சமாதி அரசியல் – வெற்றிடத்தை வெற்றியின் இடமாக்க…

‘’எனக்குப் பின்னால் நூறு ஆண்டுகளுக்கு அதிமுக இருக்கும்” என சட்டசபையில் ஒரு முறை பேசினார் அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா. ஆனால் அவர் இறந்த 100 நாட்களிலேயே இரட்டை இலை சின்னத்தையே இழந்துவிட்டு நிற்கின்றனர் அதிமுகவினர்.

எனக்குப் பின்னால் நூறு ஆண்டுகளுக்கு அதிமுக இருக்கும் (ndtvimg.com)

ராதாகிருஷ்ணன்நகர் தொகுதி இடைத்தேர்தலில் சசிகலா தலைமையிலான அதிமுகவின் வேட்பாளராக தினகரன், ஓ.பி.எஸ் அணி வேட்பாளராக மதுசூதனன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா என அதிமுக வாக்குகள் மூன்றாக சிதறுகிறது. கட்சியின் நிர்வாகிகள் மட்டத்தில் எந்தப் பக்கம் சாய்ந்தால் அரசியலில் எதிர்காலம் இருக்கும் என எண்ண ஓட்டத்தை சுழல விட்டு அவரவர் வியூகத்திற்கு ஏற்ப அணிமாறுகின்றனர். உண்மையில் இதில் குழம்பிப்போய், தம் அரசியல் நகர்வினையே முடித்துக்கொண்ட தொண்டர்கள் ஏராளம்.

தமிழக மாநகராட்சி, நகராட்சிகளில் கவுன்சிலர் சீட்டு கிடைப்பதே அரசியல் கட்சிகளில் குதிரை கொம்பான விஷயம். அதே நேரத்தில் பேரூராட்சி வார்டுகள், தலைவர் பதவி, ஒன்றிய கவுன்சிலர்கள் என ஆயிரக்கணக்கான பதவிகளை எதிர்பார்த்துத்தான் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் களப்பணி செய்வார்கள். கட்சிச் சின்னம் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு கட்சியின் ஆதரவு மனநிலையிலேயே சில நேரங்களில் கிராமப் பஞ்சாயத்து தலைவர்களும் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டே நடத்திருக்கவேண்டிய உள்ளாட்சித் தேர்தல் இதுவரை நடக்கவில்லை. தேர்தல் நடத்தாத நிலையில், போட்டியிட மனு செய்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட வைப்புத் தொகையை தேர்தல் ஆணையம், அவர் அவர் வங்கிக் கணக்கில் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்கள் பணி, சேவை என்பதையெல்லாம் விஞ்சி அரசியல் கட்சிகளின் அடிப்படை கட்டமைப்புகளை தகவமைக்க, உறுதி செய்ய அடித்தளமே அக்கட்சிகளின் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தான். ஆனால் அதற்கே வாய்ப்பில்லாத நிலை நீடிகின்றது. தமிழக அரசியல் களத்தில் சம காலத்தில் இரு துருவ நட்சத்திரங்களாக இருந்தவர்கள் கருணாநிதியும், ஜெயலலிதாவும். இதில் ஜெயலலிதாவின் மரணம், கருணாநிதியின் வயோதிகம் ஆகியவை சேர்ந்து தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வெற்றிடத்தை, வெற்றியின் இடமாய் நிரப்பிக் கொள்ளும் தகுதி யாருக்கு இருக்கிறது? என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறியாக உருப்பெற்று நிற்கிறது. ஆனால் இதையெல்லாம் மிஞ்சி இப்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் தாங்க முடியாத மனச்சுமையை ஏற்றிக் கொண்டிருக்கிறது.

சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர் ஜெயலலிதா. அதே நேரத்தில் மக்கள் மன்றத்தால் வெற்றி வாகை சூடியவர். தொட்டில் குழந்தை திட்டம், தொடங்கி மழை நீர் சேகரிப்புத் திட்டம் வரை அவர் தந்த தொலைநோக்குத் திட்டங்கள் அதிகம். ஆனால் அதையெல்லாம் மிஞ்சி விலையில்லா அரிசி, விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, தாலிக்கு தங்கம் என அவர் கொண்டு வந்த இலவச திட்டங்களே ஜெயலலிதா என்றதும் நினைவை சுழற்றிச் செல்கின்றது. கடந்த 2006 முதல் 2011 வரை இருந்த திமுக ஆட்சியில் தமிழக அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டது. இரு திராவிட கட்சிக்களும் இலவச மாயையையே தேர்தல் நேர அஸ்திரமாக தூக்கி வீசி  வருகின்றன.

