Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

ஆழமாகத் தோண்டாதீர்! – இலங்கையின் பாரிய மனிதப் புதைகுழிகள்

சமீபத்தில் ஷங்கரி லா ஹோட்டல் அமைக்கப்படும் இடத்தில் பூமியின் கீழிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித சிதிலங்கள், சதிக் கோட்பாட்டு குட்டையை குழப்பிவிட்டுள்ளது. ஊடகங்களும் இந்த கட்டுமான தளத்தின் கடந்த காலம் குறித்த இரு விடயங்களை வெளிக்கொணர்ந்தன. ஒன்று அது வன்முறைக் காலத்து இராணுவ தளம் என்பது. மற்றையது, அது பிரித்தானியர் காலத்து மயானம் என்பது. ஆனால், இந்தக் கருத்துக்களின் முடிவை பொது மக்களின் கற்பனைக்கு அவை விட்டுவிட்டன. அதிகாரிகள் இது குறித்த முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு, அதன் அறிக்கையை நீதவான் நீதிமன்றத்திடம் ஒப்படைத்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து எம்மிடம் கருத்து வெளியிட்ட புறக்கோட்டை பொலிஸார், மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விவகாரத்தை ஒரு குற்றமாகப் பதிவு செய்வதற்கோ, காலனிய காலத்து வரலாறாக குறிப்பிடுவதற்கோ அல்லது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து விடயமாக குறிப்பிடுவதற்கோ போதிய ஆதாரங்கள் கிடைக்கப் பெறவில்லை என்று குறிப்பிட்டனர். எவ்வாறாயினும், இந்த விவகாரம் பொது மக்களின் ஆர்வத்தைக் கிளறிவிட்டுள்ளது. நம் காலடியில் புதைக்கப்பட்டு, மறக்கப்பட்ட பல கதைகள் இவ்வாறு இருக்கலாம் என்று பலரும் ஆச்சர்யமடைந்துள்ளனர். இக்கட்டுரையில் நாம், இலங்கையில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதை குழிகள் குறித்து விவரிக்கின்றோம்.

மாத்தளை புதைகுழி

மாத்தளை புதைகுழி தொடர்பான குற்றப் புலனாய்வை வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணி. படங்கள் இடமிருந்து வலஞ்சுழியாக Image 1, The Sunday Leader; Image 2, Colombo Telegraph; Images 3 & 4, jvpsrilanka.com

2012 நவம்பர் 25 ஆம் திகதி, மாத்தளை மாவட்ட வைத்தியசாலைக்கு அருகாமையில் ஒரு உயிர்வாயு தொகுதியை பொருத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, அங்கு பணிபுரிந்த வேலையாட்கள் சில மனித எலும்புகளைக் கண்டெடுத்தனர். பின்னர், இந்தப் பகுதியைத் தோண்டுமாறு, மாத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி 2013 பெப்ரவரி ஆகும்போது 155 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை 1950 களில் நிகழ்ந்த சின்னம்மை தொற்றுநோயில் மரணித்தோரின் எலும்புக்கூடுகளே என்று பொலிஸார் வாதிட்டனர். எவ்வாறாயினும், இந்தப் பாரிய புதைகுழி வழமையான பாரிய புதைகுழிகள் போன்றே காட்சியளித்தன. எலும்புக்கூடுகள் அனைத்தும் ஒவ்வொன்றின் மேலாக அடுக்கப்பட்டும், வரிசையாகவும் இருந்தன. இந்த எலும்புக்கூடுகள் 1986-1990 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியைச் சேர்ந்தவை என தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் சோமதேவ தெரிவித்திருந்தார். 1987 இல் தோற்றுப்போன மார்க்ஸிஸ புரட்சியின் கிளர்ச்சியாளர்களான மக்கள் விடுதலை முன்னணியினர் மாத்தளை மாவட்டத்தில்தான் பதுங்கியிருந்தனர் என்பது பிரபலமானதாகும். எனவே, இந்தப் புதைகுழிக்கும், இராணுவத்துக்கும், கிளர்ச்சியை அடக்கிய சட்டத்துக்குப் புறம்பான கொலைகளுக்கும் இடையில் மிக இலகுவான தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. எனவே, குற்றவியல் விசாரணை நடாத்தப்பட்டு, அதன் முடிவுகள் முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி அழைப்பு விடுத்தது.

