ஆளுமைகளும் கேலிகளும்

தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவர், திமுக செயல்தலைவரான மு. க. ஸ்டாலின், சமீபத்தில் ஒரு விழாவில் பேசும்போது பழமொழியொன்றைத் தவறாகக் குறிப்பிட்டுவிட்டார். ‘யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ என்பதற்குப்பதிலாக, ‘யானை வரும் முன்னே, மணியோசை வரும் பின்னே’ என்று சொல்லிவிட்டார்.

M K Stalin (Pic:  newsmobile)

அவ்வளவுதான், இதற்காகவே காத்திருந்ததுபோல் சமூக ஊடகங்கள் பொங்கியெழுந்தன. மு. க. ஸ்டாலினைக் கேலிசெய்து ட்வீட்களும் ஃபேஸ்புக் நிலைத்தகவல்களும் குவிந்தன. பல மீம்களில் அவர் திடீர் (நகைச்சுவை) நாயகரானார்.

இவராவது பரவாயில்லை, எதிர்க்கட்சித் தலைவர்தான், சில மாதங்களுக்குமுன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு விழாவில் பேசும்போது, ‘கம்ப ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார்’ என்று பேசிவிட்டார். அவரைக் கேலிசெய்தும் ஆயிரக்கணக்கான நகைச்சுவைத் துணுக்குகள், மீம்கள் உருவாகின, அதிவேகமாகப் பரப்பப்பட்டன.

Edappadi Palanisamy (Pic: newindianexpress)

பின்னர் எடப்பாடி பழனிச்சாமி எழுதிய ஒரு புத்தகம் வெளியானது. ‘எழுச்சி உரைகள்’ என்ற அந்தப் புத்தகம் ஒருவேளை சில நூறு பிரதிகள் விற்றிருக்கலாம், ஆனால் சமூக ஊடகங்களில் அதைக் கேலிசெய்து வெளியான செய்திகள் பல்லாயிரம்.

இந்தக் கேலிச்செய்திகள் அனைத்தின் மையக்கருத்து, ‘தமிழ்க் கலாசாரத்தில் எல்லாருக்கும் நன்கு தெரிந்த ஒரு பழமொழியை/புள்ளிவிவரத்தைச் சரியாக மேடையில் சொல்லத்தெரியாத இவரை எப்படி நல்ல அரசியல் தலைவராக, ஆட்சியாளராக ஏற்றுக்கொள்வது?

மேலோட்டமான பார்வைக்கு நியாயமாகவே தோன்றும் இந்தக் கேள்வி, கொஞ்சம் ஆழமாகச் சென்றால் வேறொரு சிந்தனையை எழுப்புகிறது: மேடையில் பிழையில்லாமல் துல்லியமாகவும் சரியாகவும் பேசுவதுதான் ஓர் அரசியல் தலைவர் அல்லது ஆட்சியாளருடைய தகுதியா?

மற்ற மாநிலங்களில் எப்படியோ, தமிழகத்தில் மேடைப்பேச்சென்பது ஓர் அரசியல் தலைவருக்கு முக்கியமான தகுதியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, திராவிட இயக்கங்கள் மேடைப்பேச்சையே சிறந்த பிரசார உத்தியாகப் பயன்படுத்திக்கொண்டு வளர்ந்தன. மக்கள் வியந்து நிற்கும்வண்ணம் பேசுகிற தலைவர்கள் வாக்குகளைக் குவிப்பார்கள் என்பதை நிரூபிக்கும் புள்ளிவிவரங்கள் ஏராளமாக உண்டு.

மேடைப்பேச்சில் பல வகைகள் இருக்கின்றன. அழகான தமிழில், அடுக்குமொழியில் ஈர்க்கிறவர்கள் உண்டு; தெளிவான புள்ளிவிவரங்களை அடுக்கி ஆதாரப்பூர்வமான கேள்விகள், வாதங்களின்மூலம் கவர்கிறவர்கள் உண்டு; மக்களுடைய மொழியில் பேசிக் கைதட்டல் வாங்குகிறவர்கள் உண்டு; எதிர்க்கட்சியினரைக் கேள்வி கேட்டுச் சவால் விடுகிறவர்கள் உண்டு; தமிழே சரியாகப் பேசவராத சினிமா பிரபலங்களையும் தமிழக அரசியல் மேடைகள் கண்டிருக்கின்றன.

