Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இலங்கை கடற்பரப்பில் ஏற்பட்ட கடற்பேரழிவுகள்

நாலாபுறமும் கடலாலும் கடனாலும் சூழப்பட்டுள்ள இலங்கை, தற்போது முகங்கொடுத்து வரும் இன்னல்கள் தான் எத்தனை எத்தனை! இயற்கை காடுகள், நீர்வீழ்ச்சிகள், துறைமுகங்கள், மிதமிஞ்சாத பருவநிலை மாற்றங்கள் என இயற்கை அன்னையின் செல்லப்பிள்ளையாக, பார்த்து பார்த்து செதுக்கிய அழகு சிற்பமாக திகழ்ந்த இலங்கை இன்று பல்வேறு இயற்கை மற்றும் செயற்கை அழிவுகளுக்கு முகங்கொடுத்து தன்னிலை தடுமாறுகிறது. இந்து சமுத்திர பட்டு பாதையின் வர்த்தக கேந்திர நிலையம், வகைவகையான பவளப்பாறைகள், அரிதான கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடம் என  இலங்கையை சுற்றியுள்ள கடல்பரப்பு வர்த்தகத்திற்கும் சுற்றுலாவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கின்றது.

 2020ம் ஆண்டில், MT நியூ டயமண்ட் எனும் மசகு எண்ணெய் கப்பல், இலங்கையின் கிழக்கு கடலில் தீப்பிடித்து ஒரு வருடம் பூர்த்தியடையாத நிலையில், இலங்கை கடற்பரப்பில் மற்றொரு கப்பல்  இன்று சோகமான முடிவினை சந்தித்துள்ளது.

MT நியூ டயமண்ட் கப்பலினால் நீண்ட கால, கடுமையான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், இவ்வருடம் மே மாத இறுதியில் ஏற்பட்ட M.V எக்ஸ்பிரஸ் பேர்ல் #MV X-pressPearl எனும் கப்பலினால் நிகழ்ந்த வெடிப்புகள், இரசாயன கழிவுகளினால் ஏற்பட்டு கொண்டிருக்கும், ஏற்பட போகும் சேதங்கள் மிக மிக அதிகமாக இருக்கும் என்பது கவலைக்குரிய விடயமாகும். இரசாயன கழிவுகளின்  விளைவாக ஏற்பட்ட தீயினை கட்டுப்படுத்த ஒரு வாரத்திற்கும் அதிகமாக  கடற்படை தீயணைப்பு பிரிவு போராடியதுடன்  இதனால் உருவான குப்பைகளும் ரசாயன கழிவுகளும் நாட்டின் கரைப் பகுதிகளில் ஒதுங்கியமை நாம் அறிந்ததே. தற்போது கடற்கரை பரப்பின் சுத்திகரிப்பு பணி நடந்து வரும் நிலையில், கப்பலின் எஞ்சிய பகுதிகள்  ஆழ்கடலில் முழ்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடற்பரப்பில் இதற்கு முன்னரும் இது போன்ற பல பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன.

இலங்கை கடற்பரப்பில் ஏற்பட்ட கடற்பேரழிவுகள் – புகைப்பட விபரம் – Roar Media -வடிவமைப்பு – Jamie Alphonsus

2019 ஆம் ஆண்டில், ஸ்ரீலங்கா க்ளோரி Sri Lanka Glory  எனும் கப்பல் ரூமசாலா (Rumassala)  கடல்நீரடி பாறைக்குள் ஊடுருவியது. அப்பொழுது இலங்கை கடற்படையினர் விரைவாகவும் திறமாகவும் செயல்பட்டதால் 22 டன் பங்கர் எண்ணெய் அருகிலுள்ள பவளப்பாறைகளில் கசிவதை தடுக்க முடிந்தது.

