Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

வாடகை வீடு எனும் கொடும் கனவு

அண்மையில் எழுத்தாளரும் கவிஞருமான மனுஷ்ய புத்திரன், இந்து -தமிழ் நாளிதழில் தனக்கு வாடகை வீடு மறுக்கப்படுவது குறித்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். சென்னை மாநகரம் முழுக்கவே முஸ்லீம்களுக்கு வீடு கிடைக்க கடினமாக இருக்கிறது என்ற அவரது கருத்து பெரும் பரபரப்பை தமிழ் சூழலில் உருவாக்கியது. இந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்பாகவே எழுத்தாளர் ஜெயமோகன் அவரது இணையதளத்தில் எழுதிய பதில் கட்டுரை மேலும் சூட்டைக் கிளப்பி விட்டது. இஸ்லாமியர்களுக்கு இனிமேல் வாடகை வீடு கிடைக்காமல் இருப்பதற்கான காரண காரியங்களை (!) அலசிய கட்டுரை அது.

சென்னை மாநகரம் முழுக்கவே முஸ்லீம்களுக்கு வீடு கிடைக்க கடினமாக இருக்கிறது – மனுஷ்யபுத்திரன் (blogspot.com)

வஹாபியக் குழுக்களின் செயல்பாடுகள் காரணமாக முஸ்லீம்கள், இதர மக்களின் நம்பிக்கையைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு விட்டது எனவும், ‘பழைய முஸ்லீம்களை’ எல்லோரும் தேடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து இணையவாசிகளின் கடும் கண்டனத்துக்கு ஆளானார் ஜெயமோகன்.

ஆக மனுஷ்யபுத்திரனின் வினையும், ஜெயமோகனின் எதிர்விவாதமும் பல சூடான விவாதங்களையும் கிளப்பிவிட்டிருப்பதை மறுக்க முடியாது.

மனுஷ்யபுத்திரனின் ஆதரவாளர்கள் அவர் சொன்னது சரிதான் என்று ஆதரவுக்கரம் நீட்ட, இன்னொரு தரப்பு ‘இவர் தன்னுடைய சொந்தப் பிரச்சனையை முஸ்லீம்களின் பொதுப் பிரச்சனையாக ஆக்கப் பார்க்கிறார்’ என்ற குற்றச்சாட்டை வைத்தது. அதே போன்று ஜெயமோகன் தனது  ‘சிறுபான்மை விரோத’ வாதத்திற்கு  இந்தச் சூழலை சரியாகப் பயன்படுத்திக் கொண்டுவிட்டார் என்று அவர் மீதும் கணைகள் வீசத் தொடங்கியிருக்கின்றன.

வஹாபியக் குழுக்களின் செயல்பாடுகள் காரணமாக முஸ்லீம்கள், இதர மக்களின் நம்பிக்கையைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு விட்டது – ஜெயமோகன் (marabinmaindan.com)

இலக்கியவாதிகளுக்கு இடையிலான சர்ச்சைகள் ஒருபுறமிருக்க, உண்மையிலேயே சென்னையில் வாடகைக்கு வீடு தேடுவோர் நிலை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதில் ஜாதி, மதம், இனம், மொழி, சொந்த ஊர், உணவுப்பழக்கம், திருமணம் பல்வேறு விஷயங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.

திருமணமாகாத, வேலைதேடும் ஆண்களுக்கு வாடகைக்கு விடுவதில்லை என்று வீட்டு உரிமையாளர் பலரும் சென்னையில் ஒரு 20 ஆண்டுகளாக கங்கணம் கட்டிக் கொண்டு திரிவது எதார்த்தம்.

இதனால் மணமாகாத இளைஞர்கள் மேன்ஷன்களுக்குள் அடைந்து கொள்கின்றனர். நீங்கள் வேலை தேடும்/வேலை செய்யும் மணமாகாத இளைஞராக இருந்து, உங்கள் முகமும் கொஞ்சம் அப்பிராணி போல தோற்றம் அளித்தால் உங்களுக்கு வாடகைக்கு வீடு கிடைக்க வாய்ப்புண்டு. பேசும்போதே ’என்னோடு மேலும் இரண்டு  நண்பர்கள் வாடகையைப் பகிர்ந்து கொள்வார்கள்’ என்று சொல்லி வைத்துவிட்டால், உங்களோடு சேர்த்து மேலும் இரண்டு பேருக்கு கதி மோட்சம் கிடைக்கும். இல்லாவிட்டால் உங்களை சந்திக்க வரும் ஒவ்வொருவரையும் வீட்டு உரிமையாளர் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பார்.

