குப்பைகளில் மாண்ட உயிர்கள் – மீத்தொட்டுமுல்ல

ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் காலத்துக்குக் காலம் பல பேசுபொருட்களை கடந்து வருவதும், அவை அடுத்தடுத்த புதிய பேசுபொருட்களால் மறக்கடிக்கப்படுதலும், சமூகப் பிரச்சினைகள், தீர்வுகள் எட்டப்படாமலே ஊடகங்களின் பார்வையிலிருந்து காணாமல் போவதுவும் இன்று சர்வ சாதாரணமாக மாறிவருகிறது. அந்த கலாச்சாரத்தில் இன்று மற்றுமொரு பேசுபொருளாக மாறி நாளடைவில் காணமல் போய்விடுமோ என்ற அச்சத்தை எம்முள் ஏற்படுத்தி நிற்கிறது மீத்தொட்டுமுல்லை குப்பை மேட்டின் சரிவும், அது தொடர்பான அனர்த்தங்களும்.

மீத்தொட்டுமுல்ல குப்பை மேடு (Roar/Nazly Ahamed)

நூற்றுக்கணக்கான வீடுகளை சேதமடையச் செய்யுமளவுக்கு பாரிய குப்பை மேடொன்று இருப்பதை நம்மில் பலபேர் கவனித்திருப்பதில்லை. இருந்தும் அன்றாடம் 1500 தொன்களுக்கும் அதிகமான கொழும்பு நகரக் கழிவுகளை உயர உயரத் தாங்கி நிற்கின்றது இந்த மீத்தொட்டுமுல்ல.

கடந்த சில மாதங்களாக திண்மக் கழிவு சேகரிப்பில் மாற்றங்கள் ஏற்பட்டதை நாமறிவோம். உக்கலடையக்கூடிய உணவுக் கழிவுகள், கடதாசிகள், பொலித்தீன், கண்ணாடி இப்படி திண்மக் கழிவு சேகரிப்பில் மக்களது பங்களிப்பும் அமுல்படுத்தப்பட்டது. உணவுக் கழிவுகளை சேகரிப்பதிலும், அதனை உரிய முறையில் அகற்றுவதிலும் அன்றாடம் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் நாம், ஒரு நாள் தாமதம் ஏற்பட்டாலும் துர்வாடையை பொறுக்க முடியாமல் அவதிப்படுகிறோம். விசனப்படுகிறோம். ஆனால், முழுக் கொழும்பு மாநகரின் குப்பைகளையும் அவற்றால் ஏற்படும் குறுங்கால நீண்டகால பாதிப்புகளால் அன்றாடம் சகித்து வாழும் மக்கள் பற்றி அரசும் நாமும் பாராமுகமாக இருந்ததன் விளைவே இன்று பல உயிர்களைக் காவுகொண்டிருக்கிறது.

உறவுகளை இழந்து தவிக்கும் மக்கள் (Roar/Shaahidah Riza)

ஆரம்ப காலத்தில் ப்ளூமெண்டல் பகுதியில் சேகரிக்கப்பட்ட கொழும்பு நகரத் திண்மக் கழிவுகள் பின்னாளில் மீதொட்டுமுல்லை பகுதிக்கு மாற்றப்பட்டது. அதுவரை ஒரு சிறு பிராந்தியத்தின் கழிவு சேகரிப்புத் தலமாக இருந்த மீத்தொட்டுமுல்ல மொத்தக் கொழும்பு நகரின் திண்மக் கழிவுகளையும் சுமக்கத் துவங்கியது. 2009 இல் இரண்டு ஏக்கர்களில் மட்டுப்படுத்தக்கோரி நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட இவ்விடம் இன்று பல ஏக்கர்கள்  தூரத்திற்கு வளர்ந்து நிற்கின்றது.

வெளியூர்களிலிருந்து கொழும்புக்கு பயணிக்கும் பொழுது, கொழும்பு நகரை அன்மித்ததை கட்டியம்கூறி அறியப்படுத்துவது இக்குப்பைமேடுகள்தாம் என்றால் மிகையல்ல. தூக்கத்தில் இருப்பவர்களைத் தட்டியெழுப்பி பயணம் முடியப்போவதை அறியத்தரும் உன்னத சேவையையும் காலாகாலமாக இது செய்துவருகிறது. அந்த ஓரிரு நிமிடங்களுக்கே அவ்வாடையை எம்மால் தாங்க முடிவதில்லை, இன்று அக்குப்பைகளுக்குள் சிக்கி, மூர்ச்சையாகி இன்னும் இனங்காணப்படாமல் புதையுண்டு கிடக்கும் உடல்களின் இழப்புக்கு நாம் அனைவருமே பொறுப்பேற்கவேண்டியுள்ளது.

