விமானப் பயணங்களில் தவறவிடப்பட்ட பொதிகளுக்கு என்னவாகும்?

உலகம் முழுவதும் சுற்றிவரவேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய ஆசைதான். அதனை நிறைவேற்றிக்கொள்ள பலரும், பலநாட்களாக திட்டம் வகுத்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

(elal.com)

அவ்வாறு அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்த்து, பயண நாளை திட்டமிட்டு, பயணப்படுகையில் நாம் கொண்டு செல்கின்ற நமது பயணப் பொதி தொலைந்துவிட்டால் அல்லது சேதமாகிவிட்டால் ஒட்டுமொத்த கனவும், பயணமும் சுக்குநூறாக உடைந்துவிடாதா?

குறுகிய தூரப்பயணம் என்றால், ஏதேனும் ஏற்பாடுகளை செய்துகொள்ளலாம். ஆனால், பல்லாயிரம் கிலோமீட்டர்கள் தாண்டி விமானத்தில் பயணப்படுபவர்கள் பொதிகளை தொலைத்துவிட்டால் என்ன செய்துகொள்ள முடியும்?

பயணங்களை திட்டமிட்டுக்கொள்ளும்போது, அதுதொடர்பில் எதிர்கொள்ளக்கூடிய இடநேர்வுகளுக்கு எப்படி முகம்கொடுப்பது என்பது தொடர்பில் குறைந்தது அறிந்திருப்பதாவது அவசியமாகிறது. அந்த வகையில், விமானப்பயணங்களின்போது, நீங்கள் கொண்டு செல்லும் பயணப்பொதிகள் தொலைந்துவிட்டால் அல்லது சேதமடைந்தால் அதற்கு எவ்வகை இழப்பீடுகளை அல்லது மாற்றீடுகளை பெற்றுக்கொள்ளமுடியும் என்பதனை அறிந்திருத்தல் அவசியமாகும்.

 

(pixabay.com)

சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொன்றியல் வழக்கம் (Montreal Convention) பிரகாரம் முறையாக சரிபார்க்கப்பட்டு விமான நிறுவனத்தினால் அனுமதிக்கப்பட்ட பயணப்பொதிகளுக்கு ஏதேனும் நடந்தால், குறைந்தது வரையறுக்கப்பட்ட பொறுப்பாக 1,113 பவுண்ட்ஸ் ஒவ்வொரு பயணிக்கும் வழங்கப்படல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, விமானத்தில் பயணப்படுகின்ற ஒவ்வரு பயணியும் தமது பயணப்பொதிகளை தவறவிட்டால், தொலைத்துவிட்டால் அல்லது சேதமடைந்திருப்பதை அவதானித்தால் என்ன செய்யவேண்டும் என்பதனை அறிந்திருப்பது அவசியமாகிறது.

உடனடியாக செயல்படல்

விமான பயணங்களை மேற்கொள்ளும்போது, நீங்கள் பயணப்படும் ஒவ்வொரு விமான நிறுவனமுமே பரிசோதிக்கப்பட்ட உங்களின் பயணப்பொதிகளுக்கு பொறுப்புடையதாக இருக்கும். எனவே, பயணவேளையில் ஏதேனும் பொதிகளை தொலைத்துவிட்டால் அல்லது சேதமடைந்தால் உடனடியாக உங்கள் விமான நிறுவனத்துக்கு தெரியப்படுத்துங்கள். ஒவ்வொரு விமானநிலையத்திலும், நீங்கள் பயணப்படுகின்ற விமான நிறுவனத்தின் பிரதிநிதிகள் நிச்சயமாக இருப்பார்கள். எனவே, அவர்களை தொடர்புகொள்ளுங்கள்.

