சமூகப் போராளிகள்

மக்களை போராட தூண்டும் யாராக இருந்தாலும் கைது செய்யபடுவார்கள்!. இது இன்று தமிழக முதலவர் சொன்னது, அதுவும் சாதரணமாக இல்லை குண்டர் சட்டத்தில்! முதலில் குண்டர் சட்டம் என்றால்  என்னவென்று தெரிந்துகொண்டு பின் யாரெல்லாம் ஏன் இந்த சட்டத்தினால் கைதுசெய்யபடுகிறார்கள் என்று பார்த்தால்தான் சாமானியனுக்கும் இந்த அரசு சொல்லவரும் நேரடி கட்டளைகள் புரியும்.

நீர்நிலை ஆக்கிரமிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடி பல ஆக்கிரமிப்புக்களை அகற்றி உள்ளார் பியுஷ் மனுஷ் (o.aolcdn.com)

தொடர்குற்றங்களில் ஈடுபடுவோர் குறிப்பாக கள்ளச்சாராயம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடும் சமூக விரோதிகளை கைதுசெய்து அதன்மூலம் அமைதியை நிலைநாட்டுவதற்கு என்று கூறி 1982இல் தமிழக அரசால் இயற்றப்பட்டதுதான் இந்த குண்டர் தடுப்புச்சட்டம். பின் 2௦௦4இல் இந்த சட்டத்தின்கீழ் மணல் கொள்ளை மற்றும் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகளும் சேர்க்கபட்டது. இனி கடந்த சில மாதங்களாக குறிப்பாக கடந்த சில நாட்களாக தமிழக அரசு இந்த சட்டத்தின் கீழ் யாரையெல்லாம் கைது செய்தது என்பதில்தான் மக்கள் நலனில் இந்த அரசு காட்டும் தீவிரம் நம் நெஞ்சை நிறைக்கும்!

சில மாதங்களுக்கு முன் சேலத்தில் சூழலியல் ஆர்வலர் “பியூஸ் மனுஷ்” கைது செய்யப்பட்டார். காரணம் கேட்டபோது அவர் புதிதாக வர இருக்கும் ரயில் நிலையத்தை எதிர்த்து போராடுகிறார் என்றார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், அவர் நீர்நிலை ஆக்கிரமிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடி பல ஆக்கிரமிப்புக்களை அகற்றி உள்ளார். அது மட்டும் இல்லாமல் அங்கு நடந்த பல பொதுப்பிரச்சனைகளில் காவல்துறையின் தாமதமான நடவடிகைகளை கண்டித்து போராட்டம் செய்திருக்கிறார். இதன் பின்விளைவால் சிறைச்சாலையில் காவலர்களால் கடுமையாகவும் தாக்கப்பட்டார். போராடுறது மட்டும் ஒரு வேலையா? என்று கேள்வி எழலாம். முடிந்தால் “கூகுள்“ செய்துபாருங்கள், அவர் எதனை குளங்களை தூர்வாரி இருக்கிறார், 1,௦௦௦,௦௦௦ இற்கும் அதிகமான மரங்களை நட்டுஇருக்கிறார் என்று தெரியும் . (அரசியல்வாதி மாதி போஸ் குடுத்துட்டு போகாம அத வளர்த்து 1௦ ஏக்கர்ல பசுமை காடு உருவாக்கி உள்ளார்)

சமூகப் போராளி “திருமுருகன் காந்தி” (amazonaws.com)

சில வாரங்களுக்கு முன் சமூகப் போராளி “திருமுருகன் காந்தி” இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நடத்தியபோது குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். அதை தொடர்ந்து கதிராமங்கலத்தில் எண்ணெய் எடுப்பதை தடுக்க, காகிதத் துண்டு கொடுத்து பிரச்சாரம் செய்த மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக அவர் பல்கலைகழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதோ இன்று கூத்தின் உச்சம் மலம் அள்ளும் மனிதர்களின் அவலங்களை சொல்லும் கக்கூஸ் ஆவணப்படத்தை எடுத்த திவ்யபாரதி கைதுதான் (“கக்கூஸ்” படமும் தமிழக அரசால் தடை செய்யபட்டிருகிறது)அதற்கு உங்கள் அரசு சொன்ன காரணம் குழந்தையும் சிரிக்கும் பகடி அது. ஆம் 2௦௦9ஆம் ஆண்டு அவர் இளங்கலை பயின்றபோது, தலித் மணவர் ஒருவர்  விடுதியில் பாம்பு கடித்து இறந்து போனார்! பராமரிப்பு இல்லாத விடுதியை மறுசீர் செய்துதர சொல்லி போரடியிருக்கிறார் திவ்யபாரதி அதற்காக எட்டு ஆண்டுகள் கழித்து இன்று கைதுசெய்திருக்கிறார்கள். (எத்தனை பெரிய தேசத்ரோகம்! இது தண்டிக்கப்படவேண்டியதுதான்!)