பொதுவாக அரச ஊழல்களின்போது எப்போதும் நடப்பதுபோன்றே, இந்த பரபரப்பான விடயம் குறித்தும் ஜனாதிபதி விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டது. இக்குழுவில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ. இமாம், முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி பந்துல அதபத்து மற்றும் முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக கிதுலேகொட ஆகியோர் உள்ளடக்கப்பட்டனர். இக்குழுவானது 156 சாட்சிகளிடமிருந்து ஆதாரங்களைச் சேகரித்ததோடு, சீனாவிலுள்ள ஒரு ஆய்வுகூடத்திலிருந்து ஆய்வறிக்கைகளையும் பெற்றுக்கொண்டது. அத்தோடு, அமெரிக்காவின் மியாமியிலுள்ள ரேடியோகாபன் திகதியிடலில் நிபுணத்துவமுள்ள பீடா எனலிடிக் என்ற நிறுவனத்திடமிருந்தும் ஆய்வறிக்கையைப் பெற்றுக்கொண்டது. இறுதியில் இக்குழுவானது தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை நிறைவு செய்தது. 2015 தேர்தல் பிரசாரங்கள் தீவிரமடைந்தபோது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் இந்தக் குழுவின் அறிக்கையை கிடப்பில் போட்டு, இந்த அறிக்கையிலுள்ள விடயங்களை பொது மக்களிடமிருந்து மறைத்தது.

2015 இல் அரசாங்கம் மாறியபோது, இக்குழுவானது அதன் அறிக்கையை மீளவும் திறந்தது. எவ்வாறாயினும், அது 1950 களது கருதுகோள்களை நிலைநிறுத்தி, அது ஒரு குற்றம் நடைபெற்ற பாரிய புதை குழி என்ற குற்றச்சாட்டுக்களை புறக்கணித்தது. அதேநேரம், ஆய்வுகளுக்காக தவறான எலும்புக்கூடுகள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்த தொல்பொருள் ஆய்வாளர் சோமதேவ, இந்த அறிக்கையின் கண்டறிதல்கள் சர்ச்சைக்குரியன என்று தெரிவித்தார்.

துரையப்பா விளையாட்டரங்கு புதை குழி

அப்போது, யாழ்ப்பாணமானது தமிழீழ விடுதலைப்புலிகள், பின்னர் இந்திய அமைதிப் படை, பின்னர் இலங்கை இராணுவம் என்று கைமாறிச் சென்றுள்ளது. இக்காலத்தில் குறிப்பிட்டதொரு காலப் பகுதியில் ஒவ்வொரு தரப்பினரதும் அதிகாரத்தின் கீழ் யாழ்ப்பாணம் இருந்துள்ளது. படம் : Getty Images/Doug Curran

1999 ஏப்ரல் மாதம், யாழ்ப்பாணத்திலுள்ள துரையப்பா விளையாட்டரங்கில்  ஆடை மாற்றும் அறைகளைக் கட்டுவதற்கான அத்திவாரம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டிருந்த கட்டுமானப் பணியாட்கள், மனித சிதிலங்களைக் கண்டெடுத்தனர். இந்த இடம் தோண்டப்பட்டதில், இரு சிறுவர்களது எலும்புக்கூடுகள் உட்பட மொத்தம் 25 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. ஒரு எலும்புக்கூட்டின் கைகள் கட்டப்பட்டிருந்தன. ஒரு குழந்தையின் எலும்புக்கூட்டில் செம்பு வளையல் காணபட்டது. இந்தப் புதை குழியின் ஆதாரங்கள் சந்தேகத்திற்கிடமற்றவையாக இருந்தன. அது ஒரு குற்றம் நடந்த இடமாக இருந்தது.

இந்தப் புதை குழி பற்றிய செய்தி நாடெங்கும் பரவியது. நாட்டில் ஒரு வகை முரண் உணர்வு நிலவியது. தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தின் தமிழ் மேயரான துரையப்பாவின் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த விளையாட்டரங்கானது, நீண்ட காலமாக ஈழப் போராட்டத்தைக் கடந்து வந்துள்ளது. ஒரு முழுமையான யுத்தத்தின் பின்னர் அரசாங்கம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர், நல்லிணகத்துக்கான சைகையாக இந்த விளையாட்டரங்கை சீரமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (The University Teachers’ for Human Rights – UTHR) என்ற அமைப்பு, காணாமலடித்தல் மற்றும் பொறுப்புடைமை தொடர்பில் தயாரித்த விசேட அறிக்கையில், இந்த எலும்புக்கூடுகள் 1980 காலப் பகுதியைச் சேர்ந்தாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாதமானது இந்த விவகாரத்தை சந்தேகத்துக்குட்படுத்துகின்றது. அப்போது, யாழ்ப்பாணமானது தமிழீழ விடுதலைப்புலிகள், பின்னர் இந்திய அமைதிப் படை, பின்னர் இலங்கை இராணுவம் என்று கைமாறிச் சென்றுள்ளது. இக்காலத்தில் குறிப்பிட்டதொரு காலப் பகுதியில் ஒவ்வொரு தரப்பினரதும் அதிகாரத்தின் கீழ் யாழ்ப்பாணம் இருந்துள்ளது.

