சங்ககால தமிழர் உணவு மரபுகள் பற்றி அறிந்துகொள்வோம்!

உணவு என்பது மனித குலத்தின் அடிப்படை தேவைகளுள் ஒன்று என்பதைக் கடந்து, ஒரு சமூகத்தின் கலாச்சார, பொருளாதார, அரசியல், வாழ்வியல் மற்றும் புவியியல் அம்சங்களை பறைசாற்றும் ஒரு ஊடகமாக செய்யலாற்றுகிறது. அவ்வகையில் தமிழினத்தின் நெடிய வரலாற்றில் உணவு என்பது பல்வேறு மாற்றங்களுக்குள் உள்ளாகியிருக்கிறது. கல்வெட்டுக்கள், படிமங்கள், இடிபாடுகள் என்பனவே அதிகம் ஏற்றுக்கொள்ளப்படும் வரலாற்று ஆதாரங்களாக இருக்கும் போதிலும் ஒரு மக்கள் குழுவின் வாழ்வியல் அம்சங்களை நுணுகி அறிவதற்கு கலை, இலக்கிய மூலங்களே அதிகம் பயன்படுகின்றன. அந்த வகையில் தமிழ் வரலாற்றில் மிகப்பழைமையான இலக்கிய ஆதாரங்கள் நிரம்பியுள்ள சங்ககால மக்களின் உணவுப்பழக்கங்கள் அக்கால மக்களின் வாழ்வியலை புரிந்துகொள்ள இன்றியமையாதவையாக அமைகின்றன. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழ் சமூகத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கூறுகள் எவ்வாறு உணவினோவடாக பிரதிபழித்தன என்பதை இங்கு காண்போம். 

இன்று மட்டுமல்ல அன்றும் நெல்லரிசியே தமிழகத்தின் பிரதான உணவாக அமைந்தது, செந்நெல், வெண்ணெல், புதுநெல் என அரிசி பலவாறு வகைப்படுத்தப்பட்டிருந்தது. இதைத் தவிர ஆய்வனம், தோரை போன்ற மலையரிசிகளும், அரிதாக விளையும் மூங்கிலரிசியும் உணவுக்கு பயன்பட்டன. தினையரிசி, வரகரிசி, குதிரைவாலி, சாமை மற்றும் அவரைகள், பருப்புகள் போன்றன அன்றாட உணவின் பகுதிகளாக இருந்தன. ஒவ்வொரு திணையை சார்ந்தவர்களும் அங்கு விளையும் தானியம் ஒன்றை  தங்கள் உணவின் முக்கிய அங்கமாக சேர்த்துக்கொண்டனர். அரிசிச்சோறு பிரதானமாக புளிக்கறி யுடன் பரிமாறப்படும் வழக்கம் இருந்தது, சமயங்களில் நெய்யில் வறுத்த வாசனைத் திரவியங்களைச் சோற்றின் மீது அலங்காரமாக தூவும் வழக்கமும் இருந்தது. 

புகைப்படஉதவி: www.morningchores.com

இதைத் தவிர வேறு தானியங்களுடன் சேர்த்தும் (தற்கால பொங்கல் போன்றது), கொழுப்பு மிகுந்த இறைச்சித் துண்டுகளுடன் சேர்த்தும் (தற்கால பிரியாணி; அக்கால ஊன் சோறு), நெய்யோடு சேர்த்தும் பலவிதமாக அரிசிச்சோறு சமைக்கப்பட்டது. 

