விபத்துக்களை குறைக்குமா புதிய வீதி விதிமுறைகள்?

கொத்துக்கொத்தாய் பல உயிர்கள் செத்துப்போன 30 ஆண்டுகால  முடிந்தாலும், உயிர்ப்பலிகள் பற்றிய செய்திகள் தினமும் வெளிவந்துகொண்டே தான் இருக்கின்றன.

(fhkous.com)

(fhkous.com)

இலங்கையிலே செய்தித் தாள்கள், இலத்திரனியல் ஊடகங்கள், இணைய ஊடகங்கள் என்று செய்தியறியும் எந்த ஊடகத்தின் வழியாகவும் முன்பு பலர் தினமும் இறந்த செய்திகளை அறிந்த எமக்கு, இப்போதைய யுத்தம் ஓய்ந்த சூழலிலும் தினந்தோறும் சாவு எண்ணிக்கைகளை வாசித்தறிந்து மனங்கள் மரத்துவிட்டனவோ என எண்ணத் தோன்றுகிறது.

அதிர்ச்சிக்  கொலைகள்,அருவருக்கத்தக்க சம்பவங்கள் மூலமான குரூர மரணங்கள் இடையிடையே செய்திகளில் வந்து எமது பரிதாபத்தையும், கவனத்தையும் எடுத்துக்கொண்டு போனாலும், தினம்தோறும் ஒரு செய்தியாவது வாகன விபத்து மரணம் பற்றிய செய்தியைக் கொண்டுவராமல் இல்லை.

ஒருநாள் தவறவிடாமல் இந்தச் சிறிய நாட்டின் ஏதோ  ஒரு மூலையில் தினமும் ஒரு விபத்தாவது நடக்காமலில்லை.

உயிர்ப்பலியை ஏற்படுத்தும் பாரதூரமான விபத்துக்கள் முதல், நிரந்தர அங்கவீனம் ஏற்படுத்தும் விபத்துக்கள், பொருட்சேதங்களைப்  பெரியளவில் தந்து இழப்புத் தரும் விபத்துக்கள் என்று ஒரு சில வினாடிகள் தவறு காரணமாக ஆயுளுக்கும் எம்மை மனவேதனைக்குள்ளாக்கும் விபத்துக்கள் தினமும் இலங்கையில் நடந்துகொண்டேயிருக்கின்றன.

(danapointtimes.com)

(danapointtimes.com)

கடந்த ஆண்டில் மட்டும் நாடாளாவியரீதியில் பதியப்பட்ட விபத்துக்கள் 39719 நடந்திருக்கின்றன. இதில் 2800 உயிர்கள் பலியாகியுள்ளன.

இந்த வருடம் இப்போது வரை நடந்த விபத்துக்கள் பற்றிய சரியான தரவுகளைப் பெற்றுக்கொள்ள பல முயற்சிகள் எடுத்தும் ஆவணங்களாக எவற்றையும் பெறமுடியாமல் போனது. எனினும் இந்த 11 மாத காலங்களில் கடந்த ஆண்டினை விடவும் அதிக விபத்துக்களும் அதிக உயிரிழப்புக்களும் நடந்திருப்பதைக் கவலையுடன் அறியத்தந்தார் போக்குவரத்துப் போலீசின் பேச்சாளர் ஒருவர். இந்த வருடத்தில் இதுவரை சுமார் 80000 விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

வீதிகள் விருத்தியடைகின்றன; வாகனங்கள் நாளுக்கு நாள் புதிது புதிதாய்க் குவிந்தவண்ணமே இருக்கின்றன.

(i.ytimg.com)

வீதி போக்குவரத்து போலீசாரும் புதிதாக நூறு,  ஆயிரம் என்று வீதிகள் தோறும் நிறுத்திவைக்கப்பட்டாலும் விபத்துக்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றனவே தவிர குறைவதாக இல்லை.

அவசரம், அவதானக் குறைவு, சாரதி அனுமதிப் பத்திர வழங்கல் நடைமுறையில் ஒரு சீர்த்தன்மை இல்லை, வாகன அதிகரிப்பு, வீதிகளின் குறுக்கம் இப்படி ஆய்ந்து, ஆராய்ந்து பேசிக்கொண்டிருந்தாலும் விபத்தும் உயிர்ப்பலிகளும் அதிகரிக்கின்றனவே தவிர, குறைவதாக இல்லை.

விதிகளும் அபராதங்களும் கடுமையானால் விபத்துக்கள் குறையலாம் என்ற எடுகோளுடன் அண்மைக்காலமாக சில நடைமுறைகள் மாறியிருக்கின்றன. குறைந்தபட்ச போக்குவரத்து விதிமுறை மீறல் அபராதம் 25000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

இதற்க்கான முன்மொழிவு பாதீட்டில் அறிவிக்கப்பட்டதால் இருந்து இதுபற்றிய வாதப் பிரதிவாதங்கள் எழுந்துகொண்டிருந்தாலும் – போக்குவரத்துப் போலீசார் சட்டத்தை தமது ‘கையில்’ எடுத்து அபராதப் பணம் + வழக்குகள் பதியப்படாமல் தங்கள் தனிப்பட்ட கணக்குகளோடு முடித்து திடீர்ப் பணக்காரர்களாக மாறாதவிடத்து – வாகன சாரதிகள் கொஞ்சமாவது அவதானமாகவும் நிதானமாகவும் வீதிகளில் வாகனங்களை செலுத்துவர் என உறுதியாக நம்பலாம்.

