சமூக மாற்றத்தில் கல்வியின் பங்கு | வாசகர் கட்டுரை

“ஒரு சமூகத்தின் மாற்றம் காண்பது ஒரேயடியாக நிகழ்வதில்லை அவை முறையான ஒழுங்கின் அடிப்படையில் ஏற்படுகின்றன. பேரரசுகளின் எழுச்சி, வீழ்ச்சிகளிலும் ஓர் தொடர்ச்சி பரிணாமம் உண்டு” – இப்னு கல்தூன்

இன்றைய நவீன யுகத்தில் கல்விக்கான அனைத்து வாய்ப்பு, வசதிகள் மற்றும் சந்தர்ப்பங்கள் என்பன திறந்து விடப்பட்டுள்ளன.  ஒருவர், துறையொன்றில் அல்லது பல துறைகளில் ஆழமாக கால் பதிக்க இது வழிவகுத்துள்ளது. சமூக மாற்றத்தினை வழிநடத்துவதிலும் பிரதான பங்கு கல்விக்கு உண்டு. சமூகத்திற்கான விழுமியங்களை உருவாக்குவதிலும் சமூக மூலதனங்கள், ஒற்றுமை, சகிப்புத்தன்மை, ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தல், நட்புணர்வு ஆகியவற்றை சமூக கட்டமைப்புக்குள் பலப்படுத்துவதிலும் கல்வியின் பங்களிப்பு முதன்மையானது.

அனைவருக்கும் கல்வி என்பது மனித இனம் முழுவதற்கும் கல்வி வழங்குதல் என்பதை குறிக்கின்றது. இந்த அறிவியல் யுகத்தில் நாமும் இணைந்து கொள்ள, மேலும் அதன் சவால்களுக்கு ஈடு கொடுக்க வேண்டுமானால் கல்வியறிவு பெற்றிருப்பது அவசியமாகும். கல்வி, சமூகம் என்ற இரு விடயங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட எண்ணக்கருக்களாகும். கல்வி என்பது பிள்ளையின் உள்ளே இருக்கின்ற ஆற்றல்களை வெளிக்கொண்டு வருவதால் கல்வி மூலமே அறிவு சார்ந்த சமூகம் உருவாக்கப்படுகிறது. பல்வேறு கல்விசார் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வினை பெற்றுத் தருவது கல்வியாகும். அறிவு, திறமை போன்றவற்றை வழங்கி ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கி பண்பாடு, நடத்தை போன்றவற்றை வழங்கி ஒரு முழுமையான ஆற்றல் படைத்தவனாக கல்வி மாற்றுகின்றது. ஒரு சமூகத்தின் முன்னேற்றம் சமூக நகர்வு, சமூக வளர்ச்சி, எழுச்சி, அபிவிருத்தி, என்பன அச்சமூகத்தின் கல்வியை தீர்மானிக்கும் சக்தியாக காணப்படுகிறது.

படஉதவி: www.en.wikipedia.org

இன்றைய உலக மாற்றங்களுக்கேற்ப யுனெஸ்கோவின் “Education for all (யாவருக்கும் கல்வி)” என்ற பிரகடனம் எந்தவொரு நாட்டிற்கும், அனைத்து சமூகத்திற்கும் பொருந்தும். ஆர்.எஸ் பீட்டர் குறிப்பிடுகையில்; கல்வியானது பல செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட தொடர் கரும நடைமுறையாகும் எனக் கூறினார். பிளேட்டோ கூறுகிறார்; கல்வியால் கிடைக்கின்ற நன்மை யாதெனில் நல்ல மனிதர்கள் உருவானது. மட்டுமல்லாது அவர்கள் நல்ல முறையில் செயலாற்றவும் பழகிக்கிக் கொள்கிறார்கள். ரூஸோ குறிப்பிடுகையில்; பிள்ளைக்கு கல்வியை தனது ஆற்றல்கள் தேவைகள் விருப்பங்கள் என்பவற்றிற்கேற்ப பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று கூறுகின்றார். கல்வி என்பது அனுபவங்களை ஒழுங்குபடுத்துவதும் மீள அமைப்பதுமாகும். கற்றல் அனுபவம் மிக முக்கியமான ஒன்றாகும். கல்வியானது கற்றல் அனுபவத்தை தருகின்றது. அது மாணவரின் உடல், உள, மன வளர்ச்சி உணர்வு வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சியை பெற உதவுகின்றது. கற்றல் அனுபவத்தில் ஒரு நபரின் பங்கேற்பு என்பது படிப்பு, ஆய்வுகள், விளையாட்டு, செயற்திட்டத்தில் ஈடுபடுதல், விவாதத்தில் பங்கேற்பு, குழு வேலை போன்றவற்றில் காணப்படுகிறது. மகாத்மா காந்தி கல்வி பற்றி தனது கருத்தில் கல்வியானது சகல பிரிவுகளிலும் தனியாளிடமுள்ள ஆற்றல்களில் உச்ச விருத்தி கல்வி மூலம் நிறைவேற்றப்படல் வேண்டும் எனக் கூறினார்.

