கழிவு சுத்திகரிப்பில் தேங்கிநிற்கும் சாதிய அடக்குமுறை

ஈரோட்டில் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. 5 நாட்கள் உலகின்  பல்வேறு மொழித் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. மராத்தி மொழியில் திரையிடப்பட்ட இந்தியத் திரைப்படமான “கோர்ட்” எனக்கு சில “சவுக்கடிகள்” வாங்கிய உணர்வைத் தந்தது. படம் பேசும் கரு, இந்தியாவில் மனிதக் கழிவுகளை அள்ளும் சக மனிதர்களைப் பற்றியதும் அவர்கள் மீது பாராமுகம் காட்டும் நீதித்துறை பற்றியதும்.

அடுத்த திரைப்படம் பார்க்கத் துளியும் விருப்பம் இல்லாமல் நடக்க ஆரம்பித்தேன். நகராட்சியில் வேலை செய்யும் தோழர்கள் 6-7 பேர் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர், சிறு தயக்கத்துடன் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களைப் பற்றி கேட்க ஆரம்பித்தேன். ஒரு குறிப்பிட்ட இன  மக்கள் தெரிந்தே தங்களை “பலி ” கொடுக்கும் கதை! இனி உங்கள் முன்பு.

(dailymail.co.uk)

என் பேரு மாரி தம்பி, 20 வருசத்துக்கு மேல இந்த தொழில் தான். வேற தொழில் செஞ்சு பொளச்சுக்கலாம்னு எவ்வளவோ முயற்சி பண்ணி  பார்த்துடேன் ,ஆனால் எங்க திரும்பினாலும் நீ “மலம்” அள்ளத்தான் லாயக்குனு சாதி பேரைச் சொல்லி திரும்பவும் இதுக்குள்ள தான் தள்ளுறான்க!, என்னோட சின்ன வயசுல, முதல் தடவ மலம் அள்ளும் போது கால் இடறி மலக் குழியில விழுந்துட்டேன், கழுத்து வரை “மலம் “. கழுவிட்டு வீட்டுக்கு வந்து அழுதுட்டே இருந்தேன், வாழ்நாள் முழுவதும் அதுக்கு அப்புறம் தெரிஞ்சே விழ வேண்டியதா போச்சு!

என்று அவர் புன்னகையோடு சொல்ல, முதல் வாய் குடித்த தேநீர் “நரகலாய்” தொண்டையினுள் இறங்கிய உணர்வு எனக்கு.

அடுத்தவர் ஆரம்பித்தார்

என் பையன படிக்க வச்சேன் தம்பி!, அவன இந்த தொழில் செய்ய விட்ற கூடாதுனு வெறி. ஆனா பள்ளிக் கூடத்தில “பீ ” அள்ளுறவன்-னு கிண்டல் பண்ணி, கிண்டல் பண்ணி பாதியிலேயே போக மாட்டேன்னு நின்னுட்டான். பக்கத்து தெருவுலதான் அவன் சுத்தம் பண்றான்

அவர் சொன்னப்ப அவர் குரல் உடைந்தது. கொஞ்சம் உற்சாகப்படுத்தலாம்னு, நீங்கலாம் அரசு ஊழியர்கள்னு சொல்லிக்கலாம் என்னப் பாருங்க MBA படுச்சுட்டு படம் எடுக்குறேனு ஊர் சுத்துறேன், வீட்டுல எங்க இருக்கேனு கூட கேக்க மாட்றாங்கனு சொன்னதும் எல்லாரும் சிரிச்சாங்க!

கோமதி அக்கா பேச ஆரம்பிச்சாங்க ,

அரசாங்க வேலைனு சொல்ல முடியாது தம்பி, எங்களுக்கும் “கான்டராக்டர்” காரங்க இருகாங்க, எங்கள எந்த தெருவிக்கு போக சொல்றாங்களோ அங்க போவோம், பாதி பேர் இப்படி தான் தம்பி. பொது இடத்தில எங்க புள்ளைங்களே எங்கள அம்மானு கூப்புட யோசிகிதுங்க! ஆசையா புள்ளைகள தூக்க போனா கைய கழுவிட்டியானு கேக்கும்போது இந்த பொழப்புக்கு செத்துரலாம்னு தோனும்! ஆனா குடும்பம் ஆனாதை ஆயிருமே?.

