நிறுவனப் பதிவுக் கட்டண முறைமைகள் 2017 – ஓர் பார்வை

இலங்கையின் 2016ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில் பல்வேறுவகையான வணிக சலுகைகள் வழங்கபட்ட அதேசமயத்தில் பல்வேறு வகையான கட்டண வசூலிப்புக்களை கொண்ட வரிகளும் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றுள் இலங்கையின் பதிவாளர் திணைக்களத்தில் (Registrar of Companies) பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் வருடம்தோறும் கட்டணம் செலுத்தும் முறையும், நிறுவனங்கள் தமது உரிமையை இரத்து செய்யும்போது அதற்கான கட்டணத்தையும் செலுத்தவேண்டும் என்கிற முறைமையும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது.

(dailymirror.lk)

மேற்கூறிய திட்டங்கள் வரவு-செலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தபட்டதன் பின்பு, 2017ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டமும் வெளியாகிவிட்டது. ஆனால், இன்னும் பலரது எண்ணங்களில் குறித்த கட்டணத்தை செலுத்த வேண்டுமா? இல்லையா? என்கிற ஐயப்பாடு எழுந்தவண்ணமே உள்ளது. இதற்கு அரசு தரப்பிலிருந்து போதியவகை அறிவுறுத்தல்கள் வழங்கப்படாமையும் ஒரு காரணமாகும்.

வருடாந்த பதிவு கட்டணம் (Annual Registration Levy) என்றால் என்ன ?

கடந்தகாலங்களில் இலங்கையில் மிக அதிகமான வணிகங்கள் ஆரம்பிக்கபடுவதுடன், அவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் இயங்காதவையாகவே இருந்து வருகின்றன. இத்தகைய நிறுவனங்களை உழைக்காத நிறுவனங்கள் (Dormant Company) எனலாம் . மேலும் பல நிறுவனங்கள் பெயர் பதிவுசெய்யப்பட்ட செயற்பாடுகளுடன் மாத்திரமே இருக்கின்றன.

இது புதிதாக இலங்கைக்குள் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு பொருத்தமான பெயரை பெறுவதிலோ, பொருத்தமான நிறுவனத்தை உருவாக்குவதிலோ சிக்கல்தன்மையை ஏற்படுத்துகிறது. எனவே, இவ்வாறு உள்ள நிறுவனங்களை இயங்கச் செய்ய அல்லது அவற்றினை முழுமையாக இரத்து செய்யவேயென உருவாக்கபட்டவை. அதுமட்டுமல்லாது, பொருத்தமான முறைமையின்மையால் இலங்கையில் நிறுவனங்கள் பதிவு செய்யய்படுவதும், பின்பு மூடப்படுவதும் அதிகரித்து வருகிறது. எனவே, அவ்வாறான செயல்பாடுகளின் மீது அழுத்தம் ஒன்றை வழங்கி அதனை கட்டுபடுத்தவென ஒருமுறை கட்டணமான நிறுவன வெளியேறல் கட்டணத்தை அறவிடவும் இந்த வருடாந்த பதிவு கட்டணமுறை வரவு-செலவு திட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

வருடாந்த பதிவுக் கட்டணம் எவ்வகை விடயங்களை உள்ளடக்கி உள்ளது?

(ailynews.lk)

வரவு-செலவு திட்ட அறிவிப்புக்கு அமைய, இந்த கட்டணமுறைக்கு பதிவாளர் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட உத்தரவாத நிறுவனங்கள் (guarantee companies), கடல்கடந்த நிறுவனங்கள் (offshore companies) மற்றும் குறித்த ஆண்டில் புதிதாக பதிவு செய்யப்படும் நிறுவனங்கள் (பதிவுசெய்யப்பட்ட முதல் ஆண்டுக்கு மாத்திரம்) தவிர்த்து ஏனைய அனைத்து நிறுவனங்களும் குறித்த கட்டணத்தை செலுத்துவதற்கு ஏற்புடையதாக அமைகின்றன.