நமக்கான சமூகத்தை நேர்மையாக்குவதிலும் நல்லொழுக்கத்திலும் ஆழமான நற்சிந்தனையையும் அகலமான அறிவையும் உறுதிப்படுத்த கல்வி மிக அவசியம் என்பதை மறுக்க முடியாது. முழுமையான கல்வி என்பது உடல், உள மற்றும் ஆன்மா ஆகியவற்றை ஒருங்கிணைத்து நற்சிந்தனையுடன் கூடிய செயலை வெளிக் கொணர்வதுதான். கல்வி நம்மனைவருக்கும் வாழ்வின் அணியாகவும் தாழ்வின் துணையாகவும் வளர்ச்சியின் அணிகலனாகவும் அமைவது கல்வியாகும். சமுதாயத்தில் காணப்படும் கல்லாமை, இல்லாமை, இயலாமை, அறியாமை, முயலாமை போன்ற ஆமைகளை விரட்டி சமூகத்தை நீதி, நேர்மை மிக்க சமுதாயமாக இயங்க வைப்பதற்கு கல்வி மட்டுமே அடித்தளமாக அமையும். ‘கல்வி என்பது ஒரு வரை நிர்வாணமான சிந்தனா சக்தி உடையவராக ஆக்குவது’ என்று தந்தை பெரியார் கூறினார்.

கல்வி என்பது நமது பிள்ளைகளின் மூளைக்குள் புதிதாக எதையும் திணிப்பது அல்ல மாறாக குழந்தைகளின் உள்ளத்தில் திணிக்கப்பட்டிருக்கும் நம்பிக்கைகளை அகற்றி சுய சிந்தனை உடையவராக மாற்றுவதேயாகும். நமது சமூக கட்டமைப்பில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் முக்கோண கோட்பாட்டின் சமூகத்தின் இயல்பாக நிலைநிறுத்துவதே கல்வி தான். தனி மனித பலவீனத்தை அகற்றி தனி மனிதர்கள் சமூகக் கட்டுக்கோப்புக்கு உரியவராக மாற்றும் பணியை கல்வி மட்டுமே முன்னெடுக்கின்றது. வாழ்க்கையை மேம்படுத்துகின்ற நமது குணங்களை சீர்படுத்தி மனதை ஆற்றுப்படுத்துகின்றது. மனிதம் நிறைந்த சமூக கட்டமைப்பு உருவாகுவதற்கு சமூகத்துக்கான சமூக உணவாக இருப்பது புத்தகங்கள் மட்டுமேயாகும். வீட்டுக்கொரு நூலகத்தை நாம் முன்னிருத்த வேண்டும். புத்தக வாசிப்பென்பது  சமூக சுவாசமாக மாற்றப்பட வேண்டும். அப்பொழுது மட்டுமே கல்வியின் மீது கட்டப்பட்ட அறிவார்ந்த சமூகம் உருவாகும்.

உசாத்துணை நூல்கள் 

1. அம்பேத்கர்.கல்வி சிந்தனைகள், ரவிக்குமார், ( Books for children)

2. காலந்தோரும் கல்வி .என். மாதவன், Books for Children, Chennai 2008.

3. தமிழகத்தில் கல்வி, வே.வசந்தி தேவியுடன் உரையாடல் , சந்திப்பு

4. கல்விச் சித்தாங்கள். சுந்தர ராமசாமி, காலச்சுவடு பதிப்பகம் நாகர்கோயில் ஜுன் 2004.

cover image credit:  theguardian.com/

Related Articles