2009 ஆம் ஆண்டில், 6,250 டன் சல்பூரிக் அமிலத்தினை ஏந்தி வந்த எம்.டி கிரான்பா MT Granba, எனும் துருக்கி ரசாயன கப்பல் திருகோணமலை கடற்கரையில் தரை தட்டியது.  இதன் விளைவாக  கப்பலின் தொட்டிகளில் (Ballast Tanks) ஏற்பட்ட கசிவுகள் கடலில் கலக்க தொடங்கியது. தொடர் முயற்சிகளின் பின்னர் கசிவுகளை தடுக்க முடியாததால் மீட்பு பணியில் இருந்த 19 பணியாளர்களினாலும் கப்பல் கைவிடப்பட்டு பின்னர் கடலில் மூழ்கடிக்கப்பட்டது

2007ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ம் திகதி, ரங்கூனில் இருந்து பம்பாய்க்கு பயணம் செய்த எம்.வி.அமந்த்நாத் ஷா MV Amanat Shah எனும் பங்களாதேஷ் கப்பல் கொக்கல கடற்கரையில் மூழ்கத் தொடங்கியது. இந்த கப்பலில் பங்களாதேஷுக்கு கொண்டு செல்ல வேண்டிய தேக்கு மரக்கட்டைகளும் இருந்தது. அத்துடன் இக் கப்பலில் 176 மெட்ரிக் டன் எரிபொருளும் காணப்பட்டது. இந்த விபத்து கொக்கலயில் இருந்து ஹபராதுவ வரையிலான 13 கிலோமீட்டர் கடற்கரை பிரதேசத்தை பாதித்தது.

ஆகஸ்ட் 23, 1999 ஆண்டு, எம்.வி. மெலிக்ஷா MV Meliksha எனும் கப்பல் 16,500 டன் எடையுடன் கூடிய உரத்துடன் புந்தல கடல் பரப்பில் விபத்துக்குள்ளானதால் 200 டன் எரிபொருள் கடலில் கசிந்தது. இதனால் பாரிய அளவிலான சூழல் மாசடைவு ஏற்பட்டது. கப்பல் கரைப்பகுதியில் இருந்து விலகி ஆழ்கடலில் மூழ்க தொடங்கிய போது அதில் இருந்த பணியாளர்கள் அருகில் சென்று கொண்டிருந்த மற்றொரு கப்பலினால் காப்பாற்றப்பட்டனர்.

விபத்துக்கள் தடுக்க முடியாதவை தான் என்றாலும் , முன்னெச்சரிக்கையான பாதுகாப்பு செயற்பாடுகளின் மூலம் எமது இயற்கை வளங்களை பாதுகாக்க எம்மால் முடியும். எமது நாட்டிற்கே உரித்தான பவளப்பாறைகளும் கடல் வாழ் உயிரினங்களும் அழிந்து கொண்டிருக்கும் நிலையில்,  சமூக வலைதளங்களில் அவற்றை பார்த்து கவலைப்படுவது மட்டுமின்றி அவற்றை தடுக்க நாம் என்ன செய்கிறோம் என்பதே தற்போதைய கேள்வி?

M.V எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தின் விளைவாக உயிரிழந்த கடலாமைகள் -புகைப்பட விபரம்-Daily Mirror.lk

கடல் மாசடைவு பற்றி The Wall Street Journal எனும் அமெரிக்க தினசரி நாளிதழினால்  மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின் படி  கடலை அதிகமாக மாசுபடுத்தும் நாடுகளில் இலங்கை 5 வது இடத்தை பெற்றுள்ளது.  இதற்கு கப்பல் விபத்துகள் மாத்திரமல்ல, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் இரசாயன ,பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உக்கி போகாத பிளாஸ்டிக், பொலித்தீன்  குப்பைகளும் இதற்கு முக்கிய காரணமாகின்றன. 

கடல் மாசடைவு பற்றி The Wall Street Journal எனும் அமெரிக்க தினசரி நாளிதழினால்  மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் சுருக்கம் – புகைப்பட விபரம் -Satista.com

இவ்வாறான அழிவுகள் எதிர்காலத்தை குறித்த அச்சங்களை தோற்றுவித்தாலும், இதன் முடிவு என்பது மனித செயற்பாடுகளிளேயே தங்கியுள்ளது. இயற்கை எல்லா நாட்களும் பொறுக்காது, இயற்கை எல்லா அழிவுகளையும் தாங்காது, அது பிரதிசெயல் காட்டும் போது நாம் மனிதர்கள் எங்கு தான் ஓடி ஒழிய முடியும் என்பது மனிதர்களுக்கே தெரியாது.

Related Articles