எல்லா எடத்துலயும் பேல்றானுங்க தம்பி, நாங்களும் மனுசங்க தானே?, கக்கூஸ் குழிய தவற எல்லா எல்லா எடத்துலயும் பேல்றாங்க .தண்ணி ஊத்துனா கொரஞ்சா போவானுங்க?, ஒருநாள் பேல்றவன்கள அல்லவிட்டா தான் எங்க வலி புரியும்

வேதனைகளை வார்த்தைகளாய் கொட்டினார் இருப்பிதிலேயே பெரியவர் கோவிந்தன்.

பொண்ணுங்க தீட்டு துணி, நாப்கீன்-னு எல்லாத்தையும் ஒரே குப்பைல தான் போடுறாங்க தம்பி, நாங்க அதலாம் கைலதானே பிரிக்கிறோம் தம்பி. என்றார் இராசு. (கையுறை, சீருடை எல்லாம் தரப்படுகிறது ஆனால் 10 பேருக்கு 3 என்ற விகிதத்தில். இன்னமும் தகரமோ, அல்லது வெறும் கைகளோ தான் அவர்களின் ஆயுதம்.)

(trbimg.com)

என்னுடைய தேநீருக்கும் சேர்த்து பணம் செலுத்திவிட்டு, அடுத்த தெரு நோக்கி போகலானார்கள். பெரியவர் கோவிந்தன் உரத்த குரலில் “உழைக்கும் கரங்களே உருவாக்கும் கரங்களே ” என்ற உம்.ஜி.ஆர் பாடலை பாடியபடி முன் சென்றார்.

அந்த “தேநீர்” அன்றைய தூக்கம்  தெலைக்க காரணம்  ஆகியது. இந்தியாவில் மனித கழிவுகளை அள்ளும் மனிதர்களைப்பற்றி தேட ஆரம்பித்தேன். 2011 ஆம் ஆண்டு எடுத்த ஆய்வின்படி இந்தியாவில் 2.6 மில்லியன் மக்கள் இதை தொழிலாக செய்கிறார்கள். முழுமையாக சாதிய அடக்குமுறையாக மட்டுமே உள்ள இந்த தொழில் பற்றிய தொடர் தகவல் என்னை நிலை குலைய வைத்தது!.

சில ஆண்டுகளுக்கு முன்னர், நடிகர் அமீர்க்கான் தொகுத்து வழங்கிய “சத்திய மேவே ஜெயத்தே” என்னும் நிகழ்ச்சியில் வட இந்தியாவில் மனித கழிவுகளை அள்ளும் அவலம் பற்றிய தொகுப்பைத் தேடிப் பார்த்தேன். அதில் இப்படி ஒரு காட்சி வரும்; ஒரு பெண் மனித கழிவுகளை வாளியில் அள்ளி “தலையில் ” சுமந்து செல்வார் சில கழிவுகள் அவரது தலையில் சிந்தும்!, இந்த அவலக் காட்சியை தொடர்ந்து அம் மக்களுக்காக போராடும்  இளைஞர் பேச ஆரம்பித்தார்.

எவ்வளவோ சொல்லிடோம், காலுல கூட விழுந்தேன் இந்த தொழில் வேண்டாம்னு ஆனால் யாரும் கேக்கல!, காரணம் அவுங்களுக்கு வேற தொழில் தெரியல அரசாங்கமும் கண்டுகல., சாதிய காரணம் காட்டி ஊருக்குள்ள இந்த தொழில் மட்டும் தான் செய்ய விடுறாங்க. அவ்வளவு ஏன், கடுமையா படிச்சு அரசு வேலைக்கு போனா அங்கயும் எங்களுக்கு இந்த வேலை தான் ஒதுக்குறாங்க

அவர் பேசிய போது, தமிழ்நாடு கொஞ்சம் பரவாயில்லை என்று எண்ணிய பொழுதுதான், பெண் இயக்குனர் “திவ்யா” இயக்கிய “கக்கூஸ் ” ஆவணப்படம் பற்றி கேள்விப்பட்டு தேடிப் பார்த்தேன்.

