வெனிசுலாவின் மறக்கப்படாத வரலாறு

1983 July 24ம் திகதி

“இராணுவம் என்பது சண்டை போடும் இயந்திரம் அல்ல. அது மக்களை காக்கும் அமைப்பு. நாம் சண்டை போடப் போவதில்லை மாறாக, அமைதியாக போராடலாம்!” என்று தன் முதல் அறிவிப்பிலேயே வெனிசுலா மக்களை பெரிதும் கவர்ந்தவர்தான் போராட்ட வீரன் சாவேஸ்.

வெனிசுலாவை விடுவிக்க வேண்டும் இதுதான் அவரதும், அவரது படையினதும் தாரகமந்திரம். ஆனால்,  இவர் தன் படையில் படைவீரர்களாக வைத்துக் கொண்டது என்னவோ பெரும்பாலும் வெனிசுலா மாணவர்களைத்தான். காரணம், அவர் போராடப் புறபட்டது தீவீரவாதத்தை எதிர்த்து அல்ல! சில பல மூடவாதங்களையும், மேலைத்தேய வர்க்கத்தின் அடிமையாகிப்போன அரசையுமே ஆகும்.

அன்றைய வெனிசுலா இன்றைய சிம்பாவே நாட்டுக்கு சமனானது! அங்கு மெல்ல மெல்ல அமைதி தொலைந்து கொண்டிருந்த காலமது. அரசாங்கம் கடன் பெற்று அதை தானே ஏப்பம் விட்டு கொண்டிருந்தது. சாமானிய மக்கள் பற்றி கவலை கொள்ள எவருமில்லை. நாட்டின் ஜனாதிபதி பேரேஸ் மேலைத்தேய நாடுகளின் அடிமையாகி போக, நாடோ வெறும் பூச்சியமாகி கொண்டிருந்தது. சாவேஸ் இத்தகைய நிலையை வென்று நாட்டை மீட்டெடுக்க மெல்ல மெல்ல தன்னை உருவாக்கி கொண்டிருந்த காலமது!

1989 Feb 27

(thepolitricks.com)

ஆறுவருட வேதனையான ஆட்சி, மக்களை இதற்கு மேல் பொறுமையாக வைத்திருக்க வழியில்லாமல் தெருவுக்கே கொண்டு வந்துவிட்டிருந்தது. உதாரணமாக, ஒரு மாத சம்பளம் ஒருநாள் காலை உணவுக்கு மட்டும் போதுமானதாகவே இருந்தது. முதலில் ஒருவர், பிறகு பத்து பேர், பின்னர் ஒரு கூட்டம் என்று வெனிசுலாவே வீதிக்கு சாரை சாரையாக வந்து கொண்டிருந்தது. ஜனாதிபதி பேரேஸ் இதுவரை தான் கண்டிராத மிகப்பெரிய போராட்டம் ஒன்று இடம்பெறப் போவதை ஊகித்துக் கொண்டிருந்தார். ஆனால், அவரால் அதை தடுக்க முடியாது என்பதையும், அதனை ஒடுக்க முடியும் என்பதையும் புரிந்து கொண்டிருந்தார். அதன் விளைவு, இன்று இந்த சமூகமே துக்க நாளாக அனுஷ்டிக்கும் Caracazo 3000 பேரை பலியெடுத்த நாளாக வரலாற்றில் பதிவாகியது!

இத்தனை நாளாக, வெனிசுலா நாட்டுக்காக அமைதியாக போராடிக் கொண்டிருந்த சாவேஸ், இங்குதான் முதன் முறையாக தாம் தவறான வழியை தேர்ந்தெடுத்துவிட்டோம் என்று மனம் வருந்தி, தனது அனுபவமில்லாத படைகளை துப்பாக்கிகளுடன் சண்டையிட அனுப்பினார். நாட்டை மற்றுமொரு Caracazo 3000 துக்க நாளிலிருந்து பாதுகாக்கவென எடுத்த முடிவு தோல்வியில்தான் முடிந்தது. அந்த தோல்வி அனுபவம், சாவேஸ் என்ற அமைதி போராட்ட வீரனை கூட தனது படைக் கட்டமைப்பை முழுமையான ராணுவ கட்டமைப்பாக, போராடும் அமைப்பாக மாற்றிக்கொள்ள வேண்டியே நிலைக்கு தள்ளியது. அந்த சமயத்தில், அவருக்கு பக்கபலமாக மூன்று வேறுபட்ட ஒரே சிந்தனையை கொண்ட மூன்று தரப்பினர் இணைந்து கொண்டனர். இப்போது சாவேஸ் படையில் மொத்தம் 20 அதிகாரிகள், 500 வீரர்கள் மற்றும் பெருமளவு ஆயுதங்கள் இருந்தன. இனி, வெற்றியை மட்டும் நோக்கி போராட போவாதாக சாவேஸ் கூறி, அதற்கான நாளையும் குறித்துக் கொண்டார்.