முன்பெல்லாம் ஒவ்வொரு கட்சிக்கும் நட்சத்திரப் பேச்சாளர்கள் இருந்தார்கள்; ஒருவர், இருவர் இல்லை, மாவட்டந்தோறும் பலர் இருந்தார்கள், அவர்கள் மாதம்முழுக்க ஊர் ஊராகச் சென்று கட்சியின் கொள்கைகள், ஆட்சியின் சாதனைகளைப் பேசிக்கொண்டிருந்தார்கள், எதிர்க்கட்சியினரைக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்களுடைய பேச்சைக் கேட்பதற்காக எங்கெங்கிருந்தோ மக்கள் வருவார்கள்; அவர்கள் பேசப்பேச வியப்போடு கேட்டுக்கொண்டிருப்பார்கள், கரவொலி ஊரை அதிரவைக்கும், பின்னர் இந்தப் பேச்சுகள் ஒலிநாடாக்களாகப் பதிவுசெய்யப்பட்டு விற்பனையாகும்; புத்தகங்களாகக்கூட வெளியாகும்.

இப்படிக் கட்சிகள், அரசியல் அமைப்புகளின் முக்கியப் பிரசார உத்தியாக இருந்தவை மேடைப்பேச்சுகள். நன்கு பேசத்தெரிந்தவர் நல்ல தலைவராகவும் இருப்பார் என்கிற நம்பிக்கை இங்கிருந்துதான் வந்திருக்கவேண்டும்.

தொலைக்காட்சி, பத்திரிகைகள், செய்தித்தாள்கள், இணையம், மொபைல் போன்றவை நன்கு பரவிவிட்ட இன்றைய சூழ்நிலையில், மேடைப்பேச்சுகள் வேறுவிதமாக மாறத்தொடங்கியிருக்கின்றன. பல்வேறு விஷயங்களைப்பற்றிய தலைவர்களின் கருத்துகள் இந்த ஊடகங்களின்வழியே பரவலாகச் செல்கின்றன. ஒரு மேடைப்பேச்சின்மூலம் சில நூறு பேரைச் சென்றுசேரக்கூடிய தலைவர்கள், இப்போது ஆயிரக்கணக்கானோர், லட்சக்கணக்கானோரைச் சென்றுசேர்கிறார்கள்.

Crowd (Pic: thewire)

அதேசமயம், அன்றைய மேடைப்பேச்சில் ஒரு பிழை நேர்ந்தால், ‘மன்னிக்கவும்’ என்று சொல்லிவிட்டுப் பேச்சாளரே அதைத் திருத்திக்கொண்டுவிடுவார். இல்லாவிட்டால், கூட்டத்தில் அமர்ந்திருக்கும் சில தொண்டர்கள், பொதுமக்கள் நமுட்டுச்சிரிப்போடு அதைக் கடந்துசெல்வார்கள், ‘இப்படிச் சொல்ல நினைச்சிருப்பார்ய்யா, ஏதோ வேகத்துல மாத்திச்சொல்லிட்டார்’ என்று சமாதானப்படுத்திக்கொள்வார்கள்.

ஆனால் இன்றைக்கு அந்த வாய்ப்பே கிடையாது. தமிழக முதல்வர் கம்ப ராமாயணத்தை எழுதியவர் பெயரைத் தவறாகக் குறிப்பிட்டாலும் சரி, எதிர்க்கட்சித் தலைவர் பழமொழியை மாற்றிச்சொன்னாலும் சரி, பக்கத்து மாநிலத்தில் ஒரு பாஜக தலைவர் இன்னொரு பாஜக தலைவருடைய ஆட்சியை ‘ஊழல் ஆட்சி’ என்று தவறுதலாகக் குறிப்பிட்டாலும் சரி, இவை அனைத்தும் நிரந்தரப் பிழைகளாகிவிடுகின்றன. அவர்கள் ஒருமுறை செய்த பிழையை இணையம் பல லட்சம்முறை ஒலித்துக்காட்டிப் பெரிதாக்கிவிடுகிறது. நூறு பேர் பார்த்த பிழை இப்போது லட்சம் பேருக்குச் சென்றுவிடுகிறது, அதனால் அது மிகப்பெரிய பிழை என்று தோன்றிவிடுகிறது.

நாமெல்லாம் நாள்தோறும் பேச்சில் பல சிறு பிழைகளைச் செய்கிறவர்கள்தான். அவற்றை உடனடியாகத் திருத்திக்கொள்கிற வாய்ப்பு நமக்கு இருக்கிறது. ‘எக்ஸ்க்யூஸ் மீ’ என்ற வசதியான முன்னொட்டும் இருக்கிறது.