முந்தைய நாள் சோற்றை நீரில் ஊறவைத்து செய்யும் பழங்கஞ்சியை காலையில் முதல் உணவாக உண்ணும் வழக்கம் தோன்றுதொட்டே இருந்து வந்தது. இது தவிர அரிஷியானது மேலும் பல உணவுகளாக மாற்றப்பட்டது. புளித்த அரிசி மாவை குழிவான மண் சட்டியில் ஊற்றி வேகவைக்கப்படும் ஆப்பம், சமைக்கப்பட்ட சோற்றை பிசைந்து செய்யும் மாவாள் செய்யப்படும் இடியாப்பம், போன்றவற்றுடன் அரிசியால் செய்யப்படும் தோசை மற்றும் அடை போன்ற உணவுகளின் ஆரம்ப வடிவங்களும் சங்க காலத்து உணவுகளில் இடம்பெற்றன. சங்கப்பாடல் தொகுப்பில் ஒன்றான மதுரைக்காஞ்சி மோதகம் பற்றி கூறுகிறது.மேலும் குறுந்தொகை மற்றும் பெரும்பாணாற்றுப்படை என்பன கேழ்வரகு சிறுதானியம் பற்றி பேசுகிறது.காய்ந்த நிலங்களில் விளையும் கேழ்வரகானது காலை, மாலை இரு வேளைகளிலும் பால் மற்றும்  தேனுடன் சேர்த்து செய்யப்படும் கஞ்சி உணவாக எடுத்துக்கொள்ளப்பட்டது என கவிஞர்களின் கூற்றுக்கள் கூறுகின்றன. கொள்ளு, வரகரிசி போன்ற சிறுதானியங்கள் மலைப்பகுதிகளில் அதிகம் உண்ணப்பட்டது. இவ்வுணவுகளுடன் முயல் இறைச்சி சேர்த்து உண்ணப்பட்டது. திணையரிசியானது சரியாக சமைக்கப்படும் போது இளம் நண்டுகளுக்கு இணையான சுவையுடன் இருக்கும் என பெரும்பாணாற்றுப்படை விளக்குகிறது. சாமை பற்றிய தெளிவான குறிப்புகள் இலக்கியங்களில் கிடைக்காவிடினும் ஆதிச்சநல்லூர் அகழகாய்வின் போது சாமை தானியங்கள் கிடைத்துள்ளமை இந்த சிறுதானியத்தின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. 

பழங்கஞ்சி – புகைப்படஉதவி: www.YummyTummyAaarthi.com

எண்ணெய்கள் என்ற வகையில் நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டும் அதிகமாக பயன்பாட்டில் இருந்தன. நாலடியார்,  பெரும்பாணாற்றுப்படை உள்ளிட்ட நூல்கள் செக்கிலாட்டி பெறப்படும் நல்லெண்ணெய் பற்றி கூறுகின்றன. நல்லெண்ணெய் உள்நாட்டு தேவைகளுக்கு மேலாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. கிரேக்க நூலான பெரிப்யூலஸ் இதனை உறுதி செய்கிறது, மேலும் ணெய் ஏற்றுமதியும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. கத்தரி, பாகல், வாழை முதலிய காய்கறிகளும், பனை, தாமரை முதலியவற்றின் கிழங்குகளும், ஏனைய கிழங்குவகைகளும் (உருளைக்கிழங்கு அல்ல), குப்புக்கீரை, வல்லை, முன்னை போன்ற கீரை வகைகளும் உணவுக்கு பயன்பட்டன. இந்த கீரை வகைகள் அன்னத்துடனும், ஒரு வகையான இனிப்பு புளிப்பு கலந்த நெல்லிக்காய் வெஞ்சனத்துடனும் சேர்த்து உண்ணப்பட்டன. மேலும் பாலில் வேகவைக்கப்பட்ட காய்கறிகள் உண்ணும் வழக்கம் அப்போது இருந்தது, தற்போது வழக்கொழிந்துவிட்டது. முல்லை நிலத்து மாந்தர்களிடம் பலாவும், மருத நிலத்தில் மாம்பழமும், பாலை நிலத்தில் விளாம்பழமும் பிரசித்தம் பெற்றவை. வாழை, நெல்லி, மாதுளை, எலுமிச்சை, நாவல், அத்தி போன்ற கனிகளும், இளநீர், தேங்காய் மற்றும் பனங்காய் நுங்கு என்பனவும் அனைத்து மக்களாலும் உண்ணப்பட்டது. பழப்புளி மற்றும் நெல்லிக்கனி இரண்டும் பானங்கள் தயாரிக்க பயன்பட்டன. 

திரிகடுகம் எனப்படும் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றுமே காரத்துக்காக பயன்பட்ட சேர்மானங்களாக இருந்தன. இதில் சேர நாட்டில் அதிகமாய் விளையும் மிளகு உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி விலை உயர்ந்த பண்டமாகவே இருந்து வந்தது. இவற்றைத்தவிர இஞ்சி, மஞ்சள், புளி, கராம்பு, ஏலக்காய், எலுமிச்சை, கடுகு போன்றன மேலதிக சுவையூட்டிகளாக பயன்பட்டன. மாங்காய் ஊறுகாயும் மக்களின் உணவில் ஒரு அநாகமாக இருந்தது. வெற்றிலையிடும் பழக்கமும் புழக்கத்தில் இருந்தது. ஆநிரை மேய்த்தல் தமிழ் சமூகத்தின் வாழ்வியலில் ஒரு அங்கமாக இருந்தது, பாலாடை, தயிர், மோர், வெண்ணெய், நெய் என்பன பாலில் இருந்து பெறப்பட்டன. தயிரில் இஞ்சி, கறுவா, மிளகு என்பன சேர்த்து சுவையூட்டும் வழக்கம் இருந்தது. இன்று போலவே அன்றும் உணவுடன் மோர் சேர்த்துக்கொள்ளப்பட்டது. பசுப்பாலுக்கு இணையாக எருமைப்பாலும் பயன்பாட்டில் இருந்தது. ஆடை நீக்கிய பாலை மருந்தாகவும் பயன்படுத்தியுள்ளனர் என் நச்சினார்க்கினியார் கூறுகிறார்.  