வருடாந்த பதிவு கட்டணத்தை செலுத்துவதற்கு ஆரம்பத்தில் ஏற்புடைய திகதியாக 01/01/2016 நிர்ணயிக்கபட்டபோதிலும், பின்பு அதில் அனைத்து நிறுவனங்களும் கட்டணத்தை செலுத்தும்விதமாக இருமுறை திகதிகளில் தளர்வுகள் செய்யப்பட்டு, இறுதியாக 30/06/2016 இறுதி செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனங்கள் வருடத்திற்கு 60,000/- ரூபாவும், பொது நிறுவனங்கள் வருடத்திற்கு 500,000/- ரூபாவும், ஏனைய கட்டணம் செலுத்த தகுதியான நிறுவனங்கள் வருடத்திற்கு 100,000/- கட்டணமாக செலுத்த வேண்டும் என தீர்மானிக்கபட்டது.

மேலதிகமாக, எந்தவொரு நிறுவனமும் 01/01/2016ம் ஆண்டுக்கு பின், தன்னார்வமாக தனது நிறுவன இயக்கத்தை நிறுத்துமாயின் (Voluntary Liquidation) அதன்போது ஒருமுறை கட்டணமாக (Onetime Payment) 250,000/- கட்டணமாக செலுத்தவேண்டும் என தீர்மானிக்கப்பட்டபோதிலும், பின்னர் கலந்துரையாடல்களுக்கு அமைவாக இது 50,000/- வரை குறைக்கப்பட்டது.

நடைமுறை எவ்வாறு உள்ளது ?

வருடாந்த பதிவுக்கட்டணம் தொடர்பில் எவ்விதமான உத்தியோகபூர்வ வர்த்தகமானி அறிவித்தலும் வரவு-செலவு திட்டத்திற்குப்பின் வெளியாகாதபோதிலும், வருடாந்த பதிவு கட்டணத்தை வசூலிக்க வேண்டியதை வலியுறுத்திய சுற்று நிருபம் நிதி அமைச்சினால், பதிவாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கபட்டிருந்தது.

குறித்த சுற்றுநிருபத்துக்கு அமைவாக பதிவாளர் திணைக்களம் நிறுவனங்களிடமிருந்து வருடாந்த பதிவு கட்டணத்தை வசூலிப்பதற்கான படிவத்தை தனது இணையத்தில் பெறும்படியாக அமைத்துள்ளது, இதனை பூர்த்தி செய்வதன்மூலம்  நிறுவனத்தின் தன்மைக்கு அமைவாக கட்டணத்தை செலுத்தவும் முடியும்.

வருடாந்த பதிவு கட்டணத்தை குறித்த சமயத்தில் செலுத்தத் தவறின் என்ன நடக்கும் ?

(gic.gov.lk)

பதிவாளர் திணைக்களத்தின் அறிக்கைகளின்படி, தற்போதுவரை வருடாந்த பதிவு கட்டணத்தை செலுத்த தவறின் அல்லது தாமதித்து செலுத்துவதற்கான தண்டப்பணம் தொடர்பிலோ அல்லது தண்டனை தொடர்பிலோ ஏதும் பிரத்தியேகமாக குறிப்பிடப்படவில்லை. ஆனால், ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான கணக்கீட்டு கால முடிவில் அது தொடர்பிலான அறிவிப்புக்கள் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோல, ஏதேனும் நிறுவனம் 2016ம் ஆண்டு வரவு-செலவு திட்டத்திற்கு பின்னர் தாமாக நிறுவன செயற்பாட்டை முடிவுக்கு கொண்டுவருவதாக பதிவாளர் திணைக்களத்துக்கு அறிவிக்குமாயின், அவர்கள் ஒருமுறை கட்டணமான 50,000/-வை செலுத்தவேண்டியது கட்டாயமாக உள்ளது. இதனை, பதிவாளர் திணைக்களம் அவதானத்துடன் சேகரித்தும் வருகிறது என ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள். நிதி அமைச்சரின் கூற்றுப் பிரகாரம், இலங்கையில் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் வணிகங்கள் வெற்றிகரமாக இயங்கவேண்டும் என்பதற்காகவும், தொழிலிருந்து விலகிகொள்வதனை தவிர்ப்பதற்காகவும் எதிர்காலத்தில் இக்கட்டணங்கள் உயர்த்தப்படக்கூடும்.

