உலகம் பூராவும் இந்த வருட ஆரம்பத்திலிருந்து எதிர்பாராத பல்வேறு விடயங்கள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில், இந்த மாதத்துக்கான புதிரான நிகழ்வும், உலகத்தின் பார்வையும் கத்தார் நாட்டின் பக்கமாகவே திரும்பி இருக்கிறது. தீவிரவாதத்துக்கு கத்தார் நாடு துணை போகிறது என்கிற மேம்போக்கான கருத்துடன், அந்நாட்டின் மீதான முடக்கல் செயற்பாடுகள் பல்வேறு தரப்பினாலும், பல்வேறு வகையிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மத்திய கிழக்கை தொடர்ந்துமொரு பதற்றமானநிலையில் வைத்திருப்பதன் மூலமாக ஆதாயம் தேடும் நடவடிக்கையா இது? அல்லது உண்மையில் கத்தார் போன்று தீவிரவாதத்துக்கு துணைபோவோரை எச்சரிக்கும் உண்மை செயற்பாடா? என எல்லோரையும் சிந்திக்க வைக்கிறது இந்த தடையை தொடர்ந்து இடம்பெறும் விடயங்கள்.
(livetradingnews.com)
உண்மையில் நடந்தது என்ன ?
சவூதி அரேபியா, ஜக்கிய அரபு நாடு, எகிப்து மற்றும் பக்ரைன் ஆகிய நாடுகள் இவ்வாரத்தின் ஆரம்பத்தில் கத்தார் நாட்டுடன் தமது இராஜதந்திர உறவுகளை உத்தியோகபூர்வமாக துண்டித்துக்கொள்வதாக சொன்னதுடன் இந்த நடவடிக்கைகள் ஆரம்பித்திருந்தது. இவர்களது அறிவிப்பை தொடர்ந்து எகிப்து, எமன், லிபியா மற்றும் மாலைதீவுகளும் தமது உறவுகளை துண்டித்துக்கொள்வதாக அறிவித்தது.
அத்தோடு, இந்த நடவடிக்கைகளுக்கு புடம்போட்ட சவூதி அரேபிய அரசானது தனது தரைவழி, ஆகாயமார்க்க, கடல்வழி எல்லைகளை கத்தார் அரசும் அதன் பிரதிநிதிகளும் பயன்படுத்த தடைவிதிப்பதாக அறிவித்தது. அத்துடன், சவூதி, ஜக்கிய அரபு நாடு,பகரைன் என கத்தாரை சுற்றியுள்ள நாடுகளும் கத்தாரின் இராஜதந்திர அதிகாரிகளை 48 மணிநேரத்தில் வெளியேற உத்திரவிட்டதுடன், கத்தாரி பிரஜைகளுக்கு நாட்டை விட்டு வெளியேற இரண்டு வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எதனால் தடை?
கத்தார் நாடு தொடர்ச்சியாக தீவிரவாத அமைப்புக்கள் என இனம்காணப்பட்ட அல்கெய்தா உட்பட்ட பல்வேறு அமைப்புக்களுக்கு ஆதரவளித்து வருவதன் காரணமாகவும், சர்வதேச அளவில் இடம்பெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல் கத்தாரின் பங்களிப்பின் விளைவாகவும் இடம்பெற்றிருக்ககூடும் என்ற யூகத்தின் காரணமாகவும் மத்திய கிழக்கின் மற்றுமொரு சர்வாதிகார நாடான சவூதி அரேபியா நாட்டினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் விளைவே இத்தடைகளாகும்.
தடையின் பின்னணி என்ன ?
இந்த தடையின் பின்னணியை அலசவேண்டுமாயின், நீண்டகாலமாக அரபு நாடுகளுக்குள் யார் முதன்மையானவன் அல்லது யார் தலைவன் என்கிற போட்டி ஆரம்பித்த காலத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கும். ஆனால், அண்மையில் டொனால்ட் ட்ரம்ப் சவூதி உட்பட அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதன் பின்னதாக இந்த நிகழ்வுகள் உச்சம் பெற்றுள்ளமையும், சவூதியின் பகைமை நாடான ஈரான் நாட்டுக்கு மிகப்பெரும் பங்காளராக உள்ள கத்தாரை குறிவைத்து சவூதி தனது ஆட்டத்தை ஆரம்பித்து உள்ளமையும் கவனிக்க வேண்டிய விடயமாக மாறியிருக்கிறது.
2011ம் ஆண்டு ஆரம்பித்த அரபிய வசந்தம் என அழைக்கப்பட்ட புரட்சிக்கும் கத்தாரும் அதன் அல்ஜசீரா ஊடகமும் ஒரு பின்புலமாக இருந்ததால், சவூதியும் அதனை சார்ந்த நாடுகளும் சமயம் பார்த்து காய்நகர்த்தியிருப்பதாகவும் நோக்கப்படுகிறது.