முறைப்பாட்டை ஆவணப்படுத்தல்

(pixabay.com)

என்னதான் உங்கள் விமான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களே முக்கியம் என சேவையாற்றினும், உங்கள் முறைப்பாடுகளை முடிந்தவரை ஆவணப்படுத்த முயற்சி செய்யுங்கள். பொதிகள் தொடர்பிலான முறைப்பாட்டுக்கென ‘PIR’ எனப்படுகின்ற விண்ணப்பப் படிவத்தை பயன்படுத்துங்கள். இந்தப் படிவம் மூலமாக, பொதிகள் தொடர்பிலான இழப்பீட்டை மிக விரைவாக பெற்றுக்கொள்ள முடியும். இல்லாவிடின், வாய்மூல முறைபாடுகளை கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது கடினமானதாக அமையும்.

பொதிகள் சேதமடைந்திருப்பின்,

விமானநிலையத்திலேயே உங்களுடைய பொதிகள் சேதமடைந்திருப்பதை நீங்கள் அவதானித்திருப்பின், அதற்கான இழப்பீடை பெறுவதாக முடிவுசெய்திருப்பின், குறைந்தது 7 நாட்களுக்குள் உங்கள் விமான நிறுவனத்துக்கு ‘PIR’ படிவத்தோடு முறைப்பாட்டை பதிவு செய்யமுடியும். எவ்வகை காரணங்களினால் சேதம் ஏற்பட்டது? இழப்பீட்டை வழங்கும் வகைக்குள் சேதம் உள்ளதா? என்பதன் அடிப்படையில் உங்களுக்கான இழப்பீட்டை அல்லது இழப்பீடு வழங்க முடியாமைக்கான காரணத்தை விமான நிறுவனம் வெளிப்படுத்தும். அதனடிப்படையில், மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

பொதிகள் தொலைந்திருப்பின்

உங்களுடைய பயணப்பொதிகள் முழுமையாக தொலைந்திருப்பின், அது தொடர்பிலும் விமான நிறுவனத்துக்கு எவ்வித தாமதமுமின்றி அறிவிக்க வேண்டும். முடிந்தவரை, பயணப்பொதிகளை புகைப்படம் பிடித்து வைத்திருப்பது மேலதிக அனுகூலமாகும். இது, தொலைந்த பொதிகள் தொடர்பில் நடவடிக்கைகளை துரிதபடுத்த மேலதிக வசதியாக இருக்கும்.

(pixabay.com)

காலக்கெடுகள் தொடர்பில் அவதானம்

பொதிகள் தொடர்பிலான முறைப்பாடுகளை செய்வதற்கான காலக்கெடுகள் தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும். பொதிகளின் சேதம் மற்றும் தொலைவு தொடர்பில் 7 நாட்களுக்குள் முறையான முறைப்பாட்டை பதிவு செய்யவேண்டும். இல்லையெனில், விமான நிறுவனம் அதற்கான பொறுப்பை ஏற்காது. அதுபோல, உங்களுடைய பயணப்பொதிகள் ஏதேனும் விமான நிலையத்தில் தவறவிடப்பட்டு, அது உங்களை வந்தடைய காலதாமதமாகும் எனின் (குறைந்தது 2 நாட்கள்), குறித்தகாலப்பகுதியில் அதற்கான ஏற்பாடுகளை விமான நிறுவனம் வழங்கவேண்டியதும் அவசியமாகும்.

விதிமுறைகள் தொடர்பில் அவதானமாக இருத்தல்

என்னதான், அங்கீகரிக்கப்பட்ட பொதுவிதிமுறைகள் இருப்பினும், நீங்கள் பயணிக்கும் குறிப்பிட்ட விமான நிறுவனங்களுக்கென தனியான விதிமுறைகள் நிச்சயமாக இருக்கும். எனவே அவை தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டியது அவசியமாகும். உங்களுக்கான பயணசீட்டை கொள்வனவு செய்யும்போது, நீங்கள் தெரிந்தோ, தெரியாமலோ அவர்களது விதிமுறைகளையும் ஏற்றுக்கொண்டுதான் கொள்வனவை மேற்கொள்கிறீர்கள். எனவே, அவர்களது பிரத்தியேக விதிமுறைகள் தொடர்பிலும் அவதானமாக இருக்கவேண்டும்.

