மரணித்துக் கொண்டிருக்கும் மனித நேயம்

“வீட்டில் திண்ணைகள் வைத்து கட்டினோம் யம்மா

வழிப்போக்கன் வந்துதான் தங்கிச் செல்லுவான் சும்மா “

இது ஒரு தமிழ் சினிமாவில் வரும் பாடல். நமது கலாச்சாரம் என்பது முன் பின் தெரியாத நபரைக்  கூடச்  சொந்தமாகப் பாவித்து உபசரிக்கும் தன்மை உடையது என்பதைப்  பிரதிபலிக்கிறது இந்த பாடலின் வரிகள். உண்மையும் அதுதான். திண்ணைகள் தொலைந்ததோடு நமது அன்பும் ,உபசரிப்பும் தொலைந்துபோனது. வெயிலுக்கு வீட்டு திண்ணையில் அமர்ந்த நபரை உணவு கொடுத்து உபசரித்த காலம்போய் நாய்கள் ஜாக்கிரதை போர்ட்டுகள் இல்லாத வீடுகள் இல்லை என்ற நிலைமை வந்துவிட்டது. சக மனிதர்களிடம்  நாம் செலுத்துகின்ற அன்பின் அளவே இந்த ஆக்கம் .

படம்: komagam

சில தினங்களுக்கு முன் வட மாநிலத்தில் ஒரு பெண் தனியாக நிற்க, அந்த பெண்ணைக்  குழந்தைகள் கடத்தும் பெண் என்று நினைத்து அவளது முடியை வெட்டி ஈவு, இரக்கம் இல்லாமல் அடித்துள்ளார்கள் அந்த கிராமத்து மக்கள். விஷயம் கேள்விப்பட்டு காவல்துறை வந்து அவரை மருத்துவமனை அனுப்ப, போகும் வழியிலேயே உயிர் நீத்தார் அப்பெண்! அந்த பெண்ணின் பெற்றோர்கள் வந்த பின்னர்தான் அந்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர்  என்று தெரியவந்துள்ளது. இந்த  மொத்த நிகழ்வையும் வழக்கம்போல் ஒரு ஜீவன் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியும் உள்ளது .

வீடியோ எடுத்த நேரத்துக்கு காவல்துறைக்குத்  தகவல் கொடுத்திருந்தால் ஒரு உயிரைக்  காப்பாற்றி இருக்கலாம் இல்லையா? தான் எதற்காக தண்டிக்கப்படுகிறோம் என்றே புரியாமல், அதைச்  சொல்லவும்  தெரியாமல் அந்தப் பெண் அடிவாங்கி அழும் காட்சி இருதயம் இருக்கும் எவரையும் கலங்கச் செய்யும்.

படம்: niaje

அந்த மக்கள் என்ன தெரிந்தா செய்தார்கள்? குற்றவாளி என்று நினைத்து தண்டித்தார்கள் என்று இணையத்தில் வக்காலத்து வாங்கியவர்களும் உண்டு. நமது கோபத்தையும், பலத்தையும் நாம் எங்கு வெளிப்படுத்துகிறோம்? நம்மைவிட எளிய மனிதர்களிடம் மட்டுமே! சென்ற ஆண்டு உடுமலைப்பேட்டையில் மக்கள் அதிகம் இருந்த வீதியில் மாற்று சாதிப்  பெண்ணைத்  திருமணம் செய்தான் என்பதற்காக சங்கர் என்ற வாலிபர் நடுரோட்டில் புது மனைவியின் கண் எதிரே வெட்டிக்  கொலை செய்யப்பட்டார். அப்போதும் வீடியோ மட்டுமே  எடுத்துக் கொண்டிருந்தது  கூட்டம்!. அங்கிருத்த மக்கள் ஆளுக்கு ஒரு கல்லை எறிந்திருந்தால்கூட அவர்களை விரட்டி இருக்கலாம் என்று அவரது மனைவி கதறி அழுதபோதுகூட சமூக வலைத்தளங்களில் உச்சுக்கொட்டிக்  கொண்டிருந்தது நமது சமூகம்.

வேடிக்கை பார்க்கும் மனநிலைதான் இன்று இருக்கும் பெரும் புற்றுநோய். அதிலும் மற்றொருவர் துன்புறும்போது அதைக்  காணொளி எடுத்துப்  பதிவிடுவது என்பது ஏதோ புது டிரென்ட்டாக  உள்ளது. ரோட்டில் விபத்து ஏற்பட்டால் போனை எடுத்து ஆம்புலன்ஸ் அழைக்கிறார்களோ இல்லையோ, அதைப்  புகைப்படம் எடுத்து சோக ரியாக்சனோடு பதிவிடுகிறார்கள் . அந்த இடத்தில் நம் நண்பர்களோ, உறவினர்களோ இருந்தால் இப்படியா செய்வோம் ?