அண்மையில் சென்னையில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் சிலர், கொஞ்சம் மாறுபட்டு முற்போக்காக சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் ’மணமாகாத இளைஞர்களுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு விடப்படும்’ என்ற அறிவிப்புப் பலகை மாட்டி இருகரம் நீட்டி அழைக்கிறார்கள். என்ன….. வாடகைதான் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

சாதி, மதம்:

நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஜாதி அல்லது மதம் உங்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதை உறுதிப்படுத்தும் அல்லது ஊற்றி மூடிவிடும். நேரடியாக உங்கள் ஜாதி/மதத்தை கேட்க முடியாதவர்கள் சுற்றி வளைத்து உங்கள் சொந்த ஊர், நீங்கள்  பேசும் வட்டார வழக்கு, உங்கள் நிறம் ஆகியவற்றை வைத்து உங்கள் நதிமூலம், ரிஷிமூலம் அறிந்து கொள்ள முயற்சி செய்வர்.

அவ்வளவு சூட்டிகையாக கண்டுபிடிக்கத் தெரியாத வீட்டு உரிமையாளர்கள் நேரடியாகவே விஷயத்துக்கு வந்துவிடுவார்கள். ‘தம்பி, நீங்க…..?’ என்று கேட்டால் உங்கள் ஜாதி மத்தை கேட்கிறார் என்று பொருள். நீங்கள் பதில் சொல்ல விரும்பவில்லை என்றால் உங்களுக்கு வீடு கிடைப்பது கொஞ்சம் சிரமம்தான். அதிர்ஷ்டவசமாக நீங்களும் வீட்டு உரிமையாளரும் ஒரே ஜாதி, மதம் சேர்ந்தவராக இருந்துவிட்டால் ஒரு பிரச்சனையுமில்லை. ஆனால் பெரும்பாலும் அப்படி நிகழ்வதில்லை.

உணவுப் பழக்கம்

ஒரு வீட்டை உங்களுக்கு வாடகைக்கு விடுவதை நிர்ணயிக்கும் முக்கியமான  காரணிகளுள் ஒன்று உணவுப் பழக்கம். அதாவது. வீட்டு உரிமையாளர் அசைவமாக இருந்து நீங்கள் சைவமாக இருந்தால் பிரச்சனையில்லை. ஆனால் வீட்டு உரிமையாளர் சைவமாக இருந்து நீங்கள் அசைவமாக இருந்துவிட்டால் உங்கள் பாடு திண்டாட்டம்தான்.

நீங்கள் சைவமா, அசைவமா என்ற கேள்வியைக் கேட்டே நீங்கள் கட்டித் தழுவப்படவோ அல்லது விரட்டி அடிக்கப்படவோ வாய்ப்புண்டு. (independentnurse.co.uk)

இங்கு சைவம், அசைவம் என்பது வெறுமனே உணவுப் பழக்கத்தைச் சார்ந்த விஷயமாக இருப்பதில்லை என்பதுதான் வேதனை. உங்கள் உணவுப் பழக்கத்தை வைத்து உங்கள் ஜாதி அல்லது மதத்தை ஓரளவுக்கு கண்டுபிடித்துவிடலாம். நீங்கள் சைவமா, அசைவமா என்ற கேள்வியைக் கேட்டே நீங்கள் கட்டித் தழுவப்படவோ அல்லது விரட்டி அடிக்கப்படவோ வாய்ப்புண்டு.

நேரடியாக சைவம் அல்லது அசைவம் என்ற எதேனும் ஒரு ’வகையில்’ வந்துவிடும் ஒருவரை உங்களால் எளிதில் கையாண்டுவிடமுடியும். ஆனால், சில ‘விதிவிலக்கு ஓழுக்கக்கார்களை ’ சமாளிப்பது கொஞ்சம் சிக்கலான விஷயம்.

