Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இலங்கையில் Informative Content வீடியோக்கள் தரும் தமிழ் YouTuberகள்

அமைதிக்கான நோபல் பரிசை நெல்சன் மண்டேலா பெறுவதாக அறிவித்த அதே ஆண்டில்தான் மொபைல் appகள் அமைதியாக உலகை வந்தடைந்தது. இது நடந்தது 1993ல். IBM நிறுவனம் உலகின் முதலாவது smart phone ஐ உலகிற்கு அறிமுகப்படுத்தியபோது, மனிதன் முதலாவதாக mobile app பயன்பாட்டிற்கு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். அன்று Calendar, Contact book, Calculator போன்ற appகளை முதன்முறையாக காணக்கிடைத்தது.  சில ஆண்டுகள் கழித்து 2002ல் blackberry புதிய smartphoneகளை மனிதனுக்கு அளித்தது. அதில்தான் wireless email அறிமுகமானது.

இன்று உலகம் முழுவதும் பரந்து விரிந்து நிலைபெற்றுள்ள தகவல் பரிமாற்ற ஊடகமான social media வாயிலாக 3.81 பில்லியன் பயனர்கள் இயங்கிக்கொண்டிருப்பதாக 2020ஆம் ஆண்டின் ஜனவரி மாத கணக்கெடுப்பு சொல்கிறது. இது உலக சனத்தொகையின் 49%  மனிதர்களின் பங்களிப்பு ஆகும்.

உடனே உங்கள் ராமனுஜர் மூளைக்கு வேலை கொடுங்கள்! கூட்டிக்கழித்தால் இன்றைய உலகின் மொத்த சனத்தொகை சுமார் 8 பில்லியன் எனும் தரவைத் தரும். 2000ல் மனித சனத்தொகை 6.841 பில்லியன். அதிலிருந்து 50 ஆண்டுகள் பின் சென்றால் உலகில் வாழ்ந்தது 2.55 பில்லியன் மனிதர்கள்.  இன்னும் 50 ஆண்டுகள் பின்னால் சென்றால் 1.6 பில்லியன்.. இன்னும் இன்னும் 50 பின்சென்றால்.? அதை நீங்களே கூகிளிட்டு தேடிப்பார்பது சுபம்!

மனித இனம் இத்தனை வேகமாக எப்படி பெருகியது என்பதை இன்னுமொரு ஆய்வுக்கட்டுரையில் விரிவாக ஆராயலாம். ஆனாலும், இந்த சமூக ஊடக பயன்பாட்டின் வேகம் மனித இனத்தின் பெருக்கத்தை விடவும் அசுரவேகத்தில் கடந்து செல்கிறது என்பதை இங்கே சொல்லியே ஆகவேண்டும்.

பேஸ்புக் அறிமுகமான 2004ம் ஆண்டிலிருந்து 2018 வரை
உலகமக்கள் சனத்தொகையில் அதிகரித்துவந்துள்ள
சமூக ஊடகத்தின் பயனை இங்கு பார்க்கலாம்.
தரவுப்பட உதவி: ourworldindata.org

Appகளை பற்றியும், மனிதனுக்கு பயன்படப்போகும் digital உலகின் தேவைகள் பற்றியும் Apple ஸ்டீவ் ஜொப்ஸ் கண்டுகொள்ளாமல் போயிருந்தால் சிலவேளை நாம் appகளை வாழ்வாதாரங்களில் ஒன்றாக மாற்றிக்கொள்ள சில ஆண்டுகள் தள்ளிப்போயிருக்கலாம். அத்தகையதோர் அதிசிறப்பு வாய்ந்த இடம் iPhoneகளுக்கு உண்டு. முதலாவது iphone 2007ல் தான் வெளியானது.