ஆனால், விதி வலியது!

1992 Feb 4

வெனிசுலா என்ற நாட்டை மீட்க புறப்படும் நாள் இது. நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்த சமயம் சாவேஸ் மட்டுமே தன் படைகளுடன் நாட்டுக்காக போராடவென குறிப்பிட்ட கூடுமிடத்திற்கு வந்து சேர்ந்திருந்தார். நேரம் சென்று கொண்டேயிருந்தது. போராட்டத்தில் இணைந்துகொண்ட குழுக்களில் எவருமே வருவதாக இல்லை. மேலும் சில மணித்துளிகள் கடந்த பின்பு, சிலர் வந்தார்கள் போராடுவதற்காக இல்லை. போராட்டத்திலிருந்து விலகுவதாக சொல்லவே வந்தார்கள். ஏமாற்றி விட்டார்கள் என்பதை உணரவே இவ்வளவு மணித்துளிகளையும் செலவு செய்ய வேண்டியிருந்தது. சாவேஸ் அதிர்ந்தே போனார். ஏமாற்றத்தின் உச்சத்திலிருந்தார். ஆயுதங்கள் இருக்கிறது, ஆனால், போராட வீரர்கள் இல்லை. திட்டங்களை பின்நோக்கி போடவும் முடியாத சூழ்நிலை. சாவேஸ் ஒரு முடிவுக்கு வந்தவராக, தன் படைகளை அழைத்தார்.

“தோழர்களே! யார் பின்வாங்கினாலும், நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. நாம் போராடப் போகிறோம்! என்று மட்டும் கூறிவிட்டு, போர் ஆயத்தங்கள் பற்றி பேசத் தொடங்கிவிட்டார்.

சாவேஸ் இதன்போது கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடமிது, “யாரையும் எதற்காகவும் எதிர்பார்க்கக் கூடாது, முடிந்தால் தனியாக செய்யவேண்டும். முடியாவிட்டால் விலகியிருக்க வேண்டும்.”

இதை அடிப்படையாகக்கொண்டு தனது படைகளை நகர்த்தி வெனிசுலா நாட்டின் வெலன்சியா, மாரகையோ, மராக்கே போன்ற பெரும் பகுதிகளை பிடித்தார். ஜனாதிபதி பேரேஸ் இருக்கும் காரகாஸ் நகரம் மட்டுமே பாக்கி! பிடித்து விட்டால், தனித்துப் போராடி கைவிட்ட குழுக்களுக்கு பாடம் புகட்டலாம் என எண்ணினார். ஆனால், நேரம் செல்ல செல்ல களத்தில் நிலவரம் வேறு மாதிரியாக இருந்தது. MBR (சாவேஸ் ஸின் இயக்கப் பெயர்) இயக்கத்தின் தோல்வி இங்குதான் உணரப்படத் தொடங்கியது. பாதுகாப்பு படையின் கை மேலோங்கி தன்படை சின்னாபின்னமாகப் போவதை நன்கே உணர்ந்து கொண்டார். வாழ்வா? சாவா? என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டிய தருணம். மீண்டும் ஒரு சகிக்க முடியாத தோல்வி! ஆனால், இம்முறை வெற்றியை தந்த தோல்வி இது! மாற்றம் தரக்கூடிய ஒரு முடிவை எடுக்கும் சூழலுக்கு சாவேஸ் தள்ளபட்டிருந்தார். அந்த சமயம் சாவேஸ் எடுத்த ஒரு முடிவு அதிசயதக்க ஒரு முடிவுதான்! எந்த தலைவனும் எடுக்காத, எடுக்கதயங்கும் ஒரு முடிவு!

ஆம்! சாவேஸ் சரண் அடைவது என்ற முடிவு. பரிகாசம் செய்யப்படக்கூடிய முடிவு. பரிகாசிக்கபட்ட முடிவும் கூட! ஆனால், வரலாற்றை மாற்றப்போகும் முடிவு என பலரும் உணர்ந்திராத முடிவு. தன் படைகளுடன் சரணடைந்த சாவேஸ் அப்போது கூறிய ஒரே வார்த்தை,

“நான் சரணடைந்துவிட்டேன்……………………………………………………… இப்போதைக்கு”

