Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

நமக்கென ஒரு வணிகம்

இன்றைய இலங்கையில் போட்டிபோட்டு கொண்டு தொழில் வாய்ப்பொன்றை பெற்றுக்கொள்வது குதிரை கொம்பாகவே மாறியிருக்கிறது. அதிலும், பெறுகின்ற தொழில் வாய்ப்பை தக்கவைத்துகொள்ளவும், உரிமையாளர்களை திருப்திபடுத்தவும் தொழில் வாய்ப்பை பெறுவதற்குபட்ட கஷ்டங்களை பார்க்கிலும், அதிகமாகவே உள்ளது. ஆனாலும், பலரும் இந்த தொழில் போட்டிக்குள்தான் தங்கள் வாழ்க்கையையும், திறமைகளையும் தொலைத்துக் கொள்கிறார்கள். இதற்குப் பிரதான காரணமே, தமக்கென ஒரு தொழில் முயற்சியை தொடங்குவதில் உள்ள தயக்கமும், அது தொடர்பில் சவால்களை எதிர்கொள்ளும் துணிவின்மை நிலையுமே ஆகும். மேலும், நம் மத்தியில் வெற்றிபெற்ற வணிகங்களை பார்க்கிலும், தோற்றுப்போன வணிக முயற்சிகள் தொடர்பிலான கதைகளும், பயமுறுத்தல்களுமே ,முன்னிலை பெறுகின்றன. இதன் விளைவு, தொழில் தருனர்கள் என்கிற கனவை அழித்துவிட்டு, பலரும் தொழிலாளர்களாக இருக்கிறார்கள்.

(businessnewsdaily.com)

துணிகர வணிக முயற்சிகளில் ஈடுபட எத்தனிக்கும் பலருக்கும் உள்ள பொறுப்பு பயமே அவர்கள் குடும்பமாகத்தான் இருக்கும். வணிகத்தின் தோல்வி எந்தசந்தர்ப்பத்திலும் தன்னையும், தன்சார்ந்தவர்களையும் பாதித்துவிடக் கூடும் என்கிற பயமே பெரும்பாலான இளையவர்களையும் சரி, தமக்கென தொழிலொன்றை உருவாக்க விரும்புவர்களையும் சரி தடுத்து நிறுத்திக்கொண்டு இருக்கிறது. ஆனால், நம்மை சார்ந்திராதவர்களுக்கும், நமது சொத்துகளுக்கும் ஏதும் பாதிப்பு ஏற்படாமல் நாம் வேறு, நமது வணிகம் வேறு என்கிற அடிப்படையில் தொழிலை கொண்டு நடாத்த முடியுமானால், அந்த ஆபத்தினை துணிந்தே எதிர்கொண்டு வெற்றிக்கொடி நாட்டலாம் அல்லவா? அப்படியாயின் அதற்கான வணிகத்தை எவ்வாறு ஆரம்பிக்க முடியும்?

வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் என்றால் என்ன ?

குறைந்தது தனி ஒருவராகவோ அல்லது கூட்டாகவோ புதிய கம்பனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்படும் நிறுவனம் இதுவாகும். இந்நிறுவனம் தனிநபர் வியாபாரத்திலிருந்தும், பங்குடமையிலிருந்தும் வேறுபடுத்தப்பட பிரதான காரணமே வரையறுக்கப்பட்ட பொறுப்பு ஆகும். அதாவது, தனிநபர் வியாபாரம் மற்றும் பங்குடமையில் மூலதனத்திற்கு மேலதிகமாக நட்டத்தினை எதிர்கொள்ளும்போது, உரிமையாளர்கள் தமது சொந்த சொத்துக்களை பயன்படுத்தியும் குறித்த நட்டத்தினை நிவர்த்திக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தில் நட்டநிலை ஏற்படும்போது, உரிமையாளர் தான் இட்ட மூலதன அளவுக்கு மாத்திரமே பொறுப்பு கூறவேண்டும். மேலதிக நட்டமானது நிறுவன சொத்துக்களை பயன்படுத்தி மாத்திரமே நிவர்த்திக்கபடும்

இன்றைய நிலையில் தொடக்கநிலை வணிகங்களை (Startup Business) ஆரம்பிக்க எதிர்பார்க்கும் பலரும் குறித்த வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் தொடர்பிலும், அதனை எவ்வாறு ஆவணபடுத்தி கொள்வது என்பது தொடர்பிலும் அறிந்திருப்பதும் அவசியமாகும்.

வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தை ஆரம்பிப்பது எப்படி ?

