நவம்பர் 19, கழிப்பறைகளிளிருந்து உலகப் பொருளாதார வளர்ச்சி நோக்கி

சுகாதாரம் மனித சமுதாயத்தின் இருப்புக்கு அடிப்படை. சுத்தம் பேணுதல் மனிதனின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆணிவேர் என்றால் மிகையில்லை. “சுத்தம் சுகம் தரும், அசுத்தம் நோய் தரும்” என்பது அரிச்சுவடியோடு நாம் படித்த பாடம். “சுத்தம் இறை நம்பிக்கையில் பாதி” என இஸ்லாமிய மார்க்கம் பறைசாற்றுகிறது. உண்ணும் உணவு, உடுக்கும் உடை, இருக்கும் இடம் அனைத்தையும் சுத்தமாகவும் அழகாக்கவும் வைத்திருத்தல் அனைவரதும் தேவையும் எதிர்பார்ப்புமாகும். இருந்தும் சிலருக்கே அது சாத்தியமாகிறது, பலருக்கு அது எட்டாக்கனியாகவும், இன்னும் பலருக்கு அதுபற்றிச் சிந்திக்கும் நேரமும் நிலைமையும் இல்லாமலே போகிறது. ஆனால் இவையனைத்தையும் தாண்டி சுகாதாரம் அனைவருக்குமான ஓர் பொதுத் தேவையாகவே இருக்கிறது.

சுத்தம் பற்றிப் பேசும்போது அதிகம் சீர்தூக்கப்படாத, ஆனால் மனித சுகாதாரத்தின் முக்கிய பங்கை வகிப்பவை “கழிப்பறைகள்”. மனிதனாகப் பிறந்த நம்மனைவருக்கும் கழிப்பறையின் தேவை பற்றி சொல்லிப் புரியவேண்டியதில்லை. சுத்தமான கழிப்பறையைப் பேணுதல் என்பது ஒரு சவால் என்றால், கழிப்பறையே இல்லாத மக்கள் எதிர்நோக்கும் சவால்களோ அதனிலும் பெரிது.

ஐக்கிய நாடுகள் சபையின் “பேண்தகு அபிவிருத்தி” திட்டத்தின் ஆறாவது அம்சம், 2030 ஆம் ஆண்டில் உலகமக்கள் அனைவருக்கும் உரிய கழிப்பறை வசதிகளை வழங்குவதே எனவும் இத்திட்டம் தனிமனித, வியாபார மற்றும் பொருளாதார நலனுக்கும் அடித்தளமாகத் திகழும் எனவும் அதன் செயலாளர் நாயகம் பான்கிமூன் அறிவிக்கிறார்.

கழிப்பறை வசதிகள் உலக மக்களின் நலன்களில் எவ்வாறான தாக்கத்தைச் செலுத்தும்?

  • உலக சுகாதார திணைக்களம் மற்றும் UNICEF 2015 இன் அறிக்கையின் பிரகாரம் உலகின் மொத்த சனத்தொகையில் சுமார் 2.4 பில்லியன் மக்கள் மேம்படுத்தப்பட்ட கழிப்பறை வசதிகள் ஏதுமின்றி வாழ்ந்து வருகின்றனர்.
  • மேலும் உலகில் பத்துப்பேரில் ஒருவர் கழிப்பறை வசதிகளின்றி திறந்த இடங்களில் கழிவகற்றும் துர்ப்பாக்கிய நிலையில் உள்ளனர்.
படம் - ichef-1.bbci.co.uk

படம் – ichef-1.bbci.co.uk

 

  • கழிப்பறை வசதிகளிலுள்ள இடர்பாடு மற்றும் பாதுகாப்பற்ற நீர் முகாமைத்துவம் போன்றவற்றால் ஏற்படும் வாந்திபேதி நோய் வருடந்தோறும் சுமார் 315,000 சிறுவர்களின் உயிரைப் பறிக்கின்றது.
  • குறை சுகாதாரம் மற்றும் உரிய கழிப்பறை வசதிகள் இல்லாமை வேலைத்தளங்களில் 17% சதவீதமான உயிரிழப்புக்களுக்குக் காரணமாக அமைகின்றது. (உலக தொழில் திணைக்களம் 2003)
  • மேலும் இக்காரணங்களால் ஏற்படும் நோய்களால் கடமைக்குச் சமூகமளிக்காதிருக்கும் ஊழியர்களினால் அதிகமான நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5% வரை பாதிப்படைகிறது.