அவமானங்களை இறுதியில் தாங்க நேர்ந்த இந்த தலைவனுக்கும் ஓர் ஓய்வு தேவைபட்டது! எல்லாவற்றையும் மனதில் கொண்டு தீர்மானம் எடுத்து கொண்டிருந்த இந்த தலைவனுக்கு, சிறையில் எல்லாவற்றின் பின்னணிகளையும் ஆய்வு செய்து ஆறுதலான முடிவு எடுக்க ஒரு ஓய்வு நிச்சயமாக தேவைப்பட்டது! அந்த ஓய்வில், ஏன் இந்த தோல்வி? எதனால் எல்லோரும் என்னை கைவிட்டார்கள்? என்ற கேள்விகளுக்கு, சாவேஸ் விடைகளை பலகோணங்களில் தேடினார். இறுதியில் இரண்டு விடயங்களை கண்டுகொண்டார்.

ஒன்று மக்களின் ஆதரவு.

எல்லா புரட்சி நாடுகளிலும் புரட்சிகளுக்கு தலைவர்கள் இருந்தார்கள். மக்கள் ஆதரவும் முழுமையாக இருந்தது. ஆனால், அவர்கள் மக்களை வழிநடாத்துபவர்களாக இருந்தார்கள். ஆனால், நான்? எப்போதாவது மக்களை சந்தித்திருக்கிறேனா? மக்கள் ஆதரவை நாடியிருக்கிறோமா? மாவோவின் அடிப்படை கோட்பாடுகளை படித்த நான் அதை நடைமுறைபடுத்தவில்லை என்பதை உணர்ந்து கொண்டார்.

இரண்டாவது, ஆயுத போராட்டம்.

(usnaby.com)

ஆயுதம் மூலம்தான் தீர்வு என்ற முடிவுக்கு எப்படி வந்தோம்? யார் சொல்லி வந்தோம்? மக்கள் சொல்லியா? இல்லையே! மக்கள் எடுக்காத ஒரு முடிவை மக்கள் மீது எப்படி திணிக்க முடியும்? அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளாத போது நான் மட்டும் எப்படி போராட்டத்தில் வெற்றி பெற முடியும்?

தன்னிடமிருந்த தவறுகளை அந்த புரட்சியாளன் புயலுக்கு பின்னதான அமைதியில் கண்டு கொண்டார். மெல்ல மெல்ல தன்னை மாற்றிக் கொண்டார். தன்னை மட்டுமல்ல தன் மக்களையும்தான். அறியப்படாத அந்த தலைவன் மக்களால் பின்பு விரும்பபடுபவனாக மாறினார். அந்த ஒரு ஓய்வான சிந்தனை தருணம்தான் அந்த போராடும் குணம் கொண்ட தலைவனுக்கு ஒரு மாற்றத்தை கொடுத்தது. அந்த மாற்றம் உலகமே வியப்பாக நோக்கிய ஜனாதிபதி சாவேஸ் வடிவில் வந்தது என்றால் மிகையாகாது.

இராணுவ படையை என்ன கருத்துக்கள் கூறி ஆரம்பித்தாரோ, அதுபோலவே மக்களை காக்கவென வெனிசுலா ராணுவம் மாற்றம் பெற்றது. சுமார், ஒருவருடத்தில் அசுர வளர்ச்சி வெனிசுலாவில், அதன்போது அவரின் இராணுவம் கைகளில் தூக்கியது துப்பாக்கிளை அல்ல! கல்வி, சுகாதாரம், விவசாயம் என்ற மற்றவற்றை மட்டும்தான்!

கேள்விகள் எழலாம் உங்களுக்கு! அப்படியானால் வெனிசுலா இப்போதைக்கு வல்லரசாகி இருக்க வேண்டுமே என்று? நிச்சயமாக, வல்லரசுதான்! புரட்சி நாடுகளில் அமெரிக்கவை எதிர்க்க துணிந்த வல்லரசாக உள்ள நாடுகளில் இதுவும் ஒன்றுதான். சிலவேளைகளில் நாம் எதிர்பார்க்கும் அபிவிருத்தியும், வளர்ச்சியும் எல்லோருக்கும் பொதுவானதல்ல. அதனால்தான்,  நீங்களும், நாங்களும் எதிர்பார்க்கும் வல்லரசாகவில்லை.

மக்களுக்காக போராட்டத்தில் காலத்துக்கு ஏற்ப தன்னை இனம்கண்டு மாற்றிக்கொண்டு வெற்றி கண்ட தலைவர்களில் ஒருவன்தான் சாவோஸ் என்கிற ஹியூகோ சாவோஸ்!

எல்லாவற்றிலும் மாற்றங்கள் வேண்டும்! அது பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும்! அது போராட்டமாக இருந்தால் கூட!

Related Articles