சென்ற தலைமுறையில் மேடையேறி முழங்கிய அருமையான பேச்சாளர்களும் எப்போதாவது ஒரு தகவல் பிழை செய்திருப்பார்கள்; திருத்திக்கொண்டிருப்பார்கள்; அவையெல்லாம் பதிவுசெய்யப்பட்டுத் திரும்பத்திரும்பக் காட்டப்படவில்லை என்பதால், இன்றைய தலைவர்களின் பிழைகளை மாபெரும் குற்றங்களாகக் காட்டுவது நியாயமாகத் தோன்றவில்லை.

உலக அளவில் பல சிறந்த தலைவர்கள், ஆட்சியாளர்கள் சிறந்த பேச்சாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பது உண்மை. அதேசமயம், நல்ல பேச்சாளர்களால்மட்டும்தான் சிறப்பாக ஆட்சிசெய்யமுடியும் என்பதற்குச் சான்றுகள் இல்லை. ஓர் அரசியல் தலைவருக்கு இருக்கவேண்டிய பல தகுதிகளில் மேடைப்பேச்சும் ஒன்று. தெளிவாக, துல்லியமாக, பிழையின்றிப் பேசவேண்டியது ஒவ்வொரு பேச்சாளரின் பொறுப்பு.  அதைத்தாண்டி அதற்கு மிகுதியான முக்கியத்துவம் தருவது சரிதானா?

இன்றைய தமிழக அரசியல் சூழ்நிலையைப்பார்த்தால், ஒருபக்கம் அதிமுகவைச் சேர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அவர்களுக்குச் சவாலாக இயக்கம் கண்டிருக்கிற தினகரன், ‘நாம் தமிழர்’ என்ற முழக்கத்துடன் தொடர்ந்து பேசிவருகிற சீமான் போன்ற புதிய தலைவர்கள், இன்னொருபக்கம் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ, பாமக தலைவர்கள் ராமதாஸ், அன்புமணி போன்ற பழைய முகங்கள், இவர்களோடு அரசியலுக்குப் புத்தம்புதிதான, ஆனால் மக்களுக்கு மிக நன்றாகத் தெரிந்த ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர். இவர்கள் எல்லாருடைய மேடைப்பேச்சும் வெவ்வேறுவிதமானது. வைகோவைத்தவிர மற்ற யாரையும் பழைய தலைமுறைப் பேச்சாளர்களோடு ஒப்பிடமுடியாது.

V.Gopalsamy (Pic: flickr)

ஆகவே, அடுத்த சில ஆண்டுகளில் தமிழக அரசியல் மேடைகளில் பலவிதமான பேச்சுகள் ஒலிக்கவிருக்கின்றன. இவை அனைத்தும் டிஜிட்டல் பதிவுகளாக என்றென்றும் கிடைக்கப்போகின்றன. இந்தத் தலைவர்கள் ஒரு சொல்லையோ சொற்றொடரையோ புள்ளிவிவரத்தையோ மாற்றிச்சொல்லிவிட்டால் இணையப் பயனாளர்கள், மீம் உருவாக்குநர்கள் அதை நன்கு கிண்டலடித்துக் காயப்போடப்போகிறார்கள். அதைப் படிக்கிற, பார்க்கிற மக்கள் விழுந்து விழுந்து சிரித்துவிட்டு இன்னும் பலருக்கு அனுப்பி மானத்தை வாங்கப்போகிறார்கள். பிரதமர், முதல்வர், அதிபர், முதியவர், இளைஞர், முனைவர் பட்டம் பெற்றவர் என்றெல்லாம் அவர்கள் பார்க்கப்போவதில்லை. பிழை என்றால் பிழை, நாங்க ரொம்பக் கண்டிப்பாக்கும்!

இவையெல்லாம் நல்ல பொழுதுபோக்குகள் என்பதுவரை சரிதான். எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் இரக்கமில்லாமல் இடித்துரைக்கிற விமர்சகர்கள் அவசியம்தான். ஆனால், இவற்றைமட்டுமே வைத்து ஒருவரைப்பற்றிய நல்ல, அல்லது மோசமான கருத்தை உருவாக்கிக்கொள்ளும்போதுதான் அச்சப்படவேண்டியிருக்கிறது.

