நாணயப்பெறுமதியின் வீழ்ச்சி – எதிர்காலம் கேள்விக்குறியில்

எல்லோர் கைகளிலும் இணைய பாவனை வந்தபிறகு, சர்வதேச கொடுக்கல்-வாங்கல் பாரியளவில் அதிகரித்திருக்கிறது. இணைத்யதள விற்பனை முகவர்களே தங்களது விற்பனை எல்லையை விரிவுபடுத்தும்பொருட்டு, சர்வதேச இணைய விற்பனையாளர்களுடன் ஒப்பந்த அடிப்படையில் இணைந்து செயலாற்றும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, தற்கால இலங்கையின் வணிக உலகமானது, நாட்டின் எல்லைகளை கடந்த நிலையிலேயே இருக்கிறது.

ஆனால், வர்த்தக கொடுக்கல்-வாங்கல்களில் ஈடுபடுபவர்களின் அண்மைய குற்றச்சாட்டுக்களில் மிக முக்கியமானது, இலங்கை நாணயப்பெறுமதி பொதுக்கொடுக்கல் வாங்கல்களுக்குக்கு பயன்படும் அமெரிக்க டொலருக்கு (USD) எதிராக வீழ்ச்சியடைந்துகொண்டே செல்கிறது என்பதாகும். தற்போதைய நிலையில் ஒரு அமெரிக்க டொலர் அண்ணளவாக ரூபா 147/-க்கும் ரூபா 150/-க்கும் இடைப்பட்ட இலங்கை ரூபாய்களுக்கு சமனானதாகும்.

அமெரிக்க டொலரின் கொள்வனவுப் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலரின் கொள்வனவுப் பெறுமதி அதிகரிப்பு

இத்தகையநிலை ஏற்பட உண்மையான காரணம்தான் என்ன ?

இதற்கு முதலில் “நாணயமாற்று விகிதம்” என்பதனை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இலகுவாகச் சொன்னால், ஒரு நாட்டின் நாணயத்தை கொள்வனவு செய்ய நாம் கொடுக்கும் விலையே (நமது நாட்டு நாணயத்தின் அளவு) இதுவாகும். தற்கால நவீன உலகில் இந்த “விலை” என்பது பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கபடுகிறது. அவையாவன,

  • நாடுகளுக்கிடையிலான பணவீக்க விகித (Inflation Rates) வேறுபாடுகள்.
  • நாடுகளுக்கிடையிலான வட்டிவிகித (Interest Rates) வேறுபாடுகள்.
  • சென்மதி நிலுவை (Balance of Payment) கணக்கில் ஏற்படும் மாற்றம்.
  • அரசின் குறுகியகால முதலீட்டில் ஏற்படும் மாற்றம்.
  • குறித்த நாட்டின் பொருளாதார செயல்திறன் (Economic Performance) மற்றும் பொருளாதார உற்பத்தி திறன் (Productivity of economy).
  • மற்றும் உள்நாட்டு அரசியல்நிலை, சந்தை மாற்றங்கள்.

இவற்றின் அடிப்படையில் ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி ஏனைய நாடுகளுக்கு எதிராக அதிகரிக்கவும் குறையவும் செய்கிறது. உதாரணத்திற்கு, இலங்கை ரூபாய் பல்வேறு காரணிகளால் அமெரிக்க டொலருக்கு எதிராக தொடர்ச்சியாக வீழ்ச்சியடைகிற போதிலும், பிரித்தானியாவின் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் முடிவு, இலங்கை நாணயபெறுமதியை பிரித்தானிய பவுண்ட்ஸ்க்கு எதிராக அதிகரிக்கச் செய்துள்ளது.

சர்வதேச கொடுக்கல் வாங்கலுக்கு பொதுநாணயமாக பயன்படுத்தப்படும் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 2012/13 – 11.92% இனாலும், 2013/14 – 2.57% இனாலும், 2014/15 – 0.58% இனாலும், 2015/16 – 11.68% இனாலும் பெறுமானத்தேய்வுக்குட்பட்டுள்ளது. இதற்கு மிக அடிப்படையான காரணமாக அமைவது, பொருத்தமற்ற பொருளாதாரக் கொள்கைகளின் அமுலாக்கலும், நிதி மேலாண்மையில் (Fiscal management) ஏற்பட்டுள்ள தளர்வு நிலையுமே ஆகும்.

(fthmb.tqn.com)

இத்தகைய நாணயப்பெறுமதியின் வீழ்ச்சியானது, ஒவ்வாரு இலங்கையரினதும் வாழ்வாதாரநிலையை ஆட்டம் காணச்செய்யவல்லது. (fthmb.tqn.com)

இந்த நிலை எப்படி சாதாரண மக்களை பாதிப்படையச் செய்யும் ?

சர்வதேச கொடுக்கல்,வாங்கலில் ஈடுபடுபவர்களுக்கும், வெளிநாட்டு பணத்தை உடைய உள்நாட்டவர்களுக்கும் மட்டுமே இது பாதிப்பை தரும் என நினைப்போமானால், அது மிகப்பெரிய முட்டாள்தனமாகும். குறிப்பாக, இத்தகைய நாணயப்பெறுமதியின் வீழ்ச்சியானது, ஒவ்வாரு இலங்கையரினதும் வாழ்வாதாரநிலையை ஆட்டம் காணச்செய்யவல்லது.

