பறக்கும் தட்டுகளின் மர்மம்

விண்வெளியில் நடைபெறும் அசாதாரண நிகழ்வுகள், ஒளிக் கீற்றுகள், விண்மீன்களின் சிதறல்கள் போன்றவைகள் கண நேரத்தில் நம் கண்ணில் தென்பட்டு மறைந்து போகும். நம்மால் யூகிக்க முடியாத பொருட்கள் விண்ணில் பறந்து மறைந்தால் அதுதான் UFO (Unidentified flying objects). உலகில் பல்வேறு பகுதிகளில் இச் சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும், அமெரிக்க நிலப் பகுதிகளில்தான் இவைகள் அதிகம் தென்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்படி 1947ல் நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள ரோஸ்வெல் (Roswell, New Mexico) என்ற கிராமத்திலிருந்து 75 மைல்கள் தொலைவிலுள்ள பொட்டல் காடுகள் சூழ்ந்த பாலைவனப் பகுதியில், ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்த விவசாயி ஒருவர் வழக்கத்திற்கு மாறான உடைந்து போன பொருட்களையும், அதனுடன் வித்தியாசமான மனித உருவங்கள் போன்ற பொம்மைகளையும் தற்செயலாகப் பார்க்கிறார். உடனடியாக தகவல் அருகில் உள்ள விமானப் படை நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இதனை காலநிலை கண்டறியப் பயன்படுத்திய பலூன் ஒன்று வெடித்துச் சிதறியது எனக் கூறி‌ அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.ஆனாலும்   அமெரிக்க   அரசின்   இந்த கூற்றினை அநேகமான  மக்கள்  இன்றுவரையில்  நம்புவதாயில்லை. 

பறக்கும் தட்டுக்கள்: புகைப்பட உதவி:cbc.ca

இது ஏலியன்ஸ் பயன்படுத்திய ஸ்பேஸ் கிராஃப்ட் பூமியில் தரையிறங்கிய போது வெடித்துச் (crash-landing) சிதறியது என்ற செவி வழிக் கதை அமெரிக்கா முழுவதும் பரவியது. UFO-களைப் பார்த்தாகக் கூறப்படும் இடங்களில் முக்கால்வாசிக்கு மேல் அமெரிக்க நிலப் பகுதியில் உள்ளன. இதில் பல இடங்கள் இராணுவம் மிகவும் இரகசியமாக வைத்திருக்கும் இடங்களாகும்.  எலான் மஸ்க் 2018ல் தனது SpaceX நிறுவனத்தின் மூலம் “Falcon Heavy test flight” ஒன்றை சோதனைக்காக விண்ணில் ஏவியபோது, அதில் அவர் பயன்படுத்திய “Tesla roadster” வாகனத்தில் பொம்மை வடிவில் ஒரு மனிதர் வாகனத்தை ஓட்டுவதாக அமைத்திருந்து,  அதனையும் சேர்த்தே விண்ணில் செலுத்தினார்கள். அந்த வாகனத்தில் பயன்படுத்திய மின்னணு சாதனங்களில் ‘Made in Earth by humans’ என்று எழுதி இருந்தது. ஒருவேளை வேற்றுக் கிரகவாசிகள் வந்து இதைப் பார்த்து, அவர்களுக்கு ஆங்கிலமும் தெரியும் பட்சத்தில் ‘இந்த வாகனம் மனிதர்களால் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப் பட்டது’ என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காக அப்படி ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த ஏலியன்ஸ் என்பது எந்த அளவிற்கு உண்மையானது? இது முழுக்கமுழுக்க அமெரிக்க உளவுத்துறையால் மக்களை திசை திருப்புவதற்காகவே உலவவிடப்பட்ட கட்டுக்கதைகள் என்றே கூறப்படுகின்றது.

SpaceX நிறுவனத்தின்  Falcon Heavy test flight -புகைப்பட உதவி :ourplnt.com

1950 களின் பிற்பகுதியில் ரஷ்யா தங்களிடமிருக்கும் அணு ஆயுதங்களை வெட்டவெளிச்சமாக  அணிவகுப்பாக கொண்டுசென்று உலகத்தையே கதிகலங்க வைத்தமையானது, அமெரிக்காவையும் அதுபோன்ற அதிநவீன அணு ஆயுத ஆராச்சிகளுக்கான  ஓர் இடத்தேவையினை உணரவைத்திருந்தது. அப்போது லாஸ் வேகாசஸில் உள்ள நெவாடா பாலைவனத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த ஏரியா 51. அந்த நெவாடா பகுதி முழுவதையும் எல்லைக்கோடுகளால் பிரித்தபோது அமெரிக்காவின் ரகசிய உளவுத்துறையின் கடுமையான கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டிருந்த   ஏரியா 15 என்கிற பகுதிதான் இன்றும் பல மர்மங்களும் , சர்ச்சைகளுக்கும் உள்ளாகியிருக்கும் பேச்சுவாக்கில் ஏரியா 51 எனக்கூறப்படும் பகுதி.