அதேவேளை, ரஷ்யாவின் ஹக்கர்ஸ் தவறான செய்திகளை, உண்மை என நம்பவைக்கக்கூடிய வகையில் பரப்பியமையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும் என ஒரு சாராரால் நிறுவப்படுகிறது. அதாவது, கத்தார் தீவிரவாத அமைப்புகளுக்கு மறைமுகமாக உதவிசெய்கின்றது என்கிற செய்தியை ரஷ்ய ஹக்கர்கள் நுண்ணிய அரசியல் முறையில் பரப்பியிருக்கக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது.
2011ம் ஆண்டு ஆரம்பித்த அரபிய வசந்தம் என அழைக்கப்பட்ட புரட்சிக்கும் கத்தாரும் அதன் அல்ஜசீரா ஊடகமும் ஒரு பின்புலமாக இருந்ததால், சவூதியும் அதனை சார்ந்த நாடுகளும் சமயம் பார்த்து காய்நகர்த்தியிருப்பதாகவும் நோக்கப்படுகிறது. (stackpathdns.com)
மத்தியகிழக்கு நாடுகளான கத்தார் மற்றும் சவூதி அரேபியா ஒன்றோடு போட்டிபோட்டுக் கொள்ளக்கூடியவகையில் செல்வச்செழிப்பாக உள்ளபோதிலும், படைபலம் உட்பட ஏனைய விடயங்களில் ஒன்றுக்கு ஒன்று ஏதோவொருவகையில் ஏனையவர்களுக்கு தலையிடியாகவே உள்ளார்கள்.
உதாரணமாக, இருநாட்டு படைபலத்தினையும் எடுத்துக்கொண்டால், கத்தார் நாடுதான் மத்தியகிழக்கில் மிகச்சிறிய படைபலத்தை கொண்ட நாடாக இருக்கிறது. கத்தாரின் வருடாந்த படைபல நிதி ஒதுக்கீடானது சவூதியின் மொத்த நிதி ஒதுக்கீட்டில் வெறும் 3.4%மாகும். இது உண்மையில், கத்தாரை புறக்கணிக்கும் ஏனைய மத்தியகிழக்கு நாடுகளிலும் பார்க்க குறைவான தொகையே! இருந்தாலும், கத்தாரின் படைபலம் ஏனைய நாடுகளுக்கு எவ்வாறு சவால் விடுக்கிறது எனில், அமெரிக்காவின் மிகப்பெரும் படைத்தளங்களில் ஒன்று கத்தாரில் உள்ளது. இதனை முழுமையாகவே கத்தார் அரசே அமெரிக்க படைகளுக்கு அமைத்துக்கொடுத்துள்ளது என்பதுடன், இதில் அதிகபட்சமாக சுமார் 10,000 அமெரிக்க படையினர் இருக்கிறார்கள். உண்மையில் இதனை எல்லாம் பார்த்தால் ஒருவகை முரண்நகையாகவே இருக்கும். சவூதி அமெரிக்க ஆதரவு நாடாக இருந்துக்கொண்டு கத்தாரை எதிர்க்க, அமெரிக்காவின் இந்நாள் ஜனாதிபதியும் தனது சமூகவலைத்தளத்தில் அதற்கு ஏற்றால்போல கீச்சுக்களை பதிவு செய்துக்கொண்டு இருக்க, கத்தாரோ அமெரிக்காவின் மிகப்பெரும் படைத்தளத்தை தன்னகத்தே கொண்டு இருக்கிறது. இவற்றை பார்க்கும்போது, சூதாட்டத்தில் நண்பனுமில்லை, எதிரியுமில்லை என்கிற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
இதேபோன்று, இன்றைய கத்தாரை பழிவாங்க மற்றுமொரு உறுதியான காரணமாக சொல்லப்படுவது பலமான ஊடக பங்களிப்பாகும். இன்றையளவில் மத்தியகிழக்கின் குரலாக ஒலிக்கின்ற முன்னணி ஊடகமாக அல்ஜசிரா உள்ளது. கத்தாரை அடிப்படையாகக்கொண்டு இயக்கப்படும் இந்த நிறுவனம் மிகப்பெரிய அளவில் மத்தியகிழக்கு மக்கள் மீதும், சர்வதேச அளவிலும் தாக்கத்தை கொண்டுள்ளது என்பதனை மறுக்க முடியாது. குறிப்பாக, அரேபிய வசந்தம் என்கிற புரட்சி ஏற்படவும், அது மக்களை சென்றடைவதிலும் இதன் பங்களிப்பு முதன்மையானது. எனவேதான் இதனால் பிரதிகூலம் அடைபவர்கள் இதனை ஒடுக்கும் நடவடிக்கையின் ஆரம்பமாகவும் இந்த தடைச் செயலபாடுகள் உற்றுநோக்கப்படுகிறது.