வருடாந்த பதிவுக் கட்டணம் தொடர்பான விமர்சனங்கள்

வருடாந்த பதிவு கட்டண முறையானது இலங்கையில் தொழிற்படுகின்ற பெரிய நிறுவனங்களைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய கட்டணத்தொகையாக அமையப்போவதில்லை. இந்தக் கட்டணமுறையில் பொது நிறுவனங்கள் வருடத்திற்கு 500,000/- கட்டணமாக செலுத்தவேண்டியவர்களாக உள்ளனர். சரியாக கணக்கிட்டால், சராசரியாக மாதமொன்றுக்கு 42,000/- ஒதுக்கத்தினை வருமானத்தில் செய்துகொள்ள வேண்டியதாக இருக்கும். ஆனால், இலாப நிலையில் மோசமான நிலையில் உள்ள அல்லது புதிதாக வணிகத்தில் உள்நுழைந்த நிறுவனங்களுக்கு இந்ததொகை ஒப்பீட்டளவில் அதிகமே. எனவே, இவர்களால் இத்தகைய தொகையை எவ்வாறு செலுத்த முடியும்? அதற்கான ஒழுங்குமுறைகள் செய்யப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் வரவு-செலவுத் திட்டத்திலோ, சுற்றுநிருபங்களிலோ தெளிவாக விளக்கபடவில்லை.

அதுபோல, சிறிய மற்றும் நடுத்தர தனியார் நிறுவனங்கள் மாதமொன்றுக்கு தமது வருமானத்தில் 5,000/- (60,000/12) ரூபாவை ஒதுக்கமாக பேணவேண்டியதாக இருக்கும். தனிநபர் ஒருவர் சிறிய முயற்சிக்காக தனது வணிகத்தினை தனியார் நிறுவனமாக பதிவு செய்து வைத்திருப்பின் அவரும் இந்த தொகையை செலுத்தவேண்டியவராகிறார். இதுவும் கூட, அவர்களை பாதிப்படையச் செய்யும் என்பதனை மறுப்பதற்கில்லை.

இவற்றுக்கு மேலதிகமாக, எவ்வகை நிறுவனங்கள் தமது செயற்பாட்டை சுயமாக முடிவுக்கு கொண்டு வருகின்றனவோ, குறிப்பாக அவை நட்டத்தன்மையை நோக்கி செல்லும்வேளையில் அதனை உணர்ந்து முடிவுக்கு கொண்டுவரப்படும்போது, மேலதிகமாக அரசுக்கு கட்டணம் செலுத்தவேண்டி ஏற்படுகிறது. இது குறித்த நிறுவனத்துக்கு ஒரு மேலதிக செலவின சுமையாகவே அமையும்.

இந்த விமர்சனங்களுக்கு அப்பால், இலங்கையில் பெரும்பாலான நிறுவனங்கள் வரி ஏய்ப்பை நோக்காக கொண்டு உருவாக்கப்பட்ட உறங்குநிலை நிறுவனங்களாக உள்ளன. எனவே, இவற்றிலிருந்து பதிவுக்கட்டணங்களையும், வணிகத்தை முடிவுக்கு கொண்டுவரும்போது அறவிடப்படும் ஒருமுறை கட்டணத்தையும் அறவிடுவது வரிகளுக்குள் அடங்காத இலாபத்தில் சிறுபகுதியையே அறவிடும் முயற்சி என்றும் கூறப்படுகிறது.

எது எப்படியோ, கடந்தவருடத்தில் நிறுவனங்களுக்கான வருடாந்த கட்டண பதிவானது (Annual Registration Levy) அறிமுகபடுத்தபட்ட ஆண்டாகவே இருந்திருக்கிறது. இதன்காரணமாக, அது தொடர்பிலான நடைமுறைகளில் தளர்வுதன்மையை காணக்கூடியதாக இருந்திருக்கும். ஆனாலும், எதிர்வரும் காலத்தில் இந்நடைமுறையில் இறுக்கத்தன்மையோ, அல்லது மாற்றங்களோ ஏற்படுத்தப்படக்கூடும். எனவே, வணிக உரிமையாளர்கள் இதனை கருத்தில்கொண்டு செயற்படுவது அவசியமாகும்.

Related Articles