படம்: bbc

சில மாதங்களுக்கு முன் ஒரு சின்ன குரங்கு மின்சார இரயில் பாதையில்  செல்லும் மின் கம்பியைப்  பிடித்து மின்சாரம் தாக்கிக்  கீழே விழுந்து விட்டது ,அங்கு வந்த  இன்னொரு குரங்கு அருகில் இருக்கும் நீரில் அதை முக்கி அடித்து, தன்னால் முடிந்த எல்லாம் செய்து உயிர்பிழைக்க வைத்துவிட்டது. நல்லவேளை அது மனிதனாக இல்லாமல் போய்விட்டது. இல்லையென்றால் அதுவும் மின்சாரத்தைத் தெரியாமல் தொட்ட மனிதன், கூட்டத்தில் உதவ ஆள் இல்லாமல் மரணம் என்று காணொளி எடுத்துப்  பதிவு மட்டும்தான் செய்திருக்கும்.

எங்களின் சுய பாதுகாப்புதான் முதலில் முக்கியம், பிறகுதான் நாங்கள் மற்றவரைப்  பற்றிச்  சிந்திக்க முடியும் என்று சொல்கிறீர்களா ? எல்லாருக்கும் அரசு தனித் தனியாகப்  பாதுகாப்பு வழங்குவது என்பது சாத்தியமற்றது . தவறு நடக்கும் எல்லா இடத்திலும் காவல்துறை இருக்கும் என எதிர்பார்க்க முடியுமா ? எத்தனையோ குற்றங்கள் மக்கள் சக்தியினால் மட்டுமே தடுக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு ஏன் இந்திய சுதந்திரம் என்பது முழுக்க, முழுக்க மக்கள் சக்தியால் கிடைத்த ஒன்று மட்டுமே ! நாங்கள் ஆங்கிலேயரை எதிர்க்கிறோம் என்று யாரும் ஸ்டேட்ஸ் போட்டுவிட்டு வீட்டில் அமரவில்லை என்பதை மறக்கக்  கூடாது.

இணையத்திலும் கூட எது உண்மை, எது பொய் என்று தெரியாமல் எல்லாவற்றையும் கமெண்ட் செய்வது.  அதில் உச்சகட்டமாக ஒரு சிறுவன் தன்னைவிட பெரிய பெண்ணுடன் கோயிலை வளம் வருவது போல ஒரு புகைப்படம் கீழே கமெண்ட்டில் தனக்குப்  பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரைத்  திருமணம் செய்த மாணவன் என்ற வசனம் இருந்தது .குறைந்தது ஐம்பதாயிரம் கமெண்ட் அவர்களை வசைச்  சொற்களால் திட்டியிருந்தது. கடைசியில் அதை விசாரித்தால் அவர்கள் அக்காவும், தம்பியும். அந்தப் புகைப்படம் அந்த அக்காவின் திருமணத்திற்கு முன் செய்யும்  சடங்கின்போது எடுக்கப்பட்டது என்று தெரிய வந்தது ! இதை ஆதரிக்கும் மனநிலை தான் வேடிக்கை பார்க்கும் மனநிலை .

படம்: collectivelyconsiousness

சேலத்தில் சில நாட்களுக்கு முன் அரசு மருத்துவமனையில் ஒரு 17 வயது பெண் இறந்து போனார். இலஞ்சம் தர மறுத்ததால் 7 மணிநேரம் அந்த பெண்ணின் உடலை வீட்டிற்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தராமல் தாமதப்படுத்த, அந்த பெண்ணின் உடலைக்  கைகளால் தூக்கி வெளியே செல்ல முனைகையில் ஆம்புலன்ஸ் தந்துள்ளது அந்த மருத்துவமனை நிர்வாகம். அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் தண்டிக்கப்பட வேண்டும் அதில் எந்த ஒரு மாற்றுகருத்தும் இல்லை ஆனால் ஒரு பொது மருத்துவமனையில் நடந்த இந்த நிகழ்வை அங்கிருந்த யாருமே கேட்காமல் எப்படி வேடிக்கை பார்த்தார்கள் என்பதே வியப்பு , இதே நிகழ்வு நமக்கு வரும்போது தான் சமூகத்தின் மீதான அக்கறை வருமோ ? . இந்தியாவில் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்க்க முனைப்பு காட்டாமல் அங்கே செல்பி எடுத்ததால் எத்தனை உயிர்கள் போயிருகிறது என்பதெல்லாம் நமது மனிதமின்மையின் உச்சம் .