அனேகமாக விமான நிறுவனங்கள் “Essential Items” எனப்படுகின்ற அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்படுகின்ற சேதம் மற்றும் தொலைவுக்கான செலவை முழுமையாக ஏற்றுக்கொள்ளும். ஆனால், இந்த அத்தியாவசிய பொருட்கள் என்கிற பதத்தினுள் எவ்வகை பொருட்களை விமான நிறுவனங்கள் உள்ளடக்குகின்றன என்பது தொடர்பில் அறிந்திருப்பதும் அவசியமாகிறது. இது, ஒவ்வொரு விமான நிறுவனத்துக்கும் ஏற்றவகையில் மாற்றமடைய கூடும்.

இழப்பீட்டுக்கு ஆவன செய்தல்

(pixabay.com)

குறிப்பாக, தொலைந்ததாக இறுதி செய்யப்படுகின்ற உங்களின் பொதிக்கு, விமான நிறுவனம் பொறுப்பானபட்சத்தில் இழப்பீட்டை பெறுவதற்கு உரிமையுடையவர்களாக நீங்கள் இருப்பீர்கள். அப்போது, உங்களுடைய பொதியில் எத்தகைய பொருட்கள் உள்ளடக்கபட்டிருந்தன என்பது தொடர்பில் முழுமையாக விமான நிறுவனத்துக்கு வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இதன்போது, ஏதேனும் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களின் பற்றுசீட்டை வைத்திருப்பின், அதனை சமர்பிப்பது அவசியமாகும்.

இழப்பீடுகள் பெரும்பாலுமே பணமாக செல்லுத்தபடுவதாகவே முடிவு செய்யப்படும். சில சந்தர்ப்பங்களில் உடனடி தீர்வுக்காக உறுதிசீட்டுக்கள் (Vouchers) வழங்கப்படுவதும் நடைமுறையில் உள்ளது. பொதிகள் தாமதமடையும் சந்தர்ப்பத்தில், அதற்கான காலத்தையும் இழப்பீட்டையும் கணிப்பிட்டு அதற்கு சமமான தொகை வழங்கப்படும். பொதிகள் தொலைந்தமை உறுதி செய்யப்படின், அதன் பெறுமதிக்கு சமமான பணம் அல்லது விதிமுறைக்குட்பட்டவகையில் இழப்பீடுகள் வழங்கப்படும்.

இழபீட்டுக்கான முறைப்பாடுகள் செய்தல் எல்லையான குறைந்தபட்சம் 7 நாட்களில் முறைப்பாட்டை மட்டுமே செய்திருப்பின் அடுத்துவரும் 21 நாட்களுக்குள் விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மூலமாக, ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியமாகிறது. சில சமயங்களில் உங்களுக்கான இழப்பீட்டை பெற்றுக்கொள்ள மாதங்களை கூட கடக்கநேரிடலாம் என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள்.

பயண காப்புறுதி தொடர்பில் அவதானமாக இருத்தல்

ஒவ்வரு சமயத்திலும் பயணச் சீட்டுக்களை கொள்வனவு செய்யும்போது, பயணக் காப்புறுதி தொடர்பில் பயணிகளுக்கு விபரம் அளிக்கப்படும். மேலதிக செலவு என நினைக்கும் பல பயணிகள் இதனை பெற்றுக்கொள்ளுவதில்லை. ஆனால், பயணக்காப்புறுதியை பெற்றுக்கொள்ளும்போது, பொதிகள் தொடர்பிலான இழப்பீட்டை பெற்றுக்கொள்ளவும் பேருதவியாக இருக்கும். ஆனாலும், காப்புறுதி தொடர்பிலான நிபந்தனைகளை கவனத்தில் கொள்ளுவது அவசியமாகிறது. காரணம், சில காப்புறுதிவகை பொதிகளுக்கு காப்புறுதி வழங்குவதில்லை என்கிற நிலைப்பாடும் உள்ளது.

மிகப்பெரிய செலவு, கனவுப் பயணம், வாழ்வின் முக்கிய நினைவு என பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் பயணிக்கின்ற எவருமே இவை தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும். இல்லையெனில், எவ்வகை பயண அனுபவமும் சொர்க்கமாக இல்லாமல் நரகமாகவே மாறிவிடும்.

Related Articles