 

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பு நிதியமைச்சர் ஜெயக்குமார் அதனை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் (newindianexpress.com)

இவற்றின் விளைவாக தமிழக அரசின்  நேரடிக் கடன் 3.14 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதனுடன் பொதுத்துறை கடனையும் சேர்த்தால் கடன் தொகை 5.75 லட்சம் கோடியாக உள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த வகையில் 79,861 ரூபாய் கடன் உள்ளது.

சாராசரியாக 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் கடன் தொகை 3,99,305 ரூபாய். 2011_12ம் நிதியாண்டில் தமிழகத்தின் சொந்த வரி வருவாய் 59,932 கோடியாக இருந்தது. ஐந்து ஆண்டுகளில் அது 87,286 கோடியாக உயர்ந்துள்ளது. இது 45.64 சதவிகித வளர்ச்சி மட்டுமே. அதே நேரத்தில் இலவசங்கள், மானியங்களுக்கான நிதி ஒதுக்கீடு 2011_12ம் நிதியாண்டில் 29,726 கோடியாக இருந்தது. இது 2016_17ல் 68,350 கோடியாக உயர்ந்துள்ளது. இது 130 விழுக்காடு அதிகரித்துள்ளது. என்பதும் இதில் கவனிக்கத்தக்க விஷயம்.

2017_18 யை பொறுத்தவரை தமிழக அரசின் சொந்த வரி வருவாய் ரூபாய் 99,590 கோடி மட்டுமே. இலவசம், மானியச் செலவு 72,615 கோடி. வருவாயில் 75 சதவிகத்தை இப்படி செலவிட்டால், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த எங்கிருந்து செலவு செய்ய முடியும்? என்பதும் நிச்சயம் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் இதையெல்லாம் விட தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பு நிதியமைச்சர் ஜெயக்குமார் அதனை அதிமுக பொதுச் செயலாளராக இருந்த, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் வைத்து, வணங்கி விட்டே சட்டசபைக்கு செல்கின்றார்.

 

பவ்யமானவராகவும், பணிவுக்கு முன்னுதாரணமாகவும் அடையாளம் காட்டப்பட்ட பன்னீர் செல்வம், புயலாக மாறியதும் கூட ஜெயலலிதாவின் சமாதியில் இருந்து தியானம் செய்த பிற்பாடு தான். (newindianexpress.com)

அதிமுகவில் ஜெயலலிதாவாலேயே, அவர் ஆட்சியில் இல்லாத போதெல்லாம் முதல்வராக்கப்பட்டவர் ஓ.பன்னீர் செல்வம். ஜெ மறைவுக்கு பின்னரும், முதல்வராக்கப்பட்டார். ஆனால் பதவியில் இருந்த வரை சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விசுவாசத்தை காட்டியவர், முதல்வர் பதவிக்கு சசிகலா வர வேண்டும் என கட்சிக்குள் கழகக் குரல் ஒலித்த பின்னர், ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக அஸ்திரஸ்த்தை எடுத்தார். அதுவரை பவ்யமானவராகவும், பணிவுக்கு முன்னுதாரணமாகவும் அடையாளம் காட்டப்பட்ட பன்னீர் செல்வம், புயலாக மாறியதும் கூட ஜெயலலிதாவின் சமாதியில் இருந்து தியானம் செய்த பிற்பாடு தான். ”அம்மாவின் ஆன்மா” சொன்னதாக சொல்லி அவர் பேசும் பேச்சுக்களை, கேட்கும் போது, இப்போதைய எதிர்ப்பை முதல்வராக இருக்கும் போதே செய்யத் தவறியது ஏன்? எனக் கேள்வி எழுகிறது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பன்னீர் செல்வத்தோடு, இணைந்து பயணிப்பதாக அதே சமாதியில் இருந்து அறிவித்தார். இப்போது ஆர்.கே நகரில் இருவரும் தனித்தனியே தேர்தலை சந்திக்கின்றனர். கர்நாடக மாநில சிறையில் இருந்து அதிமுகவை வழிநடத்தும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவும், சிறைக்கு செல்லும் முன்னர் ஜெயலலிதாவின் சமாதியில் சென்று மூன்று முறை சத்தியம் செய்கிறார். தமிழகம் முழுவதும் அதிமுகவினர் துவக்க காலங்களில் அங்கு சென்று மொட்டை போட்டனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை அமைவிலும் கூட, உண்மையில் அல்லோலப்பட்டது ஜெயலலிதா சமாதி தான்.