நண்பர் ஒருவர் இரத்த தானம் வேண்டும் என்று வாட்ஷ்அப்பில்  செய்தி அனுப்பியிருந்தார் , சில நாட்களுக்கு முன் தான் ரத்தம் கொடுத்ததால் அவரை அழைத்து ரத்தம் தேவை படும் நபர் பற்றி விசாரித்தால் அவர் யார் என்று தெரியாது என்றார் ,முகம் தெரியாதவர்களுக்கு உதவுகிறாரே என்று நீங்கள் கொடுத்துவிட்டீர்களா  என்றேன்,யாருங்க ஹாஷ்பிடல்ல போய் கொடுத்துகிட்டு எனக்கு போர்வர்ட் வந்துச்சு நான் முழுசா கூட படிக்கல அப்டியே இருக்க எல்லா குரூப்கும் அனுப்புனேன் என்றார் . நமது உதவும் மனப்பான்மை போர்வேட் அளவில் மட்டுமே உள்ளது அதிலும் எத்தனை பொய்தகவல்கள் . ஒரு முறை இரத்ததானம் கேட்டு வந்த தகவலில் இருந்த எண்ணிற்கு தொடர்ப்பு கொண்டபொழுது தம்பி யாரு இப்டி பண்ணானு தெர்லப்பா எங்க வீட்ல எல்லாரும் நல்ல இருக்கோம் யாரோ இப்படி பன்னிருகாங்கனு ஒரு அம்மா சொன்னபோது நமது வக்கிரபுத்தியின் கற்பனைக்கு இந்த இணையம் செயல்வடிவம் தருகிறது என்று தோணியது !.

இணையத்தில் பக்கம் பக்கமா எழுதும் பலரும் செயல் வடிவில் ஒரு விதையை கூட மற்றவர்நலனுக்காக விதைத்து இருக்கமாட்டார்கள் என்பதே எதார்த்தம். கடைசியாய் எப்போது இரத்ததானம்செய்தீர்கள் ?,சரி வாழ்கையில் ஒரு முறையேனும் செய்துள்ளீர்களா ? , நான் எதற்கு செய்யவேண்டும் ஆம் கட்டாயம் இல்லைதான் !. எங்கயோ இறக்க போகும் அந்த மனிதன் நமக்கு தெரியாதவர்தான் ஆனால் நாம் அடிக்கடி ஒன்று சொல்லிகொள்வோமே பகுத்தறிவு மனிதர்களிடம் மட்டுமே உள்ளது என்று அதற்காவது நம் முன் இறக்கும் உயிர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாமே.

படம்: humanity

சொற்களாலும் ,செயலாலும் பிறரை காப்பற்றுவதை எப்பொழுதோ நிறுத்திவிட்டோம் ,திருடன் என்ற குரல் கேட்டதும் நமது உடைமைகளை இருக்க கட்டிக் கொள்கிறோமே ஒழிய ஒருபோதும் , பாதிக்கபட்டவருக்கு உதவுவதில்லை. “ பிறருக்கு நீ உதவும் போது அவனுக்கு நீ கடவுளாய் தெரிவாய் ” என்று சொல்வார்கள் ஆனால் நாம் கடவுளே நேரில் வந்து உதவ வேண்டும் என்று காத்திருக்கிறோம். கண்முன் நடக்கும் கொலையை வேடிக்கை பார்த்துவிட்டுக்  காவல் துறையை குறைசொல்லும் குணம் தான் நம்முடையது. சரி சாட்சியவது சொல்லப்  போவமா ? கண்டிப்பாக மாட்டோம். “ஹெல்லோ போலீஸ்ல நம்மல ஒழுங்கா நடத்த மாடங்க”னு சொல்வது !. பொதுநலன் என்பது ,மாமியார் வீட்டு கவனிப்பு அல்ல அது கஷ்டமாகத்தான் இருக்கும் .

உனக்கு என்ன எழுதிட்டு போயிருவ என்று தோனுகிறதா ? களத்தில் இறங்காமல் எந்த படைப்பும் மக்களைச்  சேர்வதில்லை என்பதையும் உணருங்கள் .

“ மனித ருணவை  மனிதர் பறிக்கம்

வழக்கம் இனியுண்டோ !

மனிதர் நோக மனிதன் பார்க்கும்

வாழ்க்கை இனியுண்டோ!”

உண்டு பாரதி ! ,பார்க்க மட்டும் அல்ல, படம் எடுத்து பதிவேற்றமும் பண்ணுவோம் .வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே !

 

Related Articles