இலங்கையின் தமிழ் Youtubers பற்றி தெரிந்துகொள்ள வந்த உங்களை பொதுஅறிவுத் தரவுகளால் மூழ்கடிக்கும் என்னை மன்னிப்பீர்கள் என நம்புகிறேன். வாசலில் இருக்கும் அறிவிப்புப் பலகையாக எண்ணி இனிவரும் தகவலையும் வாசித்து விட்டு அடியெடுத்து வைக்கவேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன்.

2008ல் appleஇன் App Storeஇல் இருந்த மொத்த  appகள் 500 மட்டுமே. 2020ல் பாவனைக்காக 1.85மில்லியன் appகள் வந்துள்ளதென சொல்கிறார்கள்.

வரலாறு முக்கியம் என்பதால் இதை எல்லாம் சொன்னேன். இன்னுமொரு கட்டுரையில் விரிவாகப்பார்ப்போம்.

இலங்கையில் தமிழ் YouTubers

இலங்கை வானொலி எனும் வார்த்தைக்கு பின்னால் மகத்துவமான பல நினைவுகள் எமக்கிருக்கிறது!  அத்தகையதொரு மரபின் வழி வந்த எம்மிடையே, இலங்கையின் தமிழ் ஊடகத்துறையில் புதிய அத்தியாயம் சமூக ஊடகங்களின் துணைகொண்டு துளிர்விடத்துவங்கி இருக்கிறது.

இப்புதிய அத்தியாயம் Cheesekotthu, OC WiFi, YouThamizha சேனல்கள் வழியாக கலக்கும் இளவல்களின் trend ஆகும் வீடியோக்கள் வடிவில் வேகமெடுக்கத்துவங்கியுள்ளது. Entertainment contentகளுக்கு முன்னணி இடம் கிடைக்கும் YouTube தளத்தில் infortainment எனும் தகவல் அறிவுசார் contentகளுக்கும் இடமில்லாமல் இல்லை. இலங்கையில் பலரும் அறிந்த தொலைகாட்சி வானொலி அறிவிப்பாளர் Hisham.M,தனது YouTube சேனலில் Life tips மற்றும் Motivational வீடியோக்கள் செய்து வரும் பிரபலம். 290,000+ subscriberகள் இருக்கும் இவர் ஒருவர் தான் (தனியொருவராக) இலங்கை தமிழ் youtube channelகளில் அதிகம் Subscriberகளை கொண்டவர். அப்படியான informative Youtube Channelகளை சுயாதீனமான முறையில் நடத்த ஆரம்பித்திருக்கும் இலங்கைவாழ் தமிழர்கள் சிலரிடம்  social media வழியாகவே பேசினோம்:

  • இங்கே ஐவரை பற்றிதான் பேசியுள்ளோம். இன்னும் பல சேனல்கள் உள்ளன. அவற்றை இனிவரும் காலங்களில் உங்களுடன் பகிர்ந்துகொள்வோம்.

அர்சாத் அரீஃப் | TRAVEL VLOGS | FOOD REVIEW 


Rz Omar  எனும் பெயரில் தனது வீடியோக்களை பதிவேற்றும் அர்சாத் தனது சேனல் பற்றி சொன்னவை இவை.

“எனக்கு டிராவல் பண்ணுறது ரொம்ப புடிக்கும். 2014ல higher studies பண்ணறப்போ டிராவல் பண்ண ஆரம்பிச்சேன். 2016ல தான் நம்ம பயணங்களை அடுத்தவங்க கூட பகிர்ந்துக்கனும்னு நினைச்சேன். “In to the wild” படத்துல ஒரு வசனம் வரும். “Happiness is only real once shared”. அதுதான் என்னை YouTube வீடியோ செய்ய வைச்ச வசனம்! இலங்கையில இருக்குற அழகழகான இடங்களுக்கு நண்பர்கள் கூட சேர்ந்து டிராவல் பண்ண சமயத்திலதான் அதை வீடியோவா எடுத்து  எடிட் பண்ணி YouTubeல போட ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில வெறும் வீடியோக்கள் மட்டும்தான் upload செய்தேன். பிறகு இடங்களை பத்தி பேசி explain பண்ண ஆரம்பிச்சதும் தான் Travel Vlogs ஆரம்பிச்சோம். இப்போ என் சேனல் மூலமா Places பத்தியும் Foods பத்தியும் explore பண்ணிட்டு இருக்கேன்.” என்று சொல்லிவிட்டு அவரது வீடியோக்களை காட்ட ஆரம்பித்தார்.