இவ்வளவு ஏன்? இந்த கடன் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன்பு கூட ஜெயலலிதா சமாதியில் அதை வைத்து வணங்கி விட்டுத்தான் வந்தார் நிதியமைச்சர் ஜெயக்குமார். ஆலயம்தோறும் அன்னதானத் திட்டம். இலவச காலணிகள் பாதுகாப்புக் கூடம், அம்மா உணவகம்,. கர்ப்பிணி பெண்களுக்கு சமூகவளைகாப்பு, குழந்தை பெற்ற பின்பு அம்மா பாதுகாப்பு பெட்டகம், பசுமை வீடுகள், ஏழைகள் வயிராற உண்ண அம்மா உணவகம், ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுப் பொருள்கள், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி என ஏராளமான திட்டங்களைத் தந்த ஜெயலலிதாவின் மீதான ஒரே ஒற்றை விமர்சனம்,’’தனி நபர் முன்னிறுத்தல்” அவர் ஆகாயத்தில் விமானத்தில் பறக்கும் போதும், தரையில் காலில் விழும் அமைச்சர்கள் வாய்த்திருந்தது எவ்வளவு பெரிய சோகமான நிகழ்வு. அது அவருக்கு வேண்டுமானால் பெருமையாகவும், அமைச்சர்களுக்கு பதவி காப்பு யுத்தியாகவும் இருக்கலாம்.

ஏராளமான திட்டங்களைத் தந்த ஜெயலலிதாவின் மீதான ஒரே ஒற்றை விமர்சனம்,’’தனி நபர் முன்னிறுத்தல்” (qzprod.files.wordpress.com)

தனி நபர் முன்னிறுத்துதலின் உச்சத்தில் செயல்பட்டவர் ஜெயலலிதா என்ற விமர்சனம் அவர் மீது உண்டு. சென்னை பெரு வெள்ளத்தில் மூழ்கிய போது, நல்லுள்ளம் கொண்ட பலரும், தானாக முன்வந்து அனுப்பிய பொருள்களில் கூட கட்சியினர் வலிந்து அவரது ஸ்டிக்கர்களை ஒட்டினர். விலையில்லா பொருள்களில் கூட அவர் முகம் பளிச்சிட்டது. ரேசன் கடை இலவச பொங்கல் பரிசுப் பொருள்களிலும் ஜெயலலிதாவின் படமே! அம்மா குடிநீர் தொடங்கி, அனைத்திலும் தனிநபர் முன்னிறுத்தல். ஒருவகையில் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை கிடைத்து, தன் படத்தையே எங்கும் வைக்க முடியாத சூழலும் எழலாம் என ஜெயலலிதா அவதானித்திருக்க வேண்டும்.

இங்கே விசயம் அதுவல்ல…ஜெயலலிதா சமாதியை புனிதப்படுத்தும் முன்னேற்பாட்டு பணிகளே மேலே சொன்னவை. இப்போதும் சென்னையில் உள்ள அவரது சமாதிக்கு செல்வோர் அதன் முன்னர் முகம் மலர்ந்து புகைப்படங்களும், செல்பிக்களும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் சென்னைக்கு மகளின் இல்லத்துக்கு சென்றிருந்தேன். ‘’ஜெயலலிதா சமாதிக்கு சென்று பார்க்காவிட்டால் சென்னைக்கு வந்ததில் அர்த்தமே இல்லாமல் போய் விடும்.”என்றேன். சமாதிக்கும் சென்றோம். எம்.ஜி.ஆர் சமாதியின் ,முகப்பில் பிரமாண்டமான இரட்டை இலை இருந்தது. இதை இரட்டை குதிரை என்று சொன்னதெல்லாம் நினைவை சுழற்றியது.

உள்ளே எம்.ஜி.ஆர் சமாதியின் அருகிலே செல்ல முடியாதபடிக்கு, அதனை சுற்றிலும் பேரிகார்டுகள் வைக்கப்பட்டிருந்தது. பேரிகார்டு காட்டும் பாதையில் நடந்தால் நேரே ஜெயலலிதாவின் சமாதி தான் வரும். சமாதியின் அருகிலேயே மிகப்பெரிய அளவில் பதாகையில் ஜெயலலிதாவின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்தது. அதனை மிளிரச் செய்யும் விதத்தில் இரண்டோ, மூன்றோ போக்கஸ் விளக்குகள் பளிச்சிட்டது. இது போக தனியாக விளக்கு வசதியும் செய்யப்பட்டிருந்தது. ஜெயலலிதா சமாதியை சிலர் வணங்கியும், சிலர் செல்பி எடுத்தும் மகிழந்தனர். ஜெயலலிதா சமாதியை சுற்றி வரும் வழியில் பேரிகார்டின் ஊடே எம்.ஜி.ஆர் சமாதியை பார்த்தேன். எம்.ஜி.ஆர் சமாதியின் அருகிலே செல்ல ஆள் இல்லை. காரணம் அதனை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலிகள்.