தடையின் விளைவுகள்
கத்தார் நாட்டின் பிரபலமான விமானசேவை தனது செயல்பாடுகளை சவூதி உட்பட இராஜதந்திர உறவுகளை துண்டித்த நாடுகளுடன் நிறுத்திக்கொள்ளுவதாக அறிவித்தது (livetradingnews.com)
இந்த தடையின் விளைவுகளை குறித்த நாடுகளின் பல்தேசிய கம்பனிகளின் செயல்பாடுகளுடன் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும். குறிப்பாக, கத்தாருடனான இராஜதந்திர நடவடிக்கைகளை தடைசெய்வதாக சவூதி அறிவித்ததை தொடர்ந்து, கத்தார் நாட்டின் பிரபலமான விமானசேவை தனது செயல்பாடுகளை சவூதி உட்பட இராஜதந்திர உறவுகளை துண்டித்த நாடுகளுடன் நிறுத்திக்கொள்ளுவதாக அறிவித்தது. அத்துடன், அந்த விமானசேவையின் விமானங்கள் குறித்த நாடுகளின் ஆகாய பரப்பில் பறக்க முடியாது என்பதனால் (கத்தாரை சுற்றியே இந்த நாடுகள் உள்ளமையால்) குறித்த விமானசேவை மாற்று விமானபரப்பை பயன்படுத்தவேண்டிய கட்டாயநிலை ஏற்படுகிறது. இது மேலதிக செலவை அல்லது இழப்பை கொண்டுவருவதாக அமையும். அதுபோல, ஜக்கிய அரபுநாடுகளை அடிப்படையாக கொண்ட எதிகாட் (Ethihad) மற்றும் ப்ளைடுபாய் (Flydubai) ஆகிய விமான நிறுவனங்களும் கத்தாருக்கான சேவையை நிறுத்திக்கொள்ளுவதாக அறிவித்துள்ளது.
இவை மட்டுமல்லாது கத்தாரில் இறக்குமதி செய்யும் உணவில் தட்டுப்பாடு ஏற்படும் என்கிற அச்சம் அதிகரித்ததன் விளைவாக, அவர்களது பங்குச்சந்தையும் சுமார் 8% அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு பிரதான காரணமே, சுமார் 40% உணவு பொருட்கள் கத்தாருக்கு சவூதி வழியாகவே கொண்டுவரப்படுகின்றமை ஆகும்.
தற்போதைய நிலையில், உலகமக்களின் பார்வை மேலும் கத்தார் பக்கமாக திரும்ப காரணம். 2022ம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளை நடாத்தவுள்ள நாடு கத்தார் ஆகும். தற்போதைய நிலையில், உதைப்பந்தாட்ட போட்டிகள் நடாத்த இன்னும் 5 ஆண்டுகள் முழுமையாக இருக்கின்றது. எனவே, மிகவிரைவாக பிரச்சனைகள் தீர்க்கப்படுமானால், உலகக்கிண்ண கால்பந்து போட்டிக்கோ, அதனை அடிப்படையாக்கொண்டு மேற்கொள்ளப்படும் கத்தாரின் சுற்றுலாத்துறைக்கோ பெரிதாக பாதிப்புக்கள் ஏற்படாது. இந்த நிலையில், நீண்டகாலத்தில் மாற்றம் வராதுவிடின், நிச்சயம் கத்தார் பொருளாதாரரீதியான சவால்களை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாக அமையும்.
022ம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளை நடாத்தவுள்ள நாடு கத்தார் ஆகும். (espncdn.com)
கத்தார் நாட்டை பொறுத்தவரையிலும், அவர்களது பிரஜாவுரிமை பெற்ற மக்களை விடவும், வேலை நிமித்தம் குறித்தநாட்டினுள் வாழ்கின்ற மக்களின் தொகையானது அதிகம். எனவே, இந்தத் தடையானது கத்தார் நாட்டில் உள்ள வேலைசெய்யும் தரப்பை பாதிக்கக்கூடும். அதிலும், ஆசிய நாட்டை சார்ந்தவர்கள் மிக அதிகளவில் இங்கு பணியாற்றுவதன் விளைவாக, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆசிய நாடுகளும் கத்தார் தடை தொடர்பில் அவதானமாக செயல்படவேண்டியுள்ளது.
இதனைவிடவும், மத்திய கிழக்கின் மிகப்பெரும் வளமாகவுள்ள எண்ணெய் வளமும், அதன் விலையும் எதிர்பாராதவகையில் அதிகரித்துள்ளது. இது குறுகியகால விளைவா? அல்லது நீண்டகாலத்திற்கு இது இருக்குமா? என்பதனை பொறுத்தே உலகநாடுகள் மீதான பாதிப்பு எவ்வாறு அமையும் என எதிர்வு கூற முடியும்.