சிறிய அளவிலான subscriberகளே இருந்தாலும் தனது சேனலை மிகவும் அழகான முறையில் பராமரிக்கிறார் அர்சாத். ஆங்கிலப்புலைமையும் இருப்பதால் தனது வீடியோக்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் விபரிப்பதை பார்க்கும் வாய்ப்பு பிற மொழியினருக்கும் கிடைக்கிறது. அவர்களும் இவரது வீடியோக்களை பின்தொடர்வது இலகுவாக உள்ளது. தனது சொந்த ஆரம்பநிலை வணிகநிறுவனம் மூலம் Mobile appகளை செய்து கொடுக்கும் இவர், SLIATE கல்விநிறுவனத்தில் விரிவுரையாளராகவும் இருக்கிறார்.

சர்மிலி நடேசப்பிள்ளை | Tech Review | Doodle Art | Travel Vlog 

Sarmi Sarah எனும் இவரது சேனலில் இவரைப்போலவே அழகான வீடியோக்களும் கலைகட்டுகிறது. விதம் விதமான contentகளை செய்து குவித்திருக்கும் இவருக்கு பரதநாட்டியம் என்றால் பிரியம் அதிகமாம். அதுபற்றியும் விரைவில் வீடியோக்கள் செய்யப்போவதாக சொல்லி குதூகலமானார் சர்மி.

“2018ல தான் start பண்ணினேன்.” என்று தனது சேனல் கதையை சொல்லத்துவங்கினார்.

“எனக்கு YouTubeல ரொம்ப நாளா interest இருந்தது. But, நமக்கு அது செட் ஆகாது போலன்னு நானே ஒரு போர்வையில இருந்தேன். பிறகு ஒருநாள் அது வெறும் போர்வை தான்னு நினைச்சு motivate ஆகி, என்னோட handworks and doodle வேலைகளை என் face காட்டாமல் வெறும் வீடியோக்களை மட்டும் upload பண்ண முடிவெடுத்து start பண்ணேன்.”

அடுத்த கேள்வியை கேட்கமுன்னமே அவரே ஆரம்பித்தார்.

“ஒரு gapக்கு பிறகு எனக்கு ஒரு  mentor மூலமா support கிடைச்சது. என் பேமிலியும் support பண்ணினாங்க. என் முகம் காட்டியே வீடியோ upload பண்ணினேன். பேசுறவங்க பேசிட்டுதான் இருப்பாங்க, நாம நமக்கு பிடிச்சதை பண்ணனும்னு முடிவுபண்ணி முழுக்க முழுக்க Youtubeல focus பண்ணினேன். இப்போ Vlog, review, Tipsன்னு போய்கொண்டு இருக்கு.”

சுவாரஸ்யமான அவரது கதைக்குள் இருந்து பல தகவல்கள் கிடைத்தது. இவரது வீடியோக்களில் தேர்ந்த ஒரு கதைசொல்லியாக பேசும் சர்மி, சேனல் ஆரம்பிக்க முன்னர் நிறைய பயிற்சிகளை எடுத்துகொண்டதாக சொன்னார். தனக்கு கிடைத்த mentor மூலம் நிறைய கற்றுக்கொண்டதாகவும் சொன்னார். SLIIT இல் Bsc IT படிக்கும் இவருக்கு travelling பிடிக்குமாம். சமூக சேவைகள் எதுவும் செய்கிறீர்களா என்றதும், சோசியல் மீடியால டிப்ஸ் சொல்லுறதே சோசியல் சர்வீஸ் மாதிரி தானே என்று கண்களை மூடிக்கொண்ட குரங்கு ஸ்மைலியை அனுப்பிவிட்டு தன் வீடியோக்கள் பற்றி பேசியதற்காக அழகுத்தமிழில் நன்றி சொன்னார் சர்மி.

