பிறன்மனை நோக்காத பேராண்மை

வாழ்க்கையை ஒரு இரயில் பயணம் போல எடுத்துக்கொண்டால், கடவுள் அனைவரின் பயணச்சீட்டுக்களையும் தன் வசம் ரகசியமாக வைத்துள்ளார். உடன் பயணிக்கும் மனிதர்களின் சேர்க்கையும், பிரிவையும் நாம் அனுமானிக்கவே முடியாது. எதார்த்தமாக நடக்கும் சில சந்திப்புகள் அல்லது ஏற்படும் தொடர்புகள் விபரீதத்தின் உச்சத்துக்கு நம்மை அனாயாசமாக அழைத்து செல்லவும் வாய்ப்புள்ளது. சமீபகாலமாக அன்றாட செய்திதாள்களில் தவறான தொடர்பினால் ஏற்படும் கொலைகளை பற்றியும், விவாகரத்து மற்றும் சர்ச்சைகளை பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. குடும்ப உறவில் ஏற்படும் விரிசல் மற்றும் பல காரணங்களினால் மணவாழ்க்கை சிதைந்து திசை மாறி, ஒரு சிலருக்கு அதுவே வாழ்க்கையின் முடிவாகக்கூட அமைகின்றது. சரியான காரணங்களையும், இதை தவிர்பதற்கான வழிமுறைகளை பற்றியும் ஒரு சிறு அலசல்.

தவறான தொடர்புகள் உருவாக காரணங்கள்:

 • சீக்கிர திருமணம்:

மிக இளவதில் திருமணம் செய்பவர்களுக்கு சமூக மற்றும் பொருளாதார நிலைத்தன்மை முப்பத்தி ஐந்து வயதை நெருங்கும்பொழுது வந்து விடுகிறது. அந்த நிலையில் வாழ்கையில் ஒரு வெற்றிடம் உருவாகிறது. அதை நிறைவு படுத்த, உற்சாகப்படுத்த, உயிர்ப்புடன் வைக்க அவர்களுக்கு ஒரு துணை தேவைபடுகிறதாம்.

 • பொருந்தாத திருமணம்:

படம் – newtimes.co.rw

தமது குடும்பத்தார் மற்றும் சமூகம் கொடுக்கும் அழுத்தங்களால் அவசரக்கதியில் அரங்கேறும் திருமணங்கள். காலபோக்கில் தமக்கு அமைந்த துணை தமக்கு பொருந்தாதவர் என்று புரிந்து கொள்ளுதல், தமது சிந்தனைக்கு ஒத்த ஒருவருடன் ஏற்படும் ஈர்ப்பு, சிறிய நட்பாக பூத்து காதலாக உருமாறுதல்.

 • சவால்களை சமாளித்தல்:

வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள், சூழ்நிலை மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையே. சிறிய மாற்றங்களை நமது மனம் இலகுவாக எடுத்துக்கொள்கிறது. குடும்பத்து உறுப்பினரின் தீவிர சிகிச்சை, இறப்பு, வேலை இழத்தல், நிதி இழப்பு, நஷ்டம் போன்ற கடினமான காலங்களில் தமது மனைவியை விட்டு சில காலம் தனித்திருத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இது போன்ற காலங்களில் புதிதாக ஒருவரின் நட்பு காதலாக மாறுதல்.

 • குழந்தை பராமரிப்பு:

படம் – scpr.org

குழந்தை வளர்த்தல், குழந்தை பரமாரிப்பு என்பது கணவன் மனைவி வாழ்க்கை முறையையே மாற்றி அமைக்ககூடியது. முக்கியத்துவங்கள் மாறுபடும். பெற்றோர்களின் அன்னியோன்மமும், ஒருவருக்கு ஒருவர் நேரம் ஒதுக்குவதும் வெகுவாக குறையும் காலம் இது. ஒரு சில ஆண்கள் தன் முக்கியத்துவங்கள் இழந்ததை உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாமல் புது உறவை தேடி போகின்றனர். நாளடைவில் அது நிலைத்து விடுகிறது.

 

 • உடல் தேவைகள் பூர்த்தியடையாதவர்கள்:

 

பெரும்பாலான தவறான உறவுகளில் புதைந்து கிடக்கும் பொதுவான காரணம் இது.

 

 • சமநிலை உணர்வுகள்:

 

ஒருவருக்கு ஒருவர் நேரம் ஒதுக்காமலும், சரிவர பேசாமலும் இருந்து  காலபோக்கில் உணர்வுகளில் தொடர்பற்று போதல். உணர்வுகளில் தம்பதியர் ஒன்று பட ஒருவருக்கு ஒருவர் பகிர்தல், பேசுதல், சிந்தைனையை வெளிப்படுத்துதல், கேட்டல், சிரிப்பு, அக்கறை அனைத்தும்  அவசியமானது. இவற்றை இருவரும் விட்டுவிட்டால் நாளடைவில் உணர்வுகள் தொடர்பற்று போய்விட்டால், வேறு ஒருவருடன் உணர்வுகளில் ஒன்று பட சிந்தனை சென்று விடும். அவ்வாறு அமைந்தால் அது குடும்ப வாழ்க்கைக்கு பங்கமாக அமையும்.

 

 • முக்கிய முடிவுகளில் வேற்றுமை:

 

வாழ்க்கையின் கடினமான தருணங்களில் நாம் எடுக்கும் சில முக்கிய முடிவுகள் நம்மை பரிசோதித்து பார்க்கும். அவ்வாறு ஒருவர் எடுக்கும் முடிவுகள் அவரது துணைக்கு மகிழ்ச்சியை தரவில்லை என்றால், அது சமாதானப்படுத்த முடியாத வேற்றுமையை உண்டாக்கி அது புதிய உறவுக்கு வழி வகுக்கலாம்.

 

 • முன்னுரிமைகளில் சமனற்ற நிலை:

 

படம் – indianexpress.com

திருமண பந்தம் மூலம் இருவரும் இணைத்தவுடன் வாழ்க்கையில் இருவரும் முன்னுரிமை தரக்கூடிய விஷயங்களை பற்றி கண்டறிதல் மிக அவசியம். நாளுக்கு நாள் ஒருவருக்கு ஒருவர் முன்னுரிமை அளிக்கும் விஷயங்களில் முரண்பட சில காலம் சென்றவுடன் பெரிய வேற்றுமைக்கு வழி வகுக்கும். இவ்வாறான தருணங்களில் வாழ்கையில் ஒத்த கருத்துடைய ஒரு நபர் வாழ்க்கையின் முன்னேற்றப் பாதைக்கு அவசியம் என்று முடிவெடுத்தால் அதுவே புது உறவுக்கு காரணமாகலாம்.

 

 • சாதாரண விருப்பங்களில் வேற்றுமை:

 

இருவருக்கும் பொதுவான விருப்பங்களில் ஒற்றுமை இல்லாமல் போகுதல். நாளடைவில் தனி தனியாக தங்கள் விருப்பங்களை தேடி போனால் அது அவர்கள் ஒன்றாக நேரம் செலவிடும் நேரத்தை குறைக்கும். சம விருப்பம் உள்ள ஒருவரின் தொடர்பு நட்பாக அமைந்து அது ஒரு இணைப்பை ஏற்படுத்தி விடும்.

 

 • பொழுதுபோக்கு உறவு:

 

திரும்ப திரும்ப ஒரே மாதிரியான வேலைகளை மேற்கொள்ளும்பொழுது ஒருவருக்கு திடீரென ஏற்படும் சலிப்பு இதற்கொரு காரணமாக அமைகிறது. ஒரு மாற்றத்திற்காக, வெளிப்புற மகிழ்ச்சிக்காக ஒரு சிலர் இவ்வாறு அமைத்து கொள்கின்றனர்.

 

 • பொருளாதார தேவைகள்:

 

படம் – usnews.com

தனிப்பட்ட தேவைகள், அன்றாட குடும்ப செலவுகள், கடன் சுமைகள் என்று அழுத்தமான சூழல் அவ்வப்போது வரும். அந்த சூழ்நிலைகளில் ஒருவரது துன்பங்களை அறிந்து உதவும் நபருடன் ஏற்படும் நட்பு நாளடைவில் புதிய உறவுக்கு வித்திடலாம்.

இதை தவிர்பதற்கான வழிமுறைகள்:

எதிர்ப் பாலினத்தவருடன் தனிமையில் நேரம் செலவிடுவதை தவிருங்கள். உங்களுக்கு எவர் மூலமாக தூண்டுதல் உருவாகுவதாக தோன்றுகிறதோ, அந்த நபரை முழுமையாக தவிர்த்தல் நலம். உங்கள் வாழ்க்கைத்துணையை தவிர்த்து ஈர்ப்பு உணர்வுகளுடன் எவரையும் நெருங்காதீர்கள். உங்கள் திருமண பந்தம் பற்றியோ, உங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை பற்றியோ மூன்றாம் நபருடன் பகிர்வதை தவிருங்கள். வெளிப்புற சூழ்நிலைகளில் கண்ணியத்தை கடைபிடிப்பது அவசியம். உதாரணமாக அலுவலக விருந்து உபசரிப்பு, தனிப்பட்ட நபர்களின் நெருக்கம் போன்றவை குடும்ப நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கும். கணவன் மனைவி இருவருக்குள் பிளவு ஏற்பட்டால், இருவருக்கும் ஏற்றுக்கொள்ளும் தன்மை, நம்பிக்கை, மற்றும் அன்பு இருந்தால் மீண்டும் இணைந்து வாழ, புது வாழ்வு காண்பது மிக எளிது. ஆனந்த அலை நிச்சயம் மீண்டும் வீசும்.

Related Articles