வணிகத்தின் பொறுப்பானது உரிமையாளர்களின் மூலதன அளவுக்கே மட்டுபடுத்தபட்டுள்ளது.எனவே, இந்த நலனை பயன்படுத்தி உரிமையாளர்கள் எவ்விதமான மோசடியிலும் ஈடுபடாமல் இருப்பதையும், பொறுப்பாக செயல்படுவதையும் உறுதி செய்வது அவசியமாகிறது. எனவே, இவையனைத்தும் வணிகம் ஆரம்பிக்கபடுகின்ற நிலையிலேயே ஆவணபடுத்தல் செயல்பாடுகள் மூலம் இலங்கை அரசின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்படுகிறது. அவை, வேறுபட்ட கீழ்வரும் படிமுறைகளை கொண்டதாக அமைந்துள்ளது.

நிறுவன பெயரை உறுதி செய்தல்

(executiveteamevents.com)

 

எந்தவொரு நிறுவனமும் அதற்கான பெயரை கொண்டிருத்தல் அவசியமாகிறது. அதுவும், வேறு நிறுவனங்களின் பெயரை கொண்டிருக்காமல் தனித்துவமான பெயரை கொண்டிருத்தல் வணிக அடிப்படையாக உள்ளது. இது மோசடிகளை தவிர்க்க உதவும். இதனை முறையாக ஆவணபடுத்தவும், பராமரிக்கவும் என தனியான திணைக்களம் இயங்குகிறது.

எனவே, நிறுவனத்தை ஆரம்பிக்க விரும்புவர்கள் நிறுவன பதிவாளர் திணைக்களத்தில் தமக்கு விருப்பமான நிறுவன பெயர் முன்னதாகவே பதிவு செய்யப்பட்டுள்ளதா ? என்பதனை பெயர் தேடல் மூலம் அறிந்துகொள்ள வேண்டும். பெயர் பதிவு செய்யப்படாதவிடத்து, குறித்த பெயரையே பதிவு செய்துகொள்ள முடியும். தனிநபர் ஒரே சமயத்தில் குறைந்தது 3 நிறுவன பெயர்களை தனது நிறுவனத்துக்காக முன்பதிவு செய்துகொள்ள முடியும். இதற்க்கு A16 என்கிற படிவத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டியதுடன், கட்டணமாக 1,150+ 15% VAT அறவிடப்படும். பெயர் முன்பதிவானது 90 நாட்கள் அல்லது 3 மாதங்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும்.

நிறுவனத்தின் பெயரை பதிவு செய்தல்

நிறுவன பெயரை தேடி உறுதி செய்த பின்னர் பின்வரும் ஆவணங்களை பூர்த்தி செய்து வழங்குவதன் மூலமாக நிறுவனத்தை பதிவுசெய்துகொள்ள முடியும். பெரும்பாலும் நிறுவன செயலாளர்களின் (Company Secreatry) உதவியுடன் இவற்றை செய்து கொள்ள முடியும்.

படிவம் 1 – நிறுவன பதிவு படிவம் (REGISTRATION OF A COMPANY)

நிறுவன பெயர், ஆரம்ப திகதி, இயக்குனர் விபரம் என அடிப்படையான விபரங்களையும் அவற்றுக்கு ஆதாரமான ஆவணங்களையும் இணைத்து சமர்பிக்க வேண்டும்.

படிவம் 18 – இயக்குனர் ஒப்புதல் சான்றிதழ் (CONSENT AND CERTIFICATE OF DIRECTOR)

நிறுவன இயக்குனர்கள் விபரம், அவர்களது பங்கு விபரம் என்பனவற்றை பொருத்தமான ஆவணங்களுடன் நிரப்பி சமர்ப்பிக்கும் ஆவணம்.

படிவம் 19 – நிறுவன செயலாளர் நியமிப்பு படிவம் (CONSENT AND CERTIFICATE OF SECRETARY/ SECRETARIES)

நிறுவனத்தின் நிர்வாக செயல்பாடுகளை மேற்பார்வை செய்யவென நிர்வாக பதிவாளரை நியமிக்க வேண்டும். குறித்த செயலாளரின் விபரங்களை உள்ளடக்கிய படிவமே இது.