சிந்துஜகண்ணா விக்னராஜன் | Inersting facts Videos

ON SCREEN ENTERTAINMENT என்பதுதான் இவரது சேனலின் பெயர். சில குறுந்திரைப்படங்களையும் சொந்தமாக இயக்கியுள்ளார். சினிமா மீது ஆர்வம் உள்ள ஒரு இளவல்.

“2017 ஆம் வருடத்திலேயே இந்த சேனலை நான் ஆரம்பிச்சிருந்தாலும், சினிமா மேல இருந்த ஆசையினால, 2019ல இருந்து  உண்மைக்கதைகளை மையமா வச்சு வந்த சினிமாக்கள் தொடர்பா வீடியோக்கள் செய்து பேச ஆரம்பிச்சேன். அப்போதான் இலங்கையில நடந்த crimeகளை பத்தி வீடியோ போடலாம்னு தோணுச்சு” என்று தான் சேனல் ஆரம்பித்த கதைக்குள் அழைத்துச்சென்றார்.

இவரது வீடியோக்களில் உலகில் நடந்த உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் எடுக்கப்பட்ட சினிமாக்கள், மற்றும் இலங்கையில் நடந்த குற்றச்சம்பவங்களின் தொகுப்பு, மர்மங்கள் பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். வேற்றுக்கிரக வாசிகளுக்கும் இலங்கைக்கும் இருக்கும் தொடர்புகள் பற்றி தகவல்கள் சேகரித்து வைத்திருப்பதாகவும், அவற்றைப்பற்றிய வீடியோக்கள் செய்ய விருப்பம் இருப்பதாகவும் சொன்னார்.

“நான் போனவருசம் A/Level முடிச்சேன். கெம்பஸ்க்கு அப்ளை பண்ணிட்டு வெய்ட் பன்ணுறேன். மீடியால ஆர்வம் இருந்ததால ஒரு ரேடியோ ஸ்டேசன்ல RJ வேலைக்கு இன்டர்வியூ போயிருந்தேன். அந்த ஸ்டேசனுக்கு பொறுப்பா இருந்தவர் என்னை கூப்பிட்டு, ரேடியோல பேசுற அளவுக்கு உங்க குரல் பொருத்தமா இல்லை. உங்களோட முயற்சியை கைவிடாமல் இருங்க. ஆனா அதேசமயம் உங்களுக்கு பொருத்தமான வேற வேலைக்கு நீங்க உங்களை தயார் பண்ணுங்கன்னு சொல்லி அட்வைஸ் பண்ணி அனுப்பி வச்சாரு. இனிமேல நமக்கு ரேடியோல வேலை கிடைக்காதுன்னு அந்த ஆசைய விட்டுட்டேன். ஆனால் மீடியா ஆசையிருந்தனால YouTubeல நமக்கு பிடிச்சதை செய்வோம்னு ஆரம்பிச்சேன்.” என்றவர்,

“இன்னைக்கு என் வீடியோ கேட்டுட்டு சிலர், என் குரல் வித்தியாசமா இருக்கு, நல்ல செய்றீங்கன்னு பாராட்டுறாங்க. அது ஒரு வகையான நம்பிக்கையை தருது.” என்று நம்பிக்கையுடன் பேசினார்.

இலங்கையில் சினிமா துறை அங்கீகாரம் இல்லாமல் இருக்கும் கவலை ஒருபக்கம் இருந்தாலும், என்றாவது ஒருநாள் இலங்கையில் ஒரு டைரக்டராக உருவாகி சினிமா எடுப்பதுதான் தன் கனவு என சொல்லிச்சென்றார் சிந்துஜகண்ணா.