எடுத்துக்காட்டாக, ஒரு பிரபலமான நபர் தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் ‘இந்தியாவுக்கு 1847ல் சுதந்தரம் கிடைத்தது’ என்று சொல்லிவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த ஒரு விநாடி வீடியோ துணுக்கை வைத்து முன்னும் பின்னும் வடிவேலு, கவுண்டமணி, செந்தில் காமெடிகளைச் சேர்த்து அவரைக் கேலி செய்து வீடியோக்கள் தயாரிக்கப்படுகின்றன, பரப்பப்படுகின்றன, இவற்றையெல்லாம் யாரும் திட்டமிட்டுச் செய்யவில்லை, தன்னியல்பாக நிகழ்கிறது, சில நாட்களில் அவருடைய மற்ற செயல்பாடுகள் அனைத்தும் மறந்துபோய் அவர் நகைப்புக்குரிய ஆளுமையாகிவிடுகிறார்.

அதன்பிறகு, அவர் என்னதான் நல்லது செய்தாலும், விருதுகள், கௌரவங்களைப் பெற்றாலும், யாராவது இந்த வீடியோக்களின் இணைப்புகளை எடுத்துப்போட்டுக் கேலி செய்வார்கள். பொதுப்பார்வையில் அவர்மீதான தோற்றம் நிரந்தரமாக மாறிவிடும்.

இதற்கு நேரெதிராக, மேடையில் அருமையாகப் பேசக்கூடிய சிலருடைய உரைகள் திரும்பத்திரும்ப ஒலிபரப்பப்படுகின்றன, நண்பர்களுக்கு அனுப்பப்படுகின்றன, அதன்மூலம் அவர் ஒரு சிறந்த திறமையாளர் என்ற பிம்பம் பரவுகிறது. அதே துறையில் அவரைவிடத் திறமையாக இயங்கக்கூடியவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இன்றைய தேதிக்கு, தனி நபர்கள், இயக்கங்கள், நிறுவனங்கள், வணிக Brandகள் என அனைத்தையும் இணையத்தின்மூலம் இப்படி ஆக்கவோ அழிக்கவோ இயலும். அது தானாக நிகழ்வதுகூடப் பரவாயில்லை, திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டால்?

இந்தப் பிரச்னைக்கு மருந்து, மீம் உருவாக்குநர்களுக்குத் தடைபோடுவதில்லை. இதுபோன்ற பொழுதுபோக்குகளைப் பொழுதுபோக்குகளாகமட்டுமே பார்க்கப் பழகுவதுதான்.

எடுத்துக்காட்டாக, ஒருவர் வாழைப்பழத்தோலில் வழுக்கிவிழுகிறார் என்றால், அதைப்பார்த்துச் சிரிப்பது நாகரிகமில்லை. ஆனால், பெரும்பாலானோருக்கு உடனே சிரிப்பு வந்துவிடுகிறது. அதைக்கூடப் பொறுத்துக்கொள்ளலாம், அப்படி வழுக்கிவிழுந்தார் என்ற ஒரே காரணத்துக்காக அவருடைய மற்ற திறமைகளை, தகுதிகளை மறந்துவிடக்கூடாது.

Banana Peel (Representative Pic: wikimedia)

இன்றைக்கு இணையத்தில் பரவிவரும் மீம்களைக் கவனித்துப்பார்த்தால் 99% யாரையாவது கேலிசெய்வதாகதான் இருக்கின்றன. அந்தக் கேலிகள் எவையும் ஆழமாகச் சிந்தித்து, சம்பந்தப்பட்ட நபரின், நிகழ்வின் பின்னணியைப் புரிந்துகொண்டு, அவருடைய நிலையை உணர்ந்து, இருதரப்புச் சிந்தனைகளைச் சீர்தூக்கிச் செய்யப்படுபவை இல்லை. அந்தக் கணத்தில் தோன்றும் ஒருவரிக் கிண்டல், கூட்டத்திலிருந்து ஒரு கேலிச்சிரிப்பு, அவ்வளவுதான். அவற்றைமட்டும் அடிப்படையாகக்கொண்டு நம்முடைய கருத்துகளை அமைத்துக்கொள்வது முட்டாள்தனமாகவே இருக்கும்.

மீம்கள் காலத்தின் தேவை. இன்றைய வாசகர்கள், பயனாளர்களின் எதிர்பார்ப்பைச் சிறப்பாகப் பூர்த்திசெய்பவை. அவற்றை ஒரு சிறந்த கலைவடிவமாக, காலக்கண்ணாடியாகப் பார்க்கலாம். அதேசமயம், அவற்றின் உள்ளடக்கம் மேலோட்டமானதாக இருக்கும்போது, அந்தத் தகுதிக்குமீறிய முக்கியத்துவத்தை அவற்றுக்கு வழங்கிவிடக்கூடாது.

Web Title: Teasing Political speeches

Representative Featured Image Credit: samarmaguire

Related Articles