இவர்களை எல்லாம் ஏன் குண்டர்சட்டத்தில் கைது செய்தார்கள் தெரியுமா? குண்டர்சட்டத்தில் கைதுசெய்தால் எந்தவித நீதிமன்ற விசாரணையும் இல்லை. ஒருவருடம் பிணையில் (ஜாமீன்) வெளியே வர முடியாது. சிறப்பு நீதிபதிகள் அடங்கிய விசாரணை குழுவை மட்டுமே அணுக முடியும். உங்கள் ஆட்சியில் நீங்கள் மக்களை தனியாருக்கு மொத்தமாகவோ, சில்லறையாகவோ (கிராமம் வாரியாக) விற்கும்போது நாங்கள் எங்கள் 9 துவாரங்களையும் மூடி அமைதி காக்க வேண்டும்? இல்லையேல் குண்டர் சட்டம் என்று மறைமுகமாக கூட சொல்லவில்லை வெளிப்படையாக செய்துகாட்டி இருக்கிறீர்கள்.

“கக்கூஸ்” ஆவணப்படத்தினை இயக்கிய திவ்யபாரதி (cloudfront.net)

தமிழகத்தில் இன்னும் 1௦௦௦க்கும் மேற்பட்டவர்கள் மலம் அள்ளிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதை தடுக்க முடியாத அரசு அந்த மனிதர்களின் அழுகுரல் கூட வெளி உலகிற்கு கேட்கக்கூடாது என்கிறதே! உண்மையில் கைது செய்யவேண்டியது திவ்யபாரதியா? மணல் கொள்ளையை கண்டிப்பாய் அரசு தடுக்காது. காரணம் அதனை செய்பவர்கள் முன்னாள், இந்நாள் அரசியல்வாதிகள்தானே! எனவே இயற்கை அழிவை கேள்வி கேட்கும் ஒவ்வொரு குரல்வளையும் காவல்துறையின் பூட்ஸ் கால்களால் நசுக்கப்படும்! கதிராமங்கலம் மக்கள் அரசுக்கு எதிராகப்போராடுகிறார்கள் அவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று மட்டும்தான் சொல்லவில்லை!, எண்ணெய் குழாய் வெடித்து தீ பிடித்தது. அதை ஊர் மக்கள்தான் வைத்தார்கள் என்று தடியடி நடத்தினீர்கள். அதை காவல்துறை வைத்தது என்று மக்கள் சொல்கிறார்கள் எதை நம்புவது?

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். அறிவியல் வளர்ச்சியில் எந்த தவறும் நிகழாது என்று சொல்லும் நீங்கள் அந்தமக்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டீர்களா? நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்து குடிக்கமுடியாமல் போய்விட்டது. இதற்குமுன் பல இடங்களில் குழாய்கள் வெடித்து நிலம் முற்றிலும் வீணாகிவிட்டது. அதை சரி செய்துதர மறுக்கிறார்கள். எங்களுக்கு வேலைவாய்பு கிடைக்கும் என்று சொல்லித்தான் நிலம் கேட்டார்கள் அதுவும் இல்லை. அந்த ஒ.என்.‌‌‍ஜி.சி நிறுவனம் இதுவரை எந்த சோதனையும் நடத்தாமல் அது தமிழக அரசின் வேலை என்று உங்களை கைகாட்டியதாவது உங்களுக்கு தெரியுமா? போபால் நிகழ்வில் யாருமே தண்டிக்கப்படவில்லை, அந்த மக்களுக்கும் நிவாரணம் சென்று சேரவில்லை. அதுபோன்று இங்கு நடக்காது என்று சொல்ல முடியுமா?.

இந்த கேள்விகள் அனைத்துக்கும் விடைகள் தெரிந்தும் நீங்கள் சொல்ல மாட்டீர்கள். அது பெருமுதலாளிகளின் நலனுக்கு நல்லதல்ல என்று உங்களுக்கு தெரியும்! உங்களால் இப்பொழுது முடிந்தது ஒன்றுமட்டும்தான். மக்களுக்காகவும், இயற்கைக்காகவும் போராடுபவர்களை தீவிரவாதிகள், மாவோயிஸ்ட்கள் என்று நீங்களும் உங்கள்மீது மட்டும் பேரன்பு கொண்ட மத்திய அரசும் பொதுவெளியில் பேட்டிகொடுப்பீர்கள். பின் அவர்களை கைதும் செய்வீர்கள். அது பெண்கள் குழந்தைகளாக இருந்தாலும் சரி!

இறுதியாக ஒன்று! போராளிகள் தானாக உருவாகுவது இல்லை அவர்களை நீங்கள்தான் உருவாக்குகிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்!

Related Articles