(dailymail.co.uk)

நான் சந்தித்த நகர சுத்தி தோழர்கள் போன்று நூற்றுக் கணக்கான மக்களை சந்தித்து, ஆவணம் செய்துள்ளார். குறிப்பாக 2013இல் தொடங்கி 2016 வரை மனிதக் கழிவுகளை அள்ளும்போது விஷ வாயு தாக்கி 27 பேர் உயிர் இறந்துள்ளனர். அவர்களைப் பற்றியும் பேசுகிறது இந்த ஆவணப் படம்.

அரசு இந்த மக்களுக்கு  3% இட  ஒதுக்கீடு தருகிறது என்று கூறுகிறார்கள் ஆனால் அந்த மக்களுக்கு அது போய் சேரவில்லை, அவர்களின் வாழ்வாதாரம் சிறிதும் மாறவில்லை. 1993 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளுவது குற்றம் என்றும் அவ்வாறு அள்ளச் சொல்லும் நபருக்கு தண்டனை என்றும் கூறியது. ஆனால் இங்கு அரசே அவர்களை “மலம்” தானே அள்ள வைக்கிறது., பின் தனியாரை எப்படிக் குறை சொல்வது.

மீண்டும் 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம், மனிதக் கழிவுகளை அள்ளும் போது உயிர் இழப்பு ஏற்பட்டால் அந்த நபரின் குடும்பத்திற்கு 10 இலட்சம் இழப்பீடும், காரணமான நபருக்கு சிறைத் தண்டனையும் வழங்க உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தமிழக அரசு 10 இலட்சம் தர இயலாது 3 இலட்சம் தான் முடியும் என்று மனுத்தாக்கல் செய்தது!”. அந்த தொகையும் எத்தனை குடும்பத்திற்கு கிடைத்தது என்று பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

கடைசியாக சென்னையில் தனியார் உணவக மலக் குழியை சுத்தம் செய்த 3 பேரில் இருவர் இறந்து விட்டனர், ஒருவருக்கு ஒருபக்க உடல் செயலிழந்துவிட்டது. அவர்களுக்கு உதவித் தொகையோ, அந்த நிறுவன உரிமையாளரக்கு தண்டனையோ கிடைத்ததா என்றால்? அதுவும் இல்லை. இதுபோன்ற சம்பவங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த ஆவணப் படம்.

இதை எல்லாம் கேட்ட என் நண்பன், வெளிநாட்டிலும் மனிதர்கள் இந்தப் பணியை செய்கிறார்களே என்றான். இல்லை கண்டிப்பாக இல்லை. அங்கு இயந்திரங்களை பயன்படுத்தி மனிதர்கள் வேலை செய்கிறார்கள் ஆனால் இங்கு, இயந்திரம் பழுதாகிவிடும் என்று மனிதர்களைப் பயன்படுத்துகிறார்கள். அவ்வளவு மட்டமா மனித உயிர் என்றேன்.

(aljazeera.com)

புதிதாக அறைக்குள் வந்த நண்பன் ஏன் நண்பா நம்ம பிரதமர் சொல்லாறே “கேஷ்லெஸ்” இந்தியா அத பத்தி என்ன நினைக்கிற? என்றான், நமக்கு இப்ப தேவை கேஷ்லெஷ் இந்தியா இல்லை நண்பா “கேஸ்ட்லெஸ்” (சாதியற்ற) இந்தியா என்று கூறிவிட்டு, பாரதியின் வரிகளை கைபேசியில் ஓலிக்க விட்டேன்!.

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்தது காடு – தழல்

வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் “

Related Articles