புகைப்படஉதவி: www.scroll.in

மாட்டிறைச்சி, எருமையிறைச்சி என்பன பொதுவாக பல தரப்பு மக்களாலும் உட்கொள்ளப்பட்டதுடன், நெய்தல் மக்களிடம் உப்பிட்ட பன்றியிறைச்சியும், வீரர்களிடையே போரில் வீழ்ந்த / கொல்லப்பட்ட யானையின் இறைச்சியும், குறவர்களிடையே மானிறைச்சியும், முள்ளம்பன்றி இறைச்சியும், மல்லர்களிடையே நத்தை இறைச்சியும், மீனவர்களிடையே ஆமை இறைச்சியும் உண்ணும் வழக்கம் இருந்தது. இதற்கு மேலதிகமாக கோழியிறைச்சி, மயில் பெடையின் மாமிசம், உடும்பு மாமிசம். ஆறல், வறாள், வாலை ஆகிய மீன்களும் இறால், நண்டு போன்றவையும் உணவுக்கு பயன்பட்டன. பொதுவாக அசைவ உணவுகளின் போது வெள்ளை அரிசிச்சோறும், காய்கறி வெஞ்சனங்களும் உடன் பரிமாறப்படும். அசைவ உணவுகள் பழந்தமிழர் உணவில் மிகவும் பொதுவான ஒன்றாக இருந்தது. எலிக்கறி புன்னப்படுவது குறித்தும் சங்கப்பாடல்கள் கூறுகின்றன. 

இனிப்பு சுவைக்காக சர்க்கரையும் தேனும் பயன்பட்டன. குறவர்கள் கொண்டு வரும் கொம்புத் தேனுக்கு அதிக கேள்வி இருந்தது. கரும்பு மற்றும் பனையில் இருந்து சர்க்கரை தயாரிக்கப்பட்டது எனினும், கரும்பின் பயன்பாடு மிகுதியாக இருந்தது. பானையில் இருந்து பெறப்படும் பதநீரும், கள்ளும் சமூகத்தில் அனைவராலும் விரும்பி பருகப்பட்டது. ஆண்களும் பெண்களும் இணைந்தே மதுவருந்தும் வழக்கம் இருந்தது. யவனத்தில் இருந்து கொண்டு வரப்படும் மது சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்போரிடம் சென்று சேர்ந்தது. 

தென்னகம் பண்டை உலகின் மாபெரும் வணிக கேந்திர நிலையமாக இருந்தமையால் மேற்கே யவனம் தொட்டு, கிழக்கே சீனம் வரை அனைத்து நாட்டுப் பண்டங்களும் தமிழகத்தில் கிடைக்கப் பெற்றன. அதே போல தமிழகத்துப்பண்டங்களும் கடல் கடந்து பயணித்தன. இந்த மாறும் வணிக வலையமைப்பின் மத்தியில் தமிழ் நீளம் அமைந்தமையால் உலகுக்கு கிடைத்த விடயங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்களை அடுத்து வரும் நாட்களில் காண்போம். 

புகைப்படஉதவி: 24newsdaily.com

உணவே மருந்தாகக் கொண்ட நம்முடைய முன்னோர்களிடம் இருந்து நாம் அறிந்து கொள்ள எண்ணிறந்தவை உள்ளன. அதில் தலையாயது தன்னுடைய சொந்த மண்ணில் விளையும் உணவைப்போல ஆரோக்கியமானது பிரிதில்லை என்பதே. தற்போதைய நாட்களில் உலகமே பெருந்தொற்றால் அதிகம் பாதிப்படைந்துள்ளது, அதிலும் நம்முடைய விவசாயிகள் படும் துன்பங்கள் எண்ணிறந்தது. ஆகவே உள்நாட்டு விவசாயிகளுக்கு நம்முடைய ஆதரவையும், அன்பையும் வெளிப்படுத்தும் வகையில், சுதேச உணவு உற்பத்திகளைப் பயன்படுத்தில் வளமாகவும், நலமாகவும் வாழுங்கள். 

Related Articles