(onlinejaffna.com)

(onlinejaffna.com)

இதன்படி ஏழு முக்கிய குற்றங்களுக்காக அபராதத் தொகை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. 

  1. மதுபோதையில் வாகனம் செலுத்தல்,
  2. செல்லுபடியாகும் வாகன காப்புறுதி இன்றி வாகனம் செலுத்தல்
  3. செல்லுபடியாகும் வாகன சாரதி அனுமதிபத்திரம் இன்றி வாகனம் செலுத்தல்
  4. விதிக்கப்பட்டதை விட அதிகரித்த வேகம்
  5. இடதுபக்கத்தால் வாகனத்தை முந்திச் செல்லல் ,
  6. பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகளில் வாகனம் செலுத்துதல்
  7. உரிய வாகன சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் இன்னொருவரை தமக்குரிய வாகனத்தை செலுத்தப் பணித்தல்

ஆகிய குற்றங்களுக்காக இந்த அளவு அபராதம் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எழுந்த சர்ச்சைகள், எதிர்ப்புக்கள் பின்னர் போக்குவரத்து அமைச்சர், நிதி அமைச்சர், தனியார் போக்குவரத்து துறை சார்ந்த தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு ஒன்று நடத்ததப்பட்டது.

ஓரளவு இணக்கத்துடன் வருகின்ற மாதம் முதல் இது அமுலுக்கு வரப்போகிறது.

அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவீனத்தோடு 25000 ரூபா என்பதும் ஒரு மிகப்பெரிய தொகையாக அமையவுள்ளதால் – பலருக்கு அடிப்படைச் சம்பளமே இதைவிடக் குறைவு என்பதும் முக்கியமானது – இலங்கையின் வீதிப்போக்குவரத்து கொஞ்சமாவது  நேராகும்,சீராகும் என்று நம்பலாம்.

எனினும் இலங்கையின் நீதிமன்ற செயற்பாட்டின் மந்தகதி, வார நாட்களுக்கும் வேலை நேரத்துக்கும் இடையிலான இழுபறி, 25000 கொடுத்து பெரிதாக இழப்பதை விட மறித்து எழுதும் அலுவலர்களுக்கு ஐந்தோ, பத்தோ கொடுத்துவிட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்று லஞ்சம், ஊழலில் ஊறிய மன நிலை போன்ற காரணிகள் இந்த புதிய சட்டங்களைக் கேலிக்கூத்தாக்கிவிடும் என்ற அபாயமும் இருப்பதை எல்லோரும் உணராமலும் இல்லை.

இது மட்டுமன்றி வாகன ஓட்டுனர்கள் கவனயீனமாக விடுகின்ற இன்னும்  தவறுகளுக்கும் இறுக்கமான தண்டப்பண அறவீடு அமுலாகிறது.

(il6.picdn.net)

(il6.picdn.net)

இருக்கைப்பட்டி அணியாமை, ஆவணங்களின் மூலப்பிரதியைக் கொண்டிருக்காமை (வாகனம் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களின் மூலப்பிரதிகளையும் எந்நேரமும் வாகனத்துடன் பேணுமாறு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது), இப்படியான குற்றங்களுக்கும் 5000 10000 ரூபா  தண்டப்பண அறவீடு இனிமேல் இருக்கப்போகிறது.

மூன்று தடவைகள் அபராதம் விதிக்கப்பட்ட பிறகு வாகன சாரதி அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்படும்.

தண்டனைகளும் பயமும்  குற்றங்களைத் தடுப்பதைப் போல வீரேந்த உபாயமும்  காலாகாலமான நம்பிக்கை பொய்யாகாமல் இருக்கும்பட்சத்தில் இந்த விதிகள் அமுலுக்கு வந்து சில மாதங்களிலேயே சடுதியான ஆரோக்கியமான வீதிப்போக்குவரது மாற்றங்களை அவதானிக்கலாம்.

எதுவும் ஆரம்பிக்கும்போது நல்ல விளைவுகளைப் பற்றி மட்டுமே மனிதமனம் விழைவது சகஜமானதே..

ஆனால், விதிகள் மட்டுமன்றி எமது மனிதர்களின் மனசாட்சிகளும் நேர்த்தியாக இயங்குவதோடு, யுகம் அவசரமானதாக இருந்தாலும் வாகனங்களை இயக்கும் கரங்களும், தடுப்பு விசை, ஆர்முடுகல் விசையையை மிதிக்கும் கால்களும், மிக முக்கியமாக கண்களும் மனமும் அவசரப்பட்டு அவதியுறாமல் நிதானத்தைக் கடைப்பிடிப்பது தான் உயிர்களைப் பற்றி யோசிக்கும் எமது காலத்தின் தேவையாக இருக்கிறது.

2015 விபத்துக்களின் ஆதாரங்கள் பெறப்பட்ட சுட்டி

 

Related Articles