மீட்புப் பணியில் ஈடுபடும் படையினர் (Roar/Christian Hutter)

முப்பத்திரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் பத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். சுமார் நூறு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. இவைதான் இதன் விளைவுகளா? இவை மட்டும்தான் விளைவுகளா? இக்கேள்விக்கு தெளிவான பதில் “இல்லை” என்பதே!

மீத்தொட்டுமுல்லை மக்கள் எதிர்கொண்டுவரும் சூழலியல் பிரச்சினைகள்.

300 மீட்டர்கள் உயரம்வரை சேகரிக்கப்பட்டிருக்கும் பல ஆயிரம் தொன்கள் குப்பையின் கீழ் வாழும் மக்கள் எதிர்கொள்ளத்தகுந்த சுகாதார ரீதியான பிரச்சினைகள் வெளிப்படையாக அனுமானிக்கக்கூடியவையே. இருந்தும் காலாகாலமாக அம்மக்கள் இவ்வாறான சூழலியல் நெருக்கடிகளுக்கும் உயிர் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் வாழ்ந்து வருவது ஏற்கமுடியாத ஓர் அநீதி என்பது தெளிவு.

குப்பைகள் தேங்கிய கழிவுநீர் கால்வாய்களில் முறையான சுத்திகரிப்பு வழமை இல்லாமையால் மழைநீர் வழிந்தோட வழியின்றி குப்பைகள் சரிந்து வீழ்வதும், தேங்கிய நீர் டெங்கு நுளம்புகளுக்கு வாடகையற்ற வாழிடமாக இருப்பதுவும், 60% சதவீதமான மக்கள் மழைக் காலங்களில் டெங்கு நோய்த் தொற்றுக்கு ஆளாவதுவும், கழிவுகள், குப்பைகள் காரணமாக அடிக்கடி மக்கள் கிருமித் தொற்றுக்கு இலக்காவதும், ஈற்றில் இவ்வாறான உயிராபத்துக்களை சுகிப்பதுவும் ஈடுகட்டவொண்ணா அவலங்கள்.

மேடாக உயர்ந்து நிற்கும் குப்பைகளின் இடையே இடிபாடுகள் (Roar/Christian Hutter)

இனி

இப்பாரிய சேதம் சடுதியாக அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்காவிடின் பலகாலமாக அம்மக்கள் வீதியிலிறங்கி செய்த போராட்டங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் வெளிச்சத்துக்கு வராமலே போயிருக்கும். தமது வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தாமாகவே வெளிப்பட்டு போராட்டங்களை காலத்துக்குக் காலம் நடத்திவந்தும் அவர்களது கோரிக்கைகள் நிவர்த்திசெய்யப்படாமலே இருந்துவந்துள்ளன. மீழ்சுழற்சி, சக்தி உருவாக்கம், உர உற்பத்தி என பல்வேறுபட்ட திட்டங்களை அரசு முன்மொழிந்தாலும் அவை செயல்வடிவம் பெறாமலே காலம் கடக்கிறது.

சேதமடைந்த வீட்டின் பகுதி (Roar/Christian Hutter)

குப்பைகளுக்குள் காணமல் போன அப்பாவி மக்களை மீட்பதில் ஈடுபட்டிருக்கும் இவ்வேளையில் குப்பைகளை கொட்டுவதற்கு மாற்று வழி தேடுவது காலம் கடந்த ஞானமே.

திண்மக் கழிவு சேகரிப்பில் அரசுடன் இணைந்து பொதுமக்களும் தங்களது ஒத்துழைப்பை வழங்குவது இன்றியமையாதது. உரிய முறையில் கழிவுகளை சேகரிப்பது அதனை உரிய முறையில் மீழ்சுழற்சி செய்வதில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நிதர்சனமான உண்மை. அத்தோடு இவ்வனர்த்தம் ஏற்படுத்தியிருக்கும் விழிப்புணர்வு வெறுமனே ஊடகங்களுக்கும் சமூக வலைத்தளங்களுக்கும் அன்றைய காலகட்டத்தின் பேசுபொருளாக மட்டும் இருந்து மறைந்துவிடாது, ஆக்கபூர்வமான நீண்டகால தீர்வுக்கு வழிவகுக்கும் வகையில் செயற்படுத்தப்படுவது காலத்தின் தேவை.

Related Articles