இந்த ‘Area 51’ என்று அழைக்கப்படும் பகுதியில் ஏலியன்ஸ்களின் ஏர்கிராஃப்ட்கள் தரை இறங்குவதாக ஒரு சில மக்களால் உண்மைக்குப் புறம்பாக நம்பப்பட்டது. இந்தப் பகுதி அமெரிக்க உளவுத் துறை மற்றும் விமானப் படைக்குச் சொந்தமான பகுதி.1950ல் பனிப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டங்களில் இங்கு உளவு பார்க்கும் அதி விரைவு விமானங்களுக்கான ஆராய்ச்சிகள் மற்றும் சோதனைகள் நடைபெற்று வந்ததாகவும், ஆகாயத்திலிருந்து பூமியின் புகைப்படங்களை எடுத்தனுப்பிய “The Archangel-12” என்ற விமானங்கள் மணிக்கு 2000 மைல்கள்  வேகமாகப் பறந்ததே அந்தப் பகுதியில் வசித்த மக்களுக்கு ஏலியன்ஸ் போன்ற சிந்தனைகள் வரக் காரணமாக இருந்திருக்கலாம் எனவும் சில ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். (பறக்கும் தட்டுக்கள், திடீரென விண்ணில் தோன்றி மறையும் ஒளிக்கீற்றுக்கள் போன்ற கதைகளின் அடிப்படை இதுதான்) இன்றும் இந்த ஏரியா 51 பகுதிகளிலிருந்து வரும் ஒருவித மர்மப்புகையிலிருந்து வெளியேறும் நச்சினால் ஏராளமானவர்கள் பாதிப்படைவதாகவும் சிலர் உயிரிழப்புகளுக்கு ஆளானதாகவும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களால் தொடுக்கப்பட்ட வழக்குகளின் பிரகாரம் அமெரிக்க அரசு  பாதிக்கப்பட்டவர்களுக்கு  ஏராளமான நஷ்ட ஈட்டை வழங்கினாலும் உண்மையில் அப்படி என்னதான் ஆராச்சிகளை இந்த இடத்தில் இத்தனை ரகசியமாக செய்கிறார்கள் என்பதனை அரசு கூற மறுத்துவருகின்றது.

மர்மமான Area 51 பகுதி: புகைப்பட உதவி:www.space.com

இந்த பகுதியை சாதாரணமாக யாரும் சென்றடைய முடியாது . சுமார் ஐந்து கிலோ மீட்டர்களுக்கு முன்பாகவே தடுத்து நிறுத்தப்படுவதுடன், அங்கே யார்யார் வேலை செய்கிறார்கள், அவர்கள் என்ன ஆராய்ச்சிகளை  செய்கிறார்கள் என்பதும் சரிவர அறிவிக்கப்படாமல்  ரகசியமாகவே  வைக்கப்பட்டுள்ளது .

எனினும் அமெரிக்காவில் வசிக்கும்  ஐம்பது விழுக்காட்டினர் ஏலியன்ஸ் கதைகள்  உண்மைதான் என்றே நம்புகிறார்கள். இதனாலேயே அமெரிக்காவில் வழக்கமாக வாகனங்கள், வீடுகள், நிலங்கள், தொழிற்சாலைகள் வாங்கும் போது அவைகளுக்கு காப்பீடு வாங்குவதுபோல ஏலியன்ஸ் UFOகளால் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் இழப்பீடு பெற காப்பீடு செய்து கொள்கிறார்கள். இதனை ‘ alien abduction insurance’ என்று அழைக்கிறார்கள். லண்டனைச் சேர்ந்த ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனம் ஐரோப்பா முழுவதும் 30,000க்கும் மேற்பட்ட காப்பீடுகளை மக்களிடம் இருந்து வாங்கியுள்ளது. ஏலியன் குறித்து நம்பிக்கை உள்ள நபராக  இருந்தால் அதனைப் பார்த்ததற்கான சான்று மற்றும் தடயங்களைத் தெரிவித்தால் காப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம். ‘Storm Area 51’ – இதை அடிப்படையாக வைத்து ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனமும்  காப்பீடுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளனர் .

சமீபகாலமாக உலகெங்கும் ஒவ்வொரு ஆண்டும் 3000க்கும் மேற்பட்ட Unidentified Flying Objectsகள் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 90% identified என்று ufologist-கள் கூறுகிறார்கள். அதாவது, ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள், விண்மீன்கள் என்கிறார்கள். இதில் 10% மட்டுமே கண்டுபிடிக்க முடியாத பொருட்களாக இருந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது . எது எப்படியோ இந்தமாதிரியான ஏலியன்ஸ் நம்பிக்கைகள் ஏராளமான ஹொலிவூட் திரைப்படங்களின் வருகைக்கு ஆதாரமாக இருந்து கோடிகளை அள்ளிக்குவிக்கிறது என்பது மட்டும் சர்வ நிச்சயம் !

 

Related Articles