இந்த வகையினர் அசைவம் சாப்பிடுபவர்களாக இருப்பார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட நாட்களில் மட்டும்தான் சாப்பிட வேண்டும் என்று ஒரு விதி வைத்திருப்பார்கள். எனது அனுபவத்தில் ஞாயிற்றுக் கிழமை/ வியாழக்கிழமை/ வெள்ளிக்கிழமை சைவக்கார்களைப் பார்த்திருக்கிறேன். இவர்கள் அந்தக் குறிப்பிட்ட ஒரு நாள் மட்டும் சுத்த சைவர்களாக அவதாரமெடுப்பார்கள்.

மீதமிருக்கிற 6 நாட்களிலோ வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அசைவத்தை வெளுத்துக் கட்டுவார்கள். இவர்களிடம் நீங்கள் வீடு கேட்கும் போது உங்களுக்குக் கடும் அதிர்ச்சிகள் காத்துக் கிடக்கின்றன. “நீங்க தாராளமா அசைவம் சாப்பிடலாம். ஆனா ஹோட்டலில். வீட்டில் சமைக்கக்கூடாது” என்றோ “வியாழக்கிழமை மட்டும் சமைத்துவிடாதீர்கள். மற்ற நாட்களில் அசைவம் சாப்பிடலாம். ஆனால் சாப்பிட்ட மறுநாள் வீட்டை கழுவி சுத்தம் செஞ்சுடுங்க” என்றோ சொல்வோரும் உண்டு.

இது போன்ற வீட்டு உரிமையாளர்கள், வீட்டின் மாடியிலோ, அருகிலோ இருந்துவிட்டால் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு நீங்கள் வாழ வேண்டியிருக்கும்.

அவர்களின் சைவ நாட்களில் நீங்களும் ஜீவகாருண்ய சிகாமணியாக இருப்பீர்கள். எனினும், மற்ற நாட்களில் மசாலா வாசனை மணக்க சமைத்தால் ’வீல்’ என்று அவர்கள் வீட்டிலிருந்து சத்தம் வரவும் கூடும். அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவது நல்லது.

இவை தவிர வீடு தேடுவோருக்கு விதவிதமான தடைகளும், பிரச்கனைகளும் சென்னையில் உண்டு. முகவரிச் சான்றாகப் பயன்படுத்துவதற்காக வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரம்கேட்டால்கூட அதை சரியாகப் புரிந்துகொள்ள மாட்டார்கள் வீட்டில் உரிமையாளர்கள் சிலர்.

அதே போல வருமானவரித் தாக்கல் செய்யத் தேவைப்படும் என்று வீட்டு வாடகை ரசீது கேட்டுப் பாருங்கள். சொத்தில் பாதியைக் கேட்பது போல அலறித் துடித்துவிடுவர் உரிமையாளர்கள். கொடுக்கும் வாடகைக்கு ரசீது கேட்டாலே இந்த நிலைமை என்றால், ’ரூ.10,000 மேற்பட்ட வாடகைக்கு வீட்டு உரிமையாளரின் பான் அட்டை எண்ணைக் குறிப்பிட வேண்டும் என்று வருமானவரிச்சட்டம் சொல்கிறதே!’ என்று நீங்கள் கேட்டால் உங்கள் கதி என்னவாகும் என்று எனக்குத் தெரியாது.

அனைவருக்கும் வீட்டு வசதி என்ற நோக்கத்தோடு தேசிய வீட்டு வசதி வங்கி செயல்பட்டு வருவது பலருக்கும் தெரியாது. அதேபோல , தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்றுவாரியம் ஆகியவை செயல்பட்டு வந்தபோதும்கூட இன்னமும் பலரால்  சொந்த வீட்டுக் கனவை நனவாக்க முடிவதில்லை. அதனால் வாடகைக்கு வீடு தேடுவோர் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்கிறது. ஆனால் தகுதி இருந்தும் வாடகை வீடு, இனம், மொழி, மதம்,ஜாதி, உணவுப்பழக்கம் முதலிய பல்வேறு காரணங்களால் முடிவு செய்யப்படுவது சட்டத்திற்கு வேணடுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் சமூகத்துக்கு நன்றாகத் தெரியும்.

எல்லாவற்றையும் கேட்டுவிட்டு….

“ஆமாம்… வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் என்று ஒன்று இருக்கிறதுதானே?” என்று நீங்கள் கேட்டால் நான் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவதா? நகைச்சுவை என்று எடுத்துக் கொள்வதா?

Related Articles