Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website. The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

பாலியல் வல்லுறவுகள் – கறைபடிந்த தரப்படுத்தலில் இந்தியாவும் இலங்கையும்

பாலியல் துஷ்பிரயோகங்கள் காலத்துக்குக் காலம் எமது சமூக வலைத்தளங்களில் அல்லது செய்தித்தாள்களில் பரபரப்பை ஏற்படுத்தி, முக்கிய பிரச்சினையாக பார்க்கப்பட்டு, பின்னர் அப்படியே அடங்கிப்போகும் ஓர் விடயமாகவே இருந்துவருகிறது.

படம் - funbuzztime.com

படம் – funbuzztime.com

சிறுமி சேயா, பாடசாலை மாணவி வித்யா என எத்தனையோ பிஞ்சுகளும் பெண்களும் இக்கொடூரச் செயலுக்கு ஆளாகி, தமது இன்னுயிரையும் இழந்துவிட்டனர். விசாரணைகள் நடந்தன தண்டனைகள் வழங்கப்பட்டன என இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும்போதெல்லாம் இம்முடியாத சோகத்தின் உண்மைநிலை நமது மனதை நெருடிக்கொண்டுதான்  இருக்கின்றது.

காதலித்த பெண் முகத்தில் ஆசிட் வீச்சு, வரதட்சணைக் கொடுமையில் எரிவாயு வெடிப்பில் பெண் மரணம், கற்பழிப்பு, வீட்டு வன்முறை, உளவியல் துஷ்பிரயோகங்கள் இப்படி இன்று இந்த நொடியில் எனது பேனா எழுதும்போதும் உலகின் எங்கோ ஓர் மூலையில் ஓர் பெண் வன்முறைக்கு ஆளாகிக்கொண்டுதான் இருக்கிறாள்.

படம் - editorial.designtaxi.com

படம் – editorial.designtaxi.com

பாலியல் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் என்பன எங்கோ ஓர் இனந்தெரியாத கிரகத்தில் நடப்பதுபோன்ற எண்ணமே பெரும்பாலும் அனைவரது கவனத்திலும் இருக்கின்றது. மாறாக நாம்வாழும் இதே சமூகத்தில் நாம் நினைத்துப் பார்த்திராத சந்தர்ப்பங்களிலும் இவ்வாறான வன்முறைகள் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றன. எம்கண்முன் இருக்கும், அன்றாடம் நம்மைக் கடந்துசெல்லும் எத்தனையோ பெண்களும் சிறுமிகளும், ஏன் குழந்தைகள்கூட இவ்வாறான சித்திரவதைகளுக்கு ஆளாகிக்கொண்டே இருக்கின்றனர்.

ஒரு தனிமனித வாழ்வில், குறிப்பாகப் பெண்களுக்கு இது எப்படியான பிரதிகூலத்தைத் தேடித்தரும் என்பது மனதை உருக்கும் ஓர் உண்மை எனலாம். கலாச்சாரம் பண்பாடு என்று வாழும் எம்போன்ற நாட்டுப் பெண்களின் மற்றும் அவர்கள் சார்ந்தவர்களின் நிலை எத்துணை வேதனையளிக்கக்கூடியது? அவர்கள் எதிர்நோக்கும் சமூகம் சார்ந்த மன உளைச்சல்கள் அனைத்திற்கும் மேலாக அப்பெண்கள் அனுபவிக்கும் உடல்ரீதியான வேதனை போன்றவை ஈடுகட்டமுடியாத இழப்பேயன்றி வேறில்லை.

படம் - i.huffpost.com

படம் – i.huffpost.com

துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் இவை அறிவு, கல்வித்தரம், சமூக அந்தஸ்து போன்றவற்றையும் தாண்டி உலகின் மூலை முடுக்கெங்கும் நடந்துகொண்டிருகிறது என்பது ஒரு கசப்பான உண்மை. ஆசிய நாடுகள் மட்டுமன்றி பல மேலைத்தேய நாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல. உலகின் அதிகூடிய பாலியல் வன்முறைகள் வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே பதிவுசெய்யப்பட்டுள்ளன என்பது ஆச்சர்யமான விடயம்.

உலகின் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகளவில் நடைபெறும் 10 நாடுகள் வரிசையில் ஆசிய நாடுகளான இந்தியா 4ஆவது இடத்திலும், இலங்கை 9ஆவது இடத்திலும் உள்ளது. மேலும் இத் தரப்படுத்தலில் உள்ள ஆசிய நாடுகள் இவையிரண்டு மட்டுமேயாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மேற்கத்தேய நாடுகளோடு ஒப்பிடுகையில் கீழைத்தேய நாடுகளில் இவ்வாறான வன்முறைகள் தொடர்பான முறையீடுகள் மிகச் சொற்பமாகவே பதிவுசெய்யப்படும் வழமை இருக்கும் நிலையிலும் இப்பத்து முன்னணி நாடுகள் வரிசையில் இலங்கையும் இந்தியாவும் இடம்பிடித்திருப்பது எமக்குச் சொல்லும் தகவல் மிக ஆழமானதும் சிந்திக்கப்படவேண்டியதுமாகும்.