டிலுக்‌ஷன் & அன்டன் | FOOD REVIEW

DNA Vlogs எனும் YouTube சேனல் வழியே சுவையான உணவகங்களை பற்றிய விமர்சனம் செய்யும் நண்பர்கள் இவர்கள்.

“நானும் நண்பன் அன்டனும் அடிக்கடி ரெஸ்டுரன்டுகளுக்குப் போய் சாப்பிடுறது வழக்கம். அதையே YouTube சேனல் மூலம் செய்யலாம்னு தோணுச்சு. தமிழ்நாட்டுல foodreview வீடியோ போடுறவங்களை பார்த்து தான் கத்துகிட்டோம். நண்பர்கள்கிட்ட பேசி, வீட்டுலயும் உதவி கேட்டு கொஞ்சம் காசு போட்டு இதை ஆரம்பிச்சோம். மைக் வாங்கினோம். அப்பறமா அபிஷேக்-ன்னு அண்டன் கூட வேலைசெய்ற நண்பர் அவரோட கெமரா தந்து உதவினாரு. அப்படி ஆரம்பமானதுதான் DNA Vlogs.” என்று தன் கதையை பகிர்ந்துகொண்டார் டிலுக்‌ஷன்.

உலகம் முழுவதுமே food review வீடியோக்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. இலங்கையில்  சிங்கள மொழியிலும், ஆங்கிலத்திலும் வீடியோக்கள் செய்வோர் பெருமளவில் உள்ளனர். தமிழில் அப்படியான சேனல் ஒன்றை செய்யலாமே என்கிற எண்ணம்தான் இந்த இருவரின் ஆரம்பபுள்ளி.

“நான் ¸CIM, final year செய்துகிட்டே தனியார் நிறுவனத்துல வேலையும் செய்றேன். அன்டன் open Universityல ஒரு course follow பண்ணிட்டே graphic designer வேலையும் செய்திட்டு இருக்காரு. எங்களுக்கு விதம் விதமா சாப்பிட பிடிக்கும். சிம்பிளான food சமைக்குற வீடியோவும் செய்யுற ஐடியாவும் இருக்கு.” என அவர்களது கல்வி, வேலை பற்றியதகவலையும் பகிர்ந்துகொண்டார் டிலுக்‌ஷன்.

விருத்ஷான் வினசிராஜன் | education

Expert Tutor எனும் பெயரில் இலங்கையின் பாடசாலைகளில் கற்றுத்தரப்படும் பாடங்களை இலகுவான வீடியோக்களாக செய்து வெளியிட்டு வருகிறார் விருத்ஷான். கல்வித் தகுதிவாய்ந்த நண்பர்கள், ஆசிரியர்கள் வாயிலாக பள்ளி மாணவர்களுக்கு பெருமளவில் பயன்படும் வீடியோக்கள் 200ற்கும் மேல் பதிவேற்றப்பட்டுள்ள இவரது சேனல் மற்றவர்களது சேனல்களுடன் வேறுபடுவது ஆச்சர்யமல்லவே.

எப்போது இந்த சேனலை ஆரம்பித்தீர்கள்? என்று கேட்டோம் விருத்ஷானிடம்.

“2019ல நான் கணிதப்பிரிவில A/level செய்தனான். 3A கிடைச்சது. யுனிவர்சிட்டிக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கன். கிடைச்சுருக்குற நேரத்தை Usefulஆ செய்யனும் என்றதுக்கான முயற்சியால YouTube சேனல் ஆரம்பிச்சன். முதவே YouTube சேனல் செய்றதை பத்தின ஆசையும் இருந்தது. இரண்டு மூன்று சேனல்கள் இருந்தது. படிப்பிக்கிற ஆசையினாலயும், நண்பர்கள் கொடுத்த உற்சாகத்தாலயும் இந்த சேனல் மூலம் ஜனவரில இருந்து படிப்பிக்க தொடங்கினன்” என்றார்.