உலக கழிப்பறைகள் தினம் 2016

இந்த வருடம் உலக கழிப்பறைகள் தினத்தின் ஆய்வுப்பொருள் “கழிப்பறைகளும் தொழில்களும்” (‘toilets and jobs’) என்பதுமாகும். உரிய கழிப்பறை வசதிகள் மற்றும் சுகாதார நிலைப்பாடுகள் மூலம் மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

படம் - images.medicaldaily.com

படம் – images.medicaldaily.com

  • ஊழியர்களுக்கான உரிய கழிப்பறை வசதிகள் இல்லாமை வணிகங்களைப் பலவகையில் பாதிப்படையச்செய்யும். நோய் காரணமாக வேலைக்குச் சமூகமளிக்காமை, குறைந்துசெல்லும் உற்பத்தித் திறன், கவனக்குறைவு, போன்ற பல பிரச்சினைகள் வணிகங்களின் உற்பத்தியைப் பாதிக்கும்.  (Business for Social Responsibility (BSR) 2010)
  • 2015ஆம் ஆண்டின் புத்தாயிரமாண்டு அபிவிருத்தி நோக்கில் 50% சதவீதமான மக்களுக்கு கழிப்பறை மற்றும் சுகாதாரமான நீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன்மூலம் வருடத்திற்கு 322 நாட்கள் பணிக்குச் செல்லாமையைத் தவிர்க்க முடியும். இதன்மூலம் சுகாதாரத் துறையில் $7 மில்லியன் ரூபாவைச் சேமிக்க முடியும். (Stockholm International Water Institute (SIWI), 2005)
  • குறித்த சுகாதாரத் தேவைகள் பூர்த்திசெய்யப்படாமையினால் ஏற்படுகின்ற நோய்நொடிகள் மூலம் உலகளாவியரீதியில் வருடமொன்றுக்கு $260 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுகிறது.  (Hutton 2012)
  • இந்தியாவைப் பொறுத்தவரையில் கழிப்பறைத் தேடுதல் அல்லது வெளியிடங்களில் மலசலம் கழிப்பதற்காய் செல்லுதல் போன்றவை இந்திய பொருளாதாரத்தில் $10 பில்லியன் வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இது வருடமொன்றிற்கு 20% மொத்த உள்நாட்டு வருமானத்துக்குச் சமனாகும்.  (World Bank Group 2016)
  • இதன்மூலம் ஏற்படுகின்ற வயிற்றுப்போக்கு மற்றும் வாந்திபேதி போன்ற நோய்கள் 50% சதவீதமான பிள்ளைகளின் குறை போசணைக்குக் காரணமாவதுடன் உளவியல் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.  (WHO 2008)

கழிப்பறைகள் மனிதனின் உடல் சுகாதாரத்தினை மட்டுமன்றி அவனது சுய கெளரவத்தினையும் பாதிக்கின்றது. கழிப்பறை வசதிகள் இல்லாதவிடத்து, போது வெளிகளில் திறந்த நிலையில் கழிவகற்றுதல் எந்த ஒரு மனிதனுக்கும் பல்வேறுபட்ட அசௌகரியங்களையும் ஏற்படுத்தும். குறிப்பாக பெண்கள் இந்த விடையத்தில் கூடிய பாதிப்பை எதிர்நோக்க நேரிடுகிறதென்றால் அதில் தவறில்லை.

தேவையேற்படும் நேரங்களில் கழிவகற்றுதல் என்ற நிலை இல்லாது, கழிவற்றுவதற்காக இருட்டும்வரை காத்திருக்கும் பெண்கள் எத்தனயோ பேர் இன்னும் இருந்துகொண்டுதான் உள்ளனர். மேலும் போது இடங்களில் மலசலகூடத் தேவைகளுக்காகச் செல்லும் பெண்களே அதிகளவில் பாலியல் வல்லுறவுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர் என ஆய்வுகள் அறிவிக்கின்றன. கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் மாதவிடாயை கடந்துசெல்லும் பெண்கள் கழிப்பறைவசதிகளின்றி படும் இடர்பாடுகள் சொல்லிலடங்கா. இருந்தும் இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளில் பல பெண்கள் அவதியுறும் துர்ப்பாக்கியநிலை இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.

உரிய கழிப்பறை வசதிகள் இல்லாதபோது, கழிவகற்றுவதற்காய் பலமணிநேரம் காத்திருத்தல், கழிவகற்றும் தடவைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக அதிகம் நீரருந்தாமல் உணவுட்கொள்லாமல் காத்திருத்தல் போன்ற நடவடிக்கைகள் மக்களுக்கு வேறுவிதமான உடலியல் பிரச்சினைகளைக் கொண்டுவந்து சேர்க்கும் அபாயங்களும் உள்ளன.

நவம்பர் 19, உலக கழிப்பறை தினத்தை நினைவுகூருவதன்மூலம் இருக்கின்ற கழிப்பறைகளைச் சுத்தமாகப் பேணி சுகாதாரமாக நோய் நொடியின்றி வாழவும், சிறுவர்களுக்கு இதனால் ஏற்படும் வாந்திபேதி நோயைக் கட்டுப்படுத்தவும், சிறுவர்களின் சுகாதாரச் சீர்கேடுமூலம் ஏற்படும் இறப்பு மற்றும் குறைபோசனையை இயன்றளவில் குறைக்கவும் முயலுவதொடு உலகெங்கும் கழிப்பறை வசதி மற்றும் மேம்பட்ட சுகாதார வசதிகளின்றி வாழும் மக்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கான உதவிகளை இயன்றளவில் செய்யத் திடசங்கர்ப்பம் பூண்டு அதன்மூலம் ஆரோக்கியமான சந்ததியோன்றை உருவாக்கி உலக பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முனைவோமாக.

Related Articles