படம் - wp.patheos.com.s3.amazonaws.com

படம் – wp.patheos.com.s3.amazonaws.com

இத்தரப்படுத்தலில் இடம்பிடித்துள்ள ஏனைய நாடுகளை நோக்கும்போது எமது புருவங்கள் உயர்வதை தடுக்க இயலாதுதான்;

  1. ஐக்கிய அமேரிக்கா
  2. தென்னாபிரிக்கா
  3. சுவீடன்
  4. இந்தியா
  5. இங்கிலாந்து
  6. ஜெர்மெனி
  7. பிரான்ஸ்
  8. கனடா
  9. இலங்கை
  10. எதியோப்பியா

முறைப்பாடு செய்யப்பட புள்ளிவிபரங்களின் அடிப்பையில் நாம் முதல் பத்து இடங்களில் இடம்பிடித்துள்ள அதேவேளை பல்வேறு சமூக காரணங்களுக்காய் முறைப்பாடு செய்யப்படாத நிகழ்வுகள் அதைவிட அதிகமாகவே இருக்கின்றன என்ற உண்மையைப் புறந்தள்ளிவிட இயலாது. பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கங்கள் போன்றவற்றில் மேற்கத்தேய நாடுகளைவிட உயர்ந்த நிலையிலிருக்கும் எமது சமுதாயத்தில் பெண்களின் நிலை இத்துணை அவலத்துக்குள்ளாகியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

பெண்களின் முன்னேற்றம், பெண் கல்வி, மனைவியின் கெடுபிடி பற்றிப்பேசும் கணவன்மார், இப்படி பெண்கள் முன்னேறி சமுதாயத்தை ஆட்டிப்படைப்பதாய் சித்தரிக்கும் இச்சமுதாயம் இதுபற்றிச் சற்றுச் சிந்திக்கவேண்டும். ஆணுக்குப் பெண் சமவுரிமை வழங்க கிளம்பியிருக்கும் சமுதாயம், பெண்ணைப் பெண்ணாய் மதித்தாலே போதும் என்ற நிலையே இன்று இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் சகவாழ்வு தொடர்பில் பெற்றோர்கள் கவனயீனமாக இருத்தல், வன்முறைகள் தொடர்பான போதிய அறிவின்மை, சமூகத்துக்கு பயந்து பாலியல் துஷ்பிரயோகங்கள் உரிய முறையில் முறையீடு செய்யப்படாமை, சமூகக் கட்டமைப்பு மற்றும் கலாசாரச் சீர்கேடுகள், மேலைத்தேய பண்பாடுகளின் தாக்கம், மனோரீதியான காரணங்களை இதன் அடிப்படையாகக் கொள்ளலாம்.

இலங்கையைப் பொறுத்தவரையில் 14.5% வீதமான ஆண்கள் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குகின்றனர். இதில் 64.9% வீதமானவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பெண்களை வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளனர். ஆக அரைவாசிக்கும் அதிகமானோர் தொடர்ந்தும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கின்றனர். காவல்துறையின் கவனத்திற்கு மிக அரிதாகவே செல்லும் இவ்வாறான முறைப்பாடுகள் எந்தளவு முடிவுக்குக் கொண்டுவரப்படுகின்றன என்பதும் ஓர் பெரும் கேள்விக்குறியே. இதுவே இத்தொடர் குற்றங்களுக்குக் காரணம். குற்றவாளிகள் எவ்வித தடையுமின்றி மீண்டும் மீண்டும் பெண்களை துஷ்பிரயோகம் செய்துகொண்டுதான் இருக்கின்றனர்.

படம் - livelaw.in

படம் – livelaw.in

இந்திய மண்ணில் பெண்களுக்கெதிராக நடக்கும் குற்றங்களில் முதலிடத்திலிருப்பது பாலியல் வல்லுறவே. இந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடங்களுக்கொருமுறை புதிய பாலியல் வல்லுறவுக்கான முறையீடு மேற்கொள்ளப்படுகிறது. இன்னுமொரு வருந்தத்தக்க விடயம் என்னவெனில் 98% சதவீதமான பாலியல் வல்லுறவுகள் பெண்களின் குடும்பத்திலுள்ள ஆண்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது. வெறும் 2% வீதமானவைகளே அந்நிய ஆடவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இது எத்துணை கொடூரம்? வீட்டிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பில்லாதபோது இவ்வன்முறைகளுக்கான தீர்வை எப்படிப்பெறுவது? மேலும் இந்தியாவில் பாலியல் வல்லுறவு அதிகரிப்பு வீதம் மேலும் மேலும் உயர்ந்துகொண்டே செல்கிறது.

படம் - aifs.gov.au

படம் – aifs.gov.au

இதனைப் படிக்கின்ற ஒவ்வொரு ஆண்மகனுக்கும்; உங்களது தாய்மாரையும், சகோதரிகளையும், பிள்ளைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு உங்களுடையது. மாறாக வேலியே பயிரை மேயும் நிலைக்கு உங்கள் பெண்களைத் தள்ளிவிடாதீர்கள். பெண்களை கண்களாக மதிக்கும் கலாச்சாரத்தில் வாழ்ந்துகொண்டு அவர்களைக் கிள்ளுக்கீரைகளாக நடத்தும் நிலையிலிருந்து நீங்களும் நீங்கி அடுத்தவர்களுக்கும் அறிவூட்டுங்கள்.

படம் - cdn.skim.gs

படம் – cdn.skim.gs

புள்ளிவிபரங்களையும் கருத்துக்களையும் இலகுவில் ஒப்புவித்துவிடலாம். ஆனால் அதன்பின்னால் படிந்திருக்கும் எத்தனையோ பெண்களது துயரமும் அவமானமும் எங்களால் ஈடுகட்ட முடியாதவையே.

Related Articles