“நான் A/Level படிக்கேக்க, sir என்ன செய்வார் என்டா, எப்பவுமே கேள்வியை தந்திட்டு அதை விளங்கப்படுத்த சொல்லி என்னை போர்ட்ல விட்டிடுவார். அதுதான் எனக்கு படிப்பிக்கிற ஆர்வம் வரக் காரணம். பிறகு A/L முடிச்சாப்பிறகு ஸ்கூலுக்கு வந்து பகுதிநேரமா sir பாடம் எடுக்க சொன்னார். கொஞ்சம் காலம் படிப்பிச்சன். பிறகு கண்டிக்கு போகவேண்டிய ஒரு தேவை வந்திட்டதால அது தடைபட்டுபோச்சு. பிறகு ஜனவரியில இருந்து YouTube இல வீடியோ செய்து போட்டு, இங்க இருக்குற மாணர்களை பார்க்க சொல்லி பாடம் எடுக்க தொடங்கினன். physics தான் எனக்கு பிடிச்சிருந்தது. அதை தான் முதல்ல படிப்பிச்சன். பிறகு மற்ற பாடங்களையும் கேட்டதால, வேற இடங்கள்ல இருக்குற நண்பர்களுக்கு சொல்லி மற்ற மற்ற பாடங்களையும் படிப்பிக்க தொடங்கிட்டம்” என விளக்கமாகச் சொன்னார் விருத்ஷான்.

விருத்ஷான் சொல்லிதரும் பாடங்கள் – Physics, Chemistry, Combined Mathematics, Maths, Science ஆகியவை. மாணவர்களுக்கு உதவலாம் என்பதால் இவரோடு வீடியோக்கள் செய்ய ஆரம்பித்திருக்கும் மற்றவர்கள் விபரங்களையும் இங்கே தருகிறோம்:

உதயசெல்வம் லக்சன் – Chemistry
திவ்யா சிவப்பிரகாசம்- Economics , Business Studies
பிரணவன் மாணிக்கம்பிள்ளை- Tamil Literature, Political Science, Geography
வசந்தன் மிதுனன் – Biology, Science
ஜயதரன் விதூஷிகன்- Biology
மனோகரன் விதூர்ஷன்- Economics
கோகுலன் சிவதாஸ்- Physics
N வினோத் – Physics
S ரவி பிரகாஷ் – Maths

உயர்தர வகுப்பு பாடங்களை வீடியோவாக செய்து வெளியிட ஆரம்பித்த இவரது சேனலில் தற்போது தரம் 1 முதல் A/L வரையிலான வகுப்பிற்குரிய பாடங்களையும் விளக்கமாக சொல்லித்தர ஆரம்பித்திருக்கிறார்கள்.  ஒரு இணையதளத்தையும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

புதுயுகத்தின் தொடக்கம்…

 

முதலில் சொன்னதைப்போல இலங்கையின் சமூக வலைதளங்கள் வழியே ஆரம்பமாகியிருக்கும் இவர்களின் புதிய அத்தியாயம் இனிதே தொடர வேண்டும்.  இன்னும் பலர் இந்த தளத்தை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இனிவரும் காலம், இலங்கையின் இளம் திறமையாளர்களுக்கு இந்த YouTube contentகள் வடிவில் பலன்தருமா என்பதை பொறுத்திருந்து காண்போம். இலங்கையில் நீங்களும் YouTube சேனல் ஒன்றை ஆரம்பித்திருந்தால், அல்லது  உங்களுக்கு தெரிந்த இலங்கையில் தமிழ் YouTubers பற்றியும், பின்னூட்டத்தில் அறியத்தாருங்கள். 

Related Articles