்களில் நிதிசார் செயல்பாடுகளில் மேம்படுத்தத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த உறுதி வழங்கியிருந்தது. இம் மேம்படுத்தப்பட்ட மாற்றங்கள், முதலீட்டாளர்களை கவரும் வகையிலோ அல்லது மக்களின் வரிச்சுமையினை அதிகரிக்கும் வகையிலோ இருக்ககூடும்.

அதுபோல, 2017ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் பிரகாரம் கீழ்வரும் விடயங்கள் உட்பட பல்வேறு மாற்றங்கள் முன்னெடுப்பதன் மூலமாக, கடன்சுமையையும் அதன் மூலமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளையும் எதிர்கொள்ளவோ, குறைக்கவோ முயற்சிகள் இடம்பெறுகின்றன.

(thinappuyalnews.com)

கடந்த அரசின் மூலமாக அதிகரித்த கடன்தொகையும், தற்போது அரசினை கொண்டு நடாத்தவென தற்போதைய அரசினால் பெற்றுக்கொள்ளப்படுகின்ற கடனும் இலங்கையையின் சர்வதேச கடன் தரப்படுத்தலில் மிகப்பெரிய பலவீனத்தை ஏற்படுத்தக் கூடும். (thinappuyalnews.com)

  • 2017ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் பற்றாக்குறை அளவினை 4.6% சதவீதமாகவே ஆண்டு முழுவதும் பேண முயற்சித்தல். இதற்காக அரச செலவினங்களை உட்சபட்சமாக குறைக்க நடவடிக்கைகளை எடுப்பதுடன், அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளல்.
  • அம்பாந்தோட்டை பொருளாதார வலயம் – அம்பாந்தோட்டை துறைமுகத்துக்காக இலங்கை-சீனா கூட்டு முயற்சியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது, துறைமுக அதிகாரசபையினால் சுமார் 200 பில்லியன் கடன் சீனாவிடம் பெறப்பட்டது. இந்த கடன்சுமையை குறைப்பதோடு, அம்பாந்தோட்டையை நோக்கி முதலீட்டாளர்களை ஈர்த்தல், அதன்மூலம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை லாபகரமாக செயற்படுத்தல், மீண்டும் சீனாவின் உதவியுடன் அம்பாந்தோட்டையில் பொருளாதார வலயத்தை உருவாக்குதல்.
  • இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தினால் கடந்தகாலத்தில் பெறப்பட்ட கடன்களை தொடர்ச்சியாக மீளச்செலுத்த தவறியதன் மூலம் ஏற்படக்கூடிய மேலதிக நட்டநிலையை தவிர்க்கும்பொருட்டு, கடன்களை தொடர்ச்சியாக மீளச்செலுத்தும் முறைமையை நிறுவுதல்.
  • இலங்கை விமானசேவைக்கு என கடந்தகாலத்தில் சிபாரிசு செய்ப்பட்ட வணிக லாபமற்ற சுமார் 300 பில்லியன் பெறுமதிமிக்க விமானங்களை குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்யும் திட்டத்தை கைவிடுதல் அல்லது இடைநிறுத்த முடிவு செய்தல்.
  • அதிகவேக நெடுஞ்சாலைகளில் சுமார் 300 பில்லியனை முதலீடு செய்வதன் மூலம், முதலீட்டாளர்களுக்கு தேவையான பேண்தகு அபிவிருத்தி உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடிவதுடன், முதலீட்டாளர்களை இலங்கைக்கு கொண்டுவரக்கூடிய மேலதிக உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தல்
  • முக்கியமல்லாத வணிக முதலீடுகளையும் (சுற்றுலா மற்றும் சுகாதாரத்துறை) , அதன் உரிமையையும் பரவலாக்கல். இதன்மூலம், தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்து லாபகரமான நிலையை தோற்றுவித்தல்.
  • வணிக ரீதியில் சாத்தியமான மற்றும் வணிக ரீதியில் லாபகரமாக இயங்கக்கூடிய துறைகளை தனியார், அரசு அல்லது இருவரது பங்களிப்புடனும் செயற்படுத்தல்.

இத்தகைய செயல்பாடுகள் மூலமாக, வரவு-செலவுத்திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டது போல அரசு தனது நிதியியல் நிலைமையினை சீர்படுத்துவதற்கான துணிகரமான, குழப்பகரமான முடிவுகளை எதுவிதமான மாற்றுவழிகளுமின்றி மேற்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளது.

(scmp.com)

கடன்களின் மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள், உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் வசதிகள் என்பன இறுதியில் அரசிற்கு லாபகரமான நிலையினை வழங்குவதனை உறுதி செய்வது அவசியமாகிறது. (scmp.com)

குறிப்பாக, அரசினால் கடன்களின் மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள், உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் வசதிகள் என்பன இறுதியில் அரசிற்கு லாபகரமான நிலையினை வழங்குவதனை உறுதி செய்வது அவசியமாகிறது. அல்லாவிடின், அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம் போன்ற இலாபகரமற்ற அபிவிருத்தி திட்டங்களில் முதலீட்டை முடக்குவதுடன், அதற்கான மேலதிக கடன்சுமையை அரசு தற்போது ஏற்று நிற்பது போல எதிர்காலமும் கேள்விக்குரியதாக மாறக்கூடும்.

எனவே, 2017ம் ஆண்டின் வரவு-செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, அரச நிர்வாக செயல்பாடுகளை வினைத்திறன்வாய்ந்த விதத்தில் நடாத்திச்செல்ல முனைவதுடன், எவ்வித அழுத்தங்களுக்கும் ஆளாகாதவகையில் துணிகர தீர்மானங்களை மேற்கொள்வதும் அவசியமாகிறது. இதன்மூலமாக, உள்நாட்டு மற்றும் அந்நிய முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கைத் தன்மையை ஏற்படுத்துவதுடன், இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கான அடிப்படைகளையும் ஏற்படுத்திக் கொடுக்க முடியும். இதுவே, கடந்தகாலங்களில் ஏற்படுத்தப்பட்ட கடன்சுமைகளையும், நிதிச் சவால்களையும் எதிர்காலத்துக்கு கடத்தி செல்லாதிருக்க உள்ள ஒரேயொரு வழியாகும்.      

 

Related Articles