தொடர்ச்சியாக வீழ்ச்சியடையும் இலங்கை ரூபா நீண்டகாலத்திலான எமது இறக்குமதி வல்லமையை பாதிப்படையச் செய்யும். குறிப்பாக, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுகள், மருந்துப் பொருட்கள், உற்பத்தி இயந்திரங்கள் போன்றவை இதன் விளைவாக செலவினம் மிகுந்தவையாக மாற்றமடையும்.

இறக்குமதிக்கு பாதிப்பை தரும் நாணயமாற்று வீழ்ச்சியானது ஏற்றுமதிகளுக்கு சாதகத் தன்மையை தரும் அல்லவா? என நினைப்பது புரிகிறது. இந்த சாதகநிலை வெறுமனே குறுகியகால கனவுநிலையாகவே இருக்கும். காரணம், நீண்டகால உற்பத்தி செயற்பாடுகளுக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் என்பன எமது இறக்குமதி இயலுமையிலேயே தங்கியுள்ளது. இறக்குமதியின் பாதிப்பு இதன்மூலமாக, ஏற்றுமதி சந்தையையும் நீண்டகாலத்தில் தளர்வுநிலைக்கு உந்திசெல்லும்.

இத்தகைய மோசமான நாணயப்பெறுமதியின் வீழ்ச்சியை தடுப்பது எப்படி ?

தற்சமயம் ஏற்பட்டுள்ள மோசமான நாணயத்தளம்பலை மீட்சிபெறச் செய்வதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. இதற்கு நீண்டகால திட்டங்களே பயன்தரக்கூடியவையாக அமையும். ஆனாலும், தற்சமயம் ஏற்படவுள்ள பிரச்சனைகளுக்கு இரண்டுவகையான உடனடித் தீர்வின் மூலாமாக, சிறிது ஸ்திரத்தன்மையை பேணலாம்.

  1. வெளிநாட்டு முதலீடுகளை இலங்கைக்கு கொண்டுவரக்கூடிய திட்டங்களை அறிமுகபடுத்துவதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் பொருத்தமான உதவியை பெறல்.
  2. நீண்டகாலத்தில் உள்நாட்டு பொருளாதாரத்துறையை ஸ்திரப்படுத்தக்கூடியவகையில், ஏற்றுமதியாளர்களுக்கான பொருளாதார திட்டங்களை அறிமுகம் செய்தல்.

குறிப்பாக, 2000,ம் ஆண்டுகளில் 30%க்கு மேலாக மொத்த தேசிய உற்பத்தியில் பங்களிப்பு வழங்கிய ஏற்றுமதித்துறையானது , 2015ம் ஆண்டில் 15%க்கும் குறைவான பங்களிப்பையே வழங்குகிறது. இதற்கு எதிர்ப்புறத்தில், இறக்குமதிச் செலவீனங்கள் மொத்த தேசிய உற்பத்தியில் எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளது.  இந்த நிலைக்கு மாற்றீடாக, உள்நாட்டு தன்னிறைவு மற்றும் ஏற்றுமதிப் பொருளாதார நிலையை ஏற்படுத்தகூடிய திட்டங்களுக்கு அரசு முன்னுரிமை கொடுப்பது அவசியமாகிறது.

இதற்காகவே, 2017ம் ஆண்டின் பாதீட்டில் நல்லாட்சி அரசானது நீண்டகால பொருளாதார அபிவிருத்திகளை அடிப்படையாககொண்ட திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஆனாலும், கடந்த அரசினால் அமுலாக்கப்பட்ட தவறான பொருளாதார கொள்கைகள் மற்றும் தவறான தரவுகள் தற்போதைய அரசினை பெரிதும் இக்கட்டான நிலைக்கு தள்ளியிருக்கிறது. குறிப்பாக, எதிர்வரும் 12 மாதங்களில் சுமார் 5 பில்லியன் டொலர் கடனை செலுத்தவேண்டி உள்ளது. அத்துடன், குறுகியகால கடன்தொகையான சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலரை செலுத்தவேண்டிய தேவைப்பாடும் உள்ளது, ஆனாலும், இலங்கையின் கையிருப்பில் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலரே உள்ளது. எனவே, இத்தகைய நிலை தொடர்ச்சியாக இலங்கையின் நாணயபெறுமதியை வீழ்ச்சியடையவே செய்யும்.

(thinkworth.com)

கடந்த அரசினால் அமுலாக்கப்பட்ட தவறான பொருளாதார கொள்கைகள் மற்றும் தவறான தரவுகள் தற்போதைய அரசினை பெரிதும் இக்கட்டான நிலைக்கு தள்ளியிருக்கிறது. (thinkworth.com)

எனவே, இத்தகைய சீரற்ற பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு, மிகப் பொருத்தமான பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கவேண்டிய கடப்பாடு எமது கொள்கை வகுப்பாளர்களுக்கே உண்டு. தனித்து, நாளை வருகின்ற பிரச்சனைகளுக்கு மாத்திரம் தீர்வை ஆராய்ந்துகொண்டிராமல் நீண்டகாலத்தில் இலங்கையின் நாணயப்பெறுமதியை நிலைபெறச் செய்யத்தக்க வகையில் கொள்கை வகுப்பினை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், இலங்கை ரூபாயின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராக பாதாள வீழ்ச்சியடைதலையும், நமது அடிப்படை செலவீனங்கள் எதிர்பாராத அளவில் அதிகரிப்பதையும் யாராலும் தடுக்க இயலாது.

Related Articles