எளிமையா ? எளிமையான விளம்பரமா ?

2015ம் ஆண்டுக்கு முன்பு, இலங்கை ஜனாதிபதி என்கிற பதத்திற்கு மிக அதிகார தோரணை வாய்ந்த அர்த்தமும், விம்பமும் வடிவமைக்கபட்டிருந்தது. இலங்கையில், இயற்கை விதிகளை கடந்து எதனையும் மாற்றதகுந்த மிகச்சக்திவாய்ந்த நபர் யாரும் இருக்கிறார்கள் என்றால், 2015ம் ஆண்டுவரை அது இலங்கையின் ஜனாதிபதியாகத்தான் இருந்திருக்க முடியும்.

ஆனால், நல்லாட்சி அரசாங்கம் என்கிற தொனிப்பொருளில் 2015ம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7வது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றதிலிருந்து இந்நிலையில் சடுதியான மாற்றநிலை ஏற்படுத்தபட்டது. “இலங்கை ஜனாதிபதி எளிமையானவர்” என்கிற காட்சிப்படுத்தலுடன், பல்வேறு செயற்பாடுகள் இடம்பெற்றன. குறிப்பாக, ஜனாதிபதிக்கான பாதுகாப்பின் அளவு கணிசமான அளவில் குறைக்கப்பட்டது, ஜனாதிபதியின் செலவினங்கள் 100 நாள் வேலைத்திட்டங்களுக்கு அமைவாக மிகப்பாரிய அளவில் மட்டுப்படுத்தப்பட்டது, குறைந்தது ஜனாதிபதியை மிக இலகுவில் அணுகக்கூடிய அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. மிக உச்சமாக, இலங்கை ஜனாதிபதியை விமர்சிக்கதக்கவகையில் ஊடக சுதந்திரம் அமைந்திருந்தமை என்பனவற்றை குறிப்பிடலாம்.

ஜனாதிபதியின்கீழான பாதீடு, மஹிந்த மைத்ரி ஒப்பீடு (manthri.lk)

எதிர்வரும் தை 9ம் திகதியுடன் ஜனாதிபதியாக தனது பதவியின் இரண்டாவது வருடத்தை மைத்திரிபால சிறிசேன அவர்களை பூர்த்தி செய்கின்றார். இந்நிலையில், இன்னமும் மைத்திரிபால சிறிசேன தான் ஒரு எளிமையான ஜனாதிபதி என்கிற விம்பத்துடனேயே செயற்பட்டுக் கொண்டிருக்கிறாரா? அல்லது எளிமை என்கிற விம்பத்தை, விளம்பரப்படுத்தலுக்கு பயன்படுத்திக்கொண்டு, அவரும் ஏனைய ஜனாதிபதிகளின் பாதையை நோக்கியே நகர்ந்துகொண்டு இருக்கிறாரா? என அறிந்துகொள்வது அவசியமாகிறது.

ஜனாதிபதி மைத்திரி

நல்லாட்சி அரசு என்பதை முதன்மை நோக்காகக் கொண்டு 2015ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலை மைத்திரிபால சிறிசேன எதிர்கொண்டார். இதன்போது, அவர் கொள்கை வகுப்பில் மாற்றங்கள் பல செய்யப்பட்டு, மிகுந்த சர்வாதிகாரம் கொண்டு ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்ச அவர்களை எதிர்கொள்ள வேண்டியநிலை இருந்தது. இருந்த போதிலும், மகிந்த ராஜபக்ஸவின் குடும்ப ஆட்சியில் கொண்டிருந்த வெறுப்பும், அவர்மீதான ஊழல் மற்றும் மதரீதியான தாக்குதல் குற்றசாட்டுகளும் இலங்கையின் பெருன்பான்மையினரின் வாக்குகளை துண்டாடியதுடன், சிறுபான்மையினரின் ஒட்டுமொத்த ஆதரவையும் மைத்திரிக்கே வழங்க, கடினமான முறையில் எதிர்பார்க்காதவண்ணம் தோற்று போனார் மகிந்த ராஜபக்ச அவர்கள்.