Articles of Association சமர்பித்தல்

(web.gov.pl)

Articles of Association என்பது நிறுவனத்தின் முதன்மை நோக்கம் என்ன, நிறுவனம் எத்தகைய செயல்பாடுகளில் ஈடுபட உள்ளது என்கிற விபரங்களை உள்ளடக்கிய ஆவணமாகும். இதனை ஒவ்வரு நிறுவனமும் தனக்கு ஏற்றால் போல தயாரிக்கவோ அல்லது ஒவ்வொரு துறைக்கும் ஏற்றால்போல மாதிரி Articles of Association படிவத்தையோ பயன்படுத்த முடியும்.

ஆவணங்களையும், கட்டணத்தையும் செலுத்திய 30 நாட்களின் பின்பு நிறுவனம் பதிவு செய்யப்பட்டதாக அல்லது கூட்டிணைக்கப்பட்டதற்கான சான்றிதழ் (படிவம் 41/2A – Memorandum Of Satisfaction Of Registered Charge) வழங்கப்படும். அதனை வர்த்தகமானி மற்றும் பத்திரிக்கைகளில் வெளியிடுவதன் மூலமாக மட்டுமே நிறுவனம் ஒன்று முழுமையாக கூட்டிணைக்கப்பட்டதாக கருத்தில் கொள்ளப்படும். இந்த நடைமுறை, நிறுவன பதிவாளரால் கூட்டிணைப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு 21 வேலை நாட்களுக்குள் பொதுமக்களுக்கு அறிவிக்கபடல் வேண்டும்.

இறைவரி திணைக்களத்தில் வருமான கண்காணிப்புக்காக பதிவு செய்தல்

வரையறுக்கபட்ட நிறுவனம் உரிமையாளர் வேறு, வணிகம் வேறு என்கிற அடிப்படையில் இயங்கும்போது, குறித்த நிறுவனத்தின் இலாபங்கள் மீதான வரிக்கு குறித்த நிறுவனமே பொறுப்பாகிறது. எனவே, அரசு நிறுவனத்தை ஒரு தனிநபராக கருதி அதனை இலங்கை இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வது அவசியமாகிறது.

இதற்காக சமர்பிக்கவேண்டிய ஆவணங்கள்

  • படிவம் 41/2A – நிறுவன கூட்டிணைப்பு சான்றிதழ்
  • படிவம் 18 – பதிவாளர் உறுதிபடுத்தியது
  • படிவம் 19 – பதிவாளர் உறுதிபடுத்தியது
  • Articles of Association – பதிவாளர் உறுதிபடுத்தியது
  • இயக்குனர்களின் மூல ஆவணங்கள்.

இவற்றினது அசல்,நகல் ஆகிய ஆவணங்களை சமர்பிப்பதுடன் கட்டணமாக 500/- செலுத்தி கூடியது 21 வேலை நாட்களுக்குள் நிறுவனத்துக்கான வரி அடையாள இலக்கத்தை (TAXPAYER IDENTIFICATION NUMBER – TIN) பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்க்கு பின்னதாக, நிறுவனம் வருமானவரி , உழைக்கும்போதே செலுத்தும் வரி, பொருளாதார சேவை கட்டண வரி, நாட்டை கத்தியெழுப்பும் வரி என்பவற்றை செலுத்த தகுதி உடையதாக மாறுகிறது. பெறுமதிசேர் வரியினை பிரத்தியேகமாக பெற்றுக்கொள்ள வேண்டியது நிறுவனத்தின் பொறுப்பாகும்.

வங்கிக்கணக்கினை நிறுவனத்தின் பெயரில் ஆரம்பித்தல்

நிறுவனத்தின் பெயரிலேயே நிறுவனம் சார்ந்த அனைத்து கொடுக்கல்,வாங்கல்களும் இடம்பெறவேண்டியது அவசியமாகிறது. வங்கியில் இதற்காக நிறுவனத்திற்கு என நடைமுறை கணக்கினை ஆரம்பிக்கவேண்டும். இதன்மூலம், நிறுவனம் காசோலைகளை அடிப்படையாக கொண்டு பணப்பரிமாற்றலையும் கொடுக்கல் வாங்கல்களையும் செய்துகொள்ள முடியும். இது, கணக்கீட்டு ஆவணப்படுத்தல் செயல்பாட்டுக்கு ஒரு மூல ஆவணமாகவும் தொழிற்படும்.

இவை அனைத்துமே வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கான படிமுறைகள். இவற்றின் ஆவணபடுத்தல் செயல்பாடுகள், அரச நிர்வாக செயல்பாடுகள் என்பது அதிகம். எனவே, வணிகமொன்றை ஆரம்பிப்பதில் சிரத்தை எடுத்துகொள்வது அவசியமாகிறது.

Related Articles