மன்னார் புதை குழி

இந்த எலும்புக்கூடுகள் ஆடைகள் இன்றிக் காணப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த அவர், இந்த சடலங்கள் வழமையான இறுதிக் கிரியைகளுடன் அடக்கப்பட்டிருக்காது என்று குறிப்பிட்டிருந்தார். படம் : Reuters

2013 டிசம்பர் மாதம், மன்னாரில் திருகேதீஸ்வரன் கோயிலுக்கு அருகாமையில் பாதையில் நீர் குழாய்களைப் பதித்துக்கொண்டிருந்த வேலையாட்கள் மூன்று மனித எலும்புக்கூடுகளைக் கண்டெடுத்தனர். பின்னர் மேற்கொண்ட விசாரணைகளின்படி, 37 சது மீற்றர் பரப்பளவு கொண்ட பகுதியினுள் 5 மீற்றர் ஆழத்தில், 80 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த எலும்புக்கூடுகளின் மேற்பகுதியானது கட்டுமான வேலைகளில் ஈடுபட்டு வந்த பெகோ இயந்திரங்கள் காரணமாக சேதமடைந்திருப்பதாக சட்ட வைத்திய அதிகாரி தனஞ்சய வைத்தியரத்ன தெரிவித்திருந்தார்.

இந்த எலும்புக்கூடுகள் ஆடைகள் இன்றிக் காணப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த அவர், இந்த சடலங்கள் வழமையான இறுதிக் கிரியைகளுடன் அடக்கப்பட்டிருக்காது என்று குறிப்பிட்டிருந்தார். அட்டூழியங்களில் ஈடுபட்டதாக அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக் கொண்டிருந்ததன் பின்னரே, இந்த மனிதப் புதை குழி கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் புதை குழியானது, தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இந்தப் பகுதி இருந்தபோது அமைக்கபட்டிருப்பதாக அரசாங்கம் வாதித்தது. அதேநேரம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஊடகங்களோ, இந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட புதை குழியானது, இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த காலப் பகுதியில் காணாமல் போனரின் சடலங்களைக் கொண்டிருக்கின்றது என்று வாதிட்டன.

ஆனால், 2014 ஏப்ரல் மாதம், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் செனரத் திசாநாயக்க முன்வைத்த அறிக்கையுடன், அதுவரை நிலவிய அனைத்துக் கருத்துக்களும் தலைகீழாக மாறின. அதாவது, இந்தப் புதை குழியானது 1930 களில் காணப்பட்ட ஒரு சாதாரண மயானமே என்று அந்த அறிக்கை கூறியது. எவ்வாறாயினும், 2015 இல் இந்தப் புதைகுழிக்கு அண்மையில் இன்னுமொரு பாரிய மனித புதை குழி கண்டுபிடிக்கப்பட்டது. 2015 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, இந்த இரு புதை குழிகள் குறித்தும் புதிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

மிக ஆழமாகத் தோண்டாதீர்!

வன்முறைகள், மலிந்துபோன மரணங்கள், வெகுஜன புள்ளிவிபரங்கள், முட்டுக்கட்டை விசாரணைகள், கடுமையான ஆணைக்குழுக்கள் என்று இவை தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இரு மார்க்ஸிஸ கிளர்ச்சிகளிலிருந்தும், முப்பது வருட யுத்தத்திலிருந்தும் தப்பிப் பிழைத்துள்ள இலங்கைக்கு, மறதிதான் சமாளிக்கும் பொறிமுறையாக அமையும். எவ்வாறாயினும், சுய ஏமாற்றுக்கும் ஒரு பெறுமதி உள்ளது. புதைக்கப்பட்ட இரகசியங்கள் மீது நாம் கட்டடங்கள் கட்டத் தொடங்குவதானால், அநேகமாக நாம் ஆழமாகத் தோண்டாமலிருக்கக் கற்றுக்கொள்வோம்!

ஆக்கம் : ரவிஷான்

தமிழில் : அஷ்கர் தஸ்லீம்

Related Articles