ஜனாதிபதியாகப் பதவியேற்கும் மைத்ரிபால சிறிசேன (si.wsj.net)

ஜனாதிபதியாகப் பதவியேற்கும் மைத்ரிபால சிறிசேன (si.wsj.net)

இதன்பின், ஜனாதிபதி பொறுப்பை ஏற்ற மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசு 100 நாள் வேலைத்திட்டத்தையும் அதற்கான பாதீட்டு அறிமுகத்துடனும் ஆட்சியை தொடங்கியது. இந்த 100நாள் திட்டத்தில் முக்கிய விடயமாக, நிறைவேற்றுஅதிகாரமிக்க ஜனாதிபதியின் அதிகாரங்களை 19வது திருத்தம் மூலமாக நீக்குவதுடன், 100வது நாள் முடிவில் நேர்மையான முறையில் பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவதையும் உள்ளடக்கி இருந்தார்கள். இவ்வாறான 100 நாள் வேலை திட்டத்தில் எத்தகைய முன்னேற்றநிலை ஏற்பட்டது என்பதை இந்த சுட்டியில் காணலாம்.

எளிமையான ஜனாதிபதி மைத்திரி

100நாள் வேலைத்திட்டத்துக்கு அமைவாக, மீண்டும் பாராளுமன்ற தேர்தலை நடாத்தியதுடன், அதிலும் தொடர்ந்து நல்லாட்சிக்காக ஒன்றிணைந்த அரசகட்சிகளின் பிரதிநிதிகளை நல்லாட்சியை நடாத்த மக்கள் தெரிவு செய்தார்கள். இதன்பின்னதாக, 2016ம் ஆண்டுக்கான பாதீட்டை அறிமுகம் செய்யும்போது, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஜனாதிபதி வரலாற்றில் முதல் முறையாக ஜனாதிபதி அவர்கள் தனது செலவீனங்களை கடந்தகாலங்களுடன் ஒப்பிடுமிடத்து பாரிய அளவில் குறைத்திருப்பதாக கூறினார்.

குறிப்பாக, மகிந்த ராஜபக்ச அவர்கள் தனது இறுதிகாலத்தில் ஜனாதிபதி செலவுகளுக்கு என சுமார் 9 பில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்தார். ஆனாலும், மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றதும் அதில் பல மில்லியன் ரூபாக்களைக் குறித்திருந்தார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களதும் செலவினங்களின் ஒப்பீடு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களதும் செலவினங்களின் ஒப்பீடு

இவற்றுடன், ஜனாதிபதி பாதுகாப்புக்கென பயன்படுத்தப்பட்ட 553 வாகனங்கள் 223 வாகனங்களாக மாற்றப்பட்டதுடன், ஜனாதிபதி அலுவலகத் தேவைக்காக வாடகைக்கு எடுக்கபட்ட 103 வாகனங்களும் விடுவிக்கபட்டிருந்தன.

இவற்றுக்கு மேலதிகமாக, பொதுவாழ்வில் ஜனாதிபதியை அழைக்க “அதிமேதகு” என்கிற வார்த்தை பிரயோகம் தவிர்க்கப்பட்டமை, போது இடங்களில் மக்களுடன் மக்களாக இருப்பதற்கு முயற்சித்தமை, வெளிநாட்டு பயணங்களின்போது ஆடம்பரங்களைத் தவிர்க்கின்றமை, பல்வேறு பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வுக்காக தானே நேரடியாக பங்குகொள்ளுகின்றமை என்பனவற்றையும் இவற்றுக்குள் சேர்த்துக்கொள்ளலாம்

பாதை மாறும் எளிமை

இத்தகைய நிலையில், அண்மைக்காலத்தில் இத்தகைய எளிமை விம்பத்தை பயன்படுத்தியதற்கான விளம்பரப்படுத்தல்தன்மை அதிகரித்துள்ளதா என்கிற கேள்வியோடு, சிறிது சிறிதாக எளிமையின் பாதையிலிருந்து ஒரு சிக்கலான பாதைக்கு ஜனாதிபதியும், நல்லாட்சி அரசும் பயணிப்பதனையும் அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக, இம்முறை 2017ம் ஆண்டுக்கான பாதீட்டில் எத்தகைய காரணங்களை அடிக்கோடிட்டு கடந்தமுறை ஜனாதிபதி செலவீனங்களை குறைத்து இருந்தார்களோ அல்லது மகிந்த ராஜபக்ச மீது குற்றம் சாட்டி இருந்தார்களோ, அவற்றில் சிலவற்றுக்கு நியாயம் கற்பிக்கபட்டு செலவீனங்கள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, 2016ம் ஆண்டில் 2.39 பில்லியன் ஜனாதிபதி செலவினங்களுக்கு ஒதுக்கப்பட்டபோதிலும், 2017ல் அது சுமார் 60%த்தினால் அதிகரித்து 6.4 பில்லியனை எட்டியிருக்கிறது. இவற்றை கடந்த ஜனாதிபதியின் செலவீட்டு தொகைகளுடன் ஒப்பிடமுடியாதபோதிலும், மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆட்சியில் இதுவொரு பாரிய அதிகரிப்பாகும். அதேசமயம், ஜனாதிபதியின் நேரடி நிர்வாகத்திற்குட்பட்ட பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை ஆகியவற்றின் மொத்த செலவினங்கள் குறைக்கபட்டுள்ளமையும் குறிப்பிடதக்கதாகும். இது தொடர்ந்தும், மைத்திரிபால சிறிசேனவை எளிமைமிகு ஜனாதிபதி என்று விளம்பரபடுத்த பொருத்தமானதா என்கிற கேள்விநிலையை ஏற்படுத்துகிறது.