ஒரே ஒரு விளக்கு சமாதியின் மேல் ஒளிர்ந்தது. மேலும் ஒரு அணையா விளக்கு பக்கத்தில் எரிகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு சென்ற போது, எம்.ஜி.ஆரின் சமாதியில் காது வைத்து கேட்டால், அவரது கைக்கடிகாரம் ஓடும் சப்தம் கேட்கும் என சமாதியில், தன் நெஞ்சுக்கு நெருக்கமான தலைவரின் மார்பில் காது வைத்து கேட்டவர்கள் இன்று தடுப்பு வேலிகளின் ஊடே தரிசனம் செய்கின்றனர். இத்தனைக்கும் இது எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் வருடம். தமிழ்த் திரையுலகில் தன்னிகரற்ற நடிகராக விளங்கி, மக்கள் மனதில் இடம் பிடித்து அதிமுகவை துவங்கி, மக்கள் மனதில் நின்ற எம்.ஜி.ஆர் இன்று தன்னுடைய நினைவிடத்திலும் கூட பொலிவிழந்து வருவது வேதனைக்குரிய விசயம் தான்! ஆனால் இதையெல்லாம் திமுக மக்கள் மன்றத்தில் கூட கொண்டு செல்லாமல் இருப்பது கருணாநிதியின் வயோதிகத்துக்கு பின்பு அக்கட்சியின் தள்ளாட்டமும் தெளிவாகவே புலனாகிறது.

உயிரோடு இருந்தபோது ஜெயலலிதா நினைத்தோ, அல்லது அவரை சுற்றியிருந்தவர்களால் கட்டமைக்கப்பட்டதோ தெரியாது. வெகுஜென மக்களுக்கு அவர் மீதான மதிப்பில், சிறு அழுத்தமாய், துருத்திக் கொண்டு இருந்தது தனிநபர் முன்னிறுத்தல்தான். அதையே இப்போது சமாதியிலும் செய்துகொண்டிருக்கின்றனர்!.. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றபோது அழுது கொண்டே பதவியேற்றவர்களிடம், இன்று அழுகை இல்லை. அதனை இலகுவாக்கி ஆட்சிக் கட்டிலை தக்கவைக்க சசிகலா, தினகரன் அணியினரும், கட்சியை கைப்பற்ற ஓ.பி.எஸ் அணியினரும், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் கனவோடு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் ஆர்.கே நகரை சுற்றி வருகின்றனர்.

திமுகவுக்கு எதிராக ஜெயலலிதா முன்வைக்கும் முக்கியமான அம்சம், ‘’எனக்கு குடும்பம் இல்லை. மக்களால் நான்..மக்களுக்காக நான்” இப்போதைய நிலையில் இவ்வார்த்தையை மக்கள் மன்றத்தில் அதிமுகவால் முன்னெடுக்க முடியவில்லை. இப்போது திமுகவும், அதிமுகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக தெரிகின்றன. இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் வரும் 12ம் தேதி  நடக்க உள்ளது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். இதில் அதிமுகவின் மூன்று அணிகளில் ஏதோ ஒரு அணி வென்றால், வென்றவர்  ஜெயலலிதா சமாதிக்கு போவார்.’’தர்மம் ஜெயித்தது” என சமாதியில் இருந்தே பேட்டி கொடுப்பார். தோற்கப்போகும் அதிமுக இதர அணிகளும் சமாதிக்குப் போய், ‘தர்மம் மீண்டும் வெல்லும்” என ;பேட்டி கொடுப்பார்ப்பார்கள். அதிமுக வாக்குகள் பிளவுபட்டு, திமுக ஜெயிக்குமேயானால் ஜெயலலிதா குற்றவாளி என்பதை அவருக்கு வாக்களித்த ஆர்.கே நகர் தொகுதி மக்களே ஏற்றுக் கொண்டுள்ளனர் என திமுக தரப்பில் இருந்து அறிக்கை வரும்.

காலக்கொடுமை இது அத்தனையையும் தமிழக மக்கள் சகித்து கொள்ளத் தான் வேண்டும்.

Related Articles