நீர்ப்பாசன அமைச்சராக இன்றைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன (colombotelegraph.com)

நீர்ப்பாசன அமைச்சராக இன்றைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன (colombotelegraph.com)

இவற்றுக்கு மேலாக, ஜனாதிபதியின் எளிமைதன்மை என்பது நிர்வாக செயல்பாடுகளில் குறுக்கீடாக அமைவதுடன், அண்மைக்காலத்தில் சர்ச்சைக்குரியதாக பேசப்பட்டும் வந்திருக்கிறது. உதாரணமாக, அண்மையில் தனியார் போக்குவரத்து துறையினர் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டிருந்தபோது, அவர்களது பணிப்புறக்கணிப்பை நிறுத்த நேரடியாகவே ஜனாதிபதி அவர்களை சந்தித்து, பிரச்சனைக்கு தீர்வுகாணும் ஆணைகுழுவை அமைப்பதாகவும் உறுதியளித்தார். இந்தசெயல்பாடு, போராட்டத்தில் குதிக்கின்ற எந்த சுப்பனோ, குப்பனோ ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து ஒரு தீர்வை பெறலாம் என்கிற நிலைமையை உருவாக்கியிருக்கிறது. நல்லாட்சி அரசில், இதனை சாதகதன்மையாக வெளிக்காட்டி பிரச்சாரங்களை முன்னெடுத்தாலும், நிர்வாக ரீதியாக ஒரு அரசுக்கு உள்ள பொறுப்புநிலைகளுக்கு மேலாக ஜனாதிபதி தன்னுடைய எளிமைத்தன்மையை முன்னிறுத்த ஏனையவர்களின் செயல்பாடுகளில் தலையிடுகின்ற நிலை, அதிகார மட்டங்களுக்கு உள்ள பொறுப்புதன்மையை கேள்விகுறியாக்குவதுடன், அவர்களது செயற்பாடுகளையும் பாதிக்கச் செய்யும். இவற்றுக்கு மாறாக, ஜனாதிபதி நிர்வாகத்திறனற்ற தனது நிர்வாகங்கள் மீது தனது எளிமைதன்மை மிகுந்த அதிகாரங்களை பயன்படுத்துவது என்பது தனியே பிரச்சனையுடையவர்களுக்கு மட்டுமன்றி, அனைத்து பொதுமக்களுக்கும் எதிர்காலத்தில் நன்மை பயப்பதாக அமையும்.

மக்களின் ஜனாதிபதி, எளிமைத்தன்மை மிகுந்த ஜனாதிபதி என்கிற வார்த்தைஜாலங்கள் தனித்து மைத்திரிபால சிறிசேனவை ஒரு மீட்பராக உலகுக்கு விளம்பரபடுத்தவேண்டுமானால் உதவலாமே தவிர, ஒரு நாட்டின் நிர்வாக எல்லைகளுக்குள் வினைத்திறன் மிகுந்த நல்லாட்சியை கொண்டு நடாத்துவதில் ஒருபோதும் உதவப்போவதில்லை. மாறாக, சர்வதேச நாடுகளின் ஜனாதிபதிகள் உண்மையிலேயே எத்தகைய விடயத்தில் எளிமையாகவும், எத்தகைய விடயத்தில் அதிகார விற்பன்னர்களாகவும் இருக்கிறார்கள் என்பதனை உதாரணமாக கொண்டு செயல்படுவது என்பது இலங்கை போன்ற நாட்டின் அபிவிருத்திநிலையில் மெய்யான மாற்றத்தை